எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்டேவ் பிரானன்

மனமார்ந்த வரவேற்பு

யார் அனைவரையும் கட்டித் தழுவுவார்?”

என்னுடைய நண்பன் ஸ்டீவ் தனக்குப் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டபோது, சில நாட்களுக்குத் தன்னால் ஆலயத்திற்கு வரமுடியாது என்று எண்ணியபோது இக்கேள்வியைக் கேட்டான். ஸ்டீவ் அனைவரையும் அன்போடு வரவேற்பவர், நட்புணர்வோடு வாழ்த்துபவர், உள்ளார்ந்த அன்போடு கைகுலுக்கி, சிலரை பரிசுத்த கட்டிப்பிடித்தலோடும் வரவேற்று ரோமர் 16:16ல் குறிப்பிட்டுள்ள, “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்” என்ற வார்த்தையைச் செயல்படுத்திக் காட்டுபவராக காணப்பட்டார்.

இப்பொழுது நாங்கள் ஸ்டீவ் குணமடைந்து விட வேண்டுமென ஜெபிக்கின்றோம். தான், அறுவை சிகிச்சை, மேலும் சில சிகிச்சைகளுக்குட்பட வேண்டியுள்ளதால் சிலகாலம் ஆலயத்திற்கு வரமுடியாது எனக் கூறியுள்ளார். அவருடைய மனமார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.

நம்மில் அனைவரும் ஸ்டீவைப் போன்று வெளிப்படையாக ஒருவரையொருவர் வாழ்த்த முன் வருவதில்லை. ஆனால், பிறர்மீதுள்ள அவருடைய கரிசனை நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியை நினைவுபடுத்துகின்றது. பேதுரு சொல்வதைக் கனிப்போமாகில், “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” (1 பேது. 4:9; பிலிப். 2:16) என்கின்றார். இவையாவும் அன்பையே அடிப்படையாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டின் உபசரணையில், வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்கு இடமளித்து வரவேற்று வாழ்த்தினர்.

நாம் பிறரோடு அன்போடு உறவாடும்போதும், அன்போடு அரவணைக்கும் போதும் அல்லது ஒரு புன்முறுவல் செய்யும் போதும், “எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (1 பேது. 4:11) என்பதை நிறைவேற்றுபவர்களாவோம்.

ஐக்கியத்தில் ஏற்பட்ட தடங்கல்

உரத்த சத்தமான, வேதனை நிறைந்த குரல் அந்த மதிய வேளையின் இருளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அது இயேசுவின் பாதத்தினருகில் இருந்த அவருக்கன்பானவர்கள், நண்பர்களின் புலம்பலின் சத்தத்தையும் மேற்கொண்டது. அது, இயேசுவின் அருகில் சிலுவையின் இருபுறமும் இருந்த இரு குற்றவாளிகளின் குமுறலையும் மேற்கொண்டது. அக்குரலைக் கேட்ட யாவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” இயேசு வேதனையில் நம்பிக்கையிழந்தவராய், கொல்கொதா மலை மேல், அவமானத்தின் சின்னமான சிலுவையில் தொங்கியபடி இவ்வாறு கூப்பிடுகின்றார் (மத். 27:45-46).

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கின்றார். இதனையும் விட வேதனை தரும் வார்த்தைகள் என்ன இருக்கின்றது? நித்திய இராஜ்ஜியத்தில் இயேசுவானவர் தேவனாகிய பிதாவோடு நல்ல ஐக்கியத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்த உலகத்தைப் படைத்தனர். இருவரும் சேர்ந்தே மனிதனை தங்களின் சாயலாகப் படைத்தனர். அவர்கள் இருவரும் இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த நீண்ட காலங்களில் முற்றிலும் ஐக்கியமாகவேயிருந்தனர்.

இப்பொழுது இயேசு சிலுவையில் வேதனைகளையும் வலியையும் தொடர்ந்து சகித்தார். உலகத்தின் பாவங்களனைத்தும் தன் மீது சுமத்தப்பட்டதால், முதல் முறையாக தேவ பிரசன்னத்தை இழக்கின்றார்.

இதுவே ஒரே வழி. இந்த ஐக்கியத்தில் ஏற்பட்ட இடைவெளி மூலமாகவே நமக்கு இரட்சிப்பு அருளப்பட்டது.  இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்ட அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலேயே மனிதர்களுக்கு தேவனோடுள்ள ஐக்கியம் கிடைத்தது.

இயேசுவே, நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகவும் அதிக வேதனைகளைச் சிலுவையில் சகித்ததற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம்.

ஒரேயொரு நொடி

விஞ்ஞானிகள் நேரத்தைப் பற்றி அதிக கவனம் கொண்டிருப்பார்கள். 2016-ஆம் ஆண்டின் இறுதியில், மேரிலாண்ட் பட்டணத்தின் கோட்டார்ட் விண்வெளி மையத்தைச் சார்ந்த பிரமுகர்கள் அந்த வருடத்துடன் ஒரு வினாடியை கூட்டினார்கள். அந்த வருடம் ஒருவேளை உங்களுக்கு சற்றே நீண்டதாய் இருந்திருந்தால், உங்கள் கணிப்பு சரியே.

அவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏனெனில், பூமியின் சூழற்சி வேகம் காலத்தின் ஓட்டத்தில் குறைவதால், வருடங்கள் வழக்கத்தைவிட சற்றே நீண்டதாய் அமையும். மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கருவிகளை கவனிக்க விஞ்ஞானிகள் நேரத்தை மில்லி செகன்ட் அளவுக்கு துல்லியமாய் கணக்கிடவேண்டும். ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கவே இவர்கள் இப்படி துல்லியமாய் செயல்படவேண்டியுள்ளது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.

நம்மில் அநேகருக்கு, ஒரு நொடி கூடுவதும் குறைவதும் பெரிய வித்தியாசத்தை உண்டாக்குவதில்லை. ஆனாலும், வேதத்தின் அடிப்படையில், நம்முடைய நேரமும் அதனை நாம் பயன்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானது. 1 கொரிந்தியர் 7:29-ல், பவுல் “இனிவரும் காலம் குறுகினது” என்றே நமக்கு நினைப்பூட்டுகிறார். தேவனுடைய பணியைச் செய்வதற்கான நேரம் “குறைவானது”, ஆகையால் நாம் நம் நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டும். “நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் (எபே. 5:16)” என்று பவுல் வலியுறுத்துகிறார்.

விஞ்ஞானிகளைப் போல் நாமும் ஒவ்வொரு வினாடியையும் கணக்கிடவேண்டும் என்பதல்ல அதன் பொருள். வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையைப் (சங். 39:4) பார்க்கும்போது, நம்முடைய நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டியதின் முக்கியத்துவத்தை அது நமக்கு நினைப்பூட்டுகிறது.

நல்ல காலங்கள்

உலகத்தின் வடபகுதிக்கு இன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாள். நீ ஆஸ்திரேலியாவில் வசித்தால், இன்று இலையுதிர் காலத்தின் முதல் நாள். வட அரைக்கோளத்தில் வசந்த கால சம பகல் இரவு நாள் இருக்கும்போது, தென் அரைக்கோளத்தில் இலையுதிர்கால சம பகல் இரவு நாளாக இருக்கும். இன்று, பூமத்திய பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும். எனவே இன்று பகல் நேரமும், இரவு நேரமும் ஏறத்தாழ சமமாக பூமி முழுவதும் இருக்கும்.

புதிய பருவகாலம் என்பது அநேகருக்கு முக்கியமானதாகத் தோன்றும். சிலர் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பர். ஏனெனில், புதிய கால நிலை புதிய நம்பிக்கையைத் தரும் என நம்பினர். ஒரு வேளை நீயும் விஸ்கான்சினில் வசந்த காலத்தை எதிர்பார்த்து, குளிர்கால முடிவை காலண்டரில் குறித்துக் கொண்டிருக்கலாம். அல்லது நீ மெல்போர்னில் வசித்து வந்தால், இலையுதிர்காலம் சூரியனிடமிருந்து ஒரு விடுதலையைத் தருமென எதிர்பார்க்க முடியாது.

நம் வாழ்க்கையிலும் பல கால நிலைகளின் வழியாகக் கடந்து செல்கிறோம். ஆனால் இதற்கும் பருவகாலத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. பிரசங்கியை எழுதியவர் சொல்கிறார், சூரியனுக்குக் கீழே ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு. தேவன் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருக்கின்றார். அப்படியொரு வாழ்க்கை காலத்திற்குள் நாம் வாழ்கின்றோம் (3:1-11).

மோசே தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காலத்தைக் குறித்துச் சொல்கின்றார். (உபா. 31:2) தன்னுடைய தலைமைத்துவ பணியை யோசுவாவிடம் கொடுக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். பவுல் ரோமாபுரியில் வீட்டுச் சிறையிலிருந்தபோது ஒரு தனிமையான காலத்தைச் சந்தித்தார். அவர் தன்னைப் பார்க்க வரும்படி பார்வையாளர்களை அழைக்கின்றார். ஆனாலும் தேவன் அவர் பக்கம் இருக்கிறார் என்பதை உணர்கிறார்.

வாழ்வில் எத்தகைய காலம் இருந்தாலும் சரி, நம்முடைய தேவன் வல்லவராகவும், உதவுபவராகவும், நமக்குத் துணையாளராகவும் இருப்பதால் அவருக்கு நன்றி கூறுவோம்.

வெட்கமடையா விசுவாசம்

விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அணியின் புகழைப் பாட விரும்புவர். அவர்கள் லோகோக்களை அணிவதாலும், முகநூலில் தாங்கள் விரும்பும் அணியைக் குறித்து குறிப்புகளைப் பதிப்பதன் மூலம், அல்லது அந்த அணியைப் பற்றி நண்பர்களோடு பேசுவதன் மூலம் தங்களின் உண்மையான விசுவாசம் எவ்வளவிருக்கிறது என்பதைக் காட்டுகின்றனர். என்னுடைய சொந்த டெட்ராய்டு புலி தொப்பிகள், சட்டைகள், மற்றும் கவிதைகள் நானும் இத்தகையவற்றைச் செய்கின்ற ரசிகர் கூட்டத்தில் இருக்கின்றேன் என்பதைக் காட்டுகிறது.

விளையாட்டின் மீதுள்ள விசுவாசம், ஒன்றை நினைவுபடுத்துகிறது. நம்முடைய உண்மையான, மிகப் பெரிய விசுவாசம் தேவனுக்கே செலுத்தப்பட வேண்டியது. இத்தகைய வெட்கப்படாத விசுவாசத்தைக் குறித்து சங்கீதம் 34ல் தாவீது சொல்கின்றார். இப்புவியிலுள்ள எந்த ஒன்றையும் காட்டிலும் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான தேவன் ஒருவருக்கே நாம் உண்மையாயிருக்க வேண்டும்.

தாவீது சொல்கின்றார், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்” (வச. 1). நாம் நம் வாழ்வில், உண்மையின் காரணராயும், ஒளியின் மூலமாயும், இரட்சிப்பின் காரணருமான தேவனைக் கருதாமல் இருந்த நாட்களை நினைக்கும் போது வியப்பாகவுள்ளது. தாவீது,
“அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (வச.1) என்கிறார். நாம் எத்தனை முறை இந்த உலகத்திற்குரியவர்களை நம் தேவனைக் காட்டிலும் அதிகமாகப் புகழ்ந்துள்ளோம். தாவீது சொல்கிறார், “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்” (வச.2). தேவன் நமக்குச் செய்ததை நினையாமல், நம்முடைய சிறிய வெற்றிகளைக் குறித்து நாம் எத்தனை முறை பெருமை பாராட்டியுள்ளோம்.

நம்முடைய அணியையும், நம்முடைய ஆர்வங்களையும், நம்முடைய சாதனைகளையும் குறித்து மகிழ்வதில் தவறில்லை. ஆனால், நம்முடைய மிக உயர்ந்த பாராட்டும் துதியும் தேவனுக்கேயுரியது. ‘‘என்னோடே கூட கர்த்தரைக் மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (வச. 3).

எங்கும் ஆனால் எங்குமேயில்லை

என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர், எங்களைப் போன்று, தங்களுடைய வாலிபப் பெண்ணை ஒரு கார் விபத்தில் இழந்தார். ஒரு நாளேட்டில் தன்னுடைய மகள் லின்ட்சேயுக்கு அஞ்சலி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், அவளுடைய நினைவாக நிறைய படங்களை அவருடைய வீட்டினைச் சுற்றி வைத்திருப்பதைக் குறிப்பிட்டிருந்ததோடு, இந்த வலிமை வாய்ந்த வாசகத்தையும் எழுதியிருந்தார். அது, அவள் எங்கும் இருக்கின்றாள். ஆனால் எங்குமே இல்லை என்பது.

எங்களுடைய பெண் பிள்ளைகள் இன்னமும் படத்திலிருந்து, எங்களைப் பார்த்து சிரிப்பது போல இருந்தும், அந்த உயிரோட்டமான நபர்கள், அந்தச் சிரிப்பைத் தருபவர்கள் எங்கேயுமே காணப்படவில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் - எங்கள் இருதயத்தில், எங்கள் எண்ணங்களில், அந்த படங்களில் இருந்தாலும், அவர்கள் எங்கேயுமேயில்லை.

ஆனால் வேதாகமம் குறிப்பிடுவது, கிறிஸ்துவுக்குள் லின்ட்சேயும், மெலிசாவும் உண்மையில்; எங்குமேயில்லாமல் போய் விடவில்லை. அவர்கள் இயேசுவின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள். தேவனோடு இருக்கிறார்கள் (2 கொரி. 5:8). அவர்கள் உண்மையில் எங்குமிருக்கிற, ஆனால் எங்கும் காணப்படாதவரோடு இருக்கிறார்கள். நாம் தேவனை உடல் வடிவில் காண முடியவில்லை. தேவன் சிரிப்பதைப் போன்ற படங்கள் நம் வீட்டில் இல்லை. உன் வீட்டைச் சுற்றி தேடிப் பார்த்தாலும் அவர் எங்குமேயில்லை. ஆனால் இதற்கு மாறானது தான் உண்மை. அவர் எங்குமிருக்கிறார்.

இந்த புவியில் நாம் எங்கு சென்றாலும் தேவன் அங்கு இருக்கிறார். அவர் எல்லாவிடத்திலும் நம்மை வழி நடத்தவும் பெலப்படுத்தவும், தேற்றவும் இருக்கின்றார். அவரில்லாத இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. நாம் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் எவ்விடத்திலும் இருக்கிறார். நாம் எதிர் நோக்கும் ஒவ்வொரு சோதனையின் போதும் இது நமக்கு ஒரு சிறந்த செய்தியாக உள்ளது.

இது வியப்பைத் தருவது

இயேசு தேவனுடைய மகிமையின் பிரகாசம் (எபிரெயர் 1:3). அவரை அறிந்தவர்கள் அவருடைய மகிமையைக் கண்டார்கள் (யோவான் 1:14).

பழைய ஏற்பாட்டில், கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. (யாத்திராகமம் 40:34-35). இஸ்ரவேல் புத்திரர் இந்த மகிமையால் வழி நடத்தப்பட்டனர்.

முடிவு காலத்தில், நகரத்திற்கு வெளிச்சங் கொடுக்கச் சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. (வெளிப்படுத்தல் 21:23) என தேவன் வாக்களித்துள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள தேவனுடைய மகிமையானது மிகவும் வியப்பைத் தருவதுதாகும்.

தேவன் படைத்த இப்புவியில் நாம் வாழும் போது அவருடைய மகிமையினை நாம் அவ்வப்போது காண முடியும் என வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துவதே அவருடைய மகிமை. நாம் தேவனை காண முடியாது. ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை அவருடைய படைப்பாகிய இந்த பிரமாண்டமான அண்டத்திலும், நம்முடைய பெரிய இரட்சிப்பிலும், நம்முடைய வாழ்வில் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தாலும் உணர முடிகிறது.

இன்றும் அவருடைய வல்லமையின் ஆதாரங்களையும், அவருடைய மகிமையையும் இயற்கையின் அழகிலும், ஒரு குழுந்தையின் சிரிப்பிலும், பிறர் நம்மீது காட்டும் அன்பிலும் காணலாம். தேவன் இப்பொழுதும் இப்பூமியை அவருடைய மகிமையால் நிரப்புகிறார்.

அன்பினால் ஒரு “ஆம்”

2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 21ஆம் நாள் லூசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைப் பற்றிய படங்களை, கிரிஸா சமூக ஊடகங்களில் பதித்தாள். மறுநாள் காலை, வெள்ளப்பகுயிலிருந்து ஒருவர் உதவிக்காக வேண்டிய குறிப்பையும் அதில் சேர்த்தார். 5 மணி நேரம் கழித்து, அவளும் அவளுடைய கணவன் பர்பியும் உதவி செய்வதற்காக தாங்கள் செய்யவிருக்கும் 1000 மைல் பயணத்தில், தங்களோடு சேரும்படி மற்றவர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தனர். 24 மணி நேரத்திற்குள், தங்கள் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி 13 நபர்கள் அவர்களோடு இணைந்து கொண்டனர்.

தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு, 17 மணி நேரம் பிரயாணம் பண்ணி, உபகரணங்களை நகர்த்தி, இடிபாடுகளை அகற்றும் வேலையைச் செய்யும்படி, இதற்கு முன்னர் சென்றிராத ஓர் இடத்திலுள்ளவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமாறு செல்லும்படி, எது அம்மக்களைத் தூண்டியது? அதுதான் அன்பு.

அவள் உதவிக்காக அழைப்பு விடுத்தபோது அதனோடு இணைத்திருந்த வசனத்தை நினைத்துப் பார்த்தால், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5). உதவி செய்யும்படி தேவன் விடுத்த அழைப்பை ஏற்போமாகில் இந்த வார்த்தைகள் உண்மையென விளங்கும். அப்போஸ்தலனாகிய யோவான், “ஒருவன்… தன் சகோதரனுக்குத் குறைச்சலுண்டு என்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (யோவா. 3:17) அது ஒருவேளை கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், “தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்கிறபடியால்” (வச. 22) தேவன் வாக்களித்த உதவியைச் செய்வார்.

ஒரு தேவை வரும்போது, தேவன் நம்மை பிறருக்கு உதவும்படி அழைக்கிறார் என்று உணர்ந்து, அன்போடும், விருப்பத்தோடும் “ஆம்” என முன்வருவதே தேவனை கனப்படுத்துவதாகும்.

பிரமிக்க செய்யும் மகிமை

ஐரோப்பா பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்தது எதுவென்றால், ஆங்காங்கே அமைந்துள்ள சிறப்புமிக்க பேராலயங்களைப் பார்வையிட்டதாகும். அவற்றின் பிரமிக்கச் செய்யும் அழகு “பரலோகத்திலிருப்பதைப் போல உணரச் செய்தது. அவற்றின் கட்டடக்கலை, கலை நுணுக்கம் மற்றும் எவற்றின் அடையாளமாக இந்த வியக்கச் செய்யும் கட்டடங்கள் எழுப்பப்பட்டனவோ அவை வார்த்தையால் விவரிக்க முடியாத, ஆச்சரியமான சிறப்புமிக்க அனுபவத்தைக் கொடுத்தது.

தேவனுடைய தனிச்சிறப்பையும், எல்லாவற்றையும் கடந்த அவருடைய மகிமையையும் குறித்து நாம் நினைவுகூறும்படியாக இந்த கட்டட அமைப்புகள் எழுப்பப்பட்டன என்ற உண்மையை நான் நினைக்கும் போது, நம் சிந்தனைகளிலும் இருதயத்திலும் தேவனுடைய மகத்துவத்தையும், மாட்சிமையையும் மீண்டும் நம் நினைவில் கொண்டு வருகின்றன என வியந்தேன், நாம் செய்ய வேண்டியதென்னவெனில் மனிதனின் சிறப்பான வானளாவிய கட்டட அமைப்புகளையும் தாண்டி, தேவன் உருவாக்கியவற்றின் மாட்சிமையைக் காண்பதேயேயாகும். வீண்மீன்கள் நிறைந்த இரவு வானத்தைப் பார்! அவருடைய வார்த்தையால் உருவாகியிருக்கும் இந்த அண்டத்தையும் பார்த்து, அவருடைய  வல்லமையை நினைத்துக்கொள். புதிதாகப் பிறந்த குழந்தையொன்றைக் கையிலெடுத்து தேவன் கொடுத்த அற்புதமான ஜீவனுக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். பனிபடர்ந்த அலாஸ்கா மலைத் தொடரையும், அல்லது லட்சக்கணக்கான தேவன் படைத்த உயிரினங்கள் அடங்கிய அட்லாண்டிக் சமுத்திரத்தையும், இத்தனை சுற்றுச் சூழலையும் இயக்குகின்ற அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்.

மனிதன் வானளாவிய கட்டடங்களை உருவாக்கியதில் தவறில்லை. ஆனால், அவை நம்மை தேவனை நோக்கிப் பார்க்கத் தூண்ட வேண்டும். நம்முடைய உண்மையான புகழ்ச்சி தேவன் ஒருவருக்கே சொந்தம் என்பதால், “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும்; மகத்துவமும் உம்முடையவைகள்” (1 நாளா. 29:11) என்று நாம் சொல்லுவோம்.