கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது” என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.

எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.

இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம்.