நான் எப்போதும் நாய்களுக்குப் பயப்படுகிறேன். ஆனால் நான் குழந்தையாக இருந்தபோது, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு அல்சேஷன் வைத்திருந்தார், அதை நான் நேசித்தேன். நான் அறிந்த மென்மையான நாய் அது. ஆனால் ஒரு நாள், அது ஆக்ரோஷமாகி, உறுமியது, சத்தமிட்டு, வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் பிரவேசிக்க யாரையும் விடவில்லை. நான் மீண்டும் பயந்ததைக் கண்டு, என் பக்கத்து வீட்டுக்காரர் அந்த நாய் தன் குழந்தைகளைப் பாதுகாக்க அப்படி நடந்து கொள்கிறது என்று விளக்கினார்.
ஓசியா 13:8-ஐ படிக்கும் போது எனக்கு இது தான் நினைவுக்கு வருகிறது. தனது குட்டிகளைத் தேடும் தாய் கரடியுடன் தேவன் தன்னை ஒப்பிடுகிறார். இது தேவநீதியின் கடுமையான பிம்பம். தேவன் இஸ்ரவேல் மற்றும் எப்பிராயீம் மீது கோபமடைந்தார், ஏனென்றால் அவர்கள் பெருமை கொண்டு, தேவன் அவர்களுக்குச் செய்த அனைத்தையும் மறந்தனர் (வ.6). தேவனை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் விக்கிரகங்களை வணங்கி, “அதிகமதிகமாய்ப்” பாவம் செய்தார்கள், மேலும் நரபலியையும் செலுத்தினர் (வ.1-4). இச்சூழலில் தேவன், “குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து” (வ.8) போடுவேன் என்றார். தேவன் தம்முடைய பாதுகாப்பில் உள்ள நபர்களுக்காக வைராக்கியமாக இருக்கிறார். ஒரு தாய் கரடியைப் போல, அவர் அவர்களைப் பாதுகாக்கிறார், உணவளிக்கிறார், பராமரிக்கிறார் மற்றும் வழிநடத்துகிறார் (வ.4-8).
நாம் பலவீனமாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் உணரும்போது, நமக்கு ஏற்படும் அநீதிகளைத் தேவன் கவனிக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஒரு தாய் கரடி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல, உதவிக்காக நம் அழுகையைப் பார்க்கிறார், கேட்கிறார், நம்மைப் பாதுகாக்க விழைகிறார். கரடுமேடான வாழ்க்கையினூடே , நாம் தேவனின் பாதுகாக்கும் கரங்களில் பத்திரமாக இளைப்பாற முடியும் (வ.13-14). நம் வாழ்வில் தேவனின் அக்கறையான தலையீட்டிற்காக அவருக்கு நன்றியுடன் இருப்போம் (வ.9). மேலும், தேவனையும் அவருடைய வீட்டில் அன்பு மற்றும் நீதிக்கான அவரது விருப்பத்தையும் மதிக்கலாம் (ஓசியா12:6). தேவனின் உதவியைப் பெற்று, நாம் தேவைப்படுபவர்களைக் காக்க நாமும் எழுவோம்.
உங்கள் வாழ்க்கையில் தேவனின் கடும் பாதுகாப்பை நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்? தேவன் உங்களுக்காகச் செய்தவற்றை ஏற்றுக்கொண்டு நினைவில் வைத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்யக் கூடும்?
அன்பு தேவனே, ஒரு தாய் கரடியைப் போல என்னை வழிநடத்திப் பாதுகாத்ததற்கு உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம்மை நினைவுகூரவும், கனப்படுத்தவும் எனக்கு உதவும்.
