1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார். 

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய தோன்றும். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக.