Archives: ஜூன் 2018

உலகத்திற்கு ஒளி

இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.

இந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”

அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.

யார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.

உன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.

அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள்

நானும், என்னுடைய குழந்தைகளும் ஒரு புதிய அனுதின பயிற்சியை ஆரம்பித்தோம். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்முன் நாங்கள் பல பென்சில்களை சேகரித்து வைத்து அதில் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைப்போம். தேவனிடம் எங்களுடைய பாதைக்கு வெளிச்சம் தாரும் என்று கேட்டு விட்டு எங்களுடைய நாளிதழில் வரும் படங்களை வரையவும், இரண்டு கேள்விகளுக்கு விடையெழுதவும் ஆரம்பிப்போம். எங்கு நான் என்னுடைய அன்பைக் காட்டினேன்? எங்கு நான் அன்பைக் காட்டவில்லை?

ஆரம்பத்திலிருந்தே, நம்முடைய அயலகத்தாரை நேசிக்க வேண்டுமென்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது (2 யோவா. 1:5). யோவான் தன்னுடைய சபையினருக்கு எழுதின இரண்டாம் கடிதத்தில் கேட்டுக்கொள்வதும் தேவனுக்குக் கீழ்படிந்து ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பதே (2 யோவா. 1:5-6) யோவானுடைய அனைத்துக் கடிதங்களிலும் பிரதானமாகக் காணப்படுவது அன்பு. நாம் உண்மையான அன்பைச் செயல்படுத்தும் போது சத்தியத்திற்குரியவர்களாகின்றோம், அவருடைய பிரசன்னத்தில் வாழ்கின்றவர்களாவோம்
(1 யோவா. 3:18-19) நானும் என் குழந்தைகளும் எங்களைக் குறித்துச் சிந்திக்கும் போது எங்களுடைய வாழ்வில் அன்பு சிறு செயல்களின் வழியே செயல்பட ஆரம்பித்தது. ஒரு குடையை பகிர்ந்துகொள்வது, கவலையோடிருக்கும் ஒருவரைத் தேற்றுவது, அனைவருக்கும் விருப்பமான ஓர் உணவைச் சமைத்தல் போன்ற செயல்களின் வழியே அன்பு செயல்பட்டது. பிறரைப் பற்றி குறைபேசுதல், பகிர்ந்துகொள்ள மறுத்தல், பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்காமல் எங்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றுதல் ஆகியவை நாங்கள் அன்பைச் செலுத்தத் தவறிய கணங்கள்.

ஓவ்வொரு இரவும் நாங்கள் இவ்வாறு செய்யும் போது, ஒவ்வொரு பகலிலும் நாங்கள் கவனமாகச் செயல்பட உதவியாக இருந்தது. எங்களுடைய வாழ்வில் ஆவியானவர் காட்டும் வழியில் நாங்கள் நடக்க எங்களுக்கு உதவியாயிருந்தது. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு நாங்கள் அன்போடு நடக்கக் கற்றுக் கொள்கின்றோம் (2 யோவ. 1:6).

குப்பைக் கூடையினுள் மோதிரம்

என்னுடைய கல்லூரி விடுதியில், ஒருநாள் காலை எழுந்தபோது, என்னுடைய அறைத் தோழி கேரல் பயத்தால் பீதியடைந்து உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அவளுடைய முத்திரை மோதிரம் தொலைந்துவிட்டது. நாங்கள் எல்லாவிடத்திலும் தேடினோம், அடுத்த நாள் காலையில் நாங்கள் குப்பைக் கூடையினுள் தேடினோம். நான் வேகமாகக் குப்பைப் பையைத் திறந்தேன். “நீ இதைத் தேடுவதில் மிகவும் அர்ப்பணத்தோடிருக்கின்றாய்” என்றாள். “இருநூறு டாலர் மோதிரத்தை நான் இழக்கப் போவதில்லை” என்று உறுதியாயிருந்தாள்.

கேரலின் உறுதியான எண்ணம் இயேசு கூறிய ஓர் உவமையை எனக்கு நினைவுபடுத்தியது. “பரலோக இராஜ்ஜியம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்கிறான்” (மத். 13:44) என்றார். சில பொருட்கள் அதிக முயற்சியெடுத்துத் தேடக் கூடிய மதிப்பைப் பெற்றுள்ளது.

தேவனைத் தேடுகின்றவர்கள் கண்டடைவார்கள் என்று தேவன் வேதாகமத்தில் பல இடங்களில் வாக்களித்துள்ளார். உபாகமத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி, முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேவனைத் தேடும் போது அவரைக் கண்டடைவார்கள் என கூறப்பட்டுள்ளது (4:28-29). 2 நாளாகமத்தில் ஆசா இராஜாவும் இதே வாக்குத்தத்தத்தால் ஊக்குவிக்கப்படுகின்றார் (15:2) எரேமியா புத்தகத்தில் சிறையிருப்பிலிருக்கின்ற இஸ்ரவேலரிடம் தேவன் இந்த வாக்குத்தத்தத்தையே எடுத்துரைக்கின்றார். தேவன் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து மீட்பாரென உரைக்கின்றார் (29:13-14).

நாம் தேவனை நம் அனுதின வாழ்வில் அவருடைய வார்த்தையின் மூலமாயும், அவரை ஆராதிப்பதாலும் அவரைக் கண்டுகொள்ள முடியும். நாளடைவில் அவரை நன்கு ஆழமாகத் தெரிந்துகொள்வோம். அதுவே, கேரல் தன்னுடைய மோதிரத்தை அந்த குப்பைப் பையிலிருந்து எடுத்த போதிருந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இனிமையான அனுபவமாகும்.

திறக்கப்பட்டது

ஒரு பையன் மூளை வாத நோயோடு பிறந்தான். அதனால் அவனால் பேசவோ பிறரோடு தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. ஆனால், அவனுடைய தாயார் சான்டல் பிரையன் சோர்ந்து போகவில்லை. அவன் பத்து வயதாயிருந்த போது, அவனுடைய கண்கள் மூலமாகவும். ஓர் எழுத்துப் பலகையின் உதவியாலும் அவனோடு தொடர்புகொள்ளத் தெரிந்து கொண்டார். இந்த வழிமுறைக்குப் பின்னர் அவள் சொன்னது, “அவன் திறக்கப்பட்டான் நான் அவனிடம் எதையும் கேட்கலாம்”: என்றாள். இப்பொழுது யோனத்தானால் எழுதவும், வாசிக்கவும் முடிகிறது. அவன் செய்யுள்களையும் எழுதுகின்றான். கண்கள் மூலம் புரிந்துகொள்கின்றான். அவனுடைய குடும்ப நபர்களோடும், நண்பர்களொடும் “பேசுவது” எப்படியிருக்கும் என்று கேட்டபோது, அவன் “நான் அவர்களை நேசிக்கிறேன் என்று சொல்லுவது மிகவும் அற்புதமானது” என்று கூறினான்.

யோனாத்தானின் கதை நம்மை ஆழமாகத் தொடுவதாக இருக்கிறது, நம்மையும் தேவன் எவ்வாறு பாவமாகிய சிறையிலிருந்து விடுவிக்கின்றார் என்பதை நினைக்கச் செய்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும் போது, “முன்பு நாம் தேவனுக்கு அந்நியராக இருந்தோம்” (கொலோ. 1:21) எனக் குறிப்பிடுகின்றார். நம்முடைய துர்க்கிரியைகள் நம்மை தேவனுக்கு பகைஞராக்கியது. ஆனால், கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை “தேவனுக்கு முன்பாக பரிசுத்தராக” ஒப்புரவாக்கினார் (வச. 21) இப்பொழுது நாம் “சகல வித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ள… அவருடைய வல்லமையால் பலப்படுத்தப்படுகிறோம்” (வச. 10-11).

