எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்எலிஸா மோர்கன்

விண்மீன் பிரகாசம்

“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்பது ஒரு ஆங்கில தாலாட்டுப் பாடல். நட்சத்திரங்கள் “உலகத்திற்கு மேலே உயரத்தில்” இருக்கின்றன என்று அதிசயத்தக்க கடவுளின் பிரபஞ்சத்தைப் பற்றிய இந்த வரிகளை ஜேன் டேய்லர் முதலில் ஒரு கவிதையாக எழுதினார். அதிகம் அறியப்படாத மற்ற சரணங்களில் “உன்னுடைய வெளிச்சமான சிறிய பொறி, இருட்டில் செல்லும் பயணிக்கு ஒளி” என்று நட்சத்திரம் ஒரு வழிகாட்டியாக சித்தரிக்கப்படுகிறது.

பிலிப்புவில் உள்ள விசுவாசிகள் தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்கும்போது “சுடர்களைப்போல பிரகாசித்து” குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக இருக்கும்படி பவுல்  பிலிப்பியரில் அறைகூவல் விடுக்கிறார் (வச. 15-16). நாம் எப்படி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்க முடியும் என்று நினைக்கிறோம். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம் “ஒளி” வெளிச்சமாக இருக்கிறதா என்று நம்ப முடியாமல் தவிக்கிறோம். நாம் குறைவுள்ளவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நட்சத்திரங்கள் நட்சத்திரங்களாக இருக்க முயற்சி செய்வதில்லை. அவை நட்சத்திரங்களாக இருக்கின்றன, அவ்வளவே. ஒளி நம் உலகத்தை மாற்றுகிறது. அது நம்மையும் மாற்றுகிறது. ஆண்டவர் உலகத்திற்கு ஒளியைத் தந்தார் (ஆதியாகமம் 1:3).  இயேசுவின் மூலமாக, கடவுள் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய ஒளியைத் தருகிறார் (யோவான் 1:1-4).

கடவுளின் ஒளியைக் கொண்டுள்ள நாம், நம்மைக் காண்பவர்கள் ஒளியைக் கண்டு, அதன் மூல ஆதாரத்தை நோக்கி ஈர்க்கப்படும்படி, ஒளிவீச வேண்டும். இரவில், வானத்தில் நட்சத்திரம் எப்படி எளிதாக ஒளிவீசுகிறதோ, நம் ஒளியும், அது ஒளி என்கிற காரணத்தினாலேயே ஓரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் இருட்டான உலகில் ஒளி வீசும்போது, “ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு” என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்றுகிறோம். இதனால் நம் நம்பிக்கையின் மூல ஆதாரமான இயேசுவிடம் நாம் மற்றவர்களை ஈர்க்கிறோம்.

இருதயத்தின் பசி

சிறு சிறு வேலைகளுக்காக, நான் என் கணவனோடு காரில் சென்றுகொண்டிருந்த போது, இமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அத்தெருவில், எங்களின் வலப்பக்கம், நாங்கள் சற்றே கடந்த ஒரு டோனட் கடையின் விளம்பரம் என் போனில் வந்தது. உடனே என் வயிறு பசியினால் கூப்பிட ஆரம்பித்தது. வியாபாரிகள் தங்கள் பொருட்களை மக்கள் வாங்கும் படி அவர்களை வசப்படுத்த தொழில்துறை எவ்வளவு உதவுகிறது என நான் வியந்தேன்.

நான் இமெயில் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தேவன் என்னை அவரருகில் இழுத்துக் கொள்ள எவ்வளவு ஆவலாயிருக்கிறார் என்பதைத் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன். நான் எங்கிருக்கிறேன், என்னுடைய திட்டங்களை நிறைவேற்ற எப்படி ஆர்வமுள்ளவனாயிருக்கிறேன் என்பதை தேவன் அறிவார். என்னுடைய வயிறு அந்த டோனட்டை அடையவேண்டுமென கூப்பிட்டது போல, என்னுடைய இருதயம் தேவன் மீதுள்ள தாகத்தால் கூப்பிடுகிறதா?

யோவான் 6ல், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தைக் கண்ட சீஷர்கள், இயேசுவிடம் மிக ஆவலாக, “ஆண்டவரே, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தர வேண்டும்” (வச. 33-34) என்கின்றனர். வசனம் 35ல் இயேசு அவர்களை நோக்கி, ‘ ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்றார். இயேசுவோடு நாம் எப்பொழுதும் தொடர்பில் இருந்தால் அது நம் அனுதின வாழ்விற்கும் தொடர்ந்து ஊட்டத்தைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறதல்லவா!

என் உடலின் தேவையை அந்த டோனட் கடையின் விளம்பரம் குறிவைத்தது போல, என்னுடைய இருதயத்தின் நிலையை எப்பொழுதும் அறிந்திருக்கின்ற தேவன், என்னுடைய எல்லாகாரியங்களிலும் அவர் எனக்குத் தேவை என்பதையுணர்ந்து, அவராலே மட்டும் தரக் கூடியவற்றை நான் பெற்றுக் கொள்ளும்படி என்னை அழைக்கின்றார்.

நம்முடைய காயங்களை மறைத்தல்

நான் அருகிலுள்ள ஒரு தேவாலயத்திற்குச் சிறப்பு செய்தியாளராகச் சொன்றிருந்தேன். அன்று என்னுடைய செய்தியின் கருத்து, நம்முடைய உடைந்த உள்ளத்தை தேவனிடம் கொடுத்து, அவர் கொடுக்க விரும்புகிற சுகத்தைப் பெற்றுக்கொள்ளல் என்பதைக் குறித்த ஓர் உண்மைக் கதை. கடைசி ஜெபத்திற்கு முன்பு அங்குள்ள போதகர், இடைப்பாதையின் மத்தியில் நின்றுகொண்டு அங்கு கூடியிருக்கும் சபையினரின் கண்களை ஆழ்ந்து நோக்கி, “உங்களுடைய போதகராக நான் உங்களை இந்த வார நடுவில் பார்க்கவும், உங்களுடைய இருதயத்தை நொறுக்கின நினைவுகளைப் பற்றிக் கேட்கவும் வாய்ப்பைப் பெறுகிறேன். வார இறுதி ஆராதனையில் நீங்கள் உங்கள் காயங்களை எவ்வாறு மறைத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் கவனிக்கும் வேதனையை நான் எடுத்துக் கொள்கின்றேன்” என்றார்.

நாம் மறைத்து வைத்துள்ள காயங்களால் ஏற்பட்ட என் இருதய வேதனையை சுகப்படுத்தும்படி தேவன் வந்தார். எபிரெயரை எழுதியவர் தேவனுடைய வார்த்தைகள் உயிருள்ளவை, செயல்படுபவை என்கின்றார். நம்மில் அநேகர் இந்த வார்த்தைகளை வேதாகமம் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அது அதையும் விட மேலானது. தேவனுடைய வார்த்தையின் ஜீவன் இயேசு கிறிஸ்து அவர் நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் மதிப்பிடுகின்றார். ஆனாலும், நம்மீது அன்பு கூறுகின்றார்.

இயேசு மரித்ததின் மூலம் நாம் தேவனுடைய சமூகத்திற்கு எல்லா வேளைகளிலும் செல்லக் கூடிய வழியைத் தந்தார். நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வது என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பது நம்மனைவருக்கும் தெரியும், நாம் குற்ற உணர்வோடு உடைந்து போனவர்களாய் அல்ல, மன்னிக்கப்பட்ட கிறிஸ்துவின் சீடர்களாக வாழும் இடமாக தேவனுடைய ஆலயத்தைத் தந்துள்ளார். அது “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” கொள்ள வேண்டிய இடம்’’ (கலா. 6:2).

இன்று மற்றவர்களின் கண்களுக்கு நீ எதை மறைத்துக் கொண்டிருக்கின்றாய்? தேவனிடமிருந்தும் எப்படி உன்னை மறைத்துக் கொள்ளப் பார்க்கின்றாய்? இயேசுவின் மூலம் தேவன் நம்மைக் காண்கின்றார். ஆனாலும் தேவன் நம்மை நேசிக்கின்றார். அவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வோமா?

நில்

கடலலையின் ஓசையை ரசித்தவாறே நானும் என்னுடைய சிநேகிதியும் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தோம். தூரத்தில் சூரியன் மறைவதையும், அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுருண்டு மெதுவாக எங்களின் நீட்டிய பாதங்களைத் தொடாமல் சற்று தள்ளி நின்றதையும் பார்த்து மகிழ்ந்தோம். "நான் கடலையை நேசிக்கின்றேன்" என்று புன்சிரிப்போடு கூறினாள். “அது அசைந்து கொண்டேயிருப்பதால் நாம் அசையத் தேவையில்லை” என்றாள்.

என்ன சிந்தனை! நம்மில் அநேகர் நிறுத்துவதற்குக் கஷ்டப்படுகின்றோம். நாம் முயற்சிக்கின்றோம். செல்கின்றோம். நம் முயற்சிகளிலிருந்து தளர்ந்துவிடாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நம் முயற்சிகளை விட்டு விட்டால் நாம் வாழமுடியாது என்று எண்ணிவிடுகின்றோம். சற்று நின்று கவனிப்போமாகில் நாம் எப்பொழுதும் தூரத்திலேயே வைத்துவிட நினைத்திருக்கும் சில உண்மைகளைக் கண்டு கொள்வோம்.

சங்கீதம் 46:8-9 தேவனுடைய சர்வ வல்லமையையும், அவருடைய வல்லமை வெளிப்படுவதையும் விளக்குகின்றது. “கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். …அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” குழப்பங்கள் நிறைந்த நம்முடைய நாட்களில் அமைதியைக் கொண்டு வர அவர் ஓயாமல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

10 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம், “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”

நாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாலும் தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், சங்கீதக்காரன் வேறோரு முறையில் தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நம்முடைய முயற்சிகளையெல்லாம் விட்டு விட்டு, தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நாம் நின்று அமர்ந்திருந்து தேவனை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் நின்று விடவில்லை, நமக்கு நிலையான, மாறாத பாதுகாவலையும், சமாதானத்தையும் தருகின்ற தேவனுடைய வல்லமையை வந்து பாருங்கள் என்கின்றார்.

மரத்தின் உச்சியில்

எங்களது வெல்வெட் என்ற பூனைக்குட்டி சமையலறையில் உணவுப் பொருட்கள் வைக்கும் பகுதியினுள் சென்று வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளைத் தின்று விட்டிருந்ததை என் தாயார் கண்டுபிடித்து, வெறுப்படைந்து, அதை வீட்டிற்கு வெளியே துரத்திவிட்டாள். பல மணி நேரம் கழித்து, நாங்கள் எங்கள் பூனையை வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மிக மெல்லிய “மியா” குரல் காற்றில் வந்தது. நான் மேலே பார்த்து ஓர் உயரமான மரத்தின் உச்சிக் கிளையொன்றின் மேல் எங்கள் பூனை படுத்திருப்பதைக் கண்டேன்.

என்னுடைய தாயாரின் கோபத்திலிருந்து தப்பிக்க, வெல்வெட் ஒரு பாதுகாப்பற்ற இடத்தைத் தேடிக் கொண்டது. இதைப் போன்று நாமும் சில வேளைகளில் நடந்து கொள்கிறோம். நம்முடைய தவறுகளிலிருந்து ஓடி பாதுகாப்பற்ற இடத்தில் அகப்பட்டுக் கொள்கின்றோம். அப்படியிருந்தும் தேவன் நம்மை விடுவிக்க வருகின்றார்.

தீர்க்கதரிசி யோனா, நினிவேயில் பிரசங்கிக்க தேவனால் அழைப்பைப் பெற்றபோது, அதை விரும்பாமல், கீழ்ப்படியாமல் ஓடி ஒரு பெரிய மீனால் விழுங்கப்பட்டான். ‘‘அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.”

அவன், ‘‘என நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார்” (யோனா 2:1-2) என்றான். தேவன் யோனாவின் வேண்டுதலைக் கேட்டு கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார். அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (வச. 10) யோனாவுக்கு மீண்டும் தேவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (3:1).

நாங்கள் வெல்வெட்டை கீழே இறக்க எடுத்த முயற்சிகளால் சோர்ந்த போது, நாங்கள் அருகிலுள்ள தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினோம். மிக உயரமான ஏணியின் உதவியால் ஓர் இரக்கமுள்ள மனிதன் மேலேறி என்னுடைய பூனையை அதன் உயர்ந்த இடத்திலிருந்து எடுத்துப் பத்திரமாக என் கரங்களில் கொடுத்தார்.

நம்முடைய கீழ்ப்படியாமையால் நாம் போயிருக்கின்ற இடம் மிக உயரமாயிருந்தாலும் அல்லது மிக ஆழமானாலும் சரி. தேவன் நம்மைத் தேடி வந்து அவருடைய மீட்கும் அன்பினால் நம்மை மீட்டு கொள்வார்.

எங்கிருந்தாலும்

எங்களுடைய திருமண புகைப்படங்களை நான் எடுத்து பார்க்கும்போது, என் விரல்கள் என் கணவரும் நானும் மணம்முடிந்தவுடன் முதலாவது எடுத்த படத்தை தொட்டது. உண்மையில் அன்றைக்கு நான் என்னை முழுவதுமாய் அவருக்கு ஒப்படைத்தேன். அவரோடு எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.

நாற்பது ஆண்டுகள் கழித்தும், நன்மையோ தீமையோ, எப்படி இருந்தாலும் சரி, அன்பும் பொறுப்புணர்வும் ஒருங்கே பிணைக்கப்பட்ட உறுதியான நூலினால் என் வாழ்க்கை இறுக்கமாகப் பின்னப்பட்டிருந்தது, ஒவ்வொரு வருடமும், நான் அவரோடுகூட எங்கும் செல்லுவேன் என்கின்ற என் பிரதிஷ்டையையும் புதுப்பித்தேன்.

எரேமியா 2:2-ல், வழிதப்பிய இஸ்ரவேல் என்னும் பிரியமானவளுக்காய் தேவன் ஏங்குகிறார், “நீ என்னை பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” அங்கே ‘பக்தி’ என்று சொல்லப்படும் எபிரேய வார்த்தை உன்னத ராஜவிசுவாசம் மற்றும் ஒப்படைப்பைக் காண்பிக்கிறது. ஆதியில் இஸ்ரவேல் தேவனிடம் இந்த மாசற்ற விசுவாசத்தை வெளிப்படுத்தினாள். ஆனாலும், நாளாக நாளாக அவள் பின்மாற்றம் அடைந்தாள்.

ஒப்படைப்பின் ஆரம்ப நிலையில் இப்படிப்பட்ட ஊக்கமும், உற்சாகமும் நம்மை பிடித்தாலும், பின்னர் ஒரு சாங்கோபாங்கமான மனநிலை அன்பின் கூர்முனையை மந்தமாக்குவதால், நமக்குள் காணப்படும் வைராக்கியம் குறைந்து விசுவாச துரோகத்திற்கு நேராக நம்மை நடத்துகிறது. நம்முடைய திருமணங்களிலே அப்படிப்பட்ட குறைவுகளுக்கு எதிராக போராடுவதன் முக்கியத்தை நாம் அறிந்திருக்கிறோம். தேவனோடு உள்ள அன்பின் உறவில் நம்முடைய ஆவல் எப்படிபட்டது? இந்த விசுவாசத்திற்குள் நாம் வந்தபோது நமக்கிருந்த பக்தி நீடிக்கிறதா?

கர்த்தர் உண்மையாய் தம்முடைய மக்கள் தம்மிடம் திரும்ப அனுமதிக்கிறார் (3:14-15). இன்றும் நாம் நம்முடைய பொருத்தனைகளைப் புதுப்பிக்கலாம்-எங்கிருந்தாலும் சரி!

தலைமுறையினருக்கு பாரம்பரியத்தைக் கொடுத்தல்

என்னுடைய கைபேசி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளதை பீப் ஒலியால் காட்டியது. என்னுடைய மகள் நான் என்னுடைய பாட்டியம்மாவிடமிருந்து பெற்றிருந்த பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம்
செய்முறைக் குறிப்பைக் கேட்டிருந்தாள். நான் என்னுடைய செய்முறைகள் அடங்கிய பெட்டியில் பழுப்பு நிறமடைந்த அட்டைகளினிடையே அதைத் தேடினேன். என் கண்கள் என் பாட்டியம்மாவின் தனிச் சிறப்பான கையெழுத்தைக் கண்டுபிடித்தன. அதில் ஆங்காங்கே சிறிய குறிப்புகள் என்னுடைய தாயாரின் சிறிய கையெழுத்தில் இருந்தது. என்னுடைய மகளின் வேண்டுகோளுக்கிணங்க, அது எனக்கு கிடைத்தது. பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம், எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறையினருக்குள் நுழைந்துள்ளது.

வேறென்ன பாரம்பரியத்தை நாம் தலைமுறை தலைமுறையாகக் கொடுக்க முடியும் என வியந்தேன். நம்முடைய விசுவாசத்தைக் கொடுத்தால் எப்படியிருக்கும்? பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம் பையைக் கொடுப்பதோடு, என்னுடைய பாட்டியம்மாவின் நம்பிக்கையையும், என்னுடைய விசுவாசத்தையும் என்னுடைய மகளின் வாழ்விலும், அவளுடைய பிள்ளைகளின் வாழ்விலும் கொடுத்தால் என்ன?

சங்கீதம் 79ல் சங்கீதக்காரன் தான்தோன்றித் தனமாகச் செயல்படும், நிரந்தரமற்ற சிந்தனையுடைய இஸ்ரவேலரைக் குறித்துப் புலம்புகிறார். அவர் தேவனிடம் தன்னுடைய ஜனங்களை, தேவனைத் தொழுது கொள்ளாத புறஜாதியாரிடமிருந்து விடுவிக்குமாறும், எருசலேமை பாதுகாப்பாக விடுவிக்குமாறும் கெஞ்சுகிறார். அப்படி தேவன் விடுவிக்கும்போது, அவர்கள் தேவனுடைய வழிகளில் செல்வார்களென வாக்களிக்கின்றார். ‘‘அப்பொழுது உம்முடைய ஜனங்களும், உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லி வருவோம்” (வச. 13).

நான் என்னுடைய சமையல் குறிப்பை ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டேன். என்னுடைய பாட்டியம்மாவின் இனிப்பு பாரம்பரியத்தை எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய பரம்பரையும் அனுபவிக்கும். ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கொடுப்பதில், எல்லாவற்றையும்விட மிகவும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று எங்கள் குடும்பத்தின் விசுவாசம். அதனைக் கொடுக்கும்படி என் தேவனிடம் உண்மையாக ஜெபிக்கின்றேன்.

ஆசீர்வாத கிண்ணம்

நான் எனது கம்ப்யூட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது, இமெயில் வருவதைத் தெரிவிக்கும் ஒலி எழும்பி என் கவனத்தை ஈர்த்தது. சாதாரணமாக இத்தகைய ஒலி எழும்பும் போது நான் அந்த இமெயிலைப் பார்க்கும்படி தூண்டப்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இந்த மெயிலில் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘’நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’’ என்பது என்னைக் கவர்ந்தது.

ஆர்வமுடன் நான் அதைத் திறந்து பார்த்து, மிகத் தொலைவிலுள்ள என் சிநேகிதி, என்னுடைய குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு வாரமும் அவள் ஒரு குடும்பத்தினரின் படம் ஒன்றினை அவளது ‘ஆசீர்வாதக் கிண்ணமான’ சாப்பாட்டு மேஜையில் வைத்து அந்தக் குடும்பத்திற்காக ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (பிலி. 1:6) என எழுதியிருந்தாள். அத்தோடு தேவனுடைய அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் எங்களுடைய சுவிசேஷப் பணியின் பங்குதாரர் என்பதையும் முக்கியப்படுத்தியிருந்தாள்.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பு சபையினருக்கு எழுதிய இந்த வார்த்தைகள், என் சிநேகிதி விருப்பத்தோடு எடுத்துக் கொண்ட முயற்சியால் என்னுடைய இமெயிலில் வந்தது. இது எனக்களித்த மகிழ்ச்சி, முதலாம் நூற்றாண்டில் இக்கடிதத்தைப் பெற்ற வாசகர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாயிருந்தது. பவுல் தன்னோடு சுவிசேஷகப் பணி செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்;. உங்கள் விசுவாசம் உலகெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (ரோ. 1:8) என்பதைப் போன்ற வாசகங்களை அவருடைய அநேக கடிதங்களில் நாம் காணலாம்.

முதலாம் நூற்றாண்டிலே பவுல் தன்னோடு பணி புரிந்தவர்களை ஆசீர்வதித்து ஜெபத்தோடு ஒரு நன்றியையும் அனுப்புவதைக் காண்கின்றோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் என்னுடைய சிநேகிதி ஓர் ஆசீர்வாத கிண்ணத்தின் மூலம் என்னுடைய வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைத் தந்தாள். இன்று நம்மோடு இயேசுவின் சுவிசேஷப் பணியில் உதவுபவர்களுக்கு நாம் எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறோம்?

ஒவ்வொரு நாளின் மணித்துளிகள்

நான் வாங்கிய பலசரக்குகளைக் காரில் வைத்தபின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கவனமாக வெளியே எடுத்தேன். திடீரென்று ஒருவன், நான் வருவதைக் கவனியாமல் என் முன் வேகமாக குறுக்கே வந்துவிட்டான். நல்ல வேளை நான் ‘சடன் பிரேக்’ போட்டு அவன் மேல் மோதாமல் பார்த்துக் கொண்டேன். அவன் திகைத்துப் போய் என்னையே உற்றுப் பார்த்தான். அந்தச் ஷணத்தில், நான் இரண்டில் ஒன்று செய்திருக்கலாம்; கண்களை உருட்டி வெறுப்பைக் காட்டியிருக்கலாம்; அல்லது மன்னிக்கும் புன்னகையைக் காட்டியிருக்கலாம். நான் புன்னகித்தேன்.

அவன் முகத்தில் ஒரு தெளிவு தோன்றி மறைந்தது; அவனும் நன்றியோடு புன்னகித்தான்.

நீதிமொழிகள் 15:13 “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” என்கிறது. நமது வாழ்வில் வரும் எல்லா இடையூறுகளிலும், ஏமாற்றங்களிலும், தொல்லைகளிலும் நாம் சிரித்த முகத்தோடிருக்க வேண்டுமென்று இதை எழுதியவர் கூறுகின்றாரா?  நிச்சயமாக இல்லை! சில வேளைகளில் நாம் உண்மையிலேயே துக்கப்படுகிறோம், சோர்ந்துபோகிறோம், அநியாயத்திற்குக் கோபப்படுகிறோம். அந்த வினாடியில், ஒரு புன்னகை நமக்குத் தெளிவையும், நம்பிக்கையையும் தொடர்ந்து முன்னேறுவதற்கான கிருபையையும் தர முடியும்.

உள்ளான மன நிலையைப் பொறுத்து, புன்னகை தானாக வரும் என்பதே இந்த நீதிமொழியின் உள்ளான கருத்து. ஒரு சந்தோஷமான இருதயம், சமாதானத்தோடிருக்கும், மனரம்மியமாயிருக்கும், தேவனுடைய சிறந்த நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும். இப்படி உள்ளத்திலிருந்து சந்தோஷம் பொங்கி வெளிவரும் இருதயமிருந்தால், எந்த சூழ்நிலையையும் புன்னகையோடு எதிர்கொள்ளளலாம்.. தேவனிடத்திலுள்ள நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெற்று அனுபவிக்க மற்றவர்களையும் அழைக்கலாம்.