வேதாகம ஞானம் வாழ்க்கையை மாற்றக்கூடியது. அதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும், அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஊழிய தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் நமது அனுதின மன்னா ஊழியங்கள். முன்பு இது ஆர்.பி.சி ஊழியங்கள் என்று அழைக்கப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவோடு ஒரு தனிப்பட்ட உறவை அனுபவிக்கவேண்டும், அவரைப்போல அதிகமாக வளரவேண்டும், அவருடைய குடும்பத்தின் உள்ளூர் சபைசரீரத்தில் ஊழியம் செய்யவேண்டும் என்பதே எங்கள் தரிசனம்.
 
எங்களுடைய ஊழியத்தின் வழிகாட்டியாக எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையே நம்புகிறோம்; அவருடைய ஞானத்தையும் பெலத்தையும் சார்ந்திருக்கிறோம். வேதாகமம்தான் எங்களுடைய அடிப்படை. அவருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொள்ள எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பை உணர்ந்திருக்கிறோம். மேலும், எங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரராய் இருப்பதற்கு எங்களை அர்ப்பணித்திருக்கிறோம்.
 
எங்களுடைய இந்திய அலுவலகம் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் நம் அனுதின மன்னா தியானப் பாடத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அச்சகப் பதிப்புகளாகப் பெறலாம் (காலாண்டு சிறுபுத்தகங்கள் மற்றும் வருடாந்தர புத்தகங்கள்), மின்னஞ்சல் சந்தா மூலம் பெறலாம், இணையதளங்கள் மூலமாகவும் அலைபேசி செயலி மூலமாகவும் பெறலாம். அனுதின தியானப்பாடங்கள் தவிர கிறிஸ்தவ வாழ்க்கைமுறை, வேத ஆராய்ச்சிகள், ஆவிக்குரிய வளர்ச்சி என ஏராளமான தலைப்புகளில் அச்சிட்டப்பட்ட புத்தகங்களும் டிஜிட்டல் வளஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
 
இந்தியாவுக்கான பல்வேறு பிரத்தியேக திட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறோம். புராஜெக்ட் லவ் திட்டம் சிறுவர்களுக்கானது. கிறிஸ்துவின் மெய்யான அன்பை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, அன்புபற்றிய உலகக்கண்ணோட்டத்தின் ஆபத்துகளிலிருந்தும், ஆபாசப்படங்கள் என்கிற கண்ணியிலிருந்தும் அவர்கள் தப்பித்துக்கொள்ள உதவுகிறோம். புராஜெக்ட் ஹோப் என்பது இன்னொரு திட்டம்; கிறிஸ்தவ மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவது. அதாவது, இந்த மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டும்விதத்தில் சிறப்பு ஆதாரங்களை வழங்குகிறோம். எங்களுடைய பல்வேறு திட்டங்கள் பற்றி கீழே அதிகமாக வாசிக்கலாம்.
 
உலகம் முழுவதிலும் பல நாடுகளில், பல்வேறு இடங்களில் இலட்சக்கணக்கான மக்கள் நாள் முழுவதும் நம் அனுதின மன்னாவை வாசிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவோடு உறவை வைப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தையும், தேவனுடைய பரிசுத்த வார்த்தையை வாசிப்பதால் கிடைக்கிற காலத்தால் அழியாத ஞானத்தையும் அதன் ஒவ்வொரு பக்கங்களும் சுட்டிக்காட்டுகின்றன; வாசிப்பவர்கள் அதை நிச்சயமாகவே கண்டுகொள்ளலாம்.