Archives: செப்டம்பர் 2023

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள். 

இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25).

நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.

கொடுப்பவரின் இருதயம்

எங்கள் பழைய வீட்டை காலி செய்யும் கடைசி நாளில், எனது நண்பர் தனது நான்கு வயது மகள் கின்ஸ்லீயை எங்களுக்கு வழியணுப்ப அழைத்துவந்தார். “நீங்கள் போவதை நான் விரும்பவில்லை” என்று கின்ஸ்லீ கூறினாள். நான் அவளைக் கட்டிப்பிடித்து, என்னிடமிருந்த ஒரு கையால் வர்ணம் பூசப்பட்ட கைவிசிறி ஒன்றை அவளுக்கு பரிசாகக் கொடுத்தேன். “என் ஞாபகம் உனக்கு வரும்போதெல்லாம், இந்த கைவிசிறியைப் பயன்படுத்து, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் கொள்” என்றேன். அவள் என்னுடைய பையில் இருந்த வேறு ஒரு கைவிசிறியைப் பார்த்துவிட்டு, அதைத் தரும்படிக்கு கேட்டாள். “அது உடைந்துவிட்டது” என்று சொன்னேன். “இருப்பதிலேயே சிறந்த கைவிசிறியை உனக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று அவளிடம் சொன்னேன். அவளுக்கு சிறந்த கைவிசிறியைக் கொடுத்ததில் நான் வருத்தப்படவில்லை. அவளுடைய மகிழ்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பின்பாக ஒரு நாள், நான் உடைந்த கைவிசிறியை வைத்திருப்பதை கின்ஸ்லீ வருத்தத்துடன் அவளுடைய தாயாரிடம் சொல்லியிருக்கிறாள். அவர்கள் புதிய ஊதா நிற கைவிசிறியை எனக்கு பரிசாக அனுப்பிவைத்தனர். எனக்கு தாராளமான பரிசை கொடுத்த பின்பு கின்ஸ்லீ மகிழ்ச்சியடைந்தாள். நானும் மகிழ்ச்சியடைந்தேன். 

சுய திருப்தி மற்றும் சுய பாதுகாப்பை ஊக்குவிக்கும் உலகில், இதயங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக நாம் பதுக்கி வைக்க ஆசைப்படலாம். இருப்பினும், “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் சொல்லுகிறது. அதிகமாய் செல்வத்தை ஈட்டக்கூடியதே செழிப்பு என்று நம்முடைய கலாச்சாரம் வரையறுக்கிறது. ஆனால் “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 25) என்று வேதம் சொல்லுகிறது. 

தேவனின் வரம்பற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பும் பெருந்தன்மையும் தொடர்ந்து நம்மை புத்துணர்வடையச் செய்கிறது. எல்லாவற்றையும் தாராளமாய் அள்ளிக்கொடுப்பதில் சோர்ந்துபோகாத தேவனை நாம் அறிந்திருக்கிறபடியால், நாமும் தாராளமாய் கொடுத்து, கொடுப்பவர்களின் கூட்டத்தை அதிகரிக்கச்செய்யலாம். 

உங்கள் தோட்டத்தை பராமரியுங்கள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் காய்கனி தாவரங்களை நாங்கள் விரும்பி பயிரிட்டோம். பின்னர் நான் மண்ணில் சிறிய துளைகளை கவனித்தேன். எங்கள் தாவரத்திலிருந்து முதல் பழம் பழுத்தபோது, தீடீரென்று அது காணாமல் போய்விட்டது. ஒரு நாள் எங்களின் மிகப் பெரிய ஸ்ட்ராபெரி செடி, குழிமுயலால் முற்றிலும் பிடுங்கப்பட்டு, வெயிலால் கருகிப் போனதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். சில எச்சரிக்கை அறிகுறிகளுக்கு நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்!

உன்னதப்பாட்டில் பதிவாகியுள்ள நேசத்தின் கவிதையானது ஒரு இளைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலை பதிவுசெய்கிறது. அந்த பெண்ணை ரூபவதி என்று அழைக்கும் நேசர், அவர்களின் நேசத்திற்கு உருவக அடையாளமான தோட்டத்தை குழிமுயல்கள் சேதப்படுத்தாதபடிக்கு பாதுகாத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப்  பிடியுங்கள்” (உன்னதப்பாட்டு 2:15) என்று சொல்லுகிறார். பொறாமை, கோபம், வஞ்சகம் அல்லது அக்கறையின்மை போன்ற அவர்களின் காதலை அழிக்கக்கூடிய “நரிகளின்” குழிகளை அவர் பார்த்திருக்கலாம். அவர் தனது ரூபவதியின் அழகில் மகிழ்ந்ததால் (வச. 14), ஆரோக்கியமற்ற பிரச்சனை இருப்பதை அவர் விரும்பமாட்டார். அவள் அவருக்கு “முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்” (வச. 2) போலிருக்கிறாள். அவர்களது உறவை பாதுகாக்கும் முயற்சியில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார். 

குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளைப் பேணிக்காப்பது என்பது எளிதல்ல என்றாலும், அவைகள் நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பரிசுகளாகும். பொறுமையோடும், பராமரிப்போடும், சிறு குழிநரிகளிடத்திலிருந்து பாதுகாப்போடும், தேவன் நம் கனிகளை விளையச்செய்வார் என்று அவரை நம்புவோம். 

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள்.

ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர். 

தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8). 

தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த  நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம். 

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8). 

 

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.