எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்லாரன்ஸ் டார்மனி

அவர் பிரசன்னம்

பதற்றம் தோய்ந்த முகத்துடன் ஒரு மனிதன் தன் பதின்பருவ மகனுடன், ஆவி உலகைத் தொடர்புகொள்ளும் ஒரு மாந்திரீகன் முன்பாக அமர்ந்திருந்தார். “உங்கள் மகன் எவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறான்?” என்று கேட்டார். “பெரிய நகரத்துக்கு. அவன் திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகும்” என்று அந்தத் தந்தை பதில் அளித்தார். தந்தையிடம் ஒரு தாயத்தைக் கொடுத்த அந்த மனிதன், “அவன் போகும் இடமெல்லாம் இது அவனைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.

நான்தான் அந்த பதின்பருவப் பையன். ஆனால் அந்த மந்திரிக்கும் மனிதரோ, அந்த தாயத்தோ எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நகரத்தில் இருக்கும்போது, நான் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டேன். அந்த தாயத்தைத் தூர எறிந்துவிட்டு, கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையில் கிறிஸ்து இருப்பது, எனக்கு தேவனின் பிரசன்னத்தை உறுதிசெய்தது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, என் சகோதரனை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, இப்போது கிறிஸ்தவ விசுவாசியாகிவிட்ட என் தந்தை, “முதலில் நாம் ஜெபம் செய்வோம். தேவப் பிரசன்னம், நீ போகும் வழி நெடுகிலும் உன்னோடு செல்லும்” என்றார். தேவனின் பிரசன்னமும், அவரது வல்லமையும் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம்.

மோசேயும் இதே போன்ற ஒரு போதனையைப் பெற்றார். ஆண்டவர் அவருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்தார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து, தம் ஜனங்களை வெளிவரச் செய்து, தாம் வாக்குக்கொடுத்த கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்வதே அந்த வேலை (யாத்திராகமம் 3:10). ஆனால் தேவன் “நான் உன்னோடே இருப்பேன்” என்று உறுதி அளித்தார் (வச. 12).

நமது பயணமும் சவால்கள் நிறைந்தது. ஆனால் தேவப் பிரசன்னம் நம்மோடு இருக்கும் என்று நமக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இயேசு தமது சீஷர்களுக்குச் சொன்னதுபோல, “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).

வார்த்தைகளுக்கும் அதிகமாக

ஒரு அர்ப்பணிப்பு விழாவில், பிராந்திய ஆப்பிரிக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் பிரதி ஒன்று அந்தப் பகுதியின் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டும் விதமாக, அந்தத் தலைவர் வேதாகமத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, “ஆண்டவர் எங்கள் மொழியை புரிந்து கொள்கிறார்! இப்போது எங்கள் தாய் மொழியிலேயே நாங்கள் வேதாகமத்தை வாசிக்கமுடியும்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

நமது மொழி எதுவாக இருந்தாலும், நம் பரம பிதா அதை புரிந்துகொள்கிறார். ஆனால் பல வேளைகளில் நமது இருதயத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கங்களை அவரிடம் வெளிப்படுத்த முடிவதில்லை. நாம் என்ன மன நிலையில் இருந்தாலும், ஜெபிக்கும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். இந்த உலகத்தின் வேதனைகள் மற்றும் நமது துன்பங்கள் பற்றி “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் நமக்காக இடைபடுவதோடு ஒப்பிடுகிறார். “ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 26) என்று கூறுகிறார்.

கடவுளின் பரிசுத்த ஆவியானவர் நம்மை முற்றிலும் அறிவார். நமது வாஞ்சைகள், நமது இருதயத்தின் நினைவுகள், நம் மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத வார்த்தைகள் ஆகிய அனைத்தையும் அவர் அறிவார். நாம் கடவுளோடு பேச அவர் உதவுகிறார். குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவுகிறார் (வச. 29).

நமது பரம பிதா நம் மொழியை புரிந்துகொள்கிறார். அவரது வார்த்தையாகிய வேதாகமம் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் சிரத்தை இல்லாமலோ, சிறியதாகவோ ஜெபம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக பிதாவோடு பேசி, நமக்கு உதவுகிறார். ஜெபத்தின்மூலம் நாம் அவரோடு பேச அவர் வாஞ்சையாய் இருக்கிறார்.

