எழுபது ஆண்டுகளாக, தேய்த்தல், உலர்த்துதல், கையால் துணிகளை அலசுதலென்று  ஒரு சலவை செய்யும் பெண்ணாகக் கடின உழைப்புக்குப் பிறகு, ஓசியோலா மெக்கார்ட்டி, இறுதியாக எண்பத்தாறு வயதில் ஓய்வு பெறத் தயாரானார். அத்தனை ஆண்டுகளும் அவர் தனது சொற்ப வருமானத்தை மிகக் கவனமாகச் சேமித்து வைத்திருந்தார். மேலும் தனது சுற்றுப்புறத்தாரை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஓசியோலா அருகிலுள்ள பல்கலைக்கழகத்திற்குத் தோராயமாக 1.24 கோடி ரூபாயை நன்கொடையாக ஏழை மாணவர்களின் உதவித்தொகை நிதியாக வழங்கினார். அவரது தன்னலமற்ற கொடையால் ஈர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அவரது அறக்கொடையை மும்மடங்காகப் பெருக போதுமான அளவு நன்கொடை அளித்தனர்.

செல்வத்தைத் தனது சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், பிறரை ஆசிர்வதிப்பதற்காகப் பயன்படுத்துவதே அதின் உண்மையான மதிப்பென்பதை ஓசியோலா புரிந்துகொண்டார். இந்த உலகத்தில் ஐசுவரியவான்களாக இருப்பவர்களுக்கு “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” (1 தீமோத்தேயு 6:18) இருக்கக் கட்டளையிடும்படி அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தினார். நாம் ஒவ்வொருவரும் உக்கிராணக்காரர்களாய் இருக்கும்படி நமக்குச் செல்வம் கொடுக்கப்பட்டுள்ளது, அது பணமாக இருக்கலாம் அல்லது பிற வளமாக இருக்கலாம். நம்முடைய ஆதாரங்களில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, தேவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு பவுல் எச்சரிக்கிறார் (வ.17).மேலும் “தாராளமாய்க் கொடுக்கிறவர்களாக” இருப்பதன் மூலம், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்க வேண்டும் (வ.18).

தேவனின் பொருளாதார கொள்கையில் பிசினித்தனமும், தாராளமாகக் கொடுக்காததும் வெறுமைக்கே வழிவகுக்கும். அன்பினால் பிறருக்குக் கொடுப்பதே நிறைவின் வழி. அதிகமாகப் பாடுபடுவதற்குப் பதிலாக, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வ. 6). ஓசியோலாவைப் போல, நமது வளங்களைத் தாராளமாகக் கொடுப்பது எவ்வாறிருக்கும்? தேவன் நம்மை வழிநடத்துவதுபோல இன்று நற்செயல்களில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க முயல்வோம்.