எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்கிறிஸ்டன் ஹோம்பர்க்

சரியான நேரம்

என் முதல் பிள்ளையை கல்லூரிக்கு அனுப்புவதற்காக நேற்று நான் விமான டிக்கெட் வாங்கினேன். விமானத்தைத் தேர்வு செய்வதற்குள் நான் சிந்திய கண்ணீரால் அதிகம் நனைந்தாலும், என் கணினியின் விசைப்பலகை (keyboard) வேலை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக அனுதின வாழ்க்கையை அவளோடு அனுபவித்ததை நினைக்கும்போது, அவள் என்னை விட்டு கல்லூரிக்குச் செல்வது அதிகக் கவலையைத் தருகிறது. ஆனாலும், அவள் பிரிவு கஷ்டமாக இருக்கும் என்கிற காரணத்துக்காக அவளுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்யமாட்டேன். அவளது வாழ்வின் இந்தத் தருணத்தில், அவள் தன் பயணத்தைத் தொடங்கி, புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், இந்த தேசத்தின் மற்றொரு பகுதியை அறிந்துகொள்வதும் மிகச் சரியான விஷயமாகும்.

 

குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி முடியும் இந்த சமயத்தில், இன்னொரு பகுதி தொடங்குகிறது. அதுவும் புதிய சவால்களும், புதிய சந்தோஷங்களும் நிறைந்ததாக இருக்கும். இஸ்ரவேலின் மூன்றாவது இராஜாவான சாலொமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1) என்று கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருப்பதைச் சொல்கிறார். நம் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் – அவை நமக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதராகிய நமக்கு அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் தன் மிகுந்த வல்லமையால், கர்த்தர் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்கிறார்” (வச. 11).

 

மனதுக்கு சஞ்சலமான சமயங்களில், அதிலிருந்து நன்மையைத் தருவார் என்று நாம் கர்த்தரை நம்பலாம். நமது வசதிகளும், நமது சந்தோஷங்களும் மாறி மாறி வரலாம். ஆனால் தேவன் செய்வது “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). சில பருவங்களை நாம் ரசிக்க முடியாமல் இருக்கலாம். சில, மிகுந்த வேதனை அளிப்பவையாக இருக்கலாம். ஆனாலும் அவற்றையும் தேவன் அழகுபெறச் செய்ய முடியும்.

சுய பெலத்தால்

ஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.
 
இதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).
 
யோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.

நீ என்னை நேசிக்கிறாயா?

நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.

நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.

நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.

நீர்ச்சுழிகளில் படகுசவாரி

படகு சவாரி வழிகாட்டி எங்கள் குழுவினரோடு வந்து, நதியின் அக்கரை வரை பாதுகாப்பாய் வழிநடத்தினார். நாங்களனைவரும் உயிர்காப்பு உடைகளைப் போட்டுக் கொள்ளவும் துடுப்புகளை இறுகப் பற்றிக் கொள்ளுமாறும் கூறினார். நாங்கள் படகில் ஏறியதும் படகு சமநிலையில் இருக்கும்படி நாங்கள் ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடத்தையும் காட்டினார். அது நாங்கள் சுழல்களின் வழியே செல்லும் போது படகிற்கு நிலைப்புத் தன்மையைத் தருமெனக் கூறினார். இந்த நீர் வழிப் பயணத்தில் ஏற்படும் பரபரப்பான சூழல்களை எடுத்துக் கூறி, விரிவான வழிமுறைகளை நாங்கள் கவனமாகக் கேட்கும்படி கூறினார். நாங்கள் அவற்றைச் சரியாகக் கடைபிடித்தால், எங்கள் படகை வெற்றியாக அந்தக் கொந்தளிக்கும் வெண் நீரின் வழியே ஓட்டிச் செல்ல முடியும் என தெரிவித்தார். அத்தோடு நாங்கள் செல்லும் வழியில் பயங்கர வேளைகளையும் சந்திக்க நேரும், ஆனாலும் எங்கள் பயணம் பரவசமூட்டுவதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறினார்.

நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில், கொந்தளிக்கும் வெண் நீர் படகு பயணம் போலவே அமைகிறது. அதுவும் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமான சுழல் நீரோட்டங்களைக் கொண்டதாக அமைகிறது. நாம் மோசமான விளைவுகளைக் கண்டு பயப்படும் போது, ஏசாயா தீர்க்கன் மூலம் தேவன், இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்த உதவுகிறது. “நீ ஆறுகளைக் கடக்கும்போது. அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2) என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் விளைவாக, பிறநாட்டினரால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டபோது தேவன் அவர்களைத் தள்ளினார் என்ற பயம் அவர்களை மேற் கொண்டது. ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்கையும், உறுதியையும் கொடுக்கின்றார். ஏனெனில், தேவன் அவர்களை நேசிக்கின்றார் (வச. 2,4).

கடினமான தண்ணீரைக் கடக்கும்போது தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. சுழல்களையும், ஆழ்ந்த பயத்தையும், வேதனைதரும் சோதனைகளையும் நாம் கடக்கும் போது, தேவன் நம் வழிகாட்டியாக நம்மோடு வருகிறார் என நம்புவோம், ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.

சவால்களை மேற்கொள்ளல்

நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.

தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).

அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.

இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.

சாட்சி கையொப்பம் தேவையில்லை

எந்த மனிதனாவது தான் ஒரு கார் அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற விரும்பும் போது, அவன் பெற்ற கடனைத் திருப்பிச் செலத்தியதாக நீண்ட சரித்திரம் இல்லையெனில், கடன் கொடுப்பவர் இந்தப் பணப்பரிவர்த்தனையிலுள்ள ஆபத்தைக் கையாள தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய ஒரு செயலின் பதிவு இல்லையெனில், அந்த மனிதன் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகத் தரும் வாக்குமூலம் போதாதென வங்கியாளர்கள் கருதுகின்றனர். எனவே கடன் வாங்குபவர் அத்தகைய நற்சாட்சி பெற்ற யாரையேனும் தேடி கண்டுபிடித்து அவர்களின் பெயரை இந்தக் கடனுக்குச் சாட்சியாக சேர்த்துக் கொள்வார். இவ்வாறு சாட்சி கையொப்பமிடுபவர், இந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் என வங்கிகளுக்கு உறுதி வாக்குக் கொடுக்கின்றனர்.

இவ்வாறு யாரேனும் நமக்கு பொருளாதார ரீதியாகவோ, திருமணத்திலோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வாக்களித்திருந்தால் நாம் அவற்றை நிறைவேற்றும்படி எதிர்பார்ப்போம். தேவனும் தாம் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவர் எனத் தெரிந்து கொள்வோம். ஆபிரகாமிடம் தேவன் அவனை ஆசீர்வதித்து “அவனுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் (எபி. 6:14, ஆதி. 22:17) என வாக்களித்தபோது, ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான், நாம் காணும் அகிலம் அனைத்தையும் படைத்த தேவனை விட மேலானவர் ஒருவரும் இல்லை. அவர் ஒருவரே தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.

ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பெறும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது (எபி. 6:15). (அவன் தன்னுடைய சந்ததியார் எவ்வளவாகப் பெருகுவார்கள் என்பதைக் காணவில்லை) ஆனால், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருந்தார். தேவன் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (13-5) நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் (யோவா. 10:29)  அவர் நம்மை ஆறுதல் படுத்துகின்றார் (2 கொரி. 1:3-4) அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.

