எனது பெற்றோரின் வீட்டில், ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் மந்தையை மேய்ப்பதைச் சித்தரிக்கும் கலைப் படைப்பு ஒன்று உள்ளது. ஓவியம் போலத் தோற்றமளித்தாலும், சித்திர திரை மற்றும் சாயங்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்டதாகும். பொருள்கள் மற்றும் நபர்களின் நிறம், ஆழம் மற்றும் வெளிப்புறத்தை வரையறுக்க பல்வேறு வகையான மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கலை, “மைசூர் மரப் பதித்த வேலை” என்று பின்னர் கண்டுபிடித்தோம். ஒவ்வொரு முறையும் நான் அதைப் பார்க்கும்போது, கர்த்தர் என் மேய்ப்பர் என்பதை அது எனக்கு நினைவூட்டுவதால், நான் நம்பிக்கையால் நிறைகிறேன். தேவன் என்னை ஆற்றவும், தனது பிரசன்னத்தை எனக்கு உறுதியளிக்கவும் இந்தக் கலைப் படைப்பைப் பயன்படுத்துகிறார். இந்த ஊக்கமளிக்கும் பணிக்காகவும், அத்தகைய படைப்பாற்றலைப் பெற்ற மர ஆசாரிகளுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் பல ஆண்டுகளாகக் கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கிறார். யாத்திராகமத்தில், ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் மோசேயிடம் கூறினார் (வ.6). “நான் அழைத்து,” “நான் கட்டளையிட்டேன்,” “நான் அருளினேன்,” மற்றும் “நான் தேவஆவியினால் நிரப்பினேன்” என்று ஆராதனையில் பயன்படுத்தப்படும் பொருட்களை உருவாக்க பெசலெயேலையும் அகோலியாபையும் அவர் பணித்தார் (வ.2-6). “விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும்” (வ.3-5) அவர்களுக்கு ஞானத்தையும் திறமையையும் கொடுத்தார். ஆராதனையில் ஜனங்களை தம்மிடம் நெருக்கமாகக் கொண்டுவரத் தேவன் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து மற்றும் பயன்படுத்தினார்.

பெசலெயேல் மற்றும் அகோலியாப் போன்றோரின் விஷயத்தைப் போலவே, நம்முடைய கலைத்திறன் ஈவுகளெல்லாம் தேவஆவியால் நமக்கு அருளப்படுகின்றன. தேவனே நம்மைத் தேர்ந்தெடுத்து, நம்மை நியமித்து, அவருக்காகப் படைக்கும்பொருட்டு அவருடைய ஆவியால் நம்மை நிரப்பினார். இது யாருக்கு உதவப் போகிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவனின் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் கீழ் நாம் கலையை உருவாக்கினால், அவர் அதை ஜனங்களை ஆறுதல்படுத்தவும் அவர்களின் வாழ்க்கையையும் நம் வாழ்க்கையையும் செழிக்கச் செய்யவும் பயன்படுத்துவார்.