எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

கிறிஸ்துமஸ் ஒளி

எனது பார்வைக்கு அந்த கிறிஸ்துமஸ் மரம் பற்றியெரிவது போலிருந்தது. இது செயற்கை விளக்குகளின் அலங்காரத்தால் உண்டாகும் வெளிச்சம் அல்ல மாறாக நிஜமான நெருப்பு. எனது ஜெர்மானிய நண்பரின் பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நாங்கள் குடும்பமாக அழைக்கப்பட்டோம், "பழைய ஜெர்மானிய முறை" எனும் அந்த கொண்டாட்ட முறையில் கிறிஸ்துமஸ் மரத்தைப் பாரம்பரிய இனிப்பு வகைகளாலும், எரியும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்திருந்தனர் (பாதுகாப்பு காரணமாக ஒரு இரவு மட்டுமே அந்த புதிதாய் வெட்டப்பட்ட மரத்தை எரியும்படி செய்தனர்).

பற்றியெரிவதைப் போலக் காட்சியளித்த அம்மரத்தை நான் காண்கையில், எரியும் செடியில் தேவன் மோசேயை சந்தித்ததை நினைத்தேன். வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே, அங்கே பற்றியெரிந்தும், கருகாமலிருக்கும்  முட்செடியின் காட்சியினால் வியந்தான். அதை ஆராயச் சற்றே அருகில் சென்றபோது, தேவன் அழைத்தார். முட்செடியிலிருந்து வெளிவந்த செய்தி நியாயத்தீர்ப்புக்கானது அல்ல மாறாக இஸ்ரவேலர்களின் மீட்புக்கானது. எகிப்தில் அடிமைகளாய் இருந்த தன் ஜனத்தின் உபத்திரவத்தைப் பார்த்து, அவர்களிடும் கூக்குரலைக் கேட்டு, அவர்களை மீட்கத் தேவன் இறங்கினார் (யாத்திராகமம் 3:8).

இஸ்ரவேலர்களை எகிப்தியரிடமிருந்து தேவன் மீட்டிருக்க, இந்த ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்குமே மீட்பு தேவையாயிருந்தது. வெறும் சரீர ரீதியான உபத்திரவங்களிலிருந்து மட்டுமல்ல மாறாகத் தீமையும் மரணமும் இந்த உலகத்தில் ஏற்படுத்தின பாதிப்புகளிலிருந்து மீட்பு தேவை. இதற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து தேவன் பதிலளித்தார், தம்முடைய குமாரனாகிய இயேசு எனும் ஒளியை அனுப்பினார் (யோவான் 1:9–10). உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் ((3:17).

கால்பதித்தல்

“கால் பதித்தல்”(Walk On) என்பது பென் மால்க்கம்சன் என்பவருடைய நினைவுப் பதிவு. கால்பந்து விளையாட்டில் கொஞ்சமும் அனுபவமில்லாத இவன், தன்னுடைய அனுபவத்தைத் தானே பகிர்கிறான். அவனுடைய எதிர்பார்ப்புக்கு முரணாக, அவன் கல்லூரியின் கால்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான்.
அந்த அணியில் சேர்ந்தபின்பு, இந்த எதிர்பாராத வாய்ப்பைக் கொண்டு தேவன் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தூண்டப்பட்டான். ஆனால் அவனுடைய சக வீரர்களின் மாறுபட்ட கருத்துக்கள் அவனைச் சோர்வுறச் செய்தது. தேவனுடைய வழிநடத்துதலுக்காய் மால்க்கம்சன் ஜெபித்தபோது, “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும்...நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்ற ஏசாயாவுக்கு தேவன் நினைவுபடுத்திய வார்த்தைகளைத் தேவன் நினைப்பூட்டினார். ஏசாயாவின் வார்த்தைகளினால் உந்தப்பட்ட மால்க்கம்சன் தன் சகவீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தைப் பரிசளித்தான். அவர்கள் அதை மீண்டும் புறக்கணித்தனர். ஆனால் ஆண்டுகள் கழிந்த பின்பு அவருடைய அணியில் இருந்த ஒருவர் அந்த வேதாகமத்தைத் திறந்து வாசித்து, தேவன் மீதான தன்னுடைய தாகத்தை அவனுடைய மரணத்திற்கு முன்பாக பிரதிபலித்தான் என்பதை அறிந்துகொண்டான்.
நம்மில் பலரும், நம்முடைய நண்பர்களுடனோ அல்லது குடும்ப நபர்களுடனோ இயேசுவைப் பகிர்ந்துகொண்டதினால் புறக்கணிப்பைச் சந்தித்திருக்கலாம். நாம் உடனடி மாற்றத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையானது குறித்த காலத்தில் பலன் கொடுக்கும் என்பதை விசுவாசிப்போம்.

அல்லேலூயா

உலகப் புகழ்பெற்ற “மேசியா கீதம்” என்ற இசையை இயற்ற, இசையமைப்பாளர் ஹாண்டலுக்கு, வெறும் இருபத்து நான்கு நாட்களே தேவைப்பட்டதென்பது வியக்கத்தகு  விஷயமாகும். இந்த இசைக் கச்சேரி பிரபலமான "அல்லேலூயா கோரஸ்" என்ற பல்லவியோடு ஆரம்பித்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்தே, உச்சத்தை எட்டும். வெளிப்படுத்தின விசேஷம் 11:15 ல் கூறப்பட்டுள்ள, இந்த சேர்ந்திசைப் பாடலை, பாடல் குழுவினர் உற்சாகத்தோடு, எக்காளங்களும், முரசுகளும் ஒலிக்க "அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்" என்று பாடுவர். இப்பாடல், பரலோகில் இயேசுவுடனான நித்திய நம்பிக்கையை ஜெயதொனியாக அறிவிக்கும் பாடலேயாகும்.

தன்னுடைய இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷத்தில், தான் தரிசனமாகக் கண்ட, கிறிஸ்துவின் வருகையோடு உச்சம்பெறும் நிகழ்வுகளை எழுதுகிறார். அக்கருத்தே மேசியா கீதத்திலும் இருந்தது. யோவான், உயிர்த்தெழுந்த இயேசுவானவர் திரும்பி வரும்போது, பாடகர் சத்தத்துடன் ஆரவாரம் உண்டாயிருக்குமென்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் (19:1–8).

இயேசு கிறிஸ்து இருளின் அதிகாரத்தையும், மரணத்தையும் வென்று, சமாதானத்தின் ராஜ்யத்தை நிலை நாட்டியமைக்காய், உலகம் மகிழ்ந்து கொண்டாடும். ஒரு நாள் தேவப் பிள்ளைகளாகிய நாமனைவரும் சேர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மாட்சிமையையும், அவருடைய முடிவில்லா ராஜ்யத்தையும் குறித்து கம்பீரமாய்ப் பாடுவோம் (7:9). அதுவரை விசுவாசத்தோடு வாழ்ந்து, உழைத்து, ஜெபித்துக் காத்திருப்போம்.

மீண்டும் கண்டெடுக்கப்பட்டது

1937 ல் வான்டெரெர் w24 என்ற மாடல் காருக்கு ஒரு பெரும் சரித்திர பின்னணி இருந்தது. பிரிட்டிஷ் அரசால் வீட்டுக்காவலில் அடைபட்டிருந்த நேதாஜி, கொல்கத்தாவிலிருந்த தனது பாரம்பரிய வீட்டிலிருந்து தப்பிக்க, இந்த வாகனம்தான் உதவியது. இந்த சரித்திர உண்மையால் பூரித்த ஆடி நிறுவனம், சுமார் ஆறுமாதங்கள் செலவழித்து இந்தக் காரை சீராக்கியது. நேதாஜி தப்பித்த சம்பவத்தை நினைவுகூரும் 75 ஆம் ஆண்டான, 2017 ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பிரணாப் முக்கர்ஜீ, இந்த அறியக் கண்டெடுப்பை மக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டு வந்தார்.

பொக்கிஷங்கள் பலவகைகளில் மறையலாம். 2 நாளாகமத்தில் தொலைந்த பொக்கிஷம் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். யோசியா இஸ்ரவேலின் ராஜாவாகி பதினெட்டு ஆண்டுகள் கழித்து, எருசலேமின் தேவாலயத்தைப் பழுதுபார்த்தான். நியாயப்பிரமாணப் புஸ்தகம் எனப்படும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், எதிரிகளின் தொடர்தாக்குதல் காரணமாகப் பலஆண்டுகளாக மறைந்து, மறக்கப்பட்டுப்போனது. அப்பொழுது இல்க்கியா என்ற ஆசாரியன், கர்த்தருடைய ஆலயத்திலே அதைக் கண்டெடுத்தான் (2 நாளாகமம் 34:15).

இந்தக் கண்டெடுப்பைக் குறித்து யோசியாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டான். அப்போது அவன், இஸ்ரவேல் ஜனங்களனைவரும், நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியுள்ள அனைத்துக் காரியங்களுக்கும் கீழ்ப்படியும்பொருட்டு, முழுப்புஸ்தகத்தையும் வாசித்துக் கேட்பதற்காக, அவர்களை ஒன்று திரட்டினான் (வ.30–31).

இன்றும் நமது வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமான, வேதத்தின் அறுபத்தாறு புஸ்தகங்களை வாசிக்கும், வியத்தகு ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

உடைத்து அழகாக்கப்படுதல்

குஜராத் மாகாணத்தின் பிரபலமான “ரோகன் ஓவியங்கள்” பார்ப்பதற்கு மிகவும் எளிமையாய் தெரியலாம். ஆனால் அந்த ஓவியத்தின் ஒரு சிறு பகுதியை வடிவமைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறதுஎன்பதை அறிந்துகொள்ளவேண்டும். நொறுக்கப்பட்ட கனிம அடிப்படையிலான வர்ணங்களை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து, “மெல்லமான ஓவியம்” என்று நாம் அழைக்கும் இந்த ஓவியத்தை தயார் செய்வதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக எடுக்கும். அதை உன்னிப்பாய் கவனித்தால், அதின் வேலைப்பாடுகளும் அழகும் தெரியும். சுவிசேஷமும் ஏறத்தாழ இதைப்போன்றதே. உடைக்கப்பட்ட கனிமங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் போலவே, இயேசு தன் பாடுகளின் மூலம் உடைக்கப்பட தன்னை ஒப்புக்கொடுத்து, முழு உலகத்திற்குமான நம்பிக்கைக்குக் காரணரானார்.

நம்முடைய வாழ்க்கையில் உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட அனுபவங்களை தேர்ந்தெடுத்து, அதை புதிய அழகான காரியங்களாய் மாற்றுவதற்கு தேவன் விரும்புகிறார். தாவீது, தன்னுடைய சுயத்தினால் உடைக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றுவதற்கு தேவனுடைய உதவியை நாடினார். இன்னொருவனுடைய மனைவியை இச்சித்து, அவள் நிமித்தம் அவளுடைய கணவனை கொலை செய்யத் துணிந்த தன்னுடைய தவறை உணர்ந்து தாவீது பாடிய பாடலே சங்கீதம் 51. தாவீது, “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” (வச. 17) தேவனுக்கு அர்ப்பணித்து, இரக்கத்திற்காய் கெஞ்சினான். நருங்குண்டதும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட எபிரேயப் பதம், “நித்கே.” அதற்கு, “சுக்குநூறாய் நொருங்கியது” என்று பொருள்.

தாவீதின் இருதயத்தை தேவன் புதிதாக்குவதற்கு (வச. 10), அது முழுவதுமாய் நொறுக்கப்படவேண்டியிருந்தது. மன்னிக்கிறதில் தயைபெருத்த உண்மையுள்ள தேவனிடத்தில் தாவீது தன்னுடைய உடைக்கப்பட்ட இருதயத்தை ஒப்படைத்தான்.

அன்பு இல்லாமல் பயனில்லை

எனது ஸ்பெஷல் ஆர்டர் மேஜைக்கான துண்டுகளை பெட்டியிலிருந்து எடுத்து என் முன் வைத்த பிறகு, ஏதோ சரியாக இல்லை என்பதை நான் கவனித்தேன். மேஜை அனைத்து அம்சங்களும் இருந்தது, ஆனால் அதின் கால்களில் ஒன்றைக் காணவில்லை. ஒரு கால் இல்லாமல், என்னால் மேஜையை வடிவமைக்க முடியவில்லை. அது பயனற்றதாகிவிட்டது.

ஒரு முக்கிய பகுதியைக் காணவில்லையெனில் உபயோகமாக இல்லாமல் இருப்பது மேசை மட்டுமல்ல. 1 கொரிந்தியர் புத்தகத்தில், பவுல் தனது வாசகர்களுக்கு ஒரு அத்தியாவசியமான முக்கியப் பகுதி அவர்களிடம் காணவில்லை என்பதை நினைவூட்டினார். விசுவாசிகள் பல ஆவிக்குரிய வரங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களிடத்தில் அன்பு இல்லை. 

தனது கருத்தை வலியுறுத்த மிகைப்படுத்தப்பட்ட மொழியைப் பயன்படுத்தி, பவுல் எழுதினார். அவருடைய விசுவாசிகளுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளையும் கொடுத்தாலும், அவர்கள் விருப்பத்துடன் கஷ்டங்களை அனுபவித்தாலும், அன்பின் அடிப்படையின்றி, அவர்களின் செயல்கள் அனைத்திற்கும் எந்த வித பிரயோஜனமும் இல்லை (1 கொரிந்தியர் 13:1-3). எப்போதும் பாதுகாக்கும், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அன்பின் அழகை விவரிக்கும் வகையில், அவர்களின் செயல்களில் அன்பை எப்போதும் பிரதிபலிக்கவேண்டுமென்று பவுல் அவர்களை ஊக்குவித்தார் (வச. 4-7).

நாம் நம்முடைய ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது, ஒருவேளை நம்முடைய விசுவாச சமூகங்களில் கற்பிக்க, ஊக்குவிக்க அல்லது சேவை செய்ய, அன்பு பிரதானமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், இது ஒரு கால் இல்லாத மேஜை போன்றது. அது வடிவமைக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை அடைய முடியாது.

இதைவிட பெரிய அன்பு இல்லை

2021 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79ஆம்; ஆண்டு நினைவு ஆண்டு. நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிப்பதற்காக நினைவுகூரப்படுகிறது. ஆகஸ்ட் 8, 1944 அன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆரம்பத்தில், காந்தி, “செய் அல்லது செத்து மடி” என்னும் தனது புகழ்பெற்ற வாக்கியத்தைக் கூறினார். மேலும், “நாம் இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் மரிப்போம்; எங்கள் அடிமைத்தனம் நீடிப்பதைக் காண நாங்கள் இருக்கமாட்டோம்” என்றும் கூறினார். 

தீமையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் தன்னைத்தானே வருத்திக்கொள்ள விழைவது கிறிஸ்துவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை..” (யோவான் 15:13). இந்த வார்த்தைகள் கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் போது சொல்லப்பட்டது. ஆனால் இந்த வகையான அன்பின் விலை மற்றும் ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்: ஒருவர் தனது உயிரை மற்றொரு நபருக்காக விருப்பத்துடன் தியாகம் செய்யும் போது ஒரு அன்பு எடுத்துக்காட்டப்படுகிறது. மற்றவர்களை தியாகமாக நேசிக்க இயேசுவின் அழைப்பு “ஒருவருக்கொருவர் அன்புகூருங்கள்” (வச. 17) என்ற அவருடைய கட்டளையின் அடிப்படையாகும்.

வயதான குடும்ப அங்கத்தினரின் தேவைகளைக் கவனிப்பதற்கு நேரத்தைக் கொடுப்பதன் மூலம் ஒருவேளை நாம் நம்முடைய தியாகமான அன்பை வெளிப்படுத்தலாம். பள்ளியில் மன அழுத்தம் நிறைந்த வாரத்தில் நம்முடைய உடன்பிறந்தவர்களின் வேலைகளுக்கு உதவிசெய்வதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கலாம். வியாதிபட்டிருக்கும் குழந்தையை இரவில் பராமரிப்பதின் மூலம் கணவனோ, மனைவியோ தூங்குவதற்கு அனுமதிக்கும் உதவியை செய்யலாம். நாம் மற்றவர்களை தியாகமாக நேசிப்பதால், அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்டைக் காட்டுகிறோம்.

வானத்து அப்பம்

ஆகஸ்டு 2020ல், ஸ்விட்சர்லாந்தின் ஓல்டன் பகுதியில் உள்ள மக்கள், சாக்லேட் மழை பெய்ததால் திடுக்கிட்டனர்! அங்கிருந்த ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அங்கிருந்த சாக்லேட் மூலப்பொருட்கள் காற்றில் கலந்தன. அதின் விளைவாக அங்கிருந்த சாலைகள் மற்றும் கார்களின் மீது அவை படிந்து, அந்த இடமே சாக்லேட் மணம் வீசக்கூடியதாக மாறியது. 

அதேபோன்று வானத்திலிருந்து மிகவும் ருசியான உணவு அதிசயவிதமாய் பொழிகிறதென்றால், யாத்திராகமத்தில் தேவன், இஸ்ரவேலர்களை போஷித்த விதத்தை எண்ணி ஆச்சரியப்படுகிறேன். எகிப்திலிருந்து தப்பிப் பிழைத்து, வனாந்திரத்தில் ஆகாரமும் தண்ணீருமின்றி கடினமான சவால்களை இஸ்ரவேலர்கள் சந்திக்கின்றனர். ஜனங்களின் அவலநிலையால் மனதுருகின தேவன், “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்று வாக்குப்பண்ணுகிறார். அடுத்த நாள் காலையில் பூமியின் மீது ஒரு மெல்லிய படிவம் படிந்தது. அன்றிலிருந்து, அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து தேவன் மன்னாவை வருஷிக்கப்பண்ணுகிறார். 

இயேசு பூமியிலிருந்த நாட்களில், ஒரு பெரிய கூட்டத்தை போஷித்ததைப் பார்த்த மக்கள், அவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை நம்ப ஆரம்பித்தனர் (யோவான் 6:5-14). ஆனால் இயேசு, தற்காலிகமான பசியை அல்ல, நித்திய ஜீவனை அளிக்கும் (வச. 51) “ஜீவ அப்பம் நானே” (வச. 35) என்கிறார்.

ஆவிக்குரிய போஷாக்கிற்காய் பசியோடிருக்கும் நமக்கு இயேசு, தேவனுடனான முடிவில்லா வாழ்வளிக்கிறார். அதுபோன்ற ஆழமான மனதின் ஏக்கங்களை திருதிப்படுத்தவே அவர் வந்தாரென்று அவரை நம்பி, விசுவாசிப்போமாக.

பூமி தினத்தில் நன்றியுணர்வு

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தினத்தன்று “பூமி தினம்” அனுசரிக்கப்படுகிறது. சமீப காலமாய், ஏறத்தாழ இருநூறு நாடுகளில், கோடிக்கணக்கான மக்கள் அன்றைய தினத்தில் பயிற்சி மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர். ஒவ்வொரு வருடமும், பூமி தினம் இத்தகைய வியத்தகு கிரகத்தை பராமரிக்கும் அவசியத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் இந்த ஆண்டு நிகழ்வை காட்டிலும் மிகப் பழமையானது. அது சிருஷ்டிப்பின் நாட்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது.

ஆதியாகமத்தில், தேவன் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்து, மனிதன் வாழ்வதற்கு பூமியை சிருஷ்டித்தார் என்று அறிகிறோம். அவர் மலைச்சிகரங்களையும், பசுமையான சமவெளிகளையும் படைத்ததுமன்றி, தேவன் ஏதேன் தோட்டத்தையும் சிருஷ்டித்தார். அது உணவு, உறைவிடம், மற்றும் மகிழ்ச்சியை அதின் குடிகளுக்குக் கொடுக்கும் அற்புதமான ஒரு இடம் (ஆதியாகமம் 2:8–9).

தன் பிரதான படைப்பான மனிதனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்து, தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் (வச. 8,22). பின், “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” (வச. 15) வேண்டுமென்ற பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார். ஆதாமும், ஏவாளும் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட பின்னர், தேவனுடைய சிருஷ்டிப்பைப் பராமரிப்பது இன்னும் கடினமானதாய் மாறியது (3:17–19). ஆனால் இந்நாள்வரைக்கும் தேவனே நம் பூமியையும், அதின் ஜீவராசிகளையும் பராமரிக்கிறார் (சங்கீதம் 65:9–13). நம்மையும் அதையே செய்யுமாறு எதிர்பார்க்கிறார் (நீதிமொழிகள் 12:10).

நாம் நெருக்கடியான நகரத்தில் வசிக்கிறோமோ அல்லது கிராமத்தில் இருக்கிறோமோ, தேவன் நம்மை நம்பிக் கொடுத்த பகுதிகளை பராமரிக்கும் கடமை நமக்குண்டு. தேவன் நமக்குக் கொடுத்த இந்த பூமி பரிசு என்னும் நன்றிக்கடனுக்காக அதை பராமரிக்கும் பொறுப்பை மனப்பூர்வமாய் ஏற்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தொலைநோக்குக் கனவுகள்

கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.

பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).

நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

தினந்தோறும் சாருதல்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11

ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது. 

மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.

தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

ஒரு அன்பான உழைப்பு

டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.