ஜில் பிரைஸ், ஹைப்பர் தைமேசியா என்னும் மனோநிலையுடன் பிறந்தார். அதாவது, தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களையும் அசாதாரணமாக விரிவாய் நினைவில் வைத்திருக்கும் திறன். அவள் தன் வாழ்நாளில் அனுபவித்த எந்த சம்பவத்தின் சரியான நிகழ்வையும் அவள் மனதிலிருந்து மீண்டும் இயக்கக்கூடும்.

“மறக்கமுடியாதவைகள்” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, நடைபெற்ற குற்றங்களை நேர்த்தியாய் நினைவில் வைத்து கண்டறியும் ஹைப்பர் தைமேசியா மனோநிலைகொண்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தியது. இது ஒருவகையில் நன்மையாகத் தெரிந்தாலும், ஜீல்லுக்கு அப்படி தோன்றவில்லை. அவள் விமர்சிக்கப்பட்ட, இழப்பை அனுபவித்த அல்லது அவளை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கிய அவள் மறக்கவேண்டும் என்று நினைக்கிற சம்வங்களை அவளால் மறக்க முடியவில்லை. அவள் அந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கவலைப்படுகிறாள்.

நம் தேவன் சகலமும் அறிந்தவர் (ஒருவேளை ஒருவகையான தெய்வீக ஹைப்பர் தைமேசியாவாக இருக்கலாம்): அவருடைய புரிதலுக்கு வரம்பு இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆயினும் ஏசாயா புத்தகத்தில், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று தேவன் சொல்லுவதை நாம் பார்க்கக்கூடும். எபிரெயர் நிருபத்தில், “நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்… அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபிரெயர் 10:10,17) என்று சொல்லுகிறார்.

நம் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து கவலைப்படுவதை நாம் தவிர்க்கலாம். தேவன் செய்வதைப் போலவே நாமும் அவற்றை விட்டுவிடவேண்டும்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம்” (ஏசாயா 43:18). தம்முடைய மிகுந்த அன்பின் நிமித்தம், அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை தேவன் நினைவுகூர விரும்புவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.