தேசத்தை ஒன்றிணைத்தல்
உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்து கொள்ளுகிறது. இது நம்பமுடியாத 5,525 மைல் பரப்பளவுகொண்ட நிலப்பகுதியையும் நீரையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டு பகுதிக்கும் இடையில் இருக்கும் இடைக்கோடு நேர்த்தியாய் தெரியவேண்டும் என்பதற்காய் தொழிலாளர்கள், அந்த இருபுறத்திலும் பத்து அடிக்குட்பட்ட மரங்களை தவறாமல் வெட்டினர். “தி ஸ்லாஷ்” என்று அழைக்கப்படும் இந்த நீளமான நிலப்பரப்பு கோட்;டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கற்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பார்வையாளர்கள் அந்த பிரிக்கும் கோடு எது என்பதை நேர்த்தியாய் அடையாளங்கண்டுகொள்ள முடிகிறது.
அந்த கோடு மறையாமலிருப்பதற்காக அகற்றப்பட்ட மரங்களானது, இரண்டு வெவ்வேறு அரசியலமைப்பையும் கலாச்சாரத்தையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாமும், தேவன் அந்த சூழ்நிலையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு காலத்தை எதிர்நோக்குகிறோம். ஏசாயா தீர்க்கதரிசி, தேவனுடைய ஆலயம் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டு உயர்த்தப்படும் ஒரு ஆசீர்வாதமான காலகட்டத்தை முன்னறிவிக்கிறார் (ஏசாயா 2:2). எல்லா நாடுகளிலிருந்தும் ஜனங்கள் தேவனின் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பாதையில் மக்கள் நடப்பதற்கும் கூடுவார்கள் (வச. 3). அமைதியைக் காக்கத் தவறிய மனித முயற்சிகளை இனி நாம் நம்ப வேண்டாம். நமது மெய்யான ராஜாவாக செயல்பட்டு, தேவன் தேசங்களுக்கு இடையில் நியாயம் விசாரித்து, ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை நிவிர்த்திசெய்வார் (வச. 4).
பிரிவிணையில்லாத, சச்சரவுகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யமுடிகிறதா? அதை கொண்டுவருவதாக தேவன் நமக்கு வாக்களிக்கிறார். நம்மை சுற்றியிருக்கும் பிரிவினை பேதங்களுக்கு மத்தியிலும், நாம் “கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம்” (வச. 5). அவரையே நம்புவோம். தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு நாள், தம்முடைய ஜனங்கள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைப்பார்.
நித்திய வாழ்க்கை
“மரணத்திற்கு பயப்பட வேண்டாம், வின்னி, உயிரற்ற வாழ்க்கைக்கு பயப்படு" என்று அங்கஸ் டக் கூறினார். “டக் எவர்லாஸ்டிங்” என்ற திரைப்படமாக்கப்பட்ட நாவலில் இந்த வசனம், மரணமில்லாத ஒரு கதாப்பாத்திரத்தினால் சொல்லப்படுகிறது. அந்த கதையில், டக் என்பவரின் குடும்பம் அழிவில்லாமையை பெற்றுக்கொள்கின்றனர். அக்குடும்பத்தின் நபரான இளம் ஜேம்ஸ் டக், வின்னியை காதலிக்கிறான். ஆகையால் அவளோடு நித்தியமாய் மகிழ்ந்திருக்கும்பொருட்டு அழிவில்லாமையை தரித்துக்கொள்ளும்படிக்கு அவளிடம் கெஞ்சுகிறான். ஆனால் அங்கஸ் டக் என்பவர், வெறுமையாய் நித்திய வாழ்க்கையை அனுபவிப்பது என்பது எந்த நிறைவையும் நமக்கு தராது என்பதை ஞானமாய் விளக்குகிறார்.
