அந்தத் துளையிடும் கருவியின்  சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் மருத்துவரின் நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. 

அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய்  தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார். 

 சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு, “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. 

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.