விமர்சனம் செய்வோரை அமைதிப்படுத்துதல்

வருடாந்திர சமுதாய நிகழ்வுகளை நடத்தும் ஒரு குழுவில் இணைந்து நான் வேலை செய்தேன். அந்த நிகழ்வுகள் வெற்றியாக முடியவேண்டும் என்பதற்காக பதினொரு மாதங்களாக அநேகக் காரியங்களைத் திட்டமிட்டோம். நாங்கள் நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தோம். நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்தோம். உணவு பரிமாறுவதிலிருந்து ஒலிபெருக்கி வல்லுனர்வரையும் அனைத்தையும் தேர்ந்தெடுத்தோம். அந்நாள் நெருங்குகையில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களை வழிநடத்தவும் முயன்றோம். நிகழ்வுக்குப் பின்னர் கருத்துக்களைச் சேகரித்தோம். சிலர் பாராட்டினர். சிலவற்றைக் கேட்பதற்கே கடினமாயிருந்தது. அதில் பங்குபெற்றவர்களில் உற்சாகத்தையும் கண்டோம், குறைகளையும் கேட்டறிந்தோம். எதிர்மறையான கருத்துக்களைக் கேட்கும்போது ஊக்கமிழந்து இந்த வேலையையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணினோம்.

நெகேமியா ஒரு குழுவை ஏற்படுத்தி எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியபோது அவரையும் விமர்சனம் செய்தனர். அவரையும் அவரோடு பணி செய்தவர்களையும் பரியாசம் செய்தனர். “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” (நெகே. 4:3) எனப் பரியாசம் செய்தனர். அதற்கு நெகேமியாவின் பதில், என்னைப் பரியாசம் செய்பவர்களைக் கையாளுவதற்கு எனக்குதவியது. பரியாச வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வடையவோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ முயற்சிக்காமல், நெகேமியா தேவனுடைய உதவியைக் கேட்கின்றான். பரியாச வார்த்தைகளுக்கு நேரடியாக பதிலுரைப்பதை விட்டுவிட்டு, தேவனிடம் தன் ஜனங்கள் அவமதிக்கப்படுவதைக் கேட்டு அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார் (வச. 4) அவமதிப்புக்குள்ளான தன் ஜனங்களை தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, அவனும் அவனோடிருந்தவர்களும் தொடர்ந்து “முழுமனதோடு” அலங்க வேலையில் ஈடுபட்டனர் (வச. 6).

நம்முடைய வேலையை விமர்சிக்கும் வார்த்தைகளால் நாம் குழப்பமடையத் தேவையில்லை என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம். நாம் நிந்திக்கப்படும்பொழுது அல்லது கேலி செய்யப்படும்போது, காயப்பட்டதாலோ அல்லது கோபத்தாலோ அவர்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக ஜெபத்தோடு தேவனிடம் சோர்ந்துபோகாதிருக்க பெலன் தருமாறு கேட்போமாகில் முழுமனதோடு நம் வேலையைத் தொடரமுடியும்.

என்னை யாரும் விரும்பவில்லை

நான் குழந்தையாயிருந்தபோது, தனிமையையும், யாவராலும் புறக்கணிக்கப்பட்டவளாகவும் உணர்ந்து என்னைக் குறித்து நானே வருந்திக் கொள்ளும்போது, என் தாயார் என்னை மகிழ்விப்பதற்காக ஓர் எளிய பிரசித்திப் பெற்ற பாடலைப் பாடுவதுண்டு. ‘‘என்னை யாரும் விரும்புவதில்லை, எல்லாரும் என்னை வெறுக்கின்றனர், நான் புழுக்களைத் தான் தின்னப் போகிறேன்” என்பது அப்பாடல். என்னுடைய தளர்ந்த முகத்தில் புன்சிரிப்பு வந்ததும், என் தாயார் எனக்குள்ள உண்மையான உறவினர்களையும், நான் அதற்கு எத்தனை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.