நம்முடைய திறக்கப்பட்ட சத்தத்தை, தேவனைத் துதிக்கவும், அவர் நம்மை பாவ வாழ்விலிருந்து விடுவித்தார் என்ற சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துவோம். தேவன் மீதுள்ள நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டு நம் விசுவாச வாழ்வைத் தொடருவோம்.

விடுதலை செய்யப்பட்டாய்

நான் சிறுவயதில், ஒரு கிராமத்திலிருந்தபோது, கோழிக்குஞ்சுகள் என்னை மிகவும் கவர்ந்தன, எப்பொழுதாகில் நான் ஒரு கோழிக்குஞ்சைப் பிடிக்கும் போது, நான் சிறிது நேரத்திற்கு என் கரத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் விட்டுவிடுவேன். நான் விட்டப்பின்னரும், நான் கையில் வைத்திருக்கின்றேன் என்ற நினைப்பில் அந்த கோழிக்குஞ்சு அப்படியே நிற்கும். அது சுதந்திரமாக ஓட முடியும், என்றாலும் அது பிடிபட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்ளும்.

நாம் நமது நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்கும் போது, அவர் கிருபையாக நம்மைப் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிக்கின்றார். ஆனால், நம்முடைய பாவப்பழக்கங்களிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் மாற்றிக்கொள்ள நேரமாகுமென்பதால், நாம் இன்னும் சாத்தானின் பிடியிலிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றான். ஆனால், தேவனுடைய ஆவியானவர் நம்மை விடுவித்துவிட்டார். அவர் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ரோமாபுரியாருக்கு பவுல் சொல்வதென்னவெனின், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமால் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:1-2).

நம்முடைய வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஆகியவற்றின் மூலம் தேவன் செயல்பட்டு நம்மை; சுத்திகரித்து அவருக்காக வாழ உதவுகின்றார். நாம் இன்னமும் விடுதலையாகவில்லை என்ற உணர்வை விட்டுவிட்டு, நாம் தேவனோடு நடக்கின்றோம் என்ற நம்பிக்கையோடிருக்க வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது.

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு சொல்கின்றார். தேவனுக்குள் நாம் பெற்ற சுதந்திரம் நம்மை தேவனை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் தூண்டுகிறது.

சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி சொலல்

பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.கே. செஸ்டர்டனின் எழுத்துக்களை அநேக ஆண்டுகளாக நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. அவருடைய நகைச்சுவையும், நுண்ணறிவும் என்னைச் சிரிப்புக்குள்ளாக்குவதோடு சிந்திக்கவும் வைத்தது. எடுத்துக்காட்டாக, “சாப்பாட்டிற்கு முன் கிருபை என்று சொல்லுகிறீர்கள். நல்லது. நான் சொல்லுகிறேன், விளையாட்டிற்கும், கேளிக்கைகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகங்களுக்கும், புத்தகத்தைத் திறப்பதற்கும், எழுதுவதற்கும், படம் வரைவதற்கும், நீந்துவதற்கும், வாள் சண்டைக்கும், குத்துச் சண்டைக்கும், நடப்பதற்கும், நடனத்திற்கும், பேனாவை மையில் நனைப்பதற்கு முன்பும் கிருபை வேண்டும்.”

ஒவ்வொரு வேளை உணவிற்கு முன்பும் நாம் தேவனுக்கு நன்றி சொல்வது நல்லது. ஆனால், அது அத்தோடு நின்றுவிடக் கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு முயற்சியையும் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டியவையாகப் பார்க்கின்றார். அவற்றை தேவ நாம மகிமைக்காக செய்ய வேண்டுமெனவும் சொல்கின்றார். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ. 3:17) என்று கூறுகின்றார். பொழுதுபோக்கு, தொழில் மற்றும் கல்வி ஆகியவை நாம் தேவனைக் கனப்படுத்தவும், நம்முடைய நன்றியை தேவனுக்குச் செலுத்தும் படியாகவும் நமக்கு கொடுக்கப்பட்ட வழிகளேயாம்.

கொலோசெ சபையின் விசுவாசிகளுக்கு பவுல் “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, அதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (வச. 15) என்று கூறுகின்றார்.

நாம் தேவனுக்கு நன்றிசொல்ல நினைக்கும் எவ்விடமும், அவரை கனப்படுத்த நினைக்கும் எந்நேரமும் நாம் “கிருபை” என்று சொல்லக் கூடிய மிகச் சிறந்த இடமாகும்.

ஒரு நண்பனின் ஆறுதல்

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தன் மகளின் இடுப்பிற்குக் கீழே முழுவதும் சகதியாயிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள் அந்தத் தாய். என்ன நடந்ததென்று அவர் விசாரித்தாள். மகள், நடந்ததை விவரித்தாள். ஒரு சிநேகிதி வழுக்கி சகதி நிறைந்த ஒரு குட்டையினுள் விழுந்துவிட்டாள். ஒரு மாணவி ஆசிரியரை அழைக்க ஓடினாள். சகதியினூடே சென்று காயமடைந்த அந்தச் சிநேகிதியின் காலைத் தாங்கிக் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் வரும் வரை தானும் அந்தச் சகதியில் இறங்கி அந்தச் சிநேகிதிக்கு உதவியதாகக் கூறினாள்.

யோபு பேரிழப்பை அனுபவித்தான். தன் பிள்ளைகளை இழந்தான். உடல் முழுவதும் கொடிய பருக்களால் தாக்கப்பட்டான். அவனுடைய துயரம் அவனால் தாங்கக் கூடாதததாயிருந்தது. அவனைத் தேற்ற, ஆறுதல் கூற மூன்று நண்பர்கள் வருகின்றனர் என வேதத்தில் வாசிக்கின்றோம். அவர்கள் யோபுவைப் பார்த்த போது, “சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து, தங்கள் தலைகள் மேல் புழுதியைத் தூற்றிக் கொண்டு வந்து, யோபுவின் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்” (யோபு 2:12-13).

யோபுவினுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நல்ல புரிந்து கொள்ளலைக் காட்டினர். யாரேனும் அவனருகிலிருந்து அவனோடு புலம்ப வேண்டுமென யோபு விரும்புகிறானென உணர்ந்து கொண்டனர். அந்த மூன்று மனிதரும் பின்னர் பேச ஆரம்பிக்கின்றனர். அவர்கள் பேச ஆரம்பித்த போது எதிர்பார்த்ததற்கு முரணாக, யோபுவிற்குத் தவறான யோசனையைக் கொடுத்து விடுகின்றனர் (16:1-4).

ஒரு துயரப்பட்ட நண்பனைத் தேற்ற நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமென்னவெனின், துன்ப நேரத்தில் அவர்களோடு அமர்ந்து இருப்பதே.

சொந்தமானது

ஓவ்வொரு சனிக்கிழமை இரவு நேரங்களிலும் செல்வது போன்று, அன்றும் இரவு வெகுநேரம் வெளியில் இருந்தேன். இருபது வயதான நான் தேவனை விட்டு, என்னால் முடிந்தமட்டும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், திடீரென, வினோதமாக, என்னுடைய தந்தை பாதிரியாராகப் பணிபுரியும் தேவாலயத்திற்குக் கட்டாயமாகச் செல்லும்படி தூண்டப்பட்டேன். நான் எனது சாயம்போன ஜீன்ஸ் பேன்டையும், பழசான மேல் சட்டையையும் கட்டப்படாத, உயரமான ஷூக்களையும் அணிந்து கொண்டு அந்தப் பட்டணத்தின் வழியே காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.

என்னுடைய தந்தையின் அன்றைய பிரசங்கத்தை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால், என்னை அவர் பார்த்தபோது, அவருக்கிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியவில்லை. அவருடைய கரத்தை என் தோளின் மீது போட்டு அணைத்து, என்னை அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தினார். “இவன் என்னுடைய மகன்” என்று பெருமையாகத் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக என் மீதிருந்த தேவனுடைய அன்பின் வெளிப்பாடாக அவருடைய மகிழ்ச்சி இருந்தது.

தேவன் ஓர் அன்பான தந்தை என்ற கருத்து வேதாகமம் முழுமையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 44ல் ஒரு கோர்வையான எச்சரிப்புகளுக்கிடையே, தீர்க்கதரிசி தேவனுடைய குடும்ப அன்பினை தெரிவிக்கின்றார். “என்னுடைய தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்து கொண்ட இஸ்ரவேலே” என அழைக்கின்றார். “உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (வச. 3) என்கின்றார். தங்களுடைய குடும்ப பெருமையை இந்த வம்சாவழியினர் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஏசாயா நன்கு தெரிந்து கொண்டார். “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்”, “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்வான்” (வச. 5).

நான் என்னுடைய வளர்ப்புத் தந்தைக்குச் சொந்தமானவன் போல, தன்னிஷ்டம் போலத் திரிகின்ற இஸ்ரவேலரும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். நான் என்ன செய்துவிட்டிருந்தாலும் அது என் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பிலிருந்து என்னைப் பிரிக்கவில்லை. என்னுடைய பரலோகத் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பில் ஒரு துளியை என் தந்தை எனக்குத் தந்தார்.

இயேசுவோடு ஐக்கியம்

நான் ஒரு முறை இரவு உணவின் போது பில்லி கிரஹாமின் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பைப் பெற்றேன். அது மறக்கமுடியாத ஓர் அனுபவமாயிருந்தது. நானும் கனப்படுத்தப்பட்டேன். ஆனால், அவரோடு என்ன பேசுவது பொருத்தமாயிருக்கும் என சிந்தித்துச், சற்று பதட்டமாக உணர்ந்தேன். பல ஆண்டுகளான அவருடைய ஊழியப்பாதையில் எது மிகவும் விரும்பக்கூடியதாக இருந்தது என்ற ஒரு கேள்வியோடு என்னுடைய உரையாடலை ஆரம்பித்தால் சரியாக இருக்குமென எண்ணினேன். ஆனால், நான் அநாகரீகமாக அதற்குத் தகுந்த விடைகளையும் எடுத்துரைக்கலானேன். அது ஜனாதிபதியைச் சந்தித்ததா? அல்லது இராஜாக்களையும், ராணிகளையும் சந்தித்தக் கணங்களா? அல்லது உலகெங்கும் பல லட்சம் மக்களுக்குச் சுவிசேஷம் அறிவித்த நேரங்களா?

நான் என்னுடைய கருத்துக்களைக் கூறி முடிப்பதற்குள் மதிப்பிற்குரிய கிரஹாம் அவர்கள் என்னை நிறுத்திவிட்டார். ஒரு தயக்கமுமின்றி அவர், “அது நான் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம்தான். அவருடைய பிரசன்னத்தை உணர்வதும், அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்வதும் அவருடைய வழிகாட்டலைக் கண்டு கொண்டு அதன்படி நடந்துகொள்வதுமே என்னுடைய மிகப் பெரிய மகிழ்ச்சி” என்றார். இந்த பதில் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று எண்ணச் செய்தது, ஒரு சவாலைச் சந்திக்கவும் என்னைத் தூண்டியது. இவருடைய பதிலைப் போன்று என்னுடைய பதிலும் இருக்குமா என நான் குத்தப்பட்டேன். நானும் அவரைப் போன்று தேவனைச் சார்ந்து வாழ்வதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன்.

