எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

சிந்தனையும் ஜெபமும்

“உங்களுக்காக நான் நிச்சயமாய் ஜெபித்துக்கொள்கிறேன்.” இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அதைச் சொல்லும் நபர் உண்மையில் அதைச் சொல்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் எட்னா டேவிஸ் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைவரும் எட்னாவின் மஞ்சள் நோட்டு புத்தகத்தை பக்கம் பக்கமாக அறிவர். அதில் எழுதப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை ஒவ்வொரு நாள் காலையிலும் சத்தமாக ஜெபப்பது அவரின் வழக்கம். அவருடைய ஜெபப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் ஜெபத்திற்கான பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் எட்னாவின் மரணத்தில், சாட்சிட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தெய்வாதீனமான ஏதோ ஒன்று அவருடைய ஜெபத்தின் மூலமாகவே நடந்தது என்று சாட்சியளித்தனர். 

பேதுருவின் சிறைச்சாலை அனுபவத்தில், ஜெபத்தின் வல்லமையை தேவன் வெளிப்படுத்தினார். ஏரோது ராஜாவின் மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிறகு, “வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்” (அப்போஸ்தலர் 12:4). அவன் தப்பிக்கும் வாய்ப்பிற்கு இடமேயில்லை. ஆனால் “சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (வச. 5). அவர்கள் பேதுருவை தங்கள் சிந்தையில் வைத்து ஜெபித்தனர். தேவன் ஆச்சரியமான ஒன்றை செய்தார். சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, அவனுடைய சங்கிலிகளிலிருந்து அவனை விடுவித்து, சிறைக்கு வெளியே பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றார் (வச. 7-10).

சிலர் தங்களுடைய “சிந்தனைகளையும் ஜெபங்களையும்” வீணாய் பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய பரமபிதா நம்முடைய சிந்தையை அறிந்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார., அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நமக்காகச் செயல்படுகிறார். சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதும், மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பது சிறிய காரியமல்ல. 

கனியினால் அறியுங்கள்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பிரபலங்களை நடுவர்களாகக் கொண்ட குழு, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரே உருவ அமைப்பு கொண்ட மூவரில் யார் நிஜமான நபர் என்றறிய பல கேள்விகளை கேட்பர். அதில் இருவர் பொய்யான நபர்கள். உண்மையான நபரைக் கண்டறிவது குழுவின் பொறுப்பு. நடுவர்கள் பல சாதுரியமான கேள்விகளைக் கேட்டாலும், இன்னார் யாரென்று கண்டுபிடிக்க நடுவர்கள் சிரமப்படுவர். போலியான நபர்கள், உன்மையைப் பொழுதுபோக்காகக் குழப்புவதே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி.

கள்ள உபதேசிகளைக் குறித்து, யார்? இன்னார்? என்னும் கேள்வி ஊடகங்களுக்குப் பொருந்தாத ஒன்று. என்றாலும், அதேபோன்று சவாலாய் அமையக்கூடிய ஒரு முக்கிய கேள்வியாயிருக்கிறது. கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வரும் பட்சிக்கிற ஓநாய்கள் என்பதினால் “விழித்திருங்கள்”என்று இயேசு எச்சரிக்கிறார் (மத்தேயு 7:15). இங்கே நிறையக் கேள்விகளைக் கேட்பதல்ல காரியம்; நல்ல கண்களைக் கொண்டிருப்பதே காரியம். அவர்களுடைய கனிகளைப் பாருங்கள், அதினாலே அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் (வச.16-20).

நல்ல கனிகளையும் கெட்ட கனிகளையும் காண்பதற்கு வேதம் நமக்கு உதவிசெய்கிறது. “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்றவை நல்ல கனிகள் (கலாத்தியர் 5:22-23). ஓநாய்கள் வஞ்சிக்கக்கூடியவை என்பதினால் நாம் அதிக கவனமாயிருக்க வேண்டும். ஆனால் ஆவியினால் நிரப்பப்பட்ட விசுவாசிகளாகிய நாம், நல்மேய்ப்பரும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும்”நிறைந்தவருமாகிய இயேசுவுக்கு ஊழியம் செய்கிறோம் (யோவான் 1:14).

நமக்கு இயேசுவின் உதவி தேவை

என்னுடைய அப்பா யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்று நான் நம்பிய அந்த நாள் வந்தது. அவருடைய வலிமையையும் உறுதியினையும் ஒரு சிறுவனாய் நான் பார்த்திருக்கிறேன்.  நான் வளரும் தருவாயில் அவர் கீழே விழுந்து அவருடைய இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு தான், அவரும் சாதாரணமானவர் என்பதை உணர்ந்தேன். நான் படுத்த படுக்கையான என் அப்பாவை கழிவறைக்கு அழைத்துச் செல்வது, உடைகள் மாற்றுவதில் உதவி செய்வது, தண்ணீரை அவருக்குக் குடிக்கக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்தேன். அது என்னுடைய அப்பாவுக்கு மிகுந்த விசனமாயிருந்தது. அவர் தானாகவே முன்வந்து சில காரியங்களை செய்ய முயற்சித்தார். ஆனால் அது முடியாததால், “நீ இல்லாமல் என்னால் ஒன்னும் செய்யமுடியவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். கடைசியில், அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர் விடுபட்டார். ஆனால் அந்த அனுபவம் எங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. நமக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதே அந்த பாடம். 

மற்றவர்களின் உதவி எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு இயேசுவும் நமக்கு அவசியம். யோவான் 15ஆம் அதிகாரத்தில் திராட்சைச் செடியை   குறித்தும் அதின் மீது படர்ந்திருக்கும் கொடிகளைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். அது தேற்றக்கூடிய உதாரணமாய் அமைந்தாலும், நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாய் இருக்கிறது. “எனக்கு உதவி தேவையில்லை” என்ற நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கிறதாயிருக்கிறது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (வச. 5) என்று இயேசு தெளிவாய்ச் சொல்லுகிறார். ஒரு சீஷனுக்கு அவசியமான ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலாத்தியர் 5:22) போன்ற கனிகளைக் குறித்து இயேசு இவ்வாறு பேசுகிறார்.  

இயேசு நம்மை கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவே அழைக்கிறார். அவரை நாம் முழுமையாய் சார்ந்துகொள்வோமாகில், பிதாவை   மகிமைப்படுத்தக் கூடிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் (யோவான்15:8).   

வீட்டின் விசுவாசப் பேச்சுகள்

“வீடு போன்ற சிறந்த இடம் இல்லை” என்ற வரிகள், தி விஸார்ட் ஆஃப் ஓஸ் (The Wizard of Oz) என்ற அனைத்து கதைகளையும் சொல்லும் கருவியில், டோரதி பேசிய இந்த வரிகள் மறக்கமுடியாது. இது “கதாநாயகனின் பயணம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு அசாதாரண சாகசம் முன்நிறுத்தப்படும்போது, ஒரு சாதாரண மனிதன் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறான். அதில் இடம்பெறும் கதாப்பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய பயணத்தில் பல சோதனைகளையும், வழிகாட்டிகளையும் எதிரிகளையும் சந்திக்கிறது. அவர்களின் திறமையை அவர்கள் நேர்த்தியாய் நிரூபித்தால், தாங்கள் கற்றுக்கொண்ட கதைகள் மற்றும் அதின் ஒழுக்கநெறி பாடங்களோடு அவர்கள் வீடு திரும்பமுடியும். இதில் கடைசிப் பகுதி மிகவும் முக்கியமானது.

பிசாசு பிடித்த மனிதனின் கதை இந்த கதாநாயகனின் பயணத்திற்கு நெருக்கமாக அமைகிறது. அதின் கடைசிக் காட்சியில், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் இயேசுவுடன் வருவதற்கு தன்னை அனுமதிக்குமாறு கெஞ்சினான் என்பது சுவாரஸ்யமானது (மாற்கு 5:18). ஆயினும் இயேசு அவனிடம் “உன் சொந்த மக்களிடம் வீட்டிற்கு போ" (வச. 19) என்று கூறுகிறார். இந்த நபரின் பயணத்தில் ஏற்பட்ட இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை, வீடு திரும்பி தன்னுடைய மக்களிடம் அவற்றை அறிவிக்கவேண்டியது அவசியமாயிருந்தது.

தேவன் நம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளினின்று அழைக்கிறார். ஆனால் நம்மில் சிலருக்கு, நம் நம்பிக்கை பயணத்தில் வீட்டிற்குச் சென்று, நம்மை நன்கு அறிந்தவர்களிடம் நம் கதையைச் சொல்வது மிகவும் முக்கியமானது. “வீடு போன்ற சிறந்த இடம் இல்லை" என்பதுதான் நம்மில் சிலருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு.

எங்கள் பிதாவே

ஒவ்வொரு நாள் காலையும், நான் பரமண்டல ஜெபம் சொல்வது வழக்கம். அந்த வார்த்தைகளில் நான் ஊன்றும்வரை என் நாளை துவக்கமாட்டேன். சமீபத்தில், “எங்கள் பிதாவே” எனும் இரு வார்த்தைகளை மட்டும் நான் சொன்னவுடனே, என் செல்பேசி ஒலித்தது. அது காலை 5:43 மணி; சற்று திடுக்கிட்டேன். யாராயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “அப்பா” என்று செல்பேசி காண்பித்தது. நான் அவர் அழைப்பிற்கு பதிலளிக்குமுன் அதின் சத்தம் அணைந்தது. என் அப்பா தவறுதலாய் என்னை அழைத்துவிட்டார் என்றெண்ணினேன். ஆம்! அது உண்மைதான். ஏதேச்சையான நிகழ்வா? இருக்கலாம். ஆனால், நாம் தேவகிருபை நிறைந்த ஒருலகில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். அந்த குறிப்பிட்ட நாளில், நம் தகப்பனின் பிரசன்னத்தை நான் மீண்டும் உறுதிசெய்துகொள்வது அவசியமாயிருந்தது.
அதை ஒரு நிமிடம் யோசியுங்கள். இயேசுகிறிஸ்து, தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் “எங்கள் பிதாவே” (ஆங்கிலத்தில்) (மத்தேயு 6:9) என்றே துவங்குகிறது. ஏதேச்சையானதா? இல்லை. இயேசு, எல்லாவற்றையும் காரணத்தோடே செய்கிறார். நம்முடைய மாம்ச தகப்பனிடத்தில் நம் எல்லோருக்குமான உறவு ஒன்றுபோல் இல்லை. சிலருக்கு நல்ல உறவு இருக்கும்; சிலருக்கு அப்படியிருக்காது. ஆனால் பரமண்டல ஜெபம், “என்” அல்லது “உன்” என்று துவங்காமல் “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அவர் நம்மைப் பார்க்கிறார், கேட்கிறார், நாம் கேட்பதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார் (வச. 8).
என்ன அழகான வாக்குறுதி! குறிப்பாய் நாம் காணாமற்போனதாய், தனிமையான, கைவிடப்பட்ட, அர்ப்பமாய் எண்ணப்பட்ட தருணங்களில் இந்த வாக்குறுதி நம்மைத் தேற்றுகிறது. நாம் எங்கிருந்தாலும், எல்லா நேரங்களிலும் பரமண்டலங்களில் இருக்கும் நம்முடைய பிதா நம்மருகே இருக்கிறார்.

வெளிப்பாடும் உறுதிப்பாடும்

2019இல் பிறந்த குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் வழிமுறைகள் ஆச்சரியமாயிருந்தது. ஜூலை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாய் காரில் நீலநிறப் புகையை வெளிப்படுத்தி தெரியப்படுத்தியதை நான் காணொலி ஒன்றில் பார்த்திருக்கிறேன். செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தையின் பிறப்பை தெரியப்படுத்துவதற்காய் உரத்தை தெளிக்கும் விமானத்தில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் இளஞ்சிவப்புநிற நீரை தெளித்து தெரியப்படுத்தினர். இந்த குழந்தைகள் வளருகிற இந்த உலகத்தில் இன்னும் பல வெளிப்பாடுகள்இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், யூவெர்ஷன் என்னும் வேதாகம செயலி அந்த ஆண்டில் அதிகமாய் பகிரப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வசனமாய் பிலிப்பியர் 4:6 -ஐ தேர்ந்தெடுத்தது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.”

இது ஒரு வெளிப்பாடு. மக்கள் இன்று பல காரியங்களைக் குறித்து கவலைப்படுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள், குடும்பம் மற்றும் சிநேகிதர்களின் பிரிவுகள், இயற்கைச் சீற்றங்கள், யுத்தங்கள் என்று அநேக காரியங்களைக் குறித்த கவலைப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” என்னும் வாக்கியத்தை அநேகர் உறுதியாய் பற்றிக்கொள்வதே மகிழ்ச்சியான செய்தி. அத்துடன் இந்த ஜனங்கள் “எல்லாவற்றையுங் குறித்து” தேவனிடத்தில் விண்ணப்பத்தில் தெரியப்படுத்தவும் மற்றவர்களை அவ்விதமாய் உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் ஒதுக்காமல் அவற்றை சமாளிப்பது ஒரு விதத்தில் தேவனுக்கு நன்றி செலுத்துதலாய் கருதப்படுகிறது.

அந்த ஆண்டின் முக்கிய வசனமாய் தெரிந்தெடுக்கப்படாததும் அதை பின்தொடரும் வசனமுமானது, “தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச.7) எனபதே, ஆனால் அதுவே உறுதிப்பாடாய் உள்ளது!

பிதாவின் குரல்

என் நண்பனின் அப்பா சமீபத்தில் மரித்துவிட்டார். அவர் வியாதிபட்ட உடனே அவர் நிலைமை வேகமாக சீர்குழைந்தது, பின்னர் சில நாட்களிலேயே அவர் கடந்து போய்விட்டார். என் நண்பனும், அவன் தந்தையும் எப்போதும் நெருங்கிய உறவிலிருந்தார்கள், ஆயினும் கேட்கப்பட வேண்டிய அநேக கேள்விகள் இருந்தன, தேடப்படவேண்டிய பதில்களும், பேசப்பட வேண்டிய உரையாடல்களும் இருந்தன. சொல்லப்படாத அநேக காரியங்கள் இருக்க, இப்போது அவனுடைய தந்தை போய்விட்டார். என் நண்பன் ஒரு தேர்ந்த ஆலோசகர்: அவனுக்கு துயரத்தின் நெளிவுசுளிவுகள் எல்லாம் அத்துப்படி, கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டுமென்று நன்கு அறிந்திருந்தான். இருந்தபோதிலும் அவன் என்னிடம், "சில நாட்கள் அப்பாவின் குரல் எனக்கு கேட்க வேண்டுமென்று உள்ளது, அது எனக்கான அன்பை உறுதியளித்தது. அதுவே எப்போதும் என்னுடைய உலகமாய் இருந்தது" என்றான்.

இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்திலே யோவானின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றது மிக முக்கியமான பகுதியாகும். யோவான் அதற்கு தடைசெய்ய முயன்றபோதிலும், அந்த தருணம் தன்னை மனித குலத்தோடு அடையாளபடுத்திகொள்ள அவசியமானது என்று வலியுறுத்தினார். "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது " (மத்தேயு 3:15) இயேசு சொன்னபடியே யோவான் செய்தான். பின்பு ஏதோவொன்று நடந்தது, அது யோவானுக்கும், சுற்றியிருந்த கூட்டத்திற்கும் இயேசுவின் அடையாளத்தை அறிவித்தது, மேலும் அது இயேசுவின் இதயத்தையும் ஆழமாக தொட்டிருக்க வேண்டும். பிதாவின் சத்தம் குமாரனுக்கு உறுதியளித்தது: "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" (வ.17)

அதே குரல் விசுவாசிகளாகிய நம்முடைய இதயங்களிலும் நமக்கான அவருடைய பேரன்பை உறுதியளிக்கிறது (1 யோவான் 3:1)

பதில் கிடைக்காத ஜெபங்கள்

நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. எங்கள் பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபோது, வீட்டை அடையும் 16 மணி நேர பயணத்தில் நாங்கள் இப்படித்தான் கேட்டுக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்தோம். எங்களின் மூத்த பிள்ளைகள் இருவரும் இந்த விளையாட்டை துடிப்புடன் விளையாடினர். அவர்கள் அந்த கேள்விகளை பலமுறை கேட்டுக்கொண்டேயிருந்தனர். நாம் அடைந்து விட்டோமா? என்ற இந்தக் கேள்வியை என்னுடைய குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பர். நானும் வாகனத்தை ஓட்டிக்கொண்டே “இல்லை” என்று அதே ஆர்வத்துடன் பதிலளிப்பேன். நாங்கள் இன்னும் வந்து சேரவில்லை, ஆனால் சீக்கிரத்தில் சேர்ந்துவிடுவோம் என்பதே பதில். 

உண்மை என்னவெனில், பெரியவர்கள் அந்த கேள்வியை சத்தமாய் சொல்லவில்லை என்றாலும் அந்த கேள்வியில் வேறு ஒரு மாற்று முறையை விரும்புகின்றனர். ஆனால் நாம் அதே காரணத்திற்காகத் தான் கேட்கிறோம். நாம் சோர்ந்துவிட்டோம், நம் கண்கள் குழிவிழுந்து போயிற்று (சங்கீதம் 6:7). ஒவ்வொரு நாளும் ஏற்படுகிற வாழ்க்கை பிரச்சனைகள், வேலை ஸ்தலத்தில் ஏற்படும் முடிவில்லா சோதனைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றால் நாம் பெருமூச்சி விட்டு இளைத்துப் போகிறோம் (வச. 6). நாம் அடைந்து விட்டோமா? இந்த பாடுகள் எது வரைக்கும் தேவனே? என்று நாம் கதறுகிறோம்.   

அந்த வகையான சோர்வை சங்கீதகாரன் நன்கு அறிந்து தேவனிடம் முக்கியமான கேள்வியை கேட்கிறார். அக்கறையுள்ள பெற்றோர் போல, தாவீதின் அழுகுரலைக் கேட்டு மிகுந்த இரக்கத்தால் ஏற்றுக்கொண்டார் (வச. 9). நாம் தேவனிடம் கேட்பதற்கு வெட்கப்படத் தேவையில்லை. கர்த்தருடைய சமுகத்தில், “எதுவரைக்கும் தேவனே?” என்று தைரியமாகக் கேட்கலாம். அவரோ “இன்னும் இல்லை, ஆனால் சீக்கிரத்தில் நடக்கும். நான் நல்ல தேவன், என்னை நம்புங்கள்" என்பார்.

வாழும்போதே வழங்குங்கள்

ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில் தன்னுடைய செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கோடீஸ்வரர் தன்னுடைய பணத்தை வடக்கு அயர்லாந்தில் அமைதி திரும்புவதற்காகவும், வியட்நாமின் சுகாதார அமைப்பை நவீனமாக்கவும் தானம் செய்தார். அவர் இறக்கும் முன் நியூயார்க்கில் உள்ள ஒரு தீவை தொழில்நுட்ப மையமாக மாற்ற 350 மில்லியன் டாலர் (35 கோடி) பணத்தை செலவு செய்தார். அவர், “நான் வாழும்போது தர்மம் செய்வதில் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். தாமதமாய் வழங்குவதில் அர்த்தம் இல்லை. இறந்த பின் கொடுப்பதைவிட வாழும்போது கொடுப்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும்,” என்று கூறுகிறார். வாழும்போதே வழங்குங்கள் - என்னே அற்புதமான அணுகுமுறை! 

பிறவிக் குருடனைப் பற்றி யோவான் குறிப்பிடும்போது இயேசுவின் சீஷர்கள், “யார் செய்த பாவம்” (9:2) என்று கேட்டனர். அதற்கு இயேசு, “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்” என்கிறார் (வச. 3-4). நம்முடைய வேலை இயேசு போன்று அற்புதங்களை நிகழ்த்துவதாய் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவற்றை அன்பின் ஆவியோடே நாம் செய்ய முன்வரவேண்டும். நம்முடைய நேரம், பொருட்கள், செய்கைகள் ஆகிய எல்லாவற்றிலும் தேவனை பிரதிபலிக்கும்பொருட்டு நாம் கொடுக்க முன்வருதல் அவசியம். 

தேவன் உலகை இவ்வளவாய் அன்பு கூர்ந்ததால், அவரைத் தந்தார். பதிலுக்கு நாமும் வாழும்போதே கொடுத்து வாழப் பழகுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தொலைநோக்குக் கனவுகள்

கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.

பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).

நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

தினந்தோறும் சாருதல்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11

ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது. 

மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.

தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

ஒரு அன்பான உழைப்பு

டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.