சிவப்பு ஆடைத்திட்டம் பிரிட்டிஷ் கலைஞரான கிர்ஸ்டி மேக்லியோட் என்பவரால் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்களில் ஒரு முக்கிய அங்கமாய் மாறியுள்ளது. பதின்மூன்று ஆண்டுகளாக, எண்பத்து நான்கு பர்கண்டி பட்டுத் துண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்து முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களால் (மற்றும் ஒரு சில ஆண்களால்) எம்ப்ராய்டரி செய்யப்பட்டன. அந்த துண்டுகள், அந்த திட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாமல் ஒதுக்கப்பட்டிருந்த பல கலைஞர்களின் கதைகளைச் சொல்லும்வண்ணம் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது. 

இந்த சிவப்பு ஆடையைப் போலவே ஆரோனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்ட வஸ்திரம் “விவேகமான இருதயமுள்ள” (யாத்திராகமம் 28:3) பலரால் வடிவமைக்கப்பட்டது. ஆசாரியர்களின் அந்த பிரத்யேகமான வஸ்திரத்தில், இஸ்ரவேலின் வாழ்க்கை சரிதைகள், அதிலுள்ள கற்களில் கோத்திரங்களின் பெயர்கள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதை ஆரோன் “கர்த்தருக்கு முன்பாக… ஞாபகக்குறியாகச் சுமந்துவர” (வச. 12) அறிவுறுத்தப்படுகிறார். அங்கிகள், இடைக்கச்சைகள் மற்றும் குல்லாக்கள் ஆகியவைகள் தேவனை சேவித்து மக்களை ஆராதிக்க தகுதிப்படுத்திய ஆசாரியர்களுக்கு மகிமையும் அலங்காரமுமாயிருக்கும்பொருட்டு கொடுக்கப்படுகிறது (வச. 40). 

கிறிஸ்துவின் மூலம் உடன்படிக்கை உறவில் அங்கத்தினராய் சேர்க்கப்பட்ட நாம், ஆசாரியக்கூட்டமாய் அழைப்பைப் பெற்று, ஒருவரையொருவர் தேவனை ஆராதிக்க ஊக்கப்படுத்துவோம் (1 பேதுரு 2:4-5,9). இயேசுவே நமது பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:14). ஆசாரியர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த ஒரு பிரத்யேகமான ஆடையையும் நாம் அணியாவிட்டாலும், அவருடைய கிருபையால், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழ்கிறோம் (கொலோசெயர் 3:12).