ஓவ்வொரு சனிக்கிழமை இரவு நேரங்களிலும் செல்வது போன்று, அன்றும் இரவு வெகுநேரம் வெளியில் இருந்தேன். இருபது வயதான நான் தேவனை விட்டு, என்னால் முடிந்தமட்டும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், திடீரென, வினோதமாக, என்னுடைய தந்தை பாதிரியாராகப் பணிபுரியும் தேவாலயத்திற்குக் கட்டாயமாகச் செல்லும்படி தூண்டப்பட்டேன். நான் எனது சாயம்போன ஜீன்ஸ் பேன்டையும், பழசான மேல் சட்டையையும் கட்டப்படாத, உயரமான ஷூக்களையும் அணிந்து கொண்டு அந்தப் பட்டணத்தின் வழியே காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.

என்னுடைய தந்தையின் அன்றைய பிரசங்கத்தை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால், என்னை அவர் பார்த்தபோது, அவருக்கிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியவில்லை. அவருடைய கரத்தை என் தோளின் மீது போட்டு அணைத்து, என்னை அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தினார். “இவன் என்னுடைய மகன்” என்று பெருமையாகத் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக என் மீதிருந்த தேவனுடைய அன்பின் வெளிப்பாடாக அவருடைய மகிழ்ச்சி இருந்தது.

தேவன் ஓர் அன்பான தந்தை என்ற கருத்து வேதாகமம் முழுமையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 44ல் ஒரு கோர்வையான எச்சரிப்புகளுக்கிடையே, தீர்க்கதரிசி தேவனுடைய குடும்ப அன்பினை தெரிவிக்கின்றார். “என்னுடைய தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்து கொண்ட இஸ்ரவேலே” என அழைக்கின்றார். “உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (வச. 3) என்கின்றார். தங்களுடைய குடும்ப பெருமையை இந்த வம்சாவழியினர் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஏசாயா நன்கு தெரிந்து கொண்டார். “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்”, “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்வான்” (வச. 5).

நான் என்னுடைய வளர்ப்புத் தந்தைக்குச் சொந்தமானவன் போல, தன்னிஷ்டம் போலத் திரிகின்ற இஸ்ரவேலரும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். நான் என்ன செய்துவிட்டிருந்தாலும் அது என் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பிலிருந்து என்னைப் பிரிக்கவில்லை. என்னுடைய பரலோகத் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பில் ஒரு துளியை என் தந்தை எனக்குத் தந்தார்.