மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல்  பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும்,  அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும்  இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால்  நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.

மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது  கொண்டாடினார், “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).

மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள்,  நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது  மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.