“கா”வை நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அறிவோம். நாங்கள் தேவனைப் பற்றி என்ன கற்றுக்கொண்டோம் என்பதைப் பற்றி விவாதிக்க வாரந்தோறும் கூடும் தேவாலயத்தில் இருந்து எங்கள் சிறிய ஜெபக்குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ஒரு நாள் மாலை எங்கள் வழக்கமான சந்திப்பின் போது, அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றதைக் குறித்து குறிப்பிட்டார். குறிப்பிடுவது மிகவும் சாதாரணமானது, அதை நான் கிட்டத்தட்ட மறந்தே போனேன். ஆனால் அவர் சொல்லும்போது, வெண்கலப் பதக்கப் போட்டியில் பங்கேற்ற ஒரு ஒலிம்பிக் வீரரை எனக்குத் தெரியும் என்று தெரிந்துகொண்டேன்! அவர் இதற்கு முன்பு அதை ஏன் குறிப்பிடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கா-வைப் பொறுத்தவரை, அவரது தடகள சாதனை அவரது கதையின் ஒரு சிறப்பு பகுதியாக இருந்தாலும், அவரது அடையாளத்திற்கு மிக முக்கியமான விஷயங்கள் மையமாக இருந்தன. அவைகள், அவரது குடும்பம், அவரது சமூகம் மற்றும் அவரது நம்பிக்கை.

லூக்கா 10:1-23ல் உள்ள கதை, நமது அடையாளத்திற்கு எது மையமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல இயேசு அனுப்பிய எழுபத்திரண்டு பேர் தங்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, “உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” (வச. 17) என்றார்கள். அவர்களுக்கு மகத்தான சக்தியும் பாதுகாப்பையும் அளித்திருப்பதை இயேசு ஒப்புக்கொண்டாலும், அவர்கள் தவறான காரியத்தில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். இதைக் குறித்து சந்தோஷப்படவேண்டாம் என்றும் “உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (வச. 20) என்று இயேசு வலியுறுத்தினார். 

தேவன் நமக்கு அருளிய சாதனைகள் அல்லது திறன்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணித்ததினால் நம்முடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டுள்ள மேன்மையே நாம் மகிழ்ச்சியடைவதற்கான பெரிய காரணமாய் இருக்கமுடியும். அதினால் அவருடைய பிரசன்னத்தையும் நாம் அனுதினமும் அனுபவிக்கும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம்.