தாவீது ராஜாவும் தன்னைப் பற்றிக் கரிசனைக் கொள்ள யாருமில்லை என கூறுவதை நான் வாசித்த போது, என் காதினுள் அந்த எளிய பாடல் ஒலித்தது. தாவீது தன் வேதனைகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் என்னுடைய தனிமையுணர்வு என் போன்ற வயதினர் அநேகருக்கு ஏற்படுவதுதான். தாவீது கைவிடப்பட்டவராக உணர்வதற்கு காரணமிருக்கிறது. சவுல் ராஜா, தாவீதைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கையில் இந்த வார்த்தைகளை எழுதுகின்றார் (1 சாமு. 22:1, 24:3-10). தாவீது இஸ்ரவேலரின் எதிர்கால அரசனாக அபிஷேகிக்கப்பட்டான் (16:13). அவன் அநேக வருடங்கள் சவுல் ராஜாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது பயத்தினால் தன் ஜீவனைத் தப்புவிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். தனிமையின் மத்தியில் தாவீது தேவனை நோக்கி, ‘‘நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்” (சங். 142:5) எனக் கதறுகின்றார்.

நாமும் தனிமையையுணரும் போது தாவீதைப் போன்று தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவருடைய அன்பின் அடைக்கலத்தினுள் நம்முடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கமாறு கேட்போம். தேவன் நம் தனிமையை மாற்றுவதில்லை. மாறாக நம்முடைய வாழ்வின் இருண்ட குகையில் நம்முடைய துணையாயிருக்கின்றார். நம்மைக் கவனிப்பார் யாருமில்லை என உணரும் வேளைகளில், தேவன் நம்மைக் கவனிக்கின்றார்.

நமது கண்ணோட்டத்தில் சிறிய மாற்றம்

முப்பது ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய குளிரை என்னுடைய பட்டணம் அனுபவித்தது. முடிவில்லாத பனியை மணிக்கணக்காக தோண்டியெடுத்ததால் என் தசைகளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தன. பயனளிக்காத முயற்சியால் சோர்வடைந்து என்னுடைய பூட்ஸ்சுகளை உதறிவிட்டு வீட்டினுள்ளே சென்ற போது, நெருப்பின் வெப்பத்தாலும், அதனைச் சுற்றியிருந்த என் குழந்தைகளாலும் வாழ்த்தப் பெற்றேன். வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்த குளிர்காலத்தினை நான் பார்த்த கோணம் முற்றிலும் மாறிப்போனது. இன்னமும் அதிக வேலையிருக்கிறது என்று காண்பதை விட்டுவிட்டு, நான் அந்தப் பனி, மரக்கிளைகளிலும், நிலப்பரப்பின் மீதும் வெண்மையாய் பரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ ஆரம்பித்தேன்.

சங்கீதம் 73ல் ஆசாபின் வார்த்தைகளை வாசிக்கும்போது, இதைப் போன்று, இன்னும் அதிக வருத்தத்தைத் தரக்கூடிய காலத்தைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் அவர், இவ்வுலகில் தவறிழைப்பவர்கள் செழித்திருப்பதைக் கண்டு புலம்புகிறார். பெருங்கூட்ட மக்களிடமிருந்து மாறுபட்டு, பிறருடைய நலனுக்காக வாழ்வதால் பயனென்ன என சந்தேகிக்கின்றார் (வச.13). ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும்போது, அவருடைய கண்ணோட்டம் மாறுகிறது (வச. 16-17). தேவன் இவ்வுலகையும் அதன் பிரச்சனைகளையும் திறம்படக் கையாளுவார் என்பதை நினைக்கின்றார். எனவே நாம் எப்பொழுதும் தேவனோடு இருப்பதே நல்லது என்கின்றார் (வச.28).

இவ்வுலகத்திலுள்ள தீராத பிரச்சனைகளை நாம் காணும்போது நாம் உறைந்துவிடுகிறோம். நாம் தேவனுடைய ஸ்தலத்தினுள் ஜெபத்தின் மூலம் பிரவேசித்து, நம்முடைய வாழ்வையும், நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்றுகின்ற அவருடைய உண்மையைக் கண்டுபிடிப்போம். அது நம்மை பெலப்படுத்தும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை. நம்முடைய சூழ்நிலைகள் மாறப் போவதில்லை. ஆனால், நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்வோம்.