சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான். 

இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார்.