எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கென்னத் பீட்டர்சன்கட்டுரைகள்

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள். 

இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25).

நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.

ஆயிரம் புள்ளிகள் விளக்கு

அமெரிக்காவின் வடமேற்கு அலபாமாவில் உள்ள டிஸ்மல்ஸ் கேன்யன் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒருவகையான புழுக்கள் குஞ்சுபொரித்து, பளபளக்கும் புழுக்களாக மாறி, இரவில் இந்த பளபளப்பான புழுக்கள் ஒரு நீலநிறமான ஒளியை பிரதிபலிக்கின்றன. மேலும் அதுபோன்று ஆயிரக்கணக்கான புழுக்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான ஒளியை தோற்றுவிக்கின்றன.

பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்தவர்களை அவ்விதமாய் ஒளிரும் புளுக்காய் கருதுகிறார். “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8). ஒருசில வேளைகளில் என்னுடைய இந்த சிறிய விளக்கு எவ்விதம் ஒளிதரமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு தனிநபரின் விளக்கு அல்ல என்று பவுல் சொல்லுகிறார். அவர் நம்மை “வெளிச்சத்தின் பிள்ளைகள்” என்று அழைக்கிறார் (வச. 8). மேலும் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு,” தேவன் நம்மை தகுதியுள்ளவர்களாய் மாற்றியிருக்கிறார் என்றும் சொல்லுகிறார் (கொலோசெயர் 1:12). உலகத்திற்கு ஒளியாயிருப்பது என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையாய் இணைந்து செயல்படுத்துகிற ஒரு கூட்டு முயற்சி. அதை ஒளிரும் புளுக்களாய், “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” (எபேசியர் 5:19) தேவனை மகிமைப்படுத்தும்படியாய் பவுல் வலியுறுத்துகிறார்.

நாம் சோர்ந்துபோகும்போது, நம்முடைய ஜீவியத்தின் சாட்சியை நினைவுகூருவது என்பது இருண்ட சூழ்நிலையில் ஒளிரும் ஒரு விளக்கைப் போன்று தெரியலாம். ஆனால் நாம் தனியாள் இல்லை. தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பிரயாசப்படுவோம். ஒளிகொடுக்கும் புளுக்கள் ஒன்றாக இணைந்து, மற்றவர்களை வெளிச்சத்திற்கு ஈர்ப்போம்.

மாறா தேவன்

புகழ்பெற்ற உருவப்புகைப்படம் ஒன்று ஒரு நபரின் காலணிச்சுவடுகளை சாம்பல் பின்னணியில் காட்டியது. இது விண்வெளி வீரர் “பஸ் ஆல்ட்ரின்” 1969 இல் சந்திரனில் விட்டுச் சென்ற கால்தடமாகும். கால்தடங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனில் காற்று மற்றும் நீர் இல்லாததால், எதுவும் அரிக்கப்படுவதில்லை. எனவே சந்திர நிலப்பரப்பில் என்ன நடந்தாலும் அது அப்படியே இருக்கும்.

 

தேவனின் நிலையான பிரசன்னத்தை பற்றி நினைக்கும் போது அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. யாக்கோபு எழுதுகிறார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17). அப்போஸ்தலன் இதை நம்முடைய சொந்த போராட்டங்களின் அடிப்படையில் எழுதுகிறார்: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (வ. 2,3) ஏனென்றால் நாம் ஒரு உன்னதமான மற்றும் மாறாத தேவனால் நேசிக்கப்படுகிறோம்!

 

கஷ்டநேரங்களில், தேவனின்  மாறா உதவியை நினைவில் கொள்ளலாம். ஒரு மகத்தான பாமாலையை நினைவுபடுத்தலாம்: "நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர், நீர் ஐஸ்வர்யமுள்ளவர், சதா காலமும் நீர் மாறாதவர்". ஆம், நம் தேவன் தம்முடைய நிரந்தர காலடியை இவ்வுலகில் விட்டுவிட்டார். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார். அவருடைய உண்மை பெரிது.                                                        

இருதயத்தின் இடங்கள்

இங்கே சில விடுமுறை ஆலோசனைகள் உள்ளது: அடுத்த முறை நீங்கள் அமெரிக்காவின் விஸ்கான்சின் மிடில்டன் வழியாக பயணிக்கும்போது, தேசிய கடுகு அருங்காட்சியகத்தைப் பார்வையிட விரும்பலாம். ஒரு கடுகில் அப்படி என்ன இருக்கிறது என்று யோசிப்பவர்களை, உலகம் முழுவதிலும் உள்ள 6,090 விதமான கடுகுகளைக் கொண்ட இந்த இடம் வியப்புக்குள்ளாக்குகிறது. மெக்லீன், டெக்சாஸில், முள்வேலி அருங்காட்சியகம் முழுவதும் சுற்றித்திரிவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அங்கே வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

அந்த வேலிகள், நாம் எதுபோன்ற காரியங்களை பார்வையிடவேண்டும் என்பதை நமக்கு வரையறுக்கின்றன. ஒரு எழுத்தாளர், “வாழைப்பழ அருங்காட்சியகத்தில் ஒரு பிற்பகல் நேரத்தை செலவிடுவதை விட மோசமாக நீங்கள் செய்ய முடியும்” என்று கூறுகிறார். 

நாம் வேடிக்கையாக சிரிக்கலாம். நம்முடைய இருதயம் என்னும் அருங்காட்சியகத்தில் நாம் சில விக்கிரகங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்பது உண்மை. தேவன், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்திராகமம் 20:3) என்றும் “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்” (வச. 5) என்றும் கட்டளையிடுகிறார். ஆனால் நாம், ஐசுவரியம், இச்சை, வெற்றி, என்று பல இருதயத்தின் நினைவுகளை நம்முடைய விக்கிரகமாய் ஏற்படுத்தி, அவற்றை இரகசியமாய் ஆராதனை செய்துகொண்டிருக்கிறோம். 

இதைப் படித்துவிட்டு, சொல்லவரும் காரியத்தை தவறவிடுவது இயல்பு. ஆம், நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொண்ட பாவ அருங்காட்சியகத்தை தேவன் நம்முடைய பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். அவரை நேசிப்பவர்களுக்கு “ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (வச. 6) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். நம்முடைய அருங்காட்சியகங்கள் எவ்வளவு சீர்கேடானது என்பது அவருக்கு தெரியும். அவர் மீதான அன்பில் மாத்திரமே நம்முடைய மெய்யான திருப்தி அமைந்திருக்கிறது என்பதும் அவருக்கு தெரியும்.

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12). 

ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள். 

நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம். 

பாட்டியின் ஆராய்ச்சி

எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பாட்டிமார்களின் மூளையை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய மகனுடைய போட்டோவையும், பேரக் குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு அறிமுகமில்லாத இன்னொரு குழந்தையின் போட்டோவையும் காண்பித்து அவர்களின் உணர்ச்சி அனுதாபங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் தங்களுடைய சொந்த பிள்ளைகளை விட தங்கள் பேரப்பிள்ளைகளின் மீதான அனுதாபங்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய சொந்த பிள்ளையைக் காட்டிலும் பேரப்பிள்ளைகள் அதிக அபிமானமாக தெரிவதால், இதனை “அழகான காரணி” என்று அழைக்கின்றனர். 

“இதிலென்ன ஆச்சரியம்” என்று நீங்கள் சொல்லுவதற்கு முன்னால் அந்த ஆராய்ச்சியை செயல்படுத்திய ஜேம்ஸ் ரில்லிங் என்பவரின் கூற்றைக் கேட்போம். அவர், “அவர்களின் பேரக்குழந்தை சிரிக்கும்போது, பாட்டியும் சிரிக்கிறாள்; அவர்களின் பேரக்குழந்தை அழும்போது, பாட்டி, அதின் வலியையும் வேதனையையும் உணருகிறாள்” என்று சொல்லுகிறார். 

தேவன் தன்னுடைய ஜனத்தைப் பார்க்கும்போது அவருடைய “எம்.ஆர்.ஐ ஸ்கேனை” ஒரு தீர்க்கதரிசி வரைகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதனை சிலர் வேறுவிதமாகவும் மொழிபெயர்க்கின்றனர்: நீ அவருடைய இருதயத்தை திருப்தியடையச் செய்வாய், அவர் கெம்பீரமாய் பாடுவார்.” ஒரு அன்பான பாட்டியாய் தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” (சங்கீதம் 149:4). 

நாம் சோர்வுறும்போது, நம்மைக் குறித்த தேவனுடைய உணர்வுகள் மெய்யானவைகள் என்பதை நினைவுகூருவது நல்லது. அவர் நம்மை பொருட்படுத்தாமல் எங்கேயோ தூரத்தில் வாழும் தேவனல்ல. அவர் நம்மில் மகிழ்ந்திருக்கிற தேவன். இது அவரை நாம் கிட்டிச்சேருகிற நேரம். அவருடைய புன்னகையை உணருவோம்; அவர் பாடலைக் கேட்டு ரசிப்போம்.

தேவன் நம்மோடு பேசுகிறார்

அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார். 

அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். 

அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்.  

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

.பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

என்னால் உன்னை பார்க்கமுடிகிறது

கண்கண்ணாடி நிபுணர், மூன்று வயது ஆண்ட்ரியாஸ_க்கு முதல் கண்கண்ணாடியை போடுவதற்கு உதவினார். அதை அணிவித்த பின்பு, “கண்ணாடியில் பார்” என்றாள். ஆண்ட்ரியாஸ் அவளுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள். பின்பு அவள் மகிழ்ச்சியான முகத்துடன், தன் தந்தையிருந்த திசை நோக்கித் திரும்பினாள். பின்னர் ஆண்ட்ரியாஸின் தந்தை தனது மகனின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டார். ஆண்ட்ரியாஸ் தன் தந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள். “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது.” அவள் சற்று பின்வாங்கி, தலையை சாய்த்து, தந்தையின் கண்களைப் பார்த்து, “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது” என்று சொன்னாள்.

நான் ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும்போது, “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமான” (கொலோசெயர் 1:15) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் நம் கண்களை திறந்தருளுவாராக. இருப்பினும், வேதத்தின் மூலம் நாம் அறிவில் வளரும்போது, ஆவியானவரால் நம் பார்வை தெளிவடைந்தாலும், நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் தேவனின் எல்லையற்ற அபரிமிதத்தின் ஒரு காட்சியை மட்டுமே நாம் இன்னும் காண முடியும். பூமியில் நம் காலம் முடிந்ததும் அல்லது இயேசுவின் வருகை வரும்போது, நாம் அவரைத் தெளிவாகக் காண்போம் (1 கொரிந்தியர் 13:12). 

கிறிஸ்துவை முகமுகமாய் நாம் சந்தித்து அவர் நம்மை அறிந்திருக்கிறதுபோல நாமும் அவரை அறியும் அந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில் நமக்கு சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை. நம்முடைய அன்பான மற்றும் உயிருள்ள இரட்சகரை நாம் உற்று நோக்கி, “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது” என்று சொல்லும் வரை, நாம் உறுதியாக நிற்க வேண்டிய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்வார். “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது!”

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.