எதிர்பாராத இடங்களில் சுவிசேஷம்
நான் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு, அதிக முறை திரைப்படங்களிலும் டிவியிலும் பார்த்த ஹாலிவுட், கலிபோர்னியா போன்ற இடங்களை தற்போது நேரில் பார்க்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் மலையடிவாரத்தில், எனது ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்தபோது, அந்த மகத்தான வெள்ளை எழுத்துக்கள், புகழ்பெற்ற அந்த மலைப்பகுதி முழுவதும் கெம்பீரமாய் படர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது.
வேறு ஒன்றையும் நான் பார்த்தேன். அதின் இடது பக்கத்தின் கீழே சிலுவை ஒன்று தென்பட்டது. அதை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அந்த தருணத்தில் நான் என் ஹோட்டலிலிருந்து வெளியேறி, அங்கிருந்த திருச்சபையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்து அறிவிக்க புறப்பட்டேன்.
ஹாலிவுட் போன்ற இடங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு முற்றிலும் விரோதமான கேளிக்கை ஸ்தலமாய் நாம் பார்க்கலாம். ஆனால் அங்கேயும் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
பரிசேயர்கள், இயேசு கடந்து சென்ற இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை. மாறாக, அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த ஆயக்காரரோடும் பாவிகளோடும் நேரம் செலவழித்தார் (வச. 15). யாருக்கு கிறிஸ்து அவசியப்பட்டாரோ அவர்களோடு இயேசு இருந்தார் (வச. 16-17).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இன்றும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள் மத்தியில் கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை பிரஸ்தாப்படுத்துகிறார். அந்த ஊழியப்பணியில் நாமும் பங்கேற்பதற்கு கிறிஸ்து நமக்கும் அழைப்பு விடுக்கிறார்.
எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?
“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள்.
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.
களைகளுக்கு நீர்ப்பாசனம்
இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம்.
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).
கிருபையின் மறுதொடக்கம்
கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.
மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).
தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு, புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.
இயேசுவே பிரதானம்
எனக்கும் என் மனைவிக்கும் கண்ணியமான, இதமான காதல் திரைப்படங்கள் பிடிக்கும். அவளுக்குச் சற்று அதிகம் பிடிக்கும், எனக்கும் கொஞ்சம் பிடிக்கும். இதுபோன்ற திரைப்படங்களின் தனித்துவமே அவற்றின் மனோரம்மியமான முடிவுதான். சமீபத்தில் நாங்கள் பார்த்த ஒரு திரைப்படத்திலோ சற்று ஆட்சேபனையான அறிவுறுத்தல்கள் இருந்தன. அதில், அன்பு ஒரு உணர்வு, உன் மனதில் பட்டதைச் செய், உன் தனிப்பட்ட சந்தோஷமே பிரதானம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. நம் உணர்வுகள் முக்கியம்தான், ஆனால் சுயத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகள் நீடிக்கும் திருமணங்களைக் கட்டியெழுப்பாது.
பொதுவான கலாச்சாரம், ஏற்றதாகத் தோன்றும் பல ஆலோசனைகளை அளித்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவை சிதைந்துவிடும். கொலோசெயர் 2 இல் பவுலின் மனதிலிருந்ததெல்லாம் கவனமான கருத்தாய்வு பற்றிய சிந்தனையே. அதில் அவர், “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வேர்கொண்டவர்களாகவும்.. விசுவாசத்தில் உறுதிப்பட்டு (ம்)” (வ.6-7) இருப்பதே நமது கலாச்சாரத்தில் உள்ள பொய்களை இனங்காணும் வழியென்பதை அடிக்கோடிட்டுள்ளார். அத்தகைய பொய்களை அப்போஸ்தலன் லௌகிக ஞானம், மாயமான தந்திரம் என்று அழைத்து, அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயம் மற்றும் உலகவழிபாடுகள் (வ.8) மேல் கட்டப்பட்டது என்கிறார்.
ஆகவே அடுத்தமுறை நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கையில், உங்களிடமோ அல்லது பிறரிடமோ “இந்த திரைப்படம் அறிவுறுத்தும் ஆலோசனை ஞானமானதா? சத்தியமென்று வேதாகமம் சொல்லுபவற்றோடு இது ஒத்துப்போகிறதா?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் கிறிஸ்துவே பிரதானம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அவருக்குள் மட்டுமே நாம் மெய்யான ஞானத்தையும், தேவத்துவத்தின் பரிபூரணத்தையும் (வ.9-10) காணமுடியும்.
ஷாலோமின் முகவர்கள்
2015 ஆம் ஆண்டில், கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள ஊழிய ஸ்தாபனங்கள், நகரச் சேவைக்காக ஒன்றிணைந்தன. மேலும் COSILoveYou (ஒரு சுவிசேஷ இயக்கம்) உதயமானது. ஒவ்வொரு இலையுதிர் காலத்தில், CityServe (நகர்ப்புற ஊழியம்) எனப்படும் நிகழ்வில், குழுவினர் சமுதாயத்திற்கு ஊழியம் செய்யும்படி விசுவாசிகளை அனுப்புகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊழியத்தின்மூலம், நானும் எனது பிள்ளைகளும் நகரத்தின் மையத்திலிருக்கும் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அங்கே, களைகளைப் பிடுங்கி சுத்தம் செய்தோம். மேலும் ஒரு கலைத் திட்டத்தில் பணியாற்றினோம், அதில், மலைகள் போன்ற தோற்றமளிக்க, வண்ணமயமான பிளாஸ்டிக் டேப்பைப் ஒரு சங்கிலி இணைப்பு வேலி மூலம் பிணைத்தோம். இது எளிமையானது, ஆனால் வியக்கத்தக்க அழகானது.
நான் பள்ளியைக் கடந்து செல்லும் போதெல்லாம், எங்களின் எளிமையான கலைத் திட்டம் எனக்கு எரேமியா 29 ஐ நினைவூட்டுகிறது. அங்கு, தேவன் தம்முடைய ஜனங்களை அவர்கள் இருந்த நகரத்தில் குடியேறி, அதற்குச் சேவை செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்கள் சிறைப்பட்டுப் போயிருந்தாலும், அங்கே இருக்க விரும்பவில்லை என்றாலும் அங்ஙனமே கட்டளையிட்டார்.
தீர்க்கதரிசி, "நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்" (வ.7) என்றார்.இங்குச் சமாதானம் என்ற சொல் "ஷாலோம்" என்ற எபிரேயச் சொல்லாகும். தேவனின் நன்மையும் மீட்பும் மட்டுமே கொண்டு வரக்கூடிய முழுமையையும், செழிப்பையும் குறித்த கருத்தை இது உள்ளடக்கியது.
ஆச்சரியப்படும் விதமாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் நாம் இருக்கும் இடத்திலேயே 'ஷாலோமின்' முகவர்களாக இருக்கும்படி அழைக்கிறார். செம்மைப்படுத்தவும், அவர் நமக்களித்துள்ள இடங்களில் எளிமையான, உறுதியான வழிமுறைகளில் மீட்பைப் செயல்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
மேலான மகிமை
சில நேரங்களில் வியக்கத்தக்க வகையில் ஆவிக்குரிய செய்திகள் எதிர்பாராத இடங்களில் தோன்றும். அதற்கு காமிக் புத்தகங்கள் ஒரு உதாரணம். ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர், தி ஹல்க் மற்றும் பல முக்கிய ஹீரோக்களின் பாரம்பரியத்தை கற்பனையாய் வடிவமைத்த மார்வெல் காமிக்ஸ் வெளியீட்டாளர் ஸ்டான் லீ 2018 இல் காலமானார்.
சன்கிளாஸடன் பிரபலமாகச் சிரிக்கும் அவர், பல தசாப்தங்களாக மார்வெல் காமிக்ஸில் மாதாந்திர நெடுவரிசைகளில் கையொப்பமிடும்போது, “எக்செல்சியர்” என்று எழுதுவது வழக்கம். அதற்கு “மேலான மகிமைக்கு நேராய் முன்நோக்கி செல்லுதல்” என்று அர்த்தத்தையும் விளக்கினார்.
எனக்கு அது பிடிக்கும். ஸ்டான் லீ அதை உணர்ந்தாரோ இல்லையோ, இந்த வழக்கத்திற்கு மாறான சொற்றொடரைப் பயன்படுத்துவது நிச்சயமாக பிலிப்பியர்களில் பவுல் எழுதியதைப் போலவே எதிரொலிக்கிறது. அவர் விசுவாசிகளை பின்னால் பார்க்காமல், மேலே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்: “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14).
வருத்தம் மற்றும் கடந்தகாலத்தில் நாம் எடுத்த முடிவுகளில் நாம் எளிதில் சிக்கிக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்துவில், வருந்துவதைத் துறந்து, அவர் நமக்கு அருளும் மன்னிப்பையும் நோக்கத்தையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் தேவனுடைய மகத்தான மகிமைக்காக மேல்நோக்கிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம்! எக்ஸெல்சியர்!
நான் ஓட்டுநர் மட்டுமே
"அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?" பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். "கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்" என்றேன்.
"நான் ஓட்டுநர் மட்டுமே" என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு "வாகன ஓட்டுநராக" இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.
மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் "வெறும் ஓட்டுநர்" என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது.
இயேசு கறைகளை கழுவுகிறார்
வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.
என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.
பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22).
அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”
என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”