இதனை மனதில் கொண்டுதான் பவுலும் “ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைகாக” தன்னுடைய மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் குப்பையென்று சொல்லுகின்றார் (பிலி. 3:8). நம் வாழ்விலும் இயேசுவும், இயேசுவோடுள்ள ஐக்கியமுமே பிரதானமானதாக இருப்பின் நம் வாழ்வும் எத்தனை விலையேறப் பெற்றதாக இருக்குமென நினைத்துப்பார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபத்தில் தரித்திருத்தல்

அடுமணை (ரொட்டி சுடுதல்)  உதவியாளரான உஷா, முந்திரிப்பழ ரொட்டியைத் திருடுவதாக அவரது மேற்பார்வையாளர் குற்றம் சாட்டியபோது, ​​தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகவும் உதவியற்றவராக உணர்ந்தார். ஆதாரமற்ற தீர்ப்பு  மற்றும் அதற்கான சம்பளப் பிடித்தம் ஆகியவை அந்த  மேற்பார்வையாளரின் பல தவறான செயல்களில் இரண்டு மட்டுமே. "தேவனே, தயவாய் உதவும். அவளின் கீழ் வேலை செய்வது மிகவும் கடினம், ஆனால் எனக்கு இந்த வேலை தேவை", என உஷா ஒவ்வொரு நாளும் ஜெபித்தாள்.

இதேபோல் உதவியற்றவளாக உணர்ந்த ஒரு விதவையைப் பற்றி இயேசு கூறுகிறார், அவள் "எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும்" (லூக்கா 18:3) என்றிருந்தாள். தன் வழக்கைத் தீர்க்க அதிகாரம் உள்ள ஒரு நீதிபதியிடம் சென்றாள். அந்த நீதிபதி அநியாயம் செய்பவர் என்று தெரிந்திருந்தும், அவரை அணுகுவதில் விடாப்பிடியாக இருந்தாள்.

நீதிபதியின் இறுதி பதில் (வ.4-5) அன்புடனும் உதவியுடனும் விரைவாகப் பதிலளிக்கும் (வ.7) நம் பரலோகத் தகப்பனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. விடாமுயற்சி, ஒரு அநீதியான நீதிபதி ஒரு விதவையின் வழக்கை விசாரிக்க செய்யக்கூடும் என்றால், நீதியுள்ள நீதிபதியாக இருக்கும் தேவன் நமக்காக எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியும்? (வ.7-8). "தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" (வ.7) என்று நாம் அவரை நம்பலாம். மேலும், ஜெபிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பது நமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். நம்முடைய சூழ்நிலைக்கு, தேவன் தமது  பரிபூரண ஞானத்தின்படி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் நாம் தொடா்ந்து நிலைத்திருக்கிறோம்.

இறுதியில், உஷாவின் மேற்பார்வையாளர் மற்ற பணியாளர்கள் தனது  நடத்தையைப் பற்றி புகார் செய்ததை அடுத்து ராஜினாமா செய்தார். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது; ​நம்முடைய ஜெபங்களின் வல்லமையானது, அதனைக் கேட்டு நமக்கு உதவுகிறவரிடமே இருக்கிறது என்பதை அறிந்து, ஜெபிப்பதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.

அளவிடமுடியா இரக்கம்

இரண்டு நண்பர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் மடிக்கணினி வாங்கச் சென்றபோது, ​​அவர்கள் கூடைப்பந்து ஜாம்பவான் ஷாகில் ஓ'நீலை சந்தித்தனர். ஓ'நீல், சமீபத்தில்தான் தனது சகோதரி மற்றும் தனது முன்னாள் சக வீரரின் இழப்பை அனுபவித்தார் என்பதை அறிந்திருந்த அவர்கள், பரிவுணர்வோடு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். பின்னர் இருவரும் கடைக்குத் திரும்பிய பிறகு, ஷக் அவர்களை அணுகி, அவர்களுக்கான சிறந்த மடிக்கணினியைத் தெரிவு செய்யும்படி சொன்னார். பின்னர் அவர் அதை அவர்களுக்காக வாங்கினார், ஏனெனில் அவர்கள் அவரை ஒரு கடினமான நேரத்தைக் கடக்கும் ஒரு நபராகப் பார்த்ததினால், அவர்களின் இரக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

