எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

ஜாக்கிரதையாய் இருங்கள்

ஒருவன் தன் சிநேகிதர்களுடன் பனிச்சரிவு எச்சரிக்கை பலகைகள் பதிக்கப்பட்டிருந்த பனிச்சறுக்கு விடுதியின் வாயில் வழியாகச் சென்று பனிச்சறுக்கு விளையாட்டை ஆரம்பித்தார். கீழிறங்கும் இரண்டாவது பயணத்தில், யாரோ ஒருவர், “பனிச்சரிவு!” என்று சப்தமிட, ஆனால் அந்த மனிதன் தப்பிக்க முடியாமல் பனியில் இறந்து போனான். சிலர் அவரை கத்துக்குட்டி என்று விமர்சித்தனர். ஆனால் அவர் கத்துக்குட்டியில்லை. அவர் ஒரு “சான்றளிக்கப்பட்ட பனிச்சரிவு பயிற்சியாளர்.” “அவர் பாதுகாப்பாய் பயணிக்காததினால் தான் மரித்துவிட்டார்" என்று விபத்தில் மரித்தவர்களைக் குறுpத்து பனிச்சறுக்கு வீரர்களும், பனிச்சரிவு பயிற்சியாளர்களும் தவறான காரணங்களைக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். 

இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லத் தயாரானபோது, தம்முடைய ஜனங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் காத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே, அவருடைய அனைத்து “கட்டளைகளையும் நியாயங்களையும்” (உபாகமம் 4:1-2) கைக்கொள்ளும்படிக்கும், அதைக் கைக்கொள்ளாதவர்கள் மீது தேவன் அனுமதித்த நியாயத்தீர்ப்பையும் நினைவுகூரும்படிக்கு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதிக்கவும், தங்கள் உள்ளான வாழ்க்கையைக் கண்காணிக்கவும் “சாக்கிரதையாய்" இருக்கவேண்டும் (வச. 10). இது வெளியேயிருந்து வரும் ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்தும் உள்ளான பொறுப்பற்ற தன்மையிலிருந்தும் அவர்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவியாயிருக்கும். 

நம்முடைய பாதுகாப்பைத் தகர்த்து, அக்கறையின்மை மற்றும் சுய வஞ்சனைக்கு ஆளாவது இயல்பு. நாம் வாழ்க்கையில் தோற்காமல் இருக்கும்பொருட்டும், அவருடைய கிருபையினிமித்தம் பாவமன்னிப்பையும் நமக்கு அருளுவாராக. அவருடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பதினிமித்தமும், நம்முடைய பாதுகாப்பைப் பலப்படுத்தி, நல்ல தீர்மானங்களை எடுப்போம்.

தேவன் சொன்னார்

விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் 1976ஆம் ஆண்டு தொலைப்பேசியில் முதல் வார்த்தைகளைப் பேசினார். அவர் தன்னுடைய உதவியாளராகிய வாட்சனிடம், “வாட்சன், இங்கே வா. நான் உன்னைப் பார்க்கவேண்டும்” என்று சொன்னார். வார்த்தைகள் உடைந்து கேட்கப்பட்டாலும், கிரகாம்பெல் என்ன சொன்னார் என்பதை வாட்சனால் புரிந்துகொள்ள முடிந்தது. தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொள்ளப்பட்ட கிரகாம்பெல்லின் முதல் வார்த்தைகள், மனித சரித்திரத்தில் தொடர்புகொள்ளுதலின் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் எனலாம்.
ஒரு புதிய நாளின் துவக்கத்தில் ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்த பூமியில் “வெளிச்சம் உண்டாகக்கடவது” (வச.3) என்ற தேவனின் முதல் வார்த்தைகள் ஒளித்தது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிப்பின் வல்லமைகொண்ட வார்த்தைகள். அவர் சொன்னார்; சொன்னது நிஜமாகவே தோன்றியது (சங்கீதம் 33:6,9). தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. இருளில் மூழ்கியிருந்த உலகம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒளிக்கு இடங்கொடுத்தது. ஒளி என்பது, இருளின் ஆதிக்கத்திற்கு தேவன் கொடுத்த பதில். அவர் ஒளியை உண்டாக்கியபோது, “அது நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4).
தேவனுடைய இந்த முதல் வார்த்தைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் வல்லமையுள்ளதாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உதயமாகும்போது, அவர் நம்முடைய வாழ்க்கைக்கு அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உரைக்கிறார். ஒளி வரும்போது இருள் மறைந்து ஒளிக்கு இடங்கொடுப்பதுபோல, அவர் நம்மை அழைத்து அவரைப் பார்க்கும்படி செய்கிறார் என்பதை உணர்ந்து அவருக்குத் துதிகளை ஏறெடுப்போம்.

மனதிலிருந்து

“செயல்படும் நோவா பேழை” என்ற பெயர் விலங்குப் பிரியர்களுக்கு விளையாட்டாய்த் தோன்றியது. பெரும் சத்தம் மற்றும் துர்நாற்றம் ஒரு அறையிலிருந்து வந்தது என்ற புகாரின் அடிப்படையில், அமெரிக்க விலங்குகள் நலச்சங்கத்தினர் வந்து பார்வையிட்ட போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் “செயல்படும் நோவா பேழை” குழுவினர்  புறக்கணிக்கப்பட்ட விலங்குகளை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தனர் (பின்னர் வெளியேற்றப்பட்டது). புறக்கணிக்கப்பட்ட சுமார் நானூறுக்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டு மீட்டனர்.

துர்நாற்றம் வீசும் நூற்றுக்கணக்கான விலங்குகள் நம்மிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால் நம் மனதில் பாவம் நிறைந்த எண்ணங்களும், செய்கைகளும் பேணி வளர்க்கப் படாமல், அவற்றைக் களைந்தெறிய வேண்டும் என இயேசு கூறினார்.

ஒரு மனிதனைச் சுத்தமுள்ளவனாகவும் தீட்டுள்ளவனாகவும் மாற்றுவதைக் குறித்து இயேசு தம் சீஷர்களிடம் போதிக்கையில், அழுக்கான கரங்களோ அல்லது "வாய்க்குள்ளே போகிறதோ" மனிதனை தீட்டுப்படுத்தாது, மாறாகத் தீய இதயமே அவனைத் தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15:17–19) என்றார். நமது மனதிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், நமது வாழ்க்கையே. பின்னர் இயேசு, நம் மனதிலிருந்து வெளியேறும் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பல உதாரணங்களைச் சொல்கிறார் (வ.19). வெளிப்பிரகாரமாக நாம் எவ்வளவுதான் சமய சடங்குகளையும், மதம்சார்ந்த செயல்களையும் செய்தாலும் நம் மனதை அவை சுத்தப்படுத்தாது. நம் இதயம் மாற நமக்குத் தேவனே தேவை.

துர்நாற்றம் வீசும் வாழ்வின் அழுக்குகளை அவரே சுத்தம் செய்ய நம்மை அனுமதிப்போம். நம் மனதில் புதைந்துள்ளவற்றைக் கிறிஸ்து வெளிக்கொணர்ந்து, நமது வார்த்தைகளும் செயல்களும் அவரது விருப்பத்தின்படி அவர் மாற்றுகையில், அவரைப் பிரியப்படுத்தும் நறுமணமாக நாமும் மாறுவோம்.

இரு வீடுகள்

வீடுகளின் ஸ்திரத்தன்மையை பரிசோதிக்கத் தீர்மானித்த பொறியாளர்கள், மூன்று வகையான வீடுகளைக் கட்டி, அதை 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தின் மூலம் பரிசோதித்தனர். அதில் களிமண் சுவர்களால் கட்டப்பட்ட வீடு முற்றிலும் அழிந்துபோனது. மண் சாந்து மற்றும் செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட வீடும் விழுந்துபோனது. ஆனால் நல்ல தரமான சிமெண்ட் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடானது பலத்த விரிசல்களோடு அப்படியே நின்றது. “இதில் நீங்கள் எந்த வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியோடு பொறியாளர் இந்த ஆய்வினை நிறைவுசெய்தார். 

தேவனுடைய இராஜ்யத்தின் மேன்மையைக் குறித்த இயேசுவின் போதனையின் இறுதியில், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24) என்று குறிப்பிடுகிறார். பலத்த காற்று வீசியபோதும் அந்த வீடு நிலைத்து நின்றது. ஆனால் அதற்கு முரணாக, தன்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26) என்றும் குறிப்பிடுகிறார். பெருங்காற்று வீசியபோது, புயலின் கோரத்தை தாங்க முடியாமல் அந்த வீடானது விழுந்துபோனது.  

இயேசு மக்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறார்: கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நிலையான அஸ்திபாரத்தில் வீட்டைக் கட்டுவது அல்லது சுய வழியில் வீட்டைக் கட்டுவது. நாம் சரியானதைத் தெரிந்தெடுக்க வேண்டும். நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீதும், அவருடைய வார்த்தைகளின் மீதும் கட்டுகிறோமா? அல்லது சுய வழியில் கட்டுகிறோமா? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீது கட்ட முற்படுவோம்.

 

இரக்கமுள்ள தகப்பன்

எட்டு வயது நிரம்பிய கேபிரியலுக்கு மூளையிலிருந்த கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அது அவனுடைய தலையின் ஒரு ஓரத்தில் தழும்பை ஏற்படுத்தியது. அந்த தழும்பிநிமித்தம், நான் ஒரு மிருகத்தைப் போல உணருகிறேன் என்று அவன் சொல்லக் கேட்ட அவனுடைய அப்பா, ஒரு யோசனையை செயல்படுத்தினார். தன்னுடைய மகன் மீதான தன்னுடைய அன்பிற்கு அடையாளமாய், கேபிரியேலுக்கு இருப்பதுபோலவே தன்னுடைய தலையின் ஓரத்திலும் ஒரு வடிவத்தை பச்சைக் குத்திக்கொண்டார்.

தேவன் “தன் பிள்ளைகளுக்கு” இதே போன்ற இரக்கமுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 103:13). மனித வாழ்க்கையை தெய்வீக அன்போடு உருவகப்படுத்தி தாவீது கூறுகிறார். ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு மென்மையாய் இரங்குவதுபோல தேவன் இரங்குகிறார் என்று குறிப்பிடுகிறார் (வச. 17). ஒரு மாம்சீக தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு இரங்குவதுபோலவே, பரலோகத்திலிருக்கும் தேவனும் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். தேவன் தன் ஜனங்கள் மீது மனதுருகும் இரக்கமுள்ள தகப்பன். நாம் நேசிக்கப்படாதவர்களாயும் பெலவீனர்களாயும் உணரும்போது, நம் மீதான பரலோக தகப்பனின் அன்பை விசுவாசத்தால் பெற்றுக்கொள்ளலாம். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே” (1 யோவான் 3:16)   

நம்முடைய இரட்சிப்பிற்கேதுவான இரக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த செய்கையின் மூலம் அவர் நம்மீது வைத்த அன்பை அவருடைய சிலுவையினூடாய் நாம் பார்க்கமுடியும். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15) என்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அதை நிரூபிக்க அவரிடத்தில் தழும்புகள் உண்டு.

தேவையற்ற விருந்தினர்கள்

ஷில்பாவும் அஜய்யும், ஒரு அழகான இடத்தில் அற்புதமான தேனிலவைக் கொண்டாடினர். இருப்பினும் அவர்கள் வீடு திரும்பியபோது, அஜய்யின் பாதங்களில் ஒரு விசித்திரமான அரிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தம்பதியினர் தொற்றுநோய் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிய ஒட்டுண்ணிகளால் ஏற்பட்ட கொப்புளங்கள் மூலம் அவரது கால்களுக்குள் புகுந்துவிட்டதாக அவர் அவர்களிடம் தெரிவித்தார். ஒரு எதிர்பார்ப்புடன் துவங்கிய தேனிலவு, தேவையற்ற விருந்தினர்களுடனான ஒரு சவாலான போரில் முடிவடைந்தது.

பாவத்தை எதிர்த்துப் போராட தேவனிடம் உதவி கேட்காவிட்டால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவரது கனவு, பாவம் மற்றும் முரட்டாட்டம் என்னும் தேவையற்ற விருந்தினர்களுடன் போராக மாறும் என்பதை தாவீது அறிந்திருந்தார். இயற்கை உலகில் தேவன் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார் (சங்கீதம் 19:1-6) என்றும், தேவனுடைய போதனையில் ஞானத்தை அடைந்து (வச. 7-10), காணப்பட்ட அவரது ஞானத்தை அறிவித்த பிறகு, தன்னுடைய கீழ்ப்படியாமை என்னும் ஆணவ எண்ணங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்படி, தாவீது தேவனிடம் உதவி கேட்கிறார். “மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்; துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்” என்று எழுதுகிறார் (வச. 12-13). பாவம் என்ற தொற்று நோய் தன்னைத் தாக்காமல் இருக்க தன்னிடம் மனித வளம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். எனவே, அவர் ஞானமாக தேவனிடம் உதவி கேட்டார்.

தேவனை கனப்படுத்தும் விதத்தில் வாழ நினைக்கும் நம்முடைய வாழ்க்கையானது, பாவத்தினால் தடைசெய்யப்படவில்லை என்பதை நாம் எவ்விதம் உறுதிசெய்துகொள்ள முடியும்? நம் கண்களை அவர் மீது வைத்திருப்போம். நம் பாவத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்புவோம். தேவையற்ற ஆவிக்குரிய ஒட்டுண்ணிகள் நம் வாழ்க்கையை சிதைக்காமல் இருக்க, தெய்வீக உதவியை நாடுவோம்.

உன்னால் முடியும்!

(பவுலும் பர்னபாவும்) லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி (சொன்னார்கள்) அப்போஸ்தலர் 14:21-22.

ஊக்கம் என்பது ஆக்ஸிஜன் போன்றது - அது இல்லாமல் நாம் வாழ முடியாது. குற்றாலீஸ்வரன் என்று அழைக்கப்படும் பதிமூன்று வயது குற்றால் ரமேஷ{க்கு இது உண்மையாக இருந்தது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டிய இளைய இந்திய நீச்சல் வீரர் என்ற சாதனையைப் படைத்த சிறுவன், உலக சாதனை படைத்தான். ஆனால் அவனது பயிற்சியாளர் கே.எஸ். இளங்கோவன் இல்லாமல் இது சாத்தியமில்லை. இளங்கோவன், கோடைக்கால நீச்சல் முகாமில் அவனது திறமையைக் கண்டறிந்தார். ஆங்கிலக் கால்வாயின் குளிர்ந்த நீரில் இந்த சாதனையைச் செய்ய அவன் பயிற்சி செய்தபோது, பலர் அவனை அதையரியப்படுத்தினர். மேலும் அவனை இந்தியாவுக்குத் திரும்பச் செல்லச் சொன்னார்கள். இருப்பினும், அவனது பயிற்சியாளரும் தந்தையும் கொடுத்த ஊக்கம், அவனது இலக்கை முடிக்க அவனுக்கு தேவையான ஊக்கத்தை அளித்தது.

கொந்தளிப்பான, குளிர்ச்சியான தண்ணீர் இயேசுவின் விசுவாசிகளை கைவிட விரும்பியபோது, பவுலும் பர்னபாவும் தங்கள் பயணத்தைத் தொடர அவர்களை ஊக்கப்படுத்தினர். அப்போஸ்தலர்கள் தெர்பை பட்டணத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்த பிறகு, அவர்கள் “லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி (சொன்னார்கள்)” (அப்போஸ்தலர் 14:21-22). விசுவாசிகள் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்க அவர்கள் உதவினார்கள். பிரச்சனைகள் அவர்களை வலுவிழக்கச் செய்தன. ஆனால் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், கிறிஸ்துவுக்காக வாழ்வதற்கான அவர்களின் தீர்மானத்தை பலப்படுத்தியது. தேவனின் பலத்தில், அவர்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்பதை உணர்ந்தனர். இறுதியாக, பவுலும் பர்னபாவும் அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கப் பல கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்” (வச. 22) என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார்கள்.

இயேசுவுக்காக வாழ்வது ஒரு சவாலான, கடினமான எதிர்நீச்சல் போன்றது. நமக்கு சில நேரங்களில் விட்டுக்கொடுக்க தோன்றலாம். அதிர்ஷ்டவசமாக, இயேசுவும் அவரில் வாழும் விசுவாசிகளும் நாம் முன்னேறிச்செல்ல தேவையான ஊக்கத்தை அளிக்க முடியும். அவரோடு அதை நாம் மேற்கொள்ள முடியும். 

தேவன் நமக்காக யுத்தம்செய்கிறார்

தன் குழந்தையை பாதுகாக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் போவாள் என்பதை அவள் நிரூபித்தாள். அவளது ஐந்து வயது மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் அலறும் சத்தம் கேட்டது. அவள் வெளியே விரைந்தாள். அங்கே தன்னுடைய மகனை ஒரு புலி பற்றியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். அந்த பெரிய புலி தன் மகனின் மேல் வாயில் தலை வைத்திருந்தது. தன் உள் வலிமை அனைத்தையும் வரவழைத்து, தன் மகனை பற்றியிருந்த அந்த புலியின் தாடையிலிருந்து அவனைக் காப்பாற்ற போராடினாள். இந்த தாயின் துணிச்சலான செயல், வேதத்தில் தேவனுடைய உறுதியான அன்பையும் பாதுகாப்பையும் விளக்குவதற்கு தாயின் அன்பை உருவகமாய் பயன்படுத்தியதை நினைப்பூட்டுகிறது.

ஒரு கழுகு தன் குஞ்சுகளை கவனித்துக்கொள்வது போல தேவன் தம் மக்களை அன்புடன் கவனித்து ஆறுதல்படுத்துகிறார் (உபாகமம் 32:10-11; ஏசாயா 66:13). மேலும் தன்னுடைய பிள்ளையோடு இருக்கும் பிரியாத பிணைப்பினிமித்தம், அப்பிள்ளையை போஷிப்பதுபோல, தேவன் தன் ஜனத்தை ஒருபோதும் மறப்பதுமில்லை, அவர்கள் மீதான உருக்கமான இரக்கத்தை ஒருபோதும் எடுத்துப்போடுவதில்லை (ஏசாயா 54:7-8). இறுதியாக, ஒரு பறவை தன் சிறகுகளின் கீழ் தன் குஞ்சுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல, தேவன் தம்முடைய ஜனத்தை “தம் சிறகுகளாலே மூடுவார்.” அவர்களுக்கு “அவருடைய சத்தியம் பரிசையும் கேடகமாகும்” (சங்கீதம் 91:4).

சில நேரங்களில் நாம் தனிமையாக, மறக்கப்பட்டவர்களாய், அனைத்து வகையான ஆன்மீகவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டவர்களாய் உணர்கிறோம். தேவன் நம் மீது இரக்க உருக்கமாய் இருக்கிறார் என்பதையும், நமக்காக யுத்தம்பண்ணுவார் என்பதையும் நம்மை அறியச் செய்வாராக.

அவருக்காய் ஏங்குங்கள்!

“இது தான் நான் சாப்பிடும் கடைசி உருளைக்கிழங்கு சிப்ஸ்” என்று நாம் சொல்லி ஐந்தே நிமிடம் ஆன பின்பு, மீண்டும் ஏன் அதை சாப்பிடுவதற்கு ஏங்குகிறோம்? இக்கேள்விக்கு மைக்கேல் மோஸ், தன் “சால்ட் ஷுகர் ஃபேட்” என்ற புத்தகத்தில் பதிலளிக்கிறார். அமெரிக்காவின் பெரிய நொறுக்குத்தீனி உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளுக்காய் மக்களை எவ்விதம் ஏங்கச் செய்கின்றனர் என்று அவர் விவரிக்கிறார். ஒரு பிரபல நிறுவனம் இது போன்ற மக்களின் ஏக்கத்தை தூண்டும் அம்சத்தை கண்டறியவே நிபுணர்களின் ஆய்விற்கு ஆண்டுக்கு ரூபாய் 222 கோடி செலவழிக்கிறதாம். 

அந்நிறுவனத்தைப் போலல்லாமல், நம் ஆத்துமாவிற்கு திருப்தியை தரும் ஆவிக்குரிய ஆகாரத்திற்காய் ஏங்கும்படி இயேசு நமக்கு உதவுகிறார். இயேசு, “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35) என்று கூறுகிறார். இக்கூற்றின் மூலம், அவர் இரண்டு காரியங்களை வலியுறுத்துகிறார்: முதலாவது, அவர் சொல்லுகிற அப்பம் என்பது பொருளல்ல, அது ஒரு நபர் (வச. 32). இரண்டாவது, பாவமன்னிப்பிற்காய் மக்கள் இயேசுவை நம்பும்போது, அவருடன் சரியான முறையில் நெருங்கி, ஆத்துமாவின் சகல ஏக்கங்களுக்கான திருப்தியை அடைவார்கள். நம்மை திருப்தியாய் வழிநடத்தக்கூடிய நித்திய ஜீவ அப்பம் அவரே. 

நம் விசுவாசத்தை இயேசுவின் மீது வைக்கும்போது, பரலோகத்திலிருந்து வந்த மெய்யான அப்பமாகிய அவருக்காய் நாம் ஏங்குவோம். அவர் நம்மை பெலப்படுத்தி, நம் வாழ்க்கையை மறுரூபமாக்குவார். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தொலைநோக்குக் கனவுகள்

கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.

பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).

நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

தினந்தோறும் சாருதல்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11

ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது. 

மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.

தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

ஒரு அன்பான உழைப்பு

டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.