கடுமையான நடவடிக்கைகள்
எங்கள் வீட்டு சுவரில் அலங்கரிக்கப்பட்ட ஒரு வில் மற்றும் அம்பு, பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருந்தது. நானும் என் தந்தையும் ஒரு பழங்குடி மக்கள் மத்தியில் மிஷனரிகளாய் பணியாற்றியபோது, அவர்களிடமிருந்து நினைவுப்பரிசாய் அவைகளைப் பெற்றோம்.
அங்கு பழக்கமான ஒரு நபர் எங்களை சந்திக்கும்படி வந்திருந்தார். வில்லைக் கண்டதும் அவர் முகநாடி சற்று வேறுபட்டது. அதில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய பொருளை சுட்டிக்காண்பித்து, “அது ஒரு மாயாஜால வஸ்து. அதற்கு சக்தி இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதை என் வீட்டில் வைக்கமாட்டேன்" என்று அவர் கூறினார். விரைவாக, வில்லில் இருந்து அந்த வஸ்தை வெட்டி அப்புறப்படுத்தினோம். தேவனைத் தவிர்த்து, வேறு எந்த வழிபாட்டு வஸ்துக்களும் எங்கள் வீட்டில் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை.
எருசலேமின் ராஜாவாகிய யோசியா, தேவன் தன் ஜனத்திடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்து அதிகம் அறியாதவராய் வளர்ந்தார். வெகுகாலமாய் பராமரிக்கப்படாத ஆலயத்தில் (2 இராஜாக்கள் 22:8) கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்க விரும்பினான். விக்கிரக ஆராதனையைக் குறித்த தேவனுடைய சிந்தையை அறிந்தமாத்திரத்தில், யூதேயா தேசமனைத்தையும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் வரையறைகளுக்கு உட்படும்பொருட்டு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தான். சாதாரண வில்லிலிருந்த அந்த மாயாஜால வஸ்துக்களை வெட்டியெறிவதை விட கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தினான் (காண்க 2 இராஜாக்கள் 23:3-7).
யோசியா ராஜாவிடமிருந்த நியாயப்பிரமாண புத்தகத்தைக் காட்டிலும் இன்று விசுவாசிகளிடம் அதிக அதிகமாய் இருக்கிறது. நம்மை வழிநடத்தும் முழு வேதாகமம் நம்மிடம் உள்ளது. உற்சாகப்படுத்தும் நபர்கள் இருக்கிறார்கள். சிறியதோ அல்லது பெரியதோ, எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியின் நிரப்புதல் நம்மிடம் இருக்கிறது.
பகுத்தறிவை நிராகரித்தல்
ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி ஒரு பெண் வாகன ஓட்டியிடம் அவளை ஏன் நிறுத்தினார் என்று தெரியுமா என்று கேட்டார். “தெரியாது” என்று அவள் திகைப்புடன் பதிலளித்தாள். “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்” என்று குற்றஞ்சாட்டினார். “இல்லை இல்லை!” என்று அவள் நிராகரித்து, தன்னுடைய மொபைல் போனை எடுத்துக் காண்பித்து, நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை, மின்னஞ்சல் அனுப்பினேன்” என்றாளாம்.
வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது என்ற சட்டம் இருப்பதால், மின்னஞ்சல் அனுப்பலாம் என்பது அர்த்தமில்லை. சட்டத்தின் நோக்கம் குறுஞ்செய்தி அனுப்புவதை தடுப்பதல்ல; மாறாக, இது கவனச்சிதறலோடு வாகனத்தை ஓட்டுவதை தடுப்பதேயாகும்.
இயேசு அவருடைய நாட்களின் மார்க்கத்தலைவர்களை மோசமான சட்ட ஓட்டைகளை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டினார். “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது," என்று அவர் கூறினார். அதற்கு “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (மாற்கு 7:9-10) என்ற கட்டளையை மேற்கோள்காட்டினார். மத பக்தி என்ற போர்வையின் கீழ், இந்த பணக்கார தலைவர்கள் தங்கள் குடும்பங்களை புறக்கணித்தனர். அவர்கள் தங்கள் பணம், “தேவனுக்கு உரியது” என்று வெறுமனே அறிவித்தனர். ஆனால் வயதான காலத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவ வேண்டிய அவசியமில்லையென்று கருதினர். “நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்” (வச. 13) என்று அவர்களின் இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை இயேசு கண்டுபிடித்தார். அவர்கள் தேவனை மதிக்கவில்லை; தங்கள் பெற்றோரை அவமதித்தனர்.
பகுத்தறிவு மிகவும் நுட்பமானது. அதன் மூலம் நாம் பொறுப்புகளைத் தவிர்க்கிறோம், சுயநல நடத்தைகளை விளக்குகிறோம், தேவனின் நேரடி கட்டளைகளை நிராகரிக்கிறோம். அது நம் நடத்தையை விவரிக்கிறது என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தம் பிதாவின் நல்ல அறிவுரைகளுக்குப் பின்னால் ஆவியானவரின் வழிகாட்டுதலுக்காக நம்முடைய சுயநலப் போக்குகளை பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு வாய்ப்பளிக்கிறார்.
பார்வையில் மாற்றம்
1854ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஒரு இளைய பீரங்கி அலுவலர், தன் பீரங்கியிருந்த மலை உச்சியிலிருந்து கீழே நடைபெறும் போர் படுகொலைகளைப் பார்த்தார். “ஜனங்கள், ஜனங்களைக் கொல்லுவதைப் பார்ப்பது ஒரு வேடிக்கையான இன்பம், எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மணிக்கணக்காய் நான் அதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன்” என்று லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார்.
டால்ஸ்டாயின் பார்வை சீக்கிரத்தில் மாறியது. செவாஸ்டோபோல் நகரத்தில் ஏற்பட்ட அழிவையும் பாடுகளையும் நேரில் பார்த்த பின்பு, “நீங்கள் முன்பு பார்த்த பார்வையை விட, அந்த பட்டணத்தில் ஒலித்த துப்பாக்கி குண்டுகளின் சத்தங்கள் உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றிவிடும்” என்று எழுதுகிறார்.
யோனா தீர்க்கதரிசி, நினிவேயின் அழிவை பார்க்க மலையுச்சி ஏறினார் (யோனா 4:5). தேவனின் வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து அக்கொடிய நகரத்தை எச்சரித்திருந்தார். ஆனால் நினிவே மனந்திரும்பியது. யோனா ஏமாற்றமடைந்தார். சில நூற்றாண்டுகள் கழித்து நினிவே மீண்டும் பாவத்திற்கு திரும்பியது. இப்போது நாகூம் தீர்க்கதரிசி அதின் அழிவை முன்னறிவிக்கிறார். “அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்... அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்” (நாகூம் 2:3) என்று எழுதினார்.
நினிவேயின் தொடர்ச்சியான பாவத்தினால் தேவன் அதை தண்டித்தார். ஆனால் யோனாவிடமோ, நினிவேயில் ஆவிக்குரிய இருளில் 120000 பேருக்கு அதிகமான மனுஷர் இருக்கிற “மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?” (யோனா 4:11) என்கிறார்.
தேவனுடைய நீதியும், அன்பும் ஒன்றாகவே பயணிக்கிறது. தீமையின் விளைவை நாகூம் காண்பிக்கிறார். நம்மைக் காட்டிலும் மோசமான சந்ததியினருக்கான தேவனுடைய இரக்கத்தை யோனா காண்பிக்கிறார். நாம் மனந்திரும்பி, அவ்விரக்கத்தை மற்றவர்களுக்கும்காண்பிக்கவேண்டும் என்பதே தேவனுடைய மனவிருப்பம்.
பிரபஞ்சத்துடன் விளையாட்டு
1980களின் ஆரம்பத்தில், தேவனை நம்பாத ஒரு பிரபலமான வானியலாளர், “ஒரு அதி உன்னத அறிவு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றோடு விளையாடுகிறது என்று பொது அறிவு விளக்கமளிக்கிறது.” என்றெழுதுகிறார். இவ்வுலகில், நாம் காணும் எல்லாவற்றையும் ஏதோவொன்று வடிவமைத்துள்ளது என்பதவருக்கு தெரிகிறது. “இயற்கையில் இயல்பாகவே எந்த சக்தியுமில்லை இல்லை” என்றும் அவர் கூறுகிறார். அதாவது, நம் கண்களுக்குத் தென்படுகிற அனைத்தும் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். இருப்பினும், அந்த விஞ்ஞானிக்கு இறைநம்பிக்கை இல்லை.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு ஞானி ஆகாயத்தைப் பார்த்து, வேறொரு முடிவுக்கு வருகிறார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று தாவீது ஆச்சரியப்படுகிறார் (சங்கீதம் 8:3-4).
ஆயினும், தேவன் நம்மை விசாரிக்கிறவராயிருக்கிறார். அதி உன்னதமான அறிவாளியாகிய தேவன் நம் சிந்தையை வடிவமைத்து, அவரைப் பார்த்து பிரமிக்கும்படி இவ்வுலகில் நம்மை வைத்திருக்கிறார் என்று அந்த அதி உன்னதமான சிருஷ்டிகரைக் குறித்து பிரபஞ்சமே அறிவிக்கிறது. இயேசுவின் மூலமும், அவர் படைப்பின் மூலமும் தேவனை நாம் அறியலாம். பவுல், “அவர் (கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய... சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோசெயர் 1:15-16).
பிரபஞ்சமுழுதும் அவர் கைவண்ணமே. அவரைத் தேடுபவர்களுக்கு, அந்த அதி உன்னத அறிவாளியாகிய தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார்.
அப்படி நடந்திருக்கக்கூடாது
“எப்படியாகிலும் இது இப்படியிருக்க கூடாதென விரும்புகிறேன்,” அந்த மனிதர், வாலிப வயதிலேயே மரித்த தன் நண்பனின் இரங்கல் கூட்டத்தில் இப்படி புலம்பினார். மானுடத்தின் காலவரையற்ற மனவேதனையின் கடுமை அவர் வார்த்தைகளிலிருந்தது. மரணம் நம் எல்லாரையும் திகைப்பூட்டும், அச்சுறுத்தும். மாற்ற முடியாததை, மாற்ற முயற்சித்து நாம் வேதனையடைகிறோம்.
இயேசுவின் மரணத்திற்குப்பின் “அப்படி நடந்திருக்கக்கூடாது” என்று சீஷர்கள் கருதியிருக்கக்கூடும். அக்கொடுமையான மணித்துளிகளை பற்றி சுவிசேஷங்கள் கொஞ்சமே சொன்னாலும், சில உண்மையான நண்பர்களின் அப்போதைய செயல்களை பதிவுசெய்துள்ளது.
யோசேப்பு, இயேசுவின் ரகசிய விசுவாசியான மதத்தலைவர் (யோவான் 19:38), திடீரென தைரியங்கொண்டு, பிலாத்துவிடம் இயேசுவின் உடலைக் கேட்கிறார் (லூக்கா 23:52). கொடூரமாய் சிலுவையேறிய ஒரு உடலை எடுத்து பதமாக அதை அடக்கம் செய்ய எவ்வாறு ஆயத்தம் செய்திருப்பாரென்று (வச. 53) சற்றே சிந்தியுங்கள்! பாதையெங்கிலும் இயேசுவின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்து, அவர் கல்லறை வரையிலுங்கூட வந்த பெண்களின் பக்தியையும், வீரத்தையும் எண்ணிப்பாருங்கள் (வச. 55). மரணமேயானாலும் மாறா அன்பு!
இந்த பின்பற்றுபவர்களின் கூட்டம் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கவில்லை. அவர்கள் வேதனையில் பங்குபெற உடன்பட்டவர்கள். நம்பிக்கையின்றி, துயரத்தோடு அந்த அதிகாரம் நிறைவடைகிறது, “திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வச. 56).
சரித்திரத்தின் வியத்தகு சம்பவத்திற்கு, அந்த ஓய்வுநாளின் இடைவேளை காரியங்களை தயார் செய்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. கற்பனைச்செய்ய முடியாததை இயேசு செய்யப்போகிறார். அவர் மரணத்தையே “அப்படியல்ல” என மாற்றப்போகிறார்.
அது இரவாயிருந்தது
எலி விஸேல் என்பவரின் “இரவு" என்ற நாவல், இனப்படுகொலையின் பயங்கரங்களால் நம்மை அச்சுறுத்துகிறது. நாசிப்படைகளின் மரண முகாம்களில் ஏற்பட்ட சொந்த அனுபவங்களை தழுவின இந்நாவலில், வேதாகமத்தின் யாத்திராகம புத்தகத்தின் சம்பவங்களை விஸேல் நேர்மாறாக ஒப்பிட்டுள்ளார். மோசேயும், இஸ்ரவேலர்களும் முதல் பஸ்காவிற்கு பின் அடிமைத்தனத்திலிருந்து தப்பினர் (யாத்திராகமம் 12). ஆனால் இங்கே பஸ்காவிற்கு பின்னர் நாசிகள் யூத தலைவர்களை கைது செய்தனர் என்று விஸேல் கூறுகிறார்.
விஸேலின் முரண்பாட்டை நாம் விமர்சிக்கும் முன், வேதாகமத்தின் அதேபோன்ற திருப்பம் நிறைந்த சம்பவம் ஒன்றுள்ளது. பஸ்காவின் இரவில், தேவ ஜனங்கள் தம் துன்பங்களிலிருந்து விடுவிக்க எதிர்பார்க்கப்பட்ட இயேசு, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தன்னை கொல்லக்கூடியவர்கள் தம்மை கைதுசெய்ய அனுமதிக்கிறார்.
இயேசு கைதாவதற்கு முன்னான புனித சம்பவத்திற்கு யோவான் நம்மை அழைத்துச் செல்கிறார். தனக்கு முன்பாக இருந்ததைக் குறித்து “ஆவியில் கலங்கினவராக,” அக்கடைசி இரவு போஜனத்தில் தாம் காட்டிக்கொடுக்கப்படப் போகிறதை இயேசு முன்னறிவித்தார் (யோவான் 13:21). பின்னர், நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத செயலாக, தன்னை காட்டிக்கொடுக்க போகிறவனுக்கே அப்பத்தை பரிமாறினார். “அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது" (வச. 30) என்று அச்சம்பவம் சொல்கிறது. சரித்திரத்தின் மாபெரும் அநீதி ஆரம்பமானது, இருந்தபோதிலும் இயேசு, “இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்” (வச. 31) என அறிவித்தார். சில மணிநேரங்களில், சீஷர்கள் பீதியுற்று, தோல்வியையும், நிராகரிப்பையும் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் இயேசுவோ தேவத் திட்டம் அப்படியே செயல்படுவதைப் பார்க்கிறார்.
அந்தகாரம் சூழ்வதைப்போல தோன்றினாலும், தேவன் தம் இருண்ட இரவை எதிர்கொண்டு வெற்றிபெற்றதை நாம் நினைவுகூரலாம். அவர் நம்மோடு வருகிறார். இரவு நீளாது.
தொலைந்த காரியங்கள்
தன் தேசத்தை பாழாக்கும் ஆடம்பரச் செலவுகளையும், ஊழல்களையும் கண்டு சோர்வடைந்த கொரியாவின் அரசர் யோங்ஜோ (1694-1776), காரியங்களை மாற்றத் தீர்மானித்தார். ஆனால், கூழுக்கு ஆசைப்பட்டு மீசையெடுத்த கதைப்போல பாரம்பரியமான தங்கநூல் தையல் கலையை தடைசெய்தார். இதனால், சீக்கிரமே இந்த நுணுக்கமான கலை அறிவு தேசத்தில் அழிந்துபோனது.
2011ஆம் ஆண்டு, சிம் யியோன்-ஓக் எனும் பேராசிரியர் அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர தீர்மானித்தார். தங்க இழைகளுக்கு பதிலாக கைகளால் கத்திரிக்கப்பட்ட மல்பெரி பேப்பர்களைக் கொண்டு அந்த பழமையான பாரம்பரிய வழக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார்.
யாத்திராகமத்தில், ஆடம்பரமான முறையில் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டினார்கள், ஆரோனின் ஆசாரிய வஸ்திரத்தில் தங்க இழைகள் கோர்க்கப்பட்டன. திறமையான கைவேலைக் கலைஞர்கள், “அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.” (யாத்திராகமம் 39:3). அந்த நேர்த்தியான கைவினைத் திறனுக்கு என்ன ஆனது? வஸ்திரம் கிழிந்துவிட்டதா? அவைகள் சூரையாடப்பட்டதா? எல்லாம் வீணாய் போனதா? இல்லவே இல்லை. அவர்கள் அதை நேர்த்தியாய் செய்தனர் ஏனெனில் தேவன் அவர்களுக்கு தெளிவான ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.
நாம் ஒவ்வொருவரும் செய்ய தேவன் ஏதோவொன்றை நமக்கும் கொடுத்திருக்கிறார். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் ஒரு சிறிய அன்பின் உதவியாக இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் சேவைசெய்வதின் மூலம் ஏதாகிலும் ஒன்றை அவருக்கு நாம் தரலாம். கடைசியில் நம்முடைய முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று நாம் கவலைப்படத் தேவையில்லை (1கொரிந்தியர் 15:58). நாம் பரமதகப்பனுக்காய் செய்யும் ஒவ்வொரு காரியமும் நித்தியத்திற்கு பலனளிக்கக் கூடியதாயிருக்கிறது.
நட்சத்திரங்களின் சவால்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இத்தாலிய கவிஞர் எப்.டி. மறிநேட்டி வருங்காலவியல் என்ற கலை இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் கடந்த காலத்தை புறக்கணித்து, அழகை குறித்ததான பாரம்பரிய கருத்துக்களை ஏளனம் செய்தது, மாறாக இயந்திரங்களை அது உயர்வாக கருதியது. 1909ஆம் ஆண்டு மறிநேட்டி, வருங்காலவியலின் கொள்கை விளக்கத்தை எழுதினார், அதில் அவர்: பெண்களை குறித்து இழிவாகவும், வன்முறையை உயர்வாகவும் அறிவித்திருந்தார். மேலும், "நாம் யுத்தங்களை மேன்மைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார். அவருடைய கொள்கை விளக்க உரை இவ்வாறு நிறைவடைந்தது: "உலகத்தின் உச்சியில் நின்று கொண்டு நாங்கள் மீண்டுமாக நட்சத்திரங்களுக்கு விரோதமான கொடூரமான யுத்தத்தை துவங்குகிறோம்"
மறிநேட்டி கொள்கை விளக்கத்தை அறிவித்து, ஐந்து ஆண்டுகளில் நவீன போர் மிகவும் தீவிரமாக ஆரம்பமானது. முதலாம் உலகப் போர் யாருக்கும் எந்த புகழையும் கொண்டு வரவில்லை. மறிநேட்டியே 1944-ல் மரித்தார். ஆனால் இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், நட்சத்திரங்கள் அதினதின் இடத்திலே நிலைத்திருந்தன.
தாவீது ராஜா, இந்த நட்சத்திரங்களை குறைத்து கவித்துவமாக பாடியிருந்தார் ஆனால் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு. அவர் எழுதுகிறார்,"உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்."(சங்கீதம்) என்று. தாவீதின் இந்தக் கேள்வி அவிசுவாசத்தினால் வந்தது அல்ல ஆனால் வியப்பினால் தன்னை தாழ்த்தினார். இந்த அகண்ட அண்ட சராசரங்களை உண்டாக்கின தேவன், மெய்யாகவே நம் மீது சிந்தையாய் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்முடைய ஒவ்வொரு விபரத்தையும் கவனிக்கிறார், நம்முடைய நன்மை, தீமை, தாழ்மை, கொடூரம், ஏன் அபத்தத்தை கூட கவனிக்கிறார்.
நட்சத்திரங்களுக்கு சவால் விடுவது என்பது முட்டாள்தனமானது, மாறாக அவைகள் நம்முடைய சிருஷ்டிகரை துதிக்கும்படி நமக்கு சவால் விடுகின்றன.
நமக்கு தேவையானதை பெறுதல்
ஆரோன் பர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமநிலை உடைக்கும் வாக்கெடுப்பின் முடிவிற்காக கவலையோடு காத்திருந்தார். 1800ல் தாமஸ் ஜெபர்ஸனுடனான அதிபருக்கான தேர்தல் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில், தன்னையே அதிபராக தேர்வுக்குழு அறிவிக்கும் என்று ஆரோன் பர் நம்ப காரணமிருந்தது. எனினும் அவர் தோற்றார், கசப்பு அவரை ஆழமாய் ஊடுருவியது. அலெக்சாண்டர் ஹாமில்டன் தன்னை அதிபர் வேட்பாளராக ஆதரிக்காத காரணத்தால் அவருக்கு எதிராக மனக்கசப்பை வளர்த்துக்கொண்ட பர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஹாமில்டனை துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொன்றார். இந்த கொலையால் வென்குண்டெழுந்த முழு தேசமும் அவருக்கு விரோதமாக திரும்ப, பர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட முதியவராக மரித்தார்.
அரசியல் விளையாட்டுக்கள் சரித்திரத்தில் கொடுமையான பங்காற்றியுள்ளன. தாவீது ராஜா மரிக்கும் தருவாயில் இருக்கையில், அவருடைய குமாரன் அதோனியா என்பவன் தாவீதின் தளபதியையும், மிக முக்கியமான ஆசாரியனையும் தன்னை ராஜாவாக்கும்படி தனக்கென்று பணியமர்த்திக்கொண்டான் (1 இராஜாக்கள் 1:5-8). ஆனால் தாவீது சாலொமோனையே ராஜாவாக தெரிந்து கொண்டார் (வ.17). தீர்க்கதரிசியான நாத்தானின் உதவியோடு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்படுகிறது (வ.11-53). அதோனியா சற்று ஓய்ந்தாலும், மீண்டும் இரண்டாம் முறை அரியணை ஏற திட்டம் தீட்டினான், எனவே சாலொமோன் அவனை கொல்ல வேண்டியிருந்தது (1 இராஜாக்கள் 2:13-25).
நம் மனுஷீக சுபாவமே நமக்கு உரிமை இல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொள்ள தூண்டுகிறது! நம் எவ்வளவுதான் கடினமாய் அதிகாரம், கவுரவம் அல்லது சொத்துக்களை அடைய முயன்றாலும் அது ஒரு போதும் நமக்கு நிறைவை தராது. அது எப்போதுமே நமக்கு பற்றாக்குறையாய் தான் இருக்கும். ஆனால் இயேசுவோ நம்மை போலல்லாமல் "மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:8)
இதற்கு முரணாக, சுயநலமாக நம்முடைய சொந்த விருப்பங்களையே நாம் தொடர்ந்தால் நம்முடைய ஆழமான, உண்மையான ஏக்கங்கள் தீராது. முடிவுகள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடுவதே சமாதானதிற்கும், சந்தோஷத்திற்குமான ஒரே வழி.