அந்த சந்திப்பிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சாலொமோன், "தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்" (நீதிமொழிகள் 11:17) என எழுதினார். பிறரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது, ​​நாமும் பலனடைகிறோம். இது வெறும்  மடிக்கணினியோ  அல்லது மற்ற பொருட்கள் பற்றினதோ மட்டுமல்ல, ஆனால் இந்த உலகம் அளவிட முடியாதபடி தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளார், "நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்" (வ.16) என்று சாலொமோன் அதே அத்தியாயத்தில் முன்பு ஒரு வசனத்தை விளக்கியது போல். தேவனிடம் பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள பரிசுகள் உள்ளன, மேலும் அவர் தனது பரிபூரண ஞானத்திலும் வழிமுறைகளில் அவற்றைத் தாராளமாக அளந்து பகிர்கிறார்.

இரக்கமும் பெருந்தன்மையும் தேவனின் சுபாவத்தை ஒரு பகுதியாகும், ஆகவே அவை நம் சொந்த உள்ளங்களிலும் வாழ்க்கையிலும் வெளிப்படுவதைக் காண அவர் விரும்புகிறார். சாலொமோன் இந்த காரியத்தை இரத்தின சுருக்கமாக : "எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (வ. 25) என்றார்.

ஒரு கைப்பிடி அரிசி

வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலம் மெல்ல மெல்ல வறுமையிலிருந்து மீண்டு வருகிறது. அவர்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், நற்செய்தி முதன்முதலில் இந்தப் பகுதிக்கு வந்ததிலிருந்து, இயேசுவின் விசுவாசிகள் "கைப்பிடி அரிசி" என்று அழைக்கப்படும் உள்ளூர் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உணவைச் சமைப்பவர்கள், ஒரு பிடி சமைக்காத அரிசியை ஒதுக்கி சபைக்குக் கொடுக்கிறார்கள். மிசோரம் சபைகள், உலகத் தரத்தில் ஏழ்மையானவை, ஆனால் மிஷனரிகளுக்கு இலட்சகணக்கான பணத்தை வழங்கியுள்ளன மற்றும் உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்பியுள்ளன. தங்கள் சொந்த மாநிலத்திலும் பலர் கிறிஸ்துவிடம் வழி நடத்தப்பட்டுள்ளனர்.

2 கொரிந்தியர் 8 இல், பவுல் இதேபோன்ற சவாலுக்குட்பட்ட சபையை விவரிக்கிறார். மக்கெதோனியாவில் உள்ள விசுவாசிகள் ஏழைகளாக இருந்தனர், ஆனால், அது அவர்களை மகிழ்ச்சியுடனும் ஏராளமாகவும் கொடுப்பதைத் தடுக்கவில்லை (வ. 1-2). அவர்கள் கொடுப்பதை ஒரு பாக்கியமாகக் கருதி, பவுலுடன் பங்காற்ற "தங்கள் திராணிக்கு மிஞ்சியும் " (வ. 3) கொடுத்தார்கள். தாங்கள் தேவனுடைய வளங்களின் உக்கிராணக்காரர் மட்டுமே என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். நமது எல்லா தேவைகளையும் சந்திக்கும் அவர் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டும் ஒரு வழியாகக் கொடுத்தல் இருந்தது.

கொடுத்தலில் அதே அணுகுமுறையுடன் கொரிந்தியர்கள் இருக்கும்படி ஊக்குவிக்க, பவுல் மக்கெதோனியர்களை மாதிரியாக பயன்படுத்தினார். கொரிந்தியர்கள் “விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும்.. அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும்" பெருகி யிருந்தார்கள். இப்போது அவர்கள் "இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்" (வ.7)..

மக்கெதோனியர்கள் மற்றும் மிசோரமில் உள்ள விசுவாசிகளைப் போல நாமும் நம்மிடம் உள்ளதைத் தாராளமாகக் கொடுப்பதன் மூலம் நம் தகப்பனின் உதாரகுணத்தைப் பிரதிபலிக்க முடியும்.