இரண்டு நண்பர்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் இருப்பதைக் கண்டறியும் போது, முதல் அறிமுகங்களில் சுவாரஸ்யமான அனுபவம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று, “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. விஜயின் அல்லது ஹீனாவின் நண்பர்கள், எனக்கும் நண்பர்தான்” என்று நாம் சிநேகிதர்களின் சிநேகிதர்களை பெரிய மனதுடன் நம்முடைய வீட்டின் விருந்திற்கு வரவேற்கிறோம்.

இயேசுவும் இதே போன்று சொல்லியிருக்கிறார். அவர் பலரை வியாதியிலிருந்து குணமாக்கி, மக்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில், தங்களின் செல்வாக்கை தவறாய் பயன்படுத்தி, ஆலயத்தை வணிகமயமாக்கும் மதத் தலைவர்களின் செயல்களுக்கு ஒத்துப்போகாததால், அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இந்த எதிர்ப்புகளின் மத்தியிலும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, செலவு மற்றும் ஆச்சரியத்தை பெருக்க தீர்மானித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு வியாதியை குணமாக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிக்க அவர்களை அனுப்புகிறார். “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்” (10:40) என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்க்கையை மாற்றும் ஒரு அழகான நட்பிற்கு இதை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டை கற்பனை செய்வது கடினம். சீஷர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுக்கும் எவருக்கும், அல்லது அவர்களில் ஒருவருக்கு ஒரு கலசம் தண்ணீரைக் கொடுக்கும் எவருக்கும், இயேசு தேவனின் இருதயத்தில் ஒரு இடத்தை வாக்கு செய்கிறார். அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, ஒரு தயவுள்ள விருந்தோம்பல் செய்கையானது இன்றும் தேவனுடைய சிநேகிதர்களின் சிநேகிதனாய் நம்மை மாற்றுகிறது.