பல ஆண்டுகளாக, ஜான் தேவாலயத்தில் ஒருவித எரிச்சலுடன் இருந்தார். அவர் மோசமான மனநிலையுடையவர், அடிக்கடி முரட்டுத்தனமாக இருந்தார். தனக்கான “சேவை” செய்யப்படவில்லை என்றும், தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச்  செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டேயிருந்தார். அவரை நேசிக்கப்படுவதற்கு மிகவும் கடினமானவராய் இருந்தார். 

அதனால் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது,அவருக்காக பிரார்த்தனை செய்வது எனக்கு கடினமாக இருந்தது. அவரது கடுமையான வார்த்தைகள் மற்றும் விரும்பத்தகாத குணத்தின் நினைவுகள் என் மனதை நிரப்பின. ஆனால் இயேசுவின் அன்பின் அழைப்பை நினைவுகூர்ந்ததால், ஒவ்வொரு நாளும் ஜானுக்காக ஒரு எளிய பிரார்த்தனை செய்ய நான் உந்தப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய விரும்பத்தகாத குணங்களைப் பற்றி நான் கொஞ்சம் குறைவாகவே சிந்திக்க ஆரம்பித்தேன். அவருக்கு வலிக்கவேண்டும் என்று நான் ஒரு காலத்தில் எண்ணியதுண்டு. ஆனால் இப்போதோ, அவரை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. 

ஜெபம், நம்மையும், நம் உணர்வுகளையும், மற்றவர்களுடனான நமது உறவுகளையும் தேவனுக்கு வெளிப்படுத்திக் காண்பித்து, அவருடைய பார்வையை எல்லாவற்றிலும் நுழைய அனுமதிக்கிறது என்பதை நான் உணர்கிறேன். நம்முடைய சித்தத்தையும் உணர்ச்சிகளையும் மாற்றும்பொருட்டு பரிசுத்த ஆவியானவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கும்போது, அவர் நம்முடைய இருதயங்களை மெதுவாகவும் நிலையாகவும் மறுரூபமாக்குவார். நம் எதிரிகளை நேசிப்பதற்கான இயேசுவின் அழைப்பு ஜெபத்திற்கான அழைப்போடு இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை: “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” (லூக்கா 6:28).

ஜானைக் குறித்து நலமானதை யோசிக்க நான் இன்னும் போராடுகிறேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆவியானவருடைய துணையோடு, தேவனுடைய பார்வையோடும் இதயத்தோடும் அவரை மன்னிப்புக்கும் அன்புக்கும் தகுதியானவராய் பார்க்க நான் பழகிக்கொண்டிருக்கிறேன்.