நாம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், உற்சாகமாகவும் இருந்தால் நாம் நிச்சயமாகவே மகிழ்ச்சியாய் இருக்கமுடியும் என்று நம்முடைய உலக கலாச்சாரம் நமக்கு அறிவிக்கிறது. ஆனால் அதில் நமக்கு நிறைவு கிடையாது. இயேசு சிலுவைக்கு போகுமுன்பு, அவர் தன்னுடைய சீஷர்களுக்காகவும் எதிர்கால விசுவாச சந்ததியினருக்காகவும் ஜெபித்தார். அவர், “ஒன்;றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3) என்று சொன்னார். இயேசுவின் மீதான விசுவாசத்தைக் கொண்டு தேவனிடத்தில் உறவை ஏற்படுத்துவதில் தான் நம்முடைய நிறைவு இருக்கிறது. அவரே நம்முடைய எதிர்கால நம்பிக்கையும், நிகழ்கால மகிழ்ச்சியுமாயிருக்கிறார்.
இயேசு தன்னுடைய சீஷர்கள், புதுவாழ்வின் அடையாளமான, தேவனுக்கு கீழ்ப்படிவது (வச. 6), இயேசு தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை நம்புவது (வச. 8) மற்றும் ஒரே சரீரமாய் இணைந்து செயல்படுவது (வச. 11) போன்று சுபாவங்களை அவர்கள் தரித்துக்கொள்ளும்படிக்கு வேண்டிக்கொண்டார். கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்துவோடு கூட நித்திய வாழ்வை அனுபவிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் பூமியில் நாம் வாழும் இந்த நாட்களில், அவர் வாக்குப்பண்ணிய பரிபூரணத்தை தற்போது நாம் அனுபவிக்கும் வாழ்க்கையை நாம் அடையமுடியும்.
எப்போதும் நம்பக்கூடியவர்
நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12).
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23).
எதிர்கால விசுவாசம்
சாரா தன்னுடைய பதினான்காம் வயதில் தன்னுடைய தாயை இழந்தாள். அவளும் அவளுடன் பிறந்தவர்களும், தங்கள் வீட்டை இழந்து நிற்கதியாய் நின்றனர். சில காலங்களுக்கு பிறகு, சாரா தன்னுடைய எதிர்கால சந்ததியருக்கு தலைமுறை தலைமுறையாய் இருக்கும்பொருட்டு சொத்துக்களை சேகரிக்கத் துவங்கினாள். அவள் மிகவும் கடினமாய் பிரயாசப்பட்டு தங்கள் குடும்பத்தினர் தங்கும்பொருட்டு நேர்த்தியான ஒரு சொந்த வீட்டை வாங்கினாள்.
எதிர்கால சந்ததியினருக்காக ஒரு வீட்டில் முதலீடு செய்வது என்பது, நீங்கள் பார்த்திராத எதிர்காலத்திற்கு செய்யும் ஒரு முதலீடாகும். எருசலேம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பதாக தேவன் எரேமியா தீர்க்கதரிசியை ஒரு நிலத்தை கிரயப்படுத்தும்படிக்கு சொல்லுகிறார் (எரேமியா 32:6-12). தேவன் கொடுத்த இந்த கட்டளை ஏரேமியாவுக்கு சரியானதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் அனைத்து சொத்துக்களும் எதிரிகளால் விரைவில் கைப்பற்றப்படப் போகிறது.
ஆனால் தேவன் எரேமியாவுக்கு “நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (வச. 42) என்று கர்த்தர் சொன்னார். தீர்க்கதரிசியின் நிலத்தை கிரயப்படுத்தும் இந்த செயலானது, தன் ஜனத்திற்கு தேவன் அவர்களுடைய தேசத்தை மீண்டும் சொந்தமாகக் கொடுப்பதற்கு அடையாளமாக்கப்பட்டுள்ளது. பயங்கரமான அழிவிற்கு பின்னரும், மீண்டும் அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுப்பதாகவும், சொந்த நிலங்களும் வீடுகளும் வாங்கப்படும் என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 43-44).
தேவனுடைய வார்த்தையில் நாம் இன்று நம்பிக்கை வைத்து, நம்முடைய விசுவாசத்தில் முதலீடு செய்யத் துவங்கலாம். பூமியில் நம்முடைய சூழ்நிலை எல்லாவகையிலும் மறுசீரமைக்கப்படுதலை நாம் ஒருவேளை சாட்சியிடாமல் இருக்கலாம். ஆனால் தேவன் கோணலான அனைத்தையும் ஒரு நாள் நேராக்குவார் என்று உறுதியாய் நம்பலாம்.
உறுதியான இளைப்பாறுதல் தேவனில்
சீனாவின் புஜியனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மிகவும் நன்றாகத் தூங்க உதவ விரும்பினர். அவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு சூழலில், சோதனை பொருட்களின் மீதான தூக்க விளைவுகளை அளந்தனர். பிரகாசமான, மருத்துவமனை தர விளக்குகள் மற்றும் இயந்திரங்களின் சத்தங்கள் மற்றும் செவிலியர்கள் பேசும் ஆடியோ பதிவுகளுடன் முழுமையான சோதனை அது. தூக்கக் கவசங்கள் மற்றும் காது செருகிகள் போன்ற கருவிகள் சோதனை பொருட்களின் ஓய்வை மேம்படுத்துவதாக அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் உண்மையான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, அமைதியான தூக்கம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நம் உலகம் நிலைகுலைகையில், நாம் எப்படி ஓய்வெடுப்பது? வேதம் தெளிவாகக் கூறுகிறது: தேவனை நம்புபவர்களுக்கு அவர்களின் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட சமாதானம் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி, பூர்வ இஸ்ரவேலர்ககளின் துன்பங்களுக்குப் பிறகு மீட்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி எழுதினார். அவர்கள் தங்கள் பட்டணத்தில் பாதுகாப்பாக வாழ்வார்கள், ஏனென்றால் அதைக் தேவன் காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார்கள் (ஏசாயா 26:1). அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் நன்மையைக் கொண்டுவர அவர் ஆற்றலுடன் இயங்குவதை அவர்கள் நம்புவார்கள். "அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்”, ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார், நீதியைக் கொண்டுவருகிறார் (வவ. 5-6). "கர்த்தர்தாமே நித்தியமான கன்மலை" என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அவரை என்றென்றும் நம்பலாம் (வ. 4).
ஏசாயா எழுதினார்: “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” (வச. 3). இன்றும் தேவன் நமக்கு அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அவருடைய அன்பு மற்றும் வல்லமையின் உறுதியில் நாம் இளைப்பாறலாம்.
நீர்க்கால்களின் ஓரம் நடப்பட்டது
சுந்தரம் ஒரு வயதான ஓய்வுபெற்ற கண்ணியமானவர், அவர் தனியாக வசிக்கிறார், சமீபத்தில் வாகனம் ஓட்டுவதைக் கைவிட வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்கவும் மற்றும் சபைக்குச் செல்லவும் அவருக்கு உதவி தேவை. "ஆனால் உங்களுக்குத் தெரியுமா, நான் வீட்டில் இருக்கும் நாட்களையே விரும்புகிறேன். நான் நாள் முழுவதும் இணையத்தில் இலவச ஆராதனை பாடல்களையும், தொலைக்காட்சியில் வேதாகம பாடங்களையும் அனுபவித்து மகிழ்கிறேன்" என்று சுந்தரம் கூறுகிறார். சுந்தரம் தனது நாட்களை வேதாகமம், ஜெபம் மற்றும் துதி ஆகியவற்றுடன் கழிக்கிறார்
நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், நம் இதயங்கள் எங்கு நாட்டப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானிக்கின்றன. சங்கீதம் 1, தேவதயவைப் பெற்ற ஒருவரின் பழக்கவழக்கங்களை விவரிக்கிறது: அவர்கள் அவருடைய சத்தியத்தில் மகிழ்கிறார்கள், அதை அடிக்கடி தியானிக்கிறார்கள், எனவே உலகின் முரட்டாட்டமான முறையைப் பின்பற்றுவதில்லை (வ.1-2). எல்லோருக்கும் கஷ்டம் வரும், ஆனால் தேவனின் வழிகளில் வேரூன்றிய வாழ்க்கை “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,.. இலையுதிராதிருக்கிற" (வ.3) மரத்தைப் போலிருக்கும். நம் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, வேதவாசிப்பில் ஒரு நாளைக்குப் பல மணிநேரம் செலவிட முடியாமல் போகலாம். இருப்பினும், தாகமாக தம்மிடம் வருவார் எவரையும் அவர் திருப்தியாக்குவார் என்றும், பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பின்பற்றுபவர்களை ஒரு நதியைப் போல நிரப்புகிறார் என்றும் இயேசு கூறினார் (யோவான் 7:37-39). துதி மற்றும் வேதாகமத்தின் மூலமாகவும், பிறரிடம் கரிசனை கொள்வதன் மூலமாகவும், நாம் வேலை செய்யும் போதும் தேவனிடம் பேசுவதன் மூலமாகவும், நாம் தவறும் போது மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் நம் இதயங்களை ஜீவத் தண்ணீரில் மூழ்கடிக்க முடியும்.
தேவனின் ஞான ஆலோசனைகளைப் பின்பற்றுதல், வளமான மண்ணில் நம் இதயங்களை நடுகிறது. அந்த வாழ்க்கை நீதியென்று அழைக்கப்படுகிறது, தேவன் அதைக் காப்பாற்றுகிறார் (சங்கீதம் 1:6).
பரிசுத்தமாகுதல்
உலகத்தரம் வாய்ந்த மட்பாண்ட சிற்பங்களை ஒரு கலை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பின், காற்றில் உலர்ந்த களிமண்ணைக் கொண்டு ஒரு சிறிய குடத்தைச் சொந்தமாகச் செய்யும்படி அழைப்பு பெற்றேன். அந்த சிறிய குவளையை இரண்டு மணிநேரத்தில் வடித்து, செதுக்கி, அதற்கு வர்ணம் பூசினேன். என்னுடைய இந்த கடின உழைப்பெல்லாம் விருதாவாயிற்று. ஒரு சிறிய அற்பமான, வடிவமற்ற மற்றும் சீரான வண்ணமற்ற பானையே இருந்தது. அது ஒருபோதும் அருங்காட்சியகம் ஏறாது.
உன்னதமான தரத்தில் வாழ்வதென்பது மிரட்சியூட்டும். இஸ்ரவேலின் ஆசாரியர்கள் இதை அனுபவித்தனர். அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தமாக இருப்பதில் தேவனின் கட்டளைகளை (லேவியராகமம் 22:1-8) பின்பற்றுவதோடல்லாமல், பலிகளுக்கடுத்த உபய கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் (வ.10-33). ஆசாரியர்களின் வேலை பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் கடுமையாக முயன்றும் தோற்றனர். ஆகவேதான் அவர்களுடைய நீதிக்கான பொறுப்பைத் தேவனே இறுதியில் தனது தோள்களின்மேல் போட்டுக்கொண்டார். அவர் மோசேயிடம் திரும்பத்திரும்ப, “நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (22:9, 16, 32) என்றார்.
இயேசுவே நமது பூரணமான மகாபிரதான ஆசாரியர், அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் பரிசுத்தமும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான பாவநிவிர்த்திக்கான பலியைச் செலுத்தினார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக (சீஷர்களுக்காக) நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் (பரிசுத்த பலியாக்குகிறேன்)” (யோவான் 17:19) என்று ஜெபித்தார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தும் வெறும் உருவற்ற களிமண் பானைகளைப்போலத் தோன்றுகையில், இயேசுவானவர் ஏற்கனவே செய்து முடித்த பூரணமான கிரியையில் நாம் இளைப்பாறலாம். மேலும், அவருக்காக வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்துகொள்ளலாம்.
விசுவாச படிகள்
ஜான் தனது வேலையை இழந்ததால் நிலைகுலைந்து போனார். ஆரம்ப நாட்களைக் காட்டிலும், வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலகட்டத்தில் புதிதாக எங்காவது வேலைக்குச் சேருவது கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். சரியான வேலைக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பின்னர் ஜான் வேலைக்கான தனது தற்குறிப்பைப் புதுப்பித்து, நேர்காணல் பயிற்சி குறிப்புகளையும் படித்தார், மேலும் தொலைப்பேசியில் நிறையப் பேரிடம் பேசினார். விண்ணப்பித்த பல வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த பனி நேரம் மற்றும் எளிதான பயணத்துடன் புதிய வேலையை ஏற்றுக்கொண்டார். அவருடைய உண்மையுள்ள கீழ்ப்படிதலும் தேவனின் போஷிப்பும் சரியான நேரத்தில் சந்தித்தன.
எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைப்பட்டிருந்த காலத்தில் யோகெபேத் (யாத்திராகமம் 6:20) மற்றும் அவரது குடும்பத்தினர் இதைவிட வியத்தகு நிகழ்வைச் சந்தித்தனர். புதிதாகப் பிறந்த அனைத்து எபிரேய மகன்களும் நைல் நதியில் போடப்பட வேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது (1:22), யோகெபெத் பயந்திருக்க வேண்டும். அவளால் சட்டத்தை மாற்ற முடியவில்லை, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன் மகனைக் காப்பாற்ற முயலும்படி அவள் சில படிகளை எடுக்கலாம். விசுவாசத்தால், அவள் அவனை எகிப்தியர்களிடமிருந்து மறைத்தாள். " ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்" (2:3). தேவன் அவனுடைய உயிரை அற்புதமாகப் பாதுகாக்க அடியெடுத்து வைத்தார் (வவ. 5-10) பின்னர் இஸ்ரவேலர் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவனைப் பயன்படுத்தினார் (3:10).
ஜானும், யோகெபேத்தும் மிகவும் வித்தியாசமான அடியெடுத்தனர், ஆனால் இரண்டு சம்பவங்களும் விசுவாசம் நிறைந்த செயல்களால் அடையாளப் படுத்தப்படுகின்றன. பயம் நம்மை முடக்கிவிடும். நாம் நினைத்தது அல்லது எதிர்பார்த்தது போன்ற பலன் இல்லாவிட்டாலும், அதன் விளைவைப் பொருட்படுத்தாமல் தேவனின் நற்குணத்தில் நம்பிக்கை வைக்க விசுவாசம் நமக்குப் பெலன் அளிக்கிறது.
ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல்
சந்துரு, கிறிஸ்துவை நம்பும் குடும்பத்தில் தான் வளர்ந்தான். ஆனால், கல்லூரி மாணவராகக் குடிப்பழக்கம் மற்றும் கேளிக்கை போன்றவற்றால் தனது சிறுபிராய நம்பிக்கையிலிருந்து வழிதவற ஆரம்பித்தான். பின்னர், " தகுதியற்றிருந்த என்னை, தேவன் மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்" என்றான். காலப்போக்கில், சந்துரு ஒரு கோடைக்காலத்தில் முக்கிய நகரங்களின் தெருக்களில் அறிமுகமற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்துகொண்டான். தற்போது, அவனுடைய சபையில் வாலிபர் ஊழியத்தைக் குறித்த பயிற்சி படிப்பை முடித்தான். கிறிஸ்துவுக்காக வாழாமல் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க இளைஞர்களுக்கு உதவுவதே சந்துருவின் குறிக்கோள்.
சந்துருவைப் போலவே, இஸ்ரவேலின் தலைவரான மோசேக்கும் அடுத்த தலைமுறை குறித்த கரிசனை இருந்தது. தான் விரைவில் தலைமையைத் அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த மோசே, தேவனின் நல்ல ஒழுங்குமுறைகளை ஜனங்களுக்கு வழங்கினார். பின்னர் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் பலன்களையும் பட்டியலிட்டார். கீழ்ப்படிதலுக்கு, ஆசீர்வாதம் மற்றும் ஜீவன்; கீழ்ப்படியாமைக்கு, சாபம் மற்றும் மரணம். அவர் அவர்களிடம், "ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு" என்றார். "அவரே உனக்கு ஜீவனும்" (உபாகமம் 30:19-20) என்றார். தேவனை நேசிக்கவும், "அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக" (வ. 20) என்றும் அவர்களை மோசே வலியுறுத்தினார்.
பாவத்தைத் தேர்ந்தெடுப்பது பின்விளைவுகளை உண்டாக்கும். ஆனால் நாம் நம் வாழ்க்கையை மீண்டும் தேவனிடம் ஒப்படைக்கும்போது, அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவார் (வ. 2-3) மற்றும் நம்மை மீட்டெடுப்பார் (வ. 4). இந்த வாக்குத்தத்தம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் முழுவதும் நிறைவேற்றப்பட்டது, ஆனால் இயேசு சிலுவையில் செய்த இறுதியான கிரியை மூலம் நம்மையும் தேவனோடு ஐக்கியப்படுத்தியது. நமக்கும் இன்று நமக்கு முன் இந்த தெரிவுதெடுப்பு வைக்கப்பட்டுள்ளது, ஜீவனைத் தேர்ந்தெடுக்க நமக்கு சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது.