நான் பிரையனுடன் ஓட்டத்தில் சேர ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த பாதை எங்கு செல்லும், எவ்வளவு தூரம் செல்வோம், நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் ஒரு வேக ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அவருடன் ஓடும்போது, திரும்பிவந்துவிடலாமா? பிரையனுக்கு மட்டுமே வழி தெரிந்திருந்ததால், இப்போதைக்கு அவரை நம்புவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நான் இன்னும் அதிகமாக கவலைப்பட்டேன். சீரற்ற நிலத்தில் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, பிரையன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து, வரவிருக்கும் கடினமான திட்டுகள் குறித்து எச்சரித்தார்.

இதுபோன்ற அறிமுகமில்லாத பிரதேசத்திற்குள் நுழையும்போது வேதாகம காலங்களில் சிலருக்கு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்—கானானில் ஆபிரகாம், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பணியில் இயேசுவின் சீஷர்கள். நிச்சயமாக அது கடினமாக இருக்கும் என்பதைத் தவிர, பயணம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்த ஒருவர் அவர்களை வழிநடத்தினார். அதை மேற்கொள்வதற்கான பெலனை தேவன் தங்களுக்கு அருளுவார் என்றும் அவர்களை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறிந்த தேவன் அவர் என்பதினால், அவர்களால் அவரை நம்பிக்கையோடு பின்தொடரமுடியும்.

இந்த உறுதி தாவீது தப்பியோடியபோது ஆறுதலளித்தது. அவர் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையிலிருந்தபோதிலும், தேவனைப் பார்த்து “என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்” (சங்கீதம் 142:3) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் நமக்கு முன்பாக என்ன இருக்குமோ என்று அஞ்சும் நேரங்கள் உண்டு. ஆனால் நம்மோடு நடக்கும் ஆண்டவர் நம்முடைய வழியை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.