ஒரு திருடன் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையை உடைத்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கண்ணாடியை உடைத்து, தொலைபேசிகள் மற்றும் பலவற்றை திருட ஆரம்பித்தான். அட்டைப் பெட்டியால் தலையை மூடிக்கொண்டு கண்காணிப்பு கேமராவில் இருந்து தனது அடையாளத்தை மறைக்க முயன்றான். ஆனால் திருட்டின் போது, பெட்டி சிறிது நேரம் சாய்ந்து, அவனது முகத்தை வெளிப்படுத்திக் காண்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, கடையின் உரிமையாளர் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து, காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கொள்ளையனை அருகிலுள்ள இன்னொரு கடைக்கு வெளியே கைது செய்தனர். மறைந்திருக்கும் ஒவ்வொரு பாவமும் ஒரு நாள் வெளிப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

நம் பாவங்களை மறைக்க முயற்சிப்பது மனித இயல்பு. ஆனால் பிரசங்கியில், நாம் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் மறைவான ஒவ்வொன்றும் அவருடைய நீதியான பார்வைக்கும் நியாயமான தீர்ப்புக்கும் முன் கொண்டுவரப்படும் (12:14). பிரசங்கி, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (வச. 13) என்று சொல்லுகிறார். பத்துக் கட்டளைகள் கண்டித்த மறைவான விஷயங்கள் கூட (லேவியராகமம் 4:13) அவருடைய மதிப்பீட்டிலிருந்து தப்ப முடியாது. நன்மையோ தீமையோ, ஒவ்வொரு செயலையும் அவர் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வருவார். ஆனால், அவருடைய கிருபையின் காரணமாக, இயேசுவினால் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பையும், நமக்கான அவருடைய தியாகத்தையும் நாம் காணலாம் (எபேசியர் 2:4-5).

அவருடைய கட்டளைகளை நாம் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும்போது, அது அவரைப் பற்றிய பயபக்திக்கும், பொருந்தக்கூடிய வாழ்க்கை முறைக்கும் வழிவகுக்கும். நம்முடைய பாவங்களை அவரிடம் கொண்டுபோய், அவருடைய அன்பான, மன்னிக்கும் இதயத்தை புதிதாக அனுபவிப்போம்.