எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

சுவிசேஷத்திற்காக

1917 ஆம் ஆண்டு தனது 23ம் வயதில் நெல்சன் தனது சொந்த மாநிலமாகிய வெர்ஜீனியாவில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். பிறகு சீனாவில் சுமார் இரண்டு மில்லியன் சீன குடியிருப்புகள் உள்ள ஒரு பகுதியில் "லவ் அண்ட் மெர்சி" என்ற அந்த ஒரே மருத்துவமனையில் புதிய கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன் 24 வருடங்கள் அப்பகுதியில் வசித்து, அம்மருத்துவமனையை நடத்தி , அறுவை சிகிச்சை செய்தும், ஆயிரக்கணக்கான மக்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்தும் வந்தார். அம்மக்களால் முன்னர் "அயல்நாட்டுப் பிசாசு" என்ற பெயர் பெற்ற அதே நெல்சன் பெல் இப்பொழுது "சீன மக்களை நேசிக்கும் பெல்" என்ற பெயர் பெற்றார். அவரின் மகள்தான் சுவிசேஷகர் பில்லி கிரஹாமின் மனைவி ரூத் ஆவார்.        

நெல்சன், திறமையான அறுவை சிகிச்சை நிபுணராகவும், வேதாகம ஆசிரியராக இருந்தாலும், அவருடைய பண்பும், வாழ்க்கை முறையும் தான் அநேக மக்களை இயேசுவிடம் திருப்பியது. புறஜாதியாருக்குத் தலைவனாய் கிரேத்தாவில் உள்ள சபையைக் கண்காணித்துக் கொண்டிருந்த அந்த இளம் தீத்துவுக்கு, பவுல் தனது கடிதத்தில் கிறிஸ்துவைப் போல் வாழ்வது மிகவும் முக்கியம் எனவும், அது சுவிசேஷத்தை அலங்கரிக்கிறதெனவும் குறிப்பிடுகிறார் (தீத்து 2 : 10). ஆனாலும் நாம் நமது சுயபலத்தில் இதைச் செய்வதில்லை. தேவனுடைய கிருபை நம்மை சுயக் கட்டுப்பாட்டோடும், நேர்மையோடும், தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, விசுவாசத்தின் சத்தியத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது (வ 1,12).

நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றித் தெரியாது, ஆனால் அவர்களுக்கு நம்மைத் தெரியும். தேவன் தாமே நற்செய்தியை மற்றவர்கள் ஏற்கும் வண்ணம், நாம் பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் உதவி செய்வாராக.-

தேவனில் அன்பைக் கண்டடைதல்

சிறுவயதில், “நீ பெரியவனாகி என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டாலே, முகில், "நான் மனோஜை போல இருக்க விரும்புகிறேன்" என்பான். முகிலின் மூத்த சகோதரன் தடகள வீரன், சகஜமாகப் பழகுபவன் மற்றும் மரியாதைக்குரிய மாணவன். மறுபக்கம் முகிலோ "நான் விளையாட்டில் மோசமானவன், பயந்தவன், கற்றல் குறைபாட்டுடன் போராடினேன். நான் எப்போதும் மனோஜுடன் நெருங்கிய உறவை விரும்பினேன், ஆனால் அவனோ விரும்பவில்லை. அவன் என்னை 'சலிப்பானவன்' என்று அழைத்தான்" என்றான்.

முகில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, தனது மூத்த சகோதரனின் அன்பைப் பெறுவதிலேயே வீணாகச் செலவிட்டான். மாறாக, முகில் இயேசுவைப் பின்பற்றுபவனாக ஆனபோதுதான், தன் இரட்சகரின் அன்பில் இளைப்பாறிடக் கற்றுக்கொண்டான்.

யாக்கோபின் முதல் மனைவியான லேயாள், தன் வாழ்நாளின் பெரும்பகுதியில் தன் கணவனின் அன்பை நாடினாள் (ஆதியாகமம் 29:32-35). இருப்பினும், யாக்கோபு ராகேலிடம் பட்சமாய் இருந்தார். ஆனால் தேவன் லேயாளின் அவல நிலையைக் கண்டு அவள் வாழ்வில் நிராகரிக்கப்பட்டதற்கு ஈடுசெய்தார். அவர் அவளை ஒரு தாயாக அனுக்கிரகம் செய்து ஆசீர்வதித்தார், அக்காலத்தில் அவளுடைய கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய கனம் (வ.31). தன் கணவனால் கண்டுகொள்ளப்படாதவளாக, செவிகொடுக்கப்படாதவளாக இருந்த லேயாள்,  தேவனில் அன்புடன் பார்க்கப்பட்டாள், கேட்கப்பட்டாள் (வ.32-33). அவள் ஒரு மகளையும் ஆறு மகன்களையும் பெற்றெடுத்தாள், அவர்களில் ஒருவர் யூதா, இயேசுவின் முன்னோர். அவள் அவனுடைய பிறப்பின்போது, " இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" (வ.35) என்று கூறினாள். லேயாள் கானானில் நீண்ட காலம் வாழ்ந்தாள், மேலும் யாக்கோபின் குடும்பத்துடன் கனத்துக்குரிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள் (49:29-32).

நாம் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, ​​லேயாளின் கதையால் ஆறுதல் காண்போம். நாம் இழந்ததை ஈடுசெய்யும் தேவனின் அன்பில் நாம் இளைப்பாறலாம்.

தேவனின் வாக்குத்தத்தங்கள்

என் தந்தைக்கு நினைவாற்றல் குறைவதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. ஞாபகமறதி நோய் கடூரமானது, இது ஜனங்களின் நினைவாற்றலை அளித்து அவர்களுடைய வாழ்க்கையைக் குறித்த ஞாபகங்களை முற்றிலும் அழிக்க வல்லது. ஒரு இரவு, ஒரு கனவு கண்டேன். அதன்மூலம் தேவன் என்னைத் திடப்படுத்தினார் என்று நான் நம்புகிறேன். அந்த கனவில், தேவனின் கரத்தில் ஒரு சிறிய பொக்கிஷ பெட்டி இருந்தது, அவர் என்னிடம் “உன் தந்தையின் நினைவுகள் எல்லாம் பத்திரமாக இதில் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது என்னிடமே இருக்கட்டும், பின் ஒருநாள் பரலோகத்தில் அவரிடமே இதைக் கொடுத்து விடுகிறேன்” என்றார்.

பின்வந்த ஆண்டுகளில், என் தந்தைக்கு நான் யாரென்றே மறந்துபோனபோதும்கூட, இந்த கனவு என்னைத் தேற்றியது. அவருடைய இந்த வியாதி தற்காலிகமானது என்பதையும் நினைவுகொள்வேன். அவர் தேவனுடைய பிள்ளையாக இருப்பதினால், அவர் ஒருநாளில் முழுமையாக புதுப்பிக்கப்படுவார்.

உபத்திரவத்தை பவுல் இலேசானதென்றும் தாற்காலிகமானதென்றும் (2 கொரிந்தியர் 4:17) விவரித்ததையும் நான் நினைவில்கொள்ள இது உதவியது. அப்போஸ்தலன் உபத்திரவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை, அவரும் அநேக உபத்திரவங்கள் பட்டிருந்தார் (வ.7-12). நித்தியத்தின் வெளிச்சத்திலும், கிறிஸ்துவிலுள்ள நமது எதிர்கால மகிமையிலும் நமது பாடுகள் எல்லாம் தற்காலிகமாகவும், இலேசானதாகவும் தோன்றும் என்பதையே அவர் வலியுறுத்தினார். இயேசுவுக்குள் நாம் இப்போது பெற்றிருக்கும் அனைத்து மகிமையான ஆசீர்வாதங்களும், ஒருநாளில் நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களும் நித்தியகாலத்திற்கும் பாடுகளைக்காட்டிலும் பெரிதானவையாக இருக்கும் (வ.17)

நாம் மனந்தளர வேண்டியதில்லை, காரணம் தேவனும் அவரின் வாக்குத்தத்தங்களும் நமக்குண்டு. நாம் பாடுபட்டாலும், நம்மை நாளுக்குநாள் புதிதாக்கும் (வ.16) அவரது வல்லமையை நம்பி விசுவாசத்தில் நாம் வாழமுடியும். அவருடைய நித்திய வாக்குகளை (வ.18) நோக்கியிருப்போமாக.

 

அறியாதவைகளை குறித்த பயம்

புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை 3 மணிக்கு, பயந்து விழித்தேன். வரப்போகும் ஆண்டு என்னைப் பயத்தால் மூழ்கடித்தது. குடும்பத்தில் உண்டான வியாதி, என்னை நீண்ட காலமாகச் சோர்வடையச் செய்திருந்தது, இப்போதோ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள் என்னைப் பயமுறுத்தியது. இன்னும் மோசமான விஷயங்கள் நடக்குமோவென்று நான் திகைத்தேன்.

அரங்கேறின மோசமான சம்பவங்கள் உண்டாக்கிய பயத்தை இயேசுவின் சீஷர்கள் புரிந்துகொண்டனர். அவர் மரிப்பதற்கு முந்தைய நாளே அவர்களின் எஜமானர் அவர்களை ஆயத்தப்படுத்தி உறுதியளித்திருந்தாலும், அவர்கள் இன்னமும் பயந்ததிருந்தனர். அவர் கைது செய்யப்பட்டபோது அவர்கள் தப்பி ஓடினர் (மத்தேயு 26:56); பேதுரு அவரை மறுதலித்தார் (யோவான் 18:15-17, 25-27), அவர்கள் ஒளிந்துகொண்டனர் (20:19). இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்படுகையிலும், அவர் உபத்திரவப்பட்டபோதும் ஏற்பட்ட கிளர்ச்சியினால் உண்டான பயத்தனிமித்தம், அவர்கள் "திடன்கொள்ளுங்கள்" என்ற அவரது கட்டளைக்கும், "நான் உலகத்தை ஜெயித்தேன்" (16:33) என்ற அவரது வாக்குத்தத்தத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.

ஆனால் கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும், வாழ்வின் மீதும் மரணத்தின் மீதுமான அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் நிரூபித்தது. அவருக்கே இறுதி வெற்றி. நம்முடைய உலகத்தின் பாவ நிலைமை துன்பத்தைத் தவிர்க்க முடியாததாகச் செய்திருந்தாலும், ஞானமும் அன்பும் நிறைந்த நமது தேவனின் அதிகாரத்திற்கு அனைத்தும் கீழ்ப்பட்டவை என்ற சத்தியத்தில் நாம் இளைப்பாறலாம். இயேசுவின் பிரசன்னம் நம்மோடு உண்டு (16:32-33), அவருடைய சீடர்களோடுமிருந்தது, அதனால் நம்பிக்கையுடன் உலகிற்கு நற்செய்தியைப் பகிர்ந்தனர். தேவன் அனைத்தையும் ஆள்கிறார் என்ற வாக்குத்தத்தம், இந்தப் புத்தாண்டில் அவரை நம்புவதற்கும், எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாதபோதும் தைரியமாக இருப்பதற்கும், நம் உள்ளங்களைத் திடப்படுத்தட்டும்.

தேவன் என்னை அறிவார்

எங்கள் குழந்தைப்பருவ கதைப் புத்தகத்தை என் சகோதரி கண்டுபிடித்தபோது, ​​இப்போது எழுபதுகளில் இருக்கும் என் அம்மா மகிழ்ச்சியடைந்தார். தேனைத் திருடிய கரடியைக் கோபமான தேனீக் கூட்டம் துரத்திய கதையின் அனைத்து வேடிக்கையான சம்பவங்களும் அவருக்கு நினைவிலிருந்தன. மேலும், கரடி தப்பிப்பிழைப்பதை எதிர்பார்த்து நானும் என் சகோதரியும் எவ்வாறு சிரித்தோம் என்பதையும் அவள் நினைவு கூர்ந்தாள். "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எப்பொழுதும் கதைகளைச் சொன்னதற்காக நன்றி" என்று நான் என் அம்மாவிடம் சொன்னேன். சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பது உட்பட எனது முழு கதையும் அவளுக்குத் தெரியும். இப்போது நான் வளர்ந்த பின்னும், அவள் இன்னும் என்னை அறிந்திருக்கிறாள், புரிந்துகொள்கிறாள்.

தேவனும் நம்மை அறிவார். நம்மைக் காட்டிலும், எந்த மனிதனைக் காட்டிலும்  ஆழமாக அறிவார். அவர் நம்மை, "ஆராய்ந்து அறிந்திருக்கி(றார்)றீர்" (சங்கீதம் 139:1) என்று தாவீது கூறுகிறார். தமது அன்பினால் அவர் நம்மை ஆராய்ந்து, நம்மை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். தேவன் நம் நினைவுகளை அறிவார், நாம் வார்த்தைகளின் காரணங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்கிறார் (வ. 2, 4). நம்மை நாமாக்கும்  ஒவ்வொரு காரணிகளையும் அவர் அந்தரங்கமாக அறிந்தவர், மேலும் நமக்கு உதவ  இந்த அறிவை பயன்படுத்துகிறார் (வ. 2-5). நம்மை அதிகம் அறிந்தவர் வெறுத்து விலகாமல், தமது அன்புடனும் ஞானத்துடனும் நம்மை நெருங்குகிறார்.

நாம் தனிமையானவராக, கண்டுகொள்ளப்படாதவராக   அல்லது மறக்கப்பட்டவராக உணரும்போது, ​​தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நம்மைக் காண்கிறார், நம்மை அறிவார் என்ற சத்தியத்தில் நாம் இடரற்றிருக்க முடியும் (வ. 7-10). பிறர் அறியா நமது அனைத்து பக்கங்களையும், இன்னும் பலவற்றையும் அவர் அறிவார். தாவீதைப் போலவே நாமும் நம்பிக்கையுடன், “நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். . . . . உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வ. 1, 10) எனலாம்.

ஜெபத்தில் தரித்திருத்தல்

அடுமணை (ரொட்டி சுடுதல்)  உதவியாளரான உஷா, முந்திரிப்பழ ரொட்டியைத் திருடுவதாக அவரது மேற்பார்வையாளர் குற்றம் சாட்டியபோது, ​​தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகவும் உதவியற்றவராக உணர்ந்தார். ஆதாரமற்ற தீர்ப்பு  மற்றும் அதற்கான சம்பளப் பிடித்தம் ஆகியவை அந்த  மேற்பார்வையாளரின் பல தவறான செயல்களில் இரண்டு மட்டுமே. "தேவனே, தயவாய் உதவும். அவளின் கீழ் வேலை செய்வது மிகவும் கடினம், ஆனால் எனக்கு இந்த வேலை தேவை", என உஷா ஒவ்வொரு நாளும் ஜெபித்தாள்.

இதேபோல் உதவியற்றவளாக உணர்ந்த ஒரு விதவையைப் பற்றி இயேசு கூறுகிறார், அவள் "எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும்" (லூக்கா 18:3) என்றிருந்தாள். தன் வழக்கைத் தீர்க்க அதிகாரம் உள்ள ஒரு நீதிபதியிடம் சென்றாள். அந்த நீதிபதி அநியாயம் செய்பவர் என்று தெரிந்திருந்தும், அவரை அணுகுவதில் விடாப்பிடியாக இருந்தாள்.

நீதிபதியின் இறுதி பதில் (வ.4-5) அன்புடனும் உதவியுடனும் விரைவாகப் பதிலளிக்கும் (வ.7) நம் பரலோகத் தகப்பனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. விடாமுயற்சி, ஒரு அநீதியான நீதிபதி ஒரு விதவையின் வழக்கை விசாரிக்க செய்யக்கூடும் என்றால், நீதியுள்ள நீதிபதியாக இருக்கும் தேவன் நமக்காக எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியும்? (வ.7-8). "தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" (வ.7) என்று நாம் அவரை நம்பலாம். மேலும், ஜெபிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பது நமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். நம்முடைய சூழ்நிலைக்கு, தேவன் தமது  பரிபூரண ஞானத்தின்படி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் நாம் தொடா்ந்து நிலைத்திருக்கிறோம்.

இறுதியில், உஷாவின் மேற்பார்வையாளர் மற்ற பணியாளர்கள் தனது  நடத்தையைப் பற்றி புகார் செய்ததை அடுத்து ராஜினாமா செய்தார். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது; ​நம்முடைய ஜெபங்களின் வல்லமையானது, அதனைக் கேட்டு நமக்கு உதவுகிறவரிடமே இருக்கிறது என்பதை அறிந்து, ஜெபிப்பதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.

பின் இருக்கையில் வேதாகமங்கள்

ஆண்ட்ரூவின் கார் நிறுத்தப்பட்டது, காவலர்கள் கடந்து வந்தனர். அவர் முன்பு பலமுறை  செய்ததுபோல இப்போதும், “தேவனே, நீர் பூமியிலிருந்தபோது குருடர்களைப் பார்க்கச் செய்தீர். இப்போது, ​​தயவு செய்து இந்த பார்வையைக் குருடாக்கும்” என்று ஜெபித்தார். பாதுகாவலர்கள் காரைச் சோதனையிட்டனர், சாமான் பைகளிலிருந்த வேதாகமங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆண்ட்ரூ எல்லையைத் தாண்டி, வேதாகமத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியாதவர்களிடம் அதனை எடுத்துச் சென்றார்.

ஆண்ட்ரூ வான் டெர் பிஜில், அல்லது சகோதரர் ஆண்ட்ரூ. கிறிஸ்தவத்தைச்  சட்டவிரோதமாக்கிய நாடுகளுக்கு வேதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்ற சாத்தியமற்றது போல் தோன்றிய பணிக்காகத்  தேவன் அவரை அழைத்தபோது தேவனின் வல்லமையை நம்பியிருந்தார். "நான் மிகவும் சாதாரணமானவன்" என்று அவர் தனது குறுகிய கல்வியறிவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிட்டார். "நான் செய்ததை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்" என்றவரது இன்றைய ஸ்தாபனம்தான் ஓபன் டோர்ஸ் இன்டர்நேஷனல், உலகம் முழுவதும் உபாத்திரவப்படும் இயேசுவின் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்கிறது.

யூதாவின் ஆளுநரான செருபாபேல், யூதர்களின் சிறையிருப்பிற்குப் பின், ஆலயத்தை மீண்டும் கட்டுவது சாத்தியமற்றதாக தோன்றியபோது, ​​அவர் ஊக்கம் இழந்தார். ஆனால் தேவன் மனித பலத்தையோ பராக்கிரமத்தையோ நம்பாமல், தம்முடைய ஆவியின் மீது நம்பிக்கை வைக்கும்படி அவருக்கு நினைவூட்டினார் (சகரியா 4:6). சகரியா தீர்க்கதரிசிக்கு அருகாமையில் உள்ள ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் கொண்டு வரப்பட்ட விளக்குகளின் தரிசனத்தின் மூலம் அவர் அவரை ஊக்கப்படுத்தினார் (வ. 2-3). தொடர்ச்சியான எண்ணெய் விநியோகத்தின் காரணமாக விளக்குகள் எரிவது போல, செருபாபேலும் இஸ்ரவேலர்களும் தேவனின் தொடர்ச்சியான வல்லமையை நம்பி அவருடைய வேலையைச் செய்ய முடியும்.

நாம் தேவனைச் சார்ந்திருக்கும்போது, ​​நாம் அவரை நம்பி, அவர் நாம் செய்யும்படி அழைப்பதைச் செய்வோம்.

விசுவாசத்தால் ஆம் என்பது

வேலையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கக்கூடுமா என்று கேட்டபோது, ​​நான் மாட்டேன் என்று சொல்ல விரும்பினேன். நான் தடைகளைப் பற்றி யோசித்து, அவற்றைக் கையாள நான் தகுதியானவனல்ல என்று உணர்ந்தேன். ஆனால் நான் ஜெபித்து, வேதாகமம் மற்றும் பிற விசுவாசிகளிடமிருந்தும் வழிகாட்டுதலை நாடியபோது, ​​ஆம் என்று சொல்லத் தேவன் என்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். வேதாகமத்தின் மூலம், அவருடைய உதவி எனக்கும் உறுதியளிக்கப்பட்டது. எனவே, நான் பணியை ஏற்றுக்கொண்டேன், ஆனால் இன்னும் கொஞ்சம் பயமிருந்தது.

இஸ்ரவேலர்களிலும், கானானைச் சுதந்தரிப்பதிலிருந்து பின்வாங்கிய பத்து வேவுக்காரர்களிலும் நான் என்னைக் காண்கிறேன் (எண் 13:27-29, 31-33; 14:1-4). அவர்களும் கஷ்டங்களைக் கண்டு, எவ்வாறு தேசத்தில் உள்ள பலசாலிகளைத் தோற்கடித்து, அவர்களுடைய அரணான பட்டணங்களைக் கைப்பற்றுவது என்று யோசித்தார்கள். "நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்" (13:33) என்று வேவுக்காரர் கூறினர், மேலும் இஸ்ரவேலர்கள், "நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும்.. கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன?" (14:3) என்று முறுமுறுத்தார்கள்.

கானானைத் தம்முடைய மக்களுக்குக் கொடுப்பதாக தேவன் ஏற்கனவே வாக்களித்திருந்ததை காலேபும் யோசுவாவும் மட்டுமே நினைவு கூர்ந்தனர் (ஆதியாகமம் 17:8; எண்ணாகமம் 13:2). அவருடைய வாக்குத்தத்தத்திலிருந்து அவர்கள் நம்பிக்கை பெற்றனர், எனவே தேவனின் பிரசன்னம் மற்றும் உதவியின் வெளிச்சத்தில் வரவிருக்கும் சிரமங்களை முன்னோக்கினர். அவருடைய வல்லமை, பாதுகாப்பு மற்றும் போஷிப்பில் அவர்கள் எதிரியின் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள், அவர்களுடைய சுயத்தில் அல்ல (எண்ணாகமம் 14:6-9).

தேவன் எனக்குக் கொடுத்த பணியும் எளிதானது அல்ல; ஆனால் அதினுடே அவர் எனக்கு உதவினார். அவருடைய நிர்ணயங்களில் நாம் எப்போதும் சிரமங்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், காலேப் மற்றும் யோசுவாவைப் போல, "கர்த்தர் நம்மோடே இருக்கிறார்" (வ.9) என்பதை அறிந்து நாம் அவற்றை எதிர்கொள்ள முடியும்.

கிறிஸ்துவில் ஒன்றுபட்டவர்களாய்

அலாஸ்காவின் விட்டியரில் வசிக்கும் முந்நூறு பேரில் பெரும்பாலோர் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். அதனால்தான் விட்டியர் “ஒரே கூரையின் கீழ் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. அதின் முன்னாள் குடியிருப்பாளரான ஆமி, “நான் எதற்கும் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை - மளிகைக் கடை, நோட்டரி பப்ளிக், பள்ளி மற்றும் தபால் அலுவலகம் எங்கள் தரை தளத்தில் இருந்தன, ஒரு லிஃப்ட் சவாரி மட்டுமே போதுமானது!" என்று கூறுகிறார்.

“வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்ததால், எனக்கு யாரும் தேவையில்லை என்று நினைத்து, நான் அடிக்கடி தனிமையில் இருக்க விரும்பினேன்" என்று அமி பகிர்ந்துகொள்கிறார். “ஆனால் சக குடியிருப்பாளர்கள் மிகவும் கரிசணையோடு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் தேவை என்பதையும், எனக்கு அவர்கள் தேவை என்பதையும் கற்றுக்கொண்டேன்” என்கிறார். 

ஆமியைப் போலவே, நாமும் சில சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்தி, சமூகத்தைத் தவிர்க்க விரும்பலாம். பிந்தையது குறைந்த மன அழுத்தமாகத் தெரிகிறது! ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர் தனிமையிலும் மற்ற விசுவாசிகளுடன் நல்லுறவு கொண்டவராக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலராகிய பவுல் விசுவாசிகளின் ஐக்கியத்தை மனித சரீரத்திற்கு ஒப்பிடுகிறார். ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒரு தனித்துவமான செயல்பாடு உள்ளது போல, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தனித்துவமான பாத்திரத்தை கொண்டுள்ளனர் (ரோமர் 12:4). ஒரு சரீரத்தின் உறுப்பு தனியாக இருக்க முடியாதது போல, ஒரு விசுவாசி தனிமையில் நம்பிக்கையின் வாழ்க்கையை வாழ முடியாது (வச. 5). சமூகத்தின் மத்தியில் தான் நாம் நம்முடைய வரங்களைப் பயன்படுத்தி (வச. 6-8; 1 பேதுரு 4:10) இயேசுவைப் போல வளர்கிறோம் (ரோமர் 12:9-21).

நமக்கு மற்றவரின் தேவை அவசியம்; நமது ஒற்றுமை கிறிஸ்துவில் உள்ளது (வச. 5). அவருடைய உதவியால், நாம் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதால், அவருடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளலாம் மற்றும் அவருடைய அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கேட்கிறார்

நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். "அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். "சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்." என்றவர் மேலும், "திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்." என்றும், " நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி." என்று முடித்தார்.

சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

கிருபையின் மறுதொடக்கம்

கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.