ஆன், பல ஆண்டுகளாக அறிந்திருந்த வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணரை ஆரம்ப பரிசோதனைக்காக சந்தித்தார். அவர் அவளிடம், “உனக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?” என்று கேட்டார். அவள், “ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் சென்றீர்களா?” என்று கேட்டாள். அவளுடைய கேள்வி அவரை குற்றப்படுத்தும் நோக்குடன் கேட்கப்பட்டதில்லை, மாறாக, விசுவாசத்தைக் குறித்த உரையாடலைத் துவக்குவதற்காக கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தது. 

அந்த மருத்துவரின் திருச்சபை அனுபவங்கள் அந்த அளவிற்கு சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனின் உரையாடலுக்கு பின்னர், அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் பங்களிப்பையும் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் அறிய நேரிட்டது. அதன் பின்பு, அந்த மருத்துவரின் பெயர் பதிக்கப்பட்ட வேதாகமத்தை ஆன் அவருக்கு பரிசாகக் கொடுத்தபோது, அவர் கண்கலங்கினார். 

சில நேரங்களில் நாம் விவாதிக்கவோ அல்லது நம் விசுவாசத்தை ஆக்ரோஷமாக பகிர்ந்து கொள்வதையோ விரும்புவதில்லை. ஆனால் இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கு ஒரு நேர்த்தியான வழி இருக்கிறது – கேள்வி கேட்டு உரையாடலைத் துவக்குங்கள். 

அனைத்தும் அறிந்த தேவனாய் இருந்த ஒரு மனிதனாய் இயேசு அநேக கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவருடைய நோக்கங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், அவருடைய கேள்விகள் மற்றவர்களை பதிலளிக்கத் தூண்டியது என்பது தெளிவாகிறது. அவர் தனது சீஷனான அந்திரேயாவிடம், “என்ன தேடுகிறீர்கள்” (யோவான் 1:38) என்று கேட்கிறார். பார்வையற்ற பர்திமேயுவிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51; லூக்கா 18:41) என்று கேட்கிறார். அவர் வியாதியஸ்தனிடம், “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” (யோவான் 5:6) என்று கேட்கிறார். இயேசு இந்த ஆரம்ப கேள்விகளைக் கேட்ட அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

யாரிடத்தில் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? சரியான கேள்விகளை அவர்களிடத்தில் கேட்கும் ஞானத்தை தேவனிடம் கேளுங்கள்.