வகை  |  odb

அடுத்து வருவது என்ன?

1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3ஆம் நாள் இரவில், முனைவர். மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, “நான் மலையின் உச்சிக்கு சென்று விட்டேன்” என்றார். அதன் மூலம் அவர் தான் அதிக நாட்கள் வாழப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். மேலும் அவர், “நாம் இன்னமும் கடினமான நாட்களைச் சந்திக்க நேரிடும், ஆயினும் அது என்னை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் நான் மலையின் உச்சியில் இருக்கிறேன், நான் மேலே வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் காண்கின்றேன். நான் உங்களோடு அங்கு செல்வதில்லை……ஆனால் நான் இந்த இரவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நான் எதைக் குறித்தும் கவலைப் படவில்லை, எந்த மனிதனைக் குறித்தும் பயப்படவில்லை, என்னுடைய கண்கள் தேவனுடைய வருகையின் மகிமையைக் கண்டது” என்றார். மறு நாளில் அவர் கொலை செய்யப்பட்டார்.

அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக தன்னுடைய சீஷனான தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப் பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது… இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6,8) என்கின்றார். இப்பூமியில் அவருடைய வாழ்நாள் நிறைவடையப் போகின்றது என்பதை முனைவர்.கிங் அறிந்திருந்ததைப் போல, பவுலும் அறிந்திருந்தார். இருவருமே வாழ்வில் நம்பமுடியாத அளவு முக்கியத்துவத்தை உணர்ந்த போதும் தங்களுக்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த நித்திய வாழ்வைக் குறித்த தரிசனத்தைப் பெற்றிருந்தனர். இருவருமே அடுத்தபடியாக தங்களுக்கு நடக்க இருந்ததை வரவேற்றனர்.

இவர்களைப் போன்று நாமும் நம்முடைய கண்களை, “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி” திருப்புவோமாக, “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).

உற்சாகமாகக் கொடுப்பவர்கள்

பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய மனைவி வாங்கிய ஒரு பொருளுக்கான தள்ளுபடியைப் பெற்றாள். அதனை அவள் எதிர்பார்க்கவில்லை, அதனைக் குறித்து மெயில் வந்தது. அதே நேரத்தில் அவளுடைய சினேகிதியும் ஒரு நாட்டிலுள்ள பெண்கள் தொழில் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும், கல்வி மற்றும் வர்த்தகம் மூலம் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும்படி தேவையிலிருப்பதாகவும் பகிர்ந்து கொண்டாள். ஆயினும் அவர்களின் முக்கியமான தடையாக இருப்பது பொருளாதாரம்.

எனவே, என்னுடைய மனைவி, அந்தத் தள்ளுபடி தொகையோடு, ஒரு சிறிய கடனையும் பெற்று, இந்த பெண்களுக்கு உதவும் ஓர் ஊழியத்திற்குக் கொடுத்தாள். அந்த கடனைத் திருப்பிச் செலுத்திய போது, மீண்டும், மீண்டும் கடனைப் பெற்று அதற்குக் கொடுத்தாள். இதுவரை இருபத்தேழு முறை இவ்வாறு வழங்கியுள்ளாள். இதுவரை அவள் சந்தித்திராத, அந்த பெண்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளது என்ற செய்தியை அவள் கேட்கும் போது அவளின் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பை, அவள் அநுபவித்த வேறெந்த காரியத்திலும் நான் கண்டதில்லை.

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்ற வாக்கியத்தின் முதல் சொல்லிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை நாம் கேட்டிருப்போம், அது சரியானதும் கூட. நம்முடைய கொடுத்தலுக்கும் ஒரு சிறப்பு பண்பு உள்ளது. ஒருவன் கொடுக்கும் போது “விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல”, நாம் பெருக விதைக்க வேண்டும் (வ.6-7), அதாவது மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் கொடுப்போம், ஆனால் நாம் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை நமது முகங்கள் காட்டும்.

இயேசுவைப் போல ஜெபித்தல்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. அதன் முன் பக்கத்தை “தலை” என்கிறோம், ஏனெனில் ஆதி ரோமர் ஆட்சி காலத்திலிருந்தே நாணயத்தின் முன் பக்கம் அந்த நாட்டின் தலைமையைக் குறிக்கும். அதன் பின் பக்கம் “வால்” எனப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியிருக்கலாம், அந்த நாணயத்தில், ஒரு சிங்கத்தின் வால் உயர்த்தப்பட்ட நிலையில் காட்டப்பட்டிருக்கும்.

ஒரு நாணயத்தைப் போன்று, கெத்செமனே தோட்டத்தில், கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவு, தன்னுடைய வாழ்வின் துயரம் மிகுந்த நேரத்தில், ஜெபித்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (லூக்.22:42) என்றார். “இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும், அதையே நான் விரும்புகின்றேன்” என்று கிறிஸ்து ஜெபித்திருப்பாரேயானால் அது தான் உண்மையை வெளிப்படுத்தும் ஜெபம், அது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் ஜெபமாயிருந்திருக்கும்.

பின்னர் இயேசு நாணயத்தின் மறு பக்கத்தைத் திருப்புகின்றார், “என்னுடைய சித்தத்தின் படியல்ல” என்று ஜெபிப்பதின் மூலம் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கின்றார். “தேவனே, நீர் என்ன செய்ய விரும்புகின்றீர்?” என்று நாம் கேட்கும் போது, நம்மை அவரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பிக்கின்றோம்.

இந்த இரு பக்க ஜெபம், மத்தேயு 26, மாற்கு 14 மற்றும் யோவான் 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இயேசு இரு பக்க ஜெபத்தை ஏறெடுத்தார்; இந்த பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும் (தேவனே, இது நான் விரும்புவது), ஆயினும் என்னுடைய விருப்பத்தின் படியல்ல (தேவனே, நீர் என்ன விரும்புகின்றீர்?), இவ்விரண்டிற்கும் இடையே மட்டுமே அவருடைய ஜெபமிருந்தது. இயேசுவின் இரு பக்கங்கள், அவருடைய ஜெபத்தின் இரு பக்கங்கள்.

சம்பாதிக்கப்பட்டதல்ல சுதந்தரிக்கப்பட்டது

உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு,  “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.

என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.

நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!