எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆன் ஹரிகீர்தன்கட்டுரைகள்

கலையும் தேவனின் உள்ளமும்

எனது பெற்றோரின் வீட்டில், ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் மந்தையை மேய்ப்பதைச் சித்தரிக்கும் கலைப் படைப்பு ஒன்று உள்ளது. ஓவியம் போலத் தோற்றமளித்தாலும், சித்திர திரை மற்றும் சாயங்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்டதாகும். பொருள்கள் மற்றும் நபர்களின் நிறம், ஆழம் மற்றும் வெளிப்புறத்தை வரையறுக்க பல்வேறு வகையான மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கலை, “மைசூர் மரப் பதித்த வேலை” என்று பின்னர் கண்டுபிடித்தோம். ஒவ்வொரு முறையும் நான் அதைப் பார்க்கும்போது, கர்த்தர் என் மேய்ப்பர் என்பதை அது எனக்கு நினைவூட்டுவதால், நான் நம்பிக்கையால் நிறைகிறேன். தேவன் என்னை ஆற்றவும், தனது பிரசன்னத்தை எனக்கு உறுதியளிக்கவும் இந்தக் கலைப் படைப்பைப் பயன்படுத்துகிறார். இந்த ஊக்கமளிக்கும் பணிக்காகவும், அத்தகைய படைப்பாற்றலைப் பெற்ற மர ஆசாரிகளுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் பல ஆண்டுகளாகக் கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கிறார். யாத்திராகமத்தில், ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் மோசேயிடம் கூறினார் (வ.6). “நான் அழைத்து,” “நான் கட்டளையிட்டேன்,” “நான் அருளினேன்,” மற்றும் "நான் தேவஆவியினால் நிரப்பினேன்" என்று ஆராதனையில் பயன்படுத்தப்படும் பொருட்களை உருவாக்க பெசலெயேலையும் அகோலியாபையும் அவர் பணித்தார் (வ.2-6). “விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும்" (வ.3-5) அவர்களுக்கு ஞானத்தையும் திறமையையும் கொடுத்தார். ஆராதனையில் ஜனங்களை தம்மிடம் நெருக்கமாகக் கொண்டுவரத் தேவன் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து மற்றும் பயன்படுத்தினார்.

பெசலெயேல் மற்றும் அகோலியாப் போன்றோரின் விஷயத்தைப் போலவே, நம்முடைய கலைத்திறன் ஈவுகளெல்லாம் தேவஆவியால் நமக்கு அருளப்படுகின்றன. தேவனே நம்மைத் தேர்ந்தெடுத்து, நம்மை நியமித்து, அவருக்காகப் படைக்கும்பொருட்டு அவருடைய ஆவியால் நம்மை நிரப்பினார். இது யாருக்கு உதவப் போகிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவனின் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் கீழ் நாம் கலையை உருவாக்கினால், அவர் அதை ஜனங்களை ஆறுதல்படுத்தவும் அவர்களின் வாழ்க்கையையும் நம் வாழ்க்கையையும் செழிக்கச் செய்யவும் பயன்படுத்துவார். 

 

மீன் வாசனை பானை

வீட்டில் மீன் குழம்பு செய்ய மட்டுமே பயன்படுத்தும் மண் பானை உள்ளது. அது மற்ற பானைகளிலிருந்து வித்தியாசமாகத் தெரியாது. நாங்கள் அதில் மீன் சமைக்க ஆரம்பிக்கும் முன் அது எந்த வகையிலும் தனித்துவமானதாக இல்லை. இருப்பினும், இப்போது வேறு எந்த உணவையும் தயாரிப்பதற்கு அதனைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அதில் நாம் எதைச் சமைத்தாலும் அதில் கொஞ்சம் "மீன்" வாசம் இருக்கும். ஆயினும்கூட, இது நீர்வாழ் உயிர் உணவுகளுக்கான எங்களுடைய பிரேத்யேகமான பானையாகும், ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அதில் சமைக்கும்போது, குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், நாம் வீட்டில் பயன்படுத்தும் வெவ்வேறு பானைகளைப் பற்றிப் பேசுகிறார். சில பாத்திரங்கள் "கனத்திற்கு" என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன, சில "கனவீனத்திற்குமானவை" (வ.20) என்று அவர் விளக்குகிறார். பின்னர், பவுல் தேவஜனங்களுக்கு ஒப்பாக இதனைப் பயன்படுத்துகிறார் (வ.14). தேவஜனங்கள் விசேஷித்த நோக்கங்களுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்கள் எந்த நற்கிரியையும் செய்ய "எஜமானுக்கு உபயோகமானதாக" (வ.21)இருக்க முடியும் என்று அவர்களுக்குத் தொடர்ந்து நினைப்பூட்டுமாறு (வ.14) தீமோத்தேயுவிடம் கூறுகிறார். இப்போது அவர் அவர்களை விசேஷித்தவர்களாக்கியதால், அவர்கள் சண்டையிடுதல், அவபக்தியான பேச்சு, தீய இச்சைகள் மற்றும் புத்தியீனமான வாக்குவாதங்களிலிருந்து விலகி வாழ அழைக்கப்பட்டனர் (வ.14-24). அவர்கள் "நீதி, விசுவாசம், அன்பு மற்றும் சமாதானத்தை அடையவும்" மற்றும் "எல்லாரிடத்திலும் சாந்தமாகவும்" (வ.21-22) தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பவுலின் செய்தி நமக்கும் பொருந்தும். கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கையிடும் நாம் அவரால் அறியப்பட்டும் தெரிந்துகொள்ளப்பட்டும் இருக்கிறோம் (வ.19). நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனின் பயன்பாட்டிற்காகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு விசேஷித்த பாத்திரமாக மாறுகிறோம். தேவனின் சுபாவத்தைப் பிரதிபலிக்காத விஷயங்களை நாமும் கைவிட வேண்டும் என்பதே இதன் பொருள் (வ.19). அதற்குப் பதிலாக, நாம் “எஜமானுக்கு உபயோகமானதாக” இருக்கும் பொருட்டு, தேவன் விரும்புவதைச் செய்வதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நமது எஜமான் பயன்படுத்தக்கூடிய மண்பாண்டங்களாக இருப்போம் (1 கொரிந்தியர் 4:7).

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்

 

தாய் கரடியைப் போல

நான் எப்போதும் நாய்களுக்குப் பயப்படுகிறேன். ஆனால் நான் குழந்தையாக இருந்தபோது, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு அல்சேஷன் வைத்திருந்தார், அதை நான் நேசித்தேன். நான் அறிந்த மென்மையான நாய் அது. ஆனால் ஒரு நாள், அது ஆக்ரோஷமாகி, உறுமியது, சத்தமிட்டு, வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் பிரவேசிக்க யாரையும் விடவில்லை. நான் மீண்டும் பயந்ததைக் கண்டு, என் பக்கத்து வீட்டுக்காரர் அந்த நாய் தன் குழந்தைகளைப் பாதுகாக்க அப்படி நடந்து கொள்கிறது என்று விளக்கினார்.

ஓசியா 13:8-ஐ படிக்கும் போது எனக்கு இது தான் நினைவுக்கு வருகிறது. தனது குட்டிகளைத் தேடும் தாய் கரடியுடன் தேவன் தன்னை ஒப்பிடுகிறார். இது தேவநீதியின் கடுமையான பிம்பம். தேவன் இஸ்ரவேல் மற்றும் எப்பிராயீம் மீது கோபமடைந்தார், ஏனென்றால் அவர்கள் பெருமை கொண்டு, தேவன் அவர்களுக்குச் செய்த அனைத்தையும் மறந்தனர் (வ.6). தேவனை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் விக்கிரகங்களை வணங்கி, "அதிகமதிகமாய்ப்" பாவம் செய்தார்கள், மேலும் நரபலியையும் செலுத்தினர் (வ.1-4). இச்சூழலில் தேவன், "குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து" (வ.8) போடுவேன் என்றார். தேவன் தம்முடைய பாதுகாப்பில் உள்ள நபர்களுக்காக வைராக்கியமாக இருக்கிறார். ஒரு தாய் கரடியைப் போல, அவர் அவர்களைப் பாதுகாக்கிறார், உணவளிக்கிறார், பராமரிக்கிறார் மற்றும் வழிநடத்துகிறார் (வ.4-8).

நாம் பலவீனமாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் உணரும்போது, நமக்கு ஏற்படும் அநீதிகளைத் தேவன் கவனிக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஒரு தாய் கரடி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல, உதவிக்காக நம் அழுகையைப் பார்க்கிறார், கேட்கிறார், நம்மைப் பாதுகாக்க விழைகிறார். கரடுமேடான வாழ்க்கையினூடே , நாம் தேவனின் பாதுகாக்கும் கரங்களில் பத்திரமாக இளைப்பாற முடியும் (வ.13-14). நம் வாழ்வில் தேவனின் அக்கறையான தலையீட்டிற்காக அவருக்கு நன்றியுடன் இருப்போம் (வ.9). மேலும், தேவனையும் அவருடைய வீட்டில் அன்பு மற்றும் நீதிக்கான அவரது விருப்பத்தையும் மதிக்கலாம் (ஓசியா12:6). தேவனின் உதவியைப் பெற்று, நாம் தேவைப்படுபவர்களைக் காக்க நாமும் எழுவோம். 

 

பல வர்ண சுவர்

என் தோழி அவள் தீட்டிக் கொண்டிருந்த ஒரு நீர்வர்ண ஓவியத்தை என்னிடம் காட்டியபோது, வரைதிரையில் இருந்த சித்திரம் வேலூர் கோட்டை என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். நான் ஓவியர் அல்ல, ஆனால் யாராவது சுவருக்கு வண்ணம் தீட்டினால், அவர்கள் முழு சுவரையும் ஒரே வர்ணத்தில் பூசுவார்கள் என்று நான் கற்பனை செய்தேன். ஆனால், அவள் வரைந்த சுவர் நேர்த்தியாகப் பல வண்ணங்களிலிருந்தது. ஒரு கல் காவி நிறம், மற்றொன்று பொன்னிறம். ஒரு பாசி பச்சை மற்றும் ஒரு மாதுளை ஊதா கூட இருந்தது. நான் மிகவும் கவரப்பட்டு, “சுவர் எப்படி வித்தியாசமாக இருக்கிறது?” என்று கேட்டேன். அவள், "ஏனென்றால் ஒவ்வொரு கல்லும் ஒரு பாறையிலிருந்து வருகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு சாயல்களைக் கொண்டுள்ளது" என்று பதிலளித்தாள். அப்போதிருந்து, நான் ஒரு கல் சுவரைப் பார்க்கும்போதெல்லாம், அதன் பல கற்களின் அமைப்புகளையும், நிறங்களையும் மற்றும் வடிவங்களையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியாது.

பேதுரு நம்மை "ஜீவனுள்ள கற்கள்" (வ.5) என்று அழைக்கிறார். என் தோழியின் ஓவியத்தில் உள்ள கற்களைப் போல, நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நாங்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகிறோம் மற்றும் பலவிதமான அனுபவங்களைக் கொண்டுள்ளோம். ஆனால் கட்டிடத்திலிருந்து ஒதுக்கப்பட்ட கல் போல நாம் தனிமையில் வாழ வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து நம்மை ஒன்று சேர்த்தார் (வ.4). ஒரு கல் ஒரு சுவரை உருவாக்காது என்றாலும், தேவன் நம்மை ஒன்று சேர்க்கும்போது, அவர் நம்மை "ஆவிக்கேற்ற மாளிகையாக" (வ. 5) கட்டுகிறார். மூலைக்கல்லாகிய இயேசுவால் ஒன்றுபட்டு, நாம் "தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்" (வ.5-9) ஆக்கப்படுகிறோம்.

நாம் நிராகரிக்கப்பட்டவர்களாகவோ அல்லது எங்கும் பொருந்த முடியாத அளவுக்கு வித்தியாசமானவர்களாகவோ உணரும்போது (வ.11-12), பேதுரு சொல்வதை நினைவில் கொள்வோம்: "அதின்மேல் (இயேசுவின்மேல்) விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை" (வ.6). தேவன் கட்டுவதில் ஒரு பகுதியாக இருக்க இயேசுவின் மூலம் நம்மைத் தேர்ந்தெடுத்தார் (வ.5). நமது தனித்துவம் தேவனின் சமூகத்தில் சரியாகப் பொருந்துகிறது.  

அன்பு, வாழ்வு மற்றும் போஷிப்பு

 

எனது பாட்டியின் நினைவு நாளில், நானும் எனது கணவரும் அவரது கல்லறைக்குச் சென்று அவரது கல்லறையில் ரோஜாக்களை வைத்தோம். என் கணவர் அவளைச் சந்தித்ததே இல்லை. எனவே, அவர் அவளைப் பற்றி என்னிடம் கேட்டபோது, நான் அவளுக்குப் பிடித்த பாடல்களைப் பாடினேன், அவளது விஸ்தாரமான கிறிஸ்துமஸ் சமையலைப் பற்றிப் பேசினேன், காட்டுக் காளான்களை எப்படித அறிவது என்று அவளுக்குத் தெரியும் என்று நான் அவரிடம் சொன்னபோது சிரித்தேன். அவள் சரீரப்பிரகாரம் எங்களுடன் இல்லாவிட்டாலும், அவளுடைய கல்லறைக்குச் சென்று அவளது கதைகளைப் பகிர்ந்துகொண்டது, அவளுடைய அன்பு, வாழ்க்கை மற்றும் உணவு பற்றிய நினைவுகளால் என் மனதை நிரப்பியது. இயேசு மரிப்பதற்கு முன், அவர் தனது சீடர்களுடன் ஒரு தாராளமான பஸ்கா விருந்தை பகிர்ந்து கொண்டார். அவர் விரைவில் பாடுபட்டு மரிப்பாா் என்று அவர்களிடம் கூறினார் (வ.15). உண்மையில், அதே இரவில் அவர் கைதுசெய்யப்படுவார் (லூக்கா 22:54). இந்த சூழ்நிலையில், இயேசு அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “ இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்றார் (வ.19). “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (வ.20) என்று கூறி, ஒரு பாத்திரத்தில் திராட்சரசத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

மறுநாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்தார், இறுதியில் பரலோகத்திற்குத் திரும்பினார். ஆயினும் இன்றும் கூட, அவருடைய சீஷர்களாகிய நாம் இன்னும் அவரை நினைவுகூரும் வகையில் அப்பம் பிட்டு, திராட்சரசம் பகிர்ந்து கொள்கிறோம், ஏனென்றால் அது இயேசுவினால் நிறுவப்பட்ட ஒரு அழகான நினைவுச்சம்பவமாகவும், மேலும் அவர் மீண்டும் வருவதற்கான நித்திய வாக்குறுதியாகவும் இருக்கிறது (வ.15-18). நாம் இயேசுவைச் சரீர ரீதியாகப் பார்க்கவோ தொடவோ முடியாமல் போகலாம், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும், அவருடைய அன்பு, வாழ்க்கை மற்றும் போஷிப்பால் ஒவ்வொரு நாளும் நம்மை நிரப்புகிறார் என்பதையும் நாம் அறிவோம். நாம் அப்பம் பிட்கும்போது, இயேசுவின் வாக்குறுதியை நினைவுகூர்ந்து, அவர் நம்மில் செயல்படவும் உள்ளிருந்து அவரைப் போல நம்மை மாற்றவும் அவரை அனுமதிப்போம்.

 

கிரியைகளும் சத்தியமும்

நானும் என் கணவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது தாய் மாமா எனது குடும்ப வரலாற்றை எங்களிடம் கூறினார். எனது தாத்தா பள்ளி ஒன்றின் பள்ளி முதல்வராக இருந்த போதிலும் அந்த வருமானம் அவரது ஏழு பிள்ளைகளுக்கு போதுமானதாக இல்லை என்று விளக்கினார். ஆயினும்கூட, அவர் தனது மூத்த குழந்தைகளின் உயர் கல்வியில் முதலீடு செய்தார், அவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது பெரும்பாலும் மாமாக்கள் அல்லது அத்தைகளுடன் தங்கினர். இந்த மூத்தவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் இளைய உடன்பிறப்புகளின் கல்விக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர். "நாங்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறோம், உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் எங்களிடம் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறோம்" என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.

யோவானும் தனது நிருபத்தில், "பிள்ளைகளே" என்று அழைத்தவர்களுக்கு இதே போன்ற அறிவுரைகளை வழங்குகிறார். அவர், "என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" (வ.18) என்று எழுதுகிறார். இயேசு தனக்கென்று ஒன்றும் செய்யாமல் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தபோது நம்மீது கொண்டிருந்த அன்பை அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (வ.16). உண்மையில், "அன்பு இன்னதென்று" (வ.16) என்றால் இயேசுவின் செயலே என்று யோவான் கூறுகிறார். அதை மனதில் கொண்டு யோவான், விசுவாசிகளை தங்கள் "பொருள் உடைமைகளை" ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள அழைத்தார் (வ.17). ஒரு விசுவாசி, இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என்று யோவான் கேட்கிறார்.

தன்னுடைய உடைமைகளைப் பதுக்கி வைப்பது விவேகமானது என்று உலகம் நமக்குச் சொல்கிறது. ஆனால் இவை பிறர்க்குச் சேவை செய்யக் கொடுக்கப்பட்ட வரங்கள் என்று வேதாகமம் சொல்கிறது (1 பேதுரு 4:10). உறவினராகவோ, நண்பராகவோ, சக சீடராகவோ அல்லது அந்நியராகவோ யாரேனும் ஒருவர் தேவையில் இருப்பதைக் கண்டால், செயலாலும் உண்மையாலும் அவர்களை நேசிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மில் இருக்கும் தேவனின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம்.

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.