எங்கள் பழைய வீட்டை காலி செய்யும் கடைசி நாளில், எனது நண்பர் தனது நான்கு வயது மகள் கின்ஸ்லீயை எங்களுக்கு வழியணுப்ப அழைத்துவந்தார். “நீங்கள் போவதை நான் விரும்பவில்லை” என்று கின்ஸ்லீ கூறினாள். நான் அவளைக் கட்டிப்பிடித்து, என்னிடமிருந்த ஒரு கையால் வர்ணம் பூசப்பட்ட கைவிசிறி ஒன்றை அவளுக்கு பரிசாகக் கொடுத்தேன். “என் ஞாபகம் உனக்கு வரும்போதெல்லாம், இந்த கைவிசிறியைப் பயன்படுத்து, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் கொள்” என்றேன். அவள் என்னுடைய பையில் இருந்த வேறு ஒரு கைவிசிறியைப் பார்த்துவிட்டு, அதைத் தரும்படிக்கு கேட்டாள். “அது உடைந்துவிட்டது” என்று சொன்னேன். “இருப்பதிலேயே சிறந்த கைவிசிறியை உனக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று அவளிடம் சொன்னேன். அவளுக்கு சிறந்த கைவிசிறியைக் கொடுத்ததில் நான் வருத்தப்படவில்லை. அவளுடைய மகிழ்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பின்பாக ஒரு நாள், நான் உடைந்த கைவிசிறியை வைத்திருப்பதை கின்ஸ்லீ வருத்தத்துடன் அவளுடைய தாயாரிடம் சொல்லியிருக்கிறாள். அவர்கள் புதிய ஊதா நிற கைவிசிறியை எனக்கு பரிசாக அனுப்பிவைத்தனர். எனக்கு தாராளமான பரிசை கொடுத்த பின்பு கின்ஸ்லீ மகிழ்ச்சியடைந்தாள். நானும் மகிழ்ச்சியடைந்தேன். 

சுய திருப்தி மற்றும் சுய பாதுகாப்பை ஊக்குவிக்கும் உலகில், இதயங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக நாம் பதுக்கி வைக்க ஆசைப்படலாம். இருப்பினும், “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் சொல்லுகிறது. அதிகமாய் செல்வத்தை ஈட்டக்கூடியதே செழிப்பு என்று நம்முடைய கலாச்சாரம் வரையறுக்கிறது. ஆனால் “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 25) என்று வேதம் சொல்லுகிறது. 

தேவனின் வரம்பற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பும் பெருந்தன்மையும் தொடர்ந்து நம்மை புத்துணர்வடையச் செய்கிறது. எல்லாவற்றையும் தாராளமாய் அள்ளிக்கொடுப்பதில் சோர்ந்துபோகாத தேவனை நாம் அறிந்திருக்கிறபடியால், நாமும் தாராளமாய் கொடுத்து, கொடுப்பவர்களின் கூட்டத்தை அதிகரிக்கச்செய்யலாம்.