எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

கர்த்தருடைய புயத்தில்

அந்தத் துளையிடும் கருவியின்  சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் மருத்துவரின் நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. 

அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய்  தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார். 

 சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. 

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.

பரலோகத்தில் எஜமானன்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை "செவ்வையாய்" நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, "அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்" என்கிறது.

"மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே" (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் "பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று" (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், "நீதியும் செவ்வையுமாய்" (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

கிறிஸ்துவுக்குள் பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார். 

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய தோன்றும். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக.

தேவனின் பொருட்டு சேவை செய்தல்

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் செப்டம்பர் 2022இல் இறந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தியாகமான சேவை மக்களால் பார்க்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை பெரிய கௌரவமாகக் கருதினர். “அவரது மாட்சிமைக்காக எங்கள் கடைசி கடமையை செய்ய இது ஒரு வாய்ப்பு” என்று ஒரு இராணுவ வீரர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்தார் என்பது அல்ல, ஆனால் அவர் அதை யாருக்காக செய்கிறார் என்பது ஒரு முக்கியமான வேலையாக மாறியது.

வாசஸ்தலத்தின் அலங்காரப் பொருட்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட லேவியர்களும் இதே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆசாரியர்களைப் போலல்லாமல், கெர்சோனியர்கள், கோகாத்தியர்கள் மற்றும் மெராரியர்களுக்கு சாதாரணமான வேலைகள் ஒதுக்கப்பட்டன: பெட்டி, மேஜை, குத்துவிளக்கு, பீடங்கள், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகள், தொங்குதிரை அதினுடைய எல்லா வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டனர் (எண்கள் 3:25-26, 28, 31, 36-37). அவர்கள் இந்த ஆசரிப்புகூடார வேலைக்காக தேவனால் நியமிக்கப்பட்டனர். அவர்களின் சந்ததியர் அதை தொடர்ந்துசெய்ய கட்டளையிடப்பட்டனர். 

என்ன ஒரு ஊக்கமளிக்கும் சிந்தனை! இன்று, நம்மில் பலர் வேலையில், வீட்டில் அல்லது தேவாலயத்தில் என்ன செய்கிறோம் என்பது பட்டங்களையும் சம்பளத்தையும் மதிக்கும் உலகிற்கு அற்பமானதாகத் தோன்றலாம். ஆனால் தேவன் வேறு விதமாக பார்க்கிறார். நாம் அவர் பொருட்டு ஊழியம் செய்து அவருடைய நாம மகிமைக்காகப் பிரயாசப்படுவோமாகில் நம்முடைய பணியானது முக்கியமான ஒன்றாய் மாறுகிறது என்பதில் ஐயமில்லை.

ஜெபத்தின் மூலம் அன்பு

பல ஆண்டுகளாக, ஜான் தேவாலயத்தில் ஒருவித எரிச்சலுடன் இருந்தார். அவர் மோசமான மனநிலையுடையவர், அடிக்கடி முரட்டுத்தனமாக இருந்தார். தனக்கான “சேவை” செய்யப்படவில்லை என்றும், தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச்  செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டேயிருந்தார். அவரை நேசிக்கப்படுவதற்கு மிகவும் கடினமானவராய் இருந்தார். 

அதனால் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது,அவருக்காக பிரார்த்தனை செய்வது எனக்கு கடினமாக இருந்தது. அவரது கடுமையான வார்த்தைகள் மற்றும் விரும்பத்தகாத குணத்தின் நினைவுகள் என் மனதை நிரப்பின. ஆனால் இயேசுவின் அன்பின் அழைப்பை நினைவுகூர்ந்ததால், ஒவ்வொரு நாளும் ஜானுக்காக ஒரு எளிய பிரார்த்தனை செய்ய நான் உந்தப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய விரும்பத்தகாத குணங்களைப் பற்றி நான் கொஞ்சம் குறைவாகவே சிந்திக்க ஆரம்பித்தேன். அவருக்கு வலிக்கவேண்டும் என்று நான் ஒரு காலத்தில் எண்ணியதுண்டு. ஆனால் இப்போதோ, அவரை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. 

ஜெபம், நம்மையும், நம் உணர்வுகளையும், மற்றவர்களுடனான நமது உறவுகளையும் தேவனுக்கு வெளிப்படுத்திக் காண்பித்து, அவருடைய பார்வையை எல்லாவற்றிலும் நுழைய அனுமதிக்கிறது என்பதை நான் உணர்கிறேன். நம்முடைய சித்தத்தையும் உணர்ச்சிகளையும் மாற்றும்பொருட்டு பரிசுத்த ஆவியானவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கும்போது, அவர் நம்முடைய இருதயங்களை மெதுவாகவும் நிலையாகவும் மறுரூபமாக்குவார். நம் எதிரிகளை நேசிப்பதற்கான இயேசுவின் அழைப்பு ஜெபத்திற்கான அழைப்போடு இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை: “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” (லூக்கா 6:28).

ஜானைக் குறித்து நலமானதை யோசிக்க நான் இன்னும் போராடுகிறேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆவியானவருடைய துணையோடு, தேவனுடைய பார்வையோடும் இதயத்தோடும் அவரை மன்னிப்புக்கும் அன்புக்கும் தகுதியானவராய் பார்க்க நான் பழகிக்கொண்டிருக்கிறேன். 

உண்மையுள்ளவன், ஆனால் மறக்கப்படவில்லை

சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான். 

இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார். 

தெரியாத வழி

நான் பிரையனுடன் ஓட்டத்தில் சேர ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த பாதை எங்கு செல்லும், எவ்வளவு தூரம் செல்வோம், நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் ஒரு வேக ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அவருடன் ஓடும்போது, திரும்பிவந்துவிடலாமா? பிரையனுக்கு மட்டுமே வழி தெரிந்திருந்ததால், இப்போதைக்கு அவரை நம்புவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நான் இன்னும் அதிகமாக கவலைப்பட்டேன். சீரற்ற நிலத்தில் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, பிரையன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து, வரவிருக்கும் கடினமான திட்டுகள் குறித்து எச்சரித்தார்.

இதுபோன்ற அறிமுகமில்லாத பிரதேசத்திற்குள் நுழையும்போது வேதாகம காலங்களில் சிலருக்கு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்—கானானில் ஆபிரகாம், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பணியில் இயேசுவின் சீஷர்கள். நிச்சயமாக அது கடினமாக இருக்கும் என்பதைத் தவிர, பயணம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்த ஒருவர் அவர்களை வழிநடத்தினார். அதை மேற்கொள்வதற்கான பெலனை தேவன் தங்களுக்கு அருளுவார் என்றும் அவர்களை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறிந்த தேவன் அவர் என்பதினால், அவர்களால் அவரை நம்பிக்கையோடு பின்தொடரமுடியும்.

இந்த உறுதி தாவீது தப்பியோடியபோது ஆறுதலளித்தது. அவர் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையிலிருந்தபோதிலும், தேவனைப் பார்த்து “என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்” (சங்கீதம் 142:3) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் நமக்கு முன்பாக என்ன இருக்குமோ என்று அஞ்சும் நேரங்கள் உண்டு. ஆனால் நம்மோடு நடக்கும் ஆண்டவர் நம்முடைய வழியை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

துக்கத்தில் நம்பிக்கை

லூயிஸ் ஒரு கலகலப்பான, விளையாட்டுத்தனமான பெண். அவள் சந்திக்கிற அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுவாள். ஐந்து வயதில் ஓர் அரிய நோயினால் பரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய திடீர் மரணம் அவளுடைய பெற்றோர் டே டேக்கும், பீட்டருக்கும், அவர்களுடன் பணிபுரிந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் வருந்தினோம்.

 

ஆனால் அவளுடைய பெற்றோர் டே டேயும், பீட்டரும் அதை கடந்து செல்வதற்கான வலிமையைக் கண்டுகொண்டனர். அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று நான் டே டேவிடம் கேட்டபோது, லூயிஸ் இளைப்பாறும் இயேசுவின் அன்பான கரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் பெலனை பெற்றதாகச் சொன்னாள். "நித்திய வாழ்விற்குச் சென்ற எங்கள் மகளுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்றும், "தேவனின் கிருபையினாலும், பலத்தினாலும், துக்கத்தின் வழியாக செல்லவும், அவர் ஒப்படைத்த பொறுப்பை தொடர்ந்து செய்யவும் முடிந்தது" என்றும் கூறினாள்.

 

டே டே யின் நம்பிக்கை மற்றும் ஆறுதல், தம்முடைய குமாரனில் தன்னை வெளிப்படுத்திய தேவனுக்குள் இருந்தது. வேதத்தில் விசுவாசம் வைப்பதென்பது வெறும் நம்பிக்கையை விட அதிகமானது. அவர் ஒருபோது மீறாத தம்முடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் கொண்டுள்ள நிச்சயமாகும். பிரிந்த நண்பர்களுக்காக வருந்துபவர்களை பவுல் ஊக்குவித்தபடி, நம்முடைய துக்கத்தில் இந்த வல்லமை வாய்ந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளலாம்: ”இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டுவருவார்”(I தெசலோனிக்கேயர் 4:14). இந்த உறுதியான நம்பிக்கை இன்று நமக்கு பலத்தையும், ஆறுதலையும் தரட்டும்; நமது துக்கத்திலும் கூட. 

ஆசீர்வதிக்கப்பட்ட வழக்கம்

காலையில் ரயிலில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து, திங்கட்கிழமை பரபரப்பை உணர்ந்தேன். நெரிசல் நிறைந்த கேபினில் இருந்தவர்களின் தூக்கம், எரிச்சலான முகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் வேலைக்கு செல்லும் சரியான மனநிலையில் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும். சிலர் உட்காரும் இருக்கையை பிடிக்க முண்டியடித்து முன்னேற, மேலும் பலர் உள்ளே நுழைய முற்பட்டதால் முகச் சுளிவுகள் வெடித்தன. இதோ வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்லும் ஒரு சாதாரண நாளாக இதுவும் நகர்ந்து செல்லுகிறது. 

திடீரென்று எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு, கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் நம்முடைய அன்றாட வழக்கத்தை செயல்படுத்த முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். உணவு உண்பதற்கு வெளியே செல்லமுடியாத நிலை. சிலர் அலுவலகங்களுக்கும் செல்லமுடியவில்லை. ஆனால் தற்போது நாம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறோம். வழக்கம்போல செய்யும் இயல்பு காரியங்கள் சலிப்பு தட்டகூடியதாய் இருந்தாலும் அது ஆசீர்வாதம் என்னும் நற்செய்தியை நான் உணர்ந்தேன். 

சாலொமோன் ராஜா, நாம் அன்றாடம் ஏறெடுக்கும் பிரயாசங்களில் இருக்கும் அர்த்தமற்ற காரியங்களைக் குறித்து பேசுகிறார் (பிரசங்கி 2:17-23). சிலவேளைகளில் அது முடிவில்லாததாகவும், அர்த்தமற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் தெரியலாம் (வச. 21). ஆனாலும் புசித்து குடித்து ஒவ்வொரு நாளும் திருப்தியாய் இருப்பது தேவனிடத்திலிருந்து கிடைத்த நன்மை என்பதை அவர் வலியுறுத்துகிறார் (வச. 24). 

நாம் வழக்கமாய் செய்யும் காரியங்களினால் சலிப்படையும்போது, இந்த காரியங்கள் அனைத்தும் மேன்மையானது என்பதை அறிவோம். நாம் புசித்து, குடித்து, கையிட்டு செய்யும் பிரயாசங்களில் திருப்தியடைவது என்பது தேவன் நமக்கருளிய ஈவு என்று எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துவோம் (3:13).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாராளமான விசுவாசம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் தலைமையின் கொந்தளிப்பான மாற்றத்திற்குப் பிறகு, தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்ள எங்கள் சபையும் அழைக்கப்பட்டது. அநேக குடும்பங்கள், ஒரு சிறிய பையில் தங்களால் இயன்றதை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். எங்கள் சபை குடும்பங்களில் பலர் தங்கள் வீடுகளில் அவர்களை ஏற்றுக்கொண்டனர். சில வீடுகளில் இடவசதி மிகக்குறைவாகவே இருந்தது.

அவர்களுடைய விருந்தோம்பல், இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பிரவேசித்தபோது அவர்களுக்குத் தேவன் தந்த மூன்று கட்டளைகளைப் பிரதிபலிக்கிறது (உபாகமம் 24:19-21). விவசாயம் செய்யும் சமூகமாக, அறுவடையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். அடுத்த ஆண்டு வரை தாக்குப்பிடிக்க அவர்களுக்குப் பயிர்கள் அவசியம். இதுவே தேவன், "அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக" (வ.19) என்று கட்டளையிடவும், அவரை நம்பும்படி அழைக்கவும் செய்தது. தங்களுக்கு போதுமானது உள்ளது என்று அறிந்து மட்டும் கொடுக்காமல், தேவனின் பராமரிப்பை நம்பும் உள்ளத்திலிருந்து கொடுத்து, இஸ்ரவேலர்கள் தாராள மனப்பான்மையை கடைப்பிடித்தனர்.

இத்தகைய விருந்தோம்பல், அவர்களும் "எகிப்திலே அடிமையாயிருந்ததை" (வ.18, 22) நினைவூட்டுவதாகவும் இருந்தது. அவர்கள் ஒரு காலத்தில் நசுக்கப்பட்டு, ஆதரவற்றிருந்தனர். அவர்களின் உதாரத்துவம் அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனின் கிருபையை நினைவூட்டுவதாக இருந்தது.

இயேசுவின் விசுவாசிகளும் உதாரத்துவமாய் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். "அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரிந்தியர் 8:9) என்று பவுல் நமக்கு நினைப்பூட்டினார். அவர் நமக்களித்ததால் நாமும் அளிக்கிறோம்.

 

குணமாகுதலுக்கான நம்பிக்கை

முதுகுத் தண்டு பாதிப்புகளால் முடமானவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் புதிய வழி உருவாகியுள்ளது. தசைகள் மற்றும் மூளைக்கு இடையேயுள்ள  நரம்பியல் பாதைகளை மீண்டும் இணைக்க, நரம்பு வளர்ச்சியைத் தூண்டும் வழியை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முடங்கிய எலிகள் மீண்டும் நடக்க இந்த மறுவளர்ச்சி உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையானது மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதைத் தொடர் சோதனை கண்டறியும்.

.முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஞ்ஞானம் எதைச் சாதிக்க விரும்புகிறதோ, அதை இயேசு அற்புதங்கள் மூலம் செய்தார். பெதஸ்தாவில் உள்ள குளத்தை அவர் பார்வையிட்டபோது, ​​நோய்வாய்ப்பட்ட பலர் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையில் அலைமோதிக்கொண்டிருந்தனர். இயேசு, அவர்களுள் "முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த" (யோவான் 5:5) ஒரு மனுஷனைத் தேடினார். அவன் உண்மையாகவே சுகமடைய விரும்புவதை உறுதிசெய்த பின்னர், கிறிஸ்து அவனை எழுந்து நடக்குமாறு அறிவுறுத்தினார், "உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்" (வ. 9)

நமது உடல் உபாதைகள் அனைத்தும் தேவனால் குணமாகும் என்று நமக்கு வாக்களிக்கப்படவில்லை. அன்று இயேசுவால் குணமடையாத மற்றவர்களும் குளத்திலிருந்தனர். ஆனால் அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் விரக்தியிலிருந்து நம்பிக்கையும், கசப்பிலிருந்து கருணையும், வெறுப்பிலிருந்து அன்பையும், குற்றஞ்சாட்டுவதிலிருந்து மன்னிக்கும் மாண்பையும் பெற்று ,அவர் தரும் குணத்தை அனுபவிக்க முடியும்.எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் (அல்லது தண்ணீர் குளமும்) அத்தகைய சிகிச்சையை நமக்கு வழங்க முடியாது; அது விசுவாசத்தால் மட்டுமே வரும்.

சேவை மனப்பான்மை

எனது "மாமா" மோகன் காலமானபோது, ​​​​பலர் பலவகையான அஞ்சலிகளைச்  செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம்.  தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.

மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு  பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:"சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலாத்தியர் 5:13) என்றெழுதினார்.  ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?

பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக.