இளைப்பாறுதலற்ற ஆத்துமா செல்வத்திலும், வெற்றியிலும் ஒருபோதும் திருப்தியடையாது. ஒரு மரித்துப்போன மேற்கு நாட்டிய இசை ஜாம்பவான் இந்த உண்மைக்குச் சாட்சி. கிட்டத்தட்ட அவரது நாற்பது பாடல் தொகுப்புகளும், பல தனிப்பாடல்களும் பலமுறை விற்பனையில் முதல் பத்து இடங்களைப் பெற்று, வெற்றிகண்டிருந்தார். ஆனால் அவர் பல திருமணங்களைச் செய்து, பலமுறை சிறையிலிருந்தார். அவரது எல்லா சாதனைகளிலும் கூட, அவர் ஒருமுறை, ” இசை, திருமணங்கள், அர்த்தங்கள் என்று எதாலும் நான் வெற்றிபெற முடியாத ஒரு அமைதியின்மை என் ஆத்துமாவில் உள்ளது. . . . அது இன்னும் பெரியளவில் இருக்கிறது. அது நான் மரிக்கும் நாள்மட்டும் இருக்கும்” என்று புலம்பினார். அவரது வாழ்க்கை முடிவடைவதற்கு முன்பு அவர் தனது ஆத்துமாவில் இளைப்பாறுதலைக் கண்டிருக்கலாம், துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

இந்த இசைக்கலைஞரைப் போலப் பாவத்தாலும், அதன் விளைவுகளாலும் போராடிச் சோர்ந்து போன அனைவரையும் இயேசு தனிப்பட்ட முறையில் தன்னிடம் வரும்படி அழைக்கிறார். அவர், “என்னிடத்தில் வாருங்கள்” (மத்தேயு 11:28) என்கிறார். நாம் இயேசுவிலுள்ள இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும்போது, ​​அவர் நம்மிடமிருந்து பாரங்களை அகற்றி, “நமக்கு இளைப்பாறுதல் அளிப்பார்”. நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் வழங்கும் பரிபூரண வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும் (யோவான் 10:10). கிறிஸ்துவின் சீடத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்கும்போது, அதின் விளைவாக நமது “ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்” (மத்தேயு 11:29) கிடைக்கும் .

நாம் இயேசுவிடம் வரும்போது, ​​​​ அவருக்கு முன்பான நமது பொறுப்புணர்வை அவர் குறைப்பதில்லை. மாறாக அவரில் வாழ்வதற்குப் புதிதானதும், லேசானதுமான சுமையான வழியை வழங்குவதன் மூலம் அவர் நமது அமைதியற்ற ஆத்துமாக்களுக்குச் சமாதானம் தருகிறார். அவர் நமக்கு மெய்யான இளைப்பாறுதல் தருகிறார்.