பாலங்களைக் கட்டுதல்

எங்கள் குடியிருப்புப் பகுதியில்,வீடுகளைச் சுற்றி, உயரமான காங்க்ரீட் சுவர்கள் காணப்படும். பல சுவர்களின்மேல் மின்சார முள்கம்பிகளும் இருக்கும். திருடர்கள் வருவதைத் தடுப்பதற்காக இவை போடப்பட்டுள்ளன.
 
எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இதனால் பல சமயங்களில் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்புமணி  வேலை செய்வதில்லை. இதுபோன்ற சமயங்களில், உயரமான சுற்றுச்சுவர் இருப்பதால் எங்களைப் பார்க்க வருபவர்கள் சுட்டெரிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் வெளியில் நிற்க நேரிடும். அழைப்புமணி வேலை செய்தாலும்,வந்திருப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அவர்களை உள்ளே அழைப்போம். எங்கள் சுற்றுச்சுவர் திருடர்கள் வராமல் தடுத்தாலும், அவை மற்றவர்களிடம் பாகுபாடு காண்பிக்கும் சுவர்களாக மாறிவிடுகின்றன. பார்க்க வந்திருப்பவர் அத்துமீறி நுழைபவராக இல்லாதபோதும் அந்தச் சுவர்கள் ஒரு தடையாக இருக்கின்றன.
 
இயேசு கிணற்றருகில் சந்தித்த  சமாரியப் பெண்ணுக்கும் பாகுபாடு குறித்த குழப்பம் ஏற்பட்டது. யூதர்களும் சமாரியர்களும் சம்பந்தம் கலப்பதில்லை. எனவே இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க,சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்?" (யோவான் 4:9) என்றாள். அவள் இயேசுவிடம் பேசியபோது,அவளிடமும்,அவள் அயலாரிடமும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அனுபவத்தைப் பெற்றாள் (வச. 39-42). விரோதம், பாரபட்சம் போன்ற தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் பாலமாக இயேசு செயல்பட்டார்.
 
வேற்றுமை உணர்வு நம்மிடம் இருப்பது உண்மை. நம் வாழ்வில் அதை அடையாளப்படுத்த வேண்டும். எந்த தேசத்தவர்,அவர் சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இயேசு காட்டியதுபோல நாமும் மக்களைச் சந்திக்கலாம். அவர் பாலங்களைக் கட்ட வந்தார்.
 

அவர் நம்மை அறிவார்

என்னுடைய கிராமத்தை அடைய நான் இரவில் 100 மைல்கள் காரை ஓட்டி, பிரயாணம் செய்வதை தேவன் அறிவாரா? நான் இருந்த நிலையை நான் சொல்கின்றேன், என்னுடைய உடல் வெப்பநிலை ஏறிக்கொண்டிருக்கிறது. என் தலைவலிக்கின்றது. நான், “தேவனே நீர் என்னோடிருக்கிறீர் என்பதை நானறிவேன். ஆனால், நான் வேதனையிலிருக்கிறேன்” என ஜெபித்தேன்.

ஒரு சிறிய கிராமத்தினருகிலுள்ள சாலையோரம் என் காரை நிறுத்தினேன். மிகவும் சோர்ந்து பெலமிழந்து காணப்பட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து, ஒரு குரல் கேட்டது. “உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?” தன்னுடைய தோழர்களோடு, அந்த இடத்திலுள்ள ஒரு மனிதன் வந்திருந்தான். அவர்கள் வந்தது எனக்கு நன்மையாயிருந்தது. அவர்கள் தங்களுடைய கிராமத்தின் பெயரை
“நா மின் யாலா” எனக் கூறினர். “ராஜா என்னைப் பற்றி அறிவார்” என்பதே அதன் பொருள். நான் வியந்தேன். நான் அநேக முறை இந்த சமுதாயத்தினரைக் கடந்து சென்றிருக்கின்றேன். ஒரு முறையும் நின்றதில்லை. ஆனால், இந்த முறை தேவன் அந்தப் பெயரை பயன்படுத்தி, நான் தனிமையில், வேதனையோடு சாலையோரத்தில் நின்றபோது, அந்த ராஜா என்னோடிருந்தார். அந்த மனிதர் என்னை ஊக்கப்படுத்தி, கட்டாயப்படுத்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நாம் எங்கு சென்றாலும், அனுதின வேலையிலிருந்தாலும், நாம் செல்லும் வெவ்வேறு இடங்களையும், சூழ்நிலைகளையும், நாம் எப்படியிருந்தாலும் அதை தேவன் அறிவார் (வச். 139:1-4; 7-12). தேவன் நம்மைக் கைவிடுவதுமில்லை, மறப்பதுமில்லை அல்லது தேவன் அவசரவேலையின் காரணமாக நம்மை நிராகரிப்பதுமில்லை. நாம் துன்பத்திலிருக்கும் போதும் கடினமான சூழலில் அகப்படும் போதும், அது இருளானாலும், இரவானாலும் (வச. 11-12) நாம் அவருடைய பிரசன்னத்தை விட்டு மறைக்கப்படுவதில்லை. இந்த உண்மை நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நம்மை பிரமிக்கத்தக்க அதிசயமாக உருவாக்கின தேவன், நம் வாழ்நாள் முழுவதும் வழிநடத்துவார் (வச. 14).

விடுதலை செய்யப்பட்டாய்

நான் சிறுவயதில், ஒரு கிராமத்திலிருந்தபோது, கோழிக்குஞ்சுகள் என்னை மிகவும் கவர்ந்தன, எப்பொழுதாகில் நான் ஒரு கோழிக்குஞ்சைப் பிடிக்கும் போது, நான் சிறிது நேரத்திற்கு என் கரத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் விட்டுவிடுவேன். நான் விட்டப்பின்னரும், நான் கையில் வைத்திருக்கின்றேன் என்ற நினைப்பில் அந்த கோழிக்குஞ்சு அப்படியே நிற்கும். அது சுதந்திரமாக ஓட முடியும், என்றாலும் அது பிடிபட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்ளும்.

நாம் நமது நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்கும் போது, அவர் கிருபையாக நம்மைப் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிக்கின்றார். ஆனால், நம்முடைய பாவப்பழக்கங்களிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் மாற்றிக்கொள்ள நேரமாகுமென்பதால், நாம் இன்னும் சாத்தானின் பிடியிலிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றான். ஆனால், தேவனுடைய ஆவியானவர் நம்மை விடுவித்துவிட்டார். அவர் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ரோமாபுரியாருக்கு பவுல் சொல்வதென்னவெனின், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமால் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:1-2).

நம்முடைய வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஆகியவற்றின் மூலம் தேவன் செயல்பட்டு நம்மை; சுத்திகரித்து அவருக்காக வாழ உதவுகின்றார். நாம் இன்னமும் விடுதலையாகவில்லை என்ற உணர்வை விட்டுவிட்டு, நாம் தேவனோடு நடக்கின்றோம் என்ற நம்பிக்கையோடிருக்க வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது.

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு சொல்கின்றார். தேவனுக்குள் நாம் பெற்ற சுதந்திரம் நம்மை தேவனை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் தூண்டுகிறது.

தேவனின் நன்மைகளுக்காகத் துதியுங்கள்

எங்களது வேத ஆராய்ச்சி குழுவிலுள்ள ஒருவர் ‘‘நாம் நம்முடைய சொந்த சங்கீதத்தை எழுதலாமே!” என்று கூறினார். ஆனால் எல்லாருக்கும் எழுதும் திறமையில்லையே என சிலர் எதிர்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கத்தையளிக்க அவர்களும் எழுதுவதற்கு இசைந்தனர். ஒவ்வொருவரும் தேவன் அவரவர் வாழ்வில் செய்த செயல்களை விவரித்துப் பாடலொன்றினை எழுதினோம். சோதனைகள், பாதுகாப்பு, அன்றன்று தேவைகளைப் பெறல், வேதனைகள், கண்ணீர் ஆகியவற்றிலிருந்து வேதனைகளைத் தாங்கிய செய்திகள் வந்து எங்கள் சங்கீதங்களாயின. சங்கீதம் 136 போன்று, ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்தின.

நம் அனைவருக்குமே தேவனுடைய அன்பினை விளக்கக்கூடிய அனுபவங்கள் உண்டு. அவற்றை நாமும் எழுதவோ, பாடவோ அல்லது சொல்லவோ முடியும். சிலருக்கு அவர்களின் அனுபவம் ஒரு நாடகம் போன்றதாகவோ அல்லது சங்கீதம் 136ல் கூறியுள்ளபடி தேவன் தம்முடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததையும், தங்கள் பகைவர்களை மேற்கொண்டதையும் நினைத்துப் பார்ப்பதைப் போன்றிருக்கும் (வச. 10-15) மற்றவை தேவனுடைய மகத்துவமான படைப்புகளை விளக்குகின்றன. வானங்களை அவருடைய ஞானத்தினால் உண்டாக்கினார்... தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினார்... பெரிய சுடர்களை உண்டாக்கினார். பகலில் ஆளச் சூரியனைப் படைத்தார்.... இரவில் ஆளச் சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார் (வச. 5-9).

தேவன் யாரெனவும், அவர் என்னென்ன படைத்தார் என்பதையும் நினைக்கும் போது நாம் அவரைத் துதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும் அவரை மகிமைப்படுத்தவும் ஆரம்பிப்போம். நாம் ‘‘ஒவ்வொருவரும் சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஆவியில் வெளிப்படும்
ஞானப்பாட்டுகளினாலும்” (எபே. 5:19) தேவன் செய்த நன்மைகளையும் என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பினையும் எண்ணி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். தேவனுடைய அன்பினைக் குறித்த உன்னுடைய அனுபவத்தை, அவரைப் போற்றிப் பாடும் சங்கீதங்களாக மாற்றி, என்றும் நிலைத்திருக்கும் அவருடைய நன்மைகளை எண்ணி மகிழ்ந்திரு.

பாடுகள் தரும் பெலன்

பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றதினால், வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த அவனுடைய குடும்பத்தினர் அவனை விரட்டிவிட்டார்கள். இருப்பினும், கிறிஸ்தவ சமுதாயம் அவனை வரவேற்று அவனுடைய படிப்பைத் தொடர்வதற்கு அவனுக்கு உற்சாகமளித்தது, அவனுடைய பொருளாதார தேவைகளையும் சந்தித்தது. பின்நாட்களில், அவனுடைய சாட்சி ஒரு பத்திரிக்கையிலே வந்ததால், அவன் கூடுதலாய் உபத்திரவப்பட்டான்.

ஆனாலும், அந்த வாலிபன் தன் குடும்பத்தினரை கவனியாமலில்லை. உடன்பிறந்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவன் குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாது என்று சட்டம்போட்டாலும், அவன் அப்பாவை பார்த்துப்பேச தவறியதில்லை. அப்பா நோயுற்றபோது, உறவினரின் அவமதிப்பை பொருட்படுத்தாமல், அவரை கவனித்துக் கொண்டான், விரைவில் குணமடையவும் ஜெபித்தான். அப்பா பூரண குணமடைந்ததும், அந்த மகன்மேல் குடும்பத்தார் அக்கறை காட்டத் தொடங்கினர். காலப்போக்கில், அவனுடைய அன்பான சாட்சி அவர்களுடைய உள்ளத்தை உருக்க ஆரம்பித்தது – குடும்பத்தில் சிலர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளவும் விரும்பினர்.

கிறிஸ்துவை பின்பற்றவேண்டும் என்று நாம் எடுக்கின்ற தீர்மானம் நமக்கு சங்கடங்களை கொண்டுவரலாம். “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். என பேதுரு எழுதியிருக்கிறார்.,
(1 பேது. 2:19). நம்முடைய விசுவாசத்தின் காரணமாக பேதுரு கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்திடும்போது, “…கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (வச. 21) என்பதினாலேயே அப்படி செய்கிறோம்.

மற்றவர்கள் இயேசுவை அவமதித்தபோதும், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
(வச. 23). நம்முடைய பாடுகளில் இயேசுவே நமக்கு மாதிரியாக இருக்கிறார். பாடுகளில் பெலனடைய நாம் இயேசுவை அண்டலாம்.

தொடருகிறேன்

நான் பணிபுரியும் அலுவலக கட்டடத்தின் வெளிப்புறமாக நான் நடந்து சென்ற போது, கான்கிரீட்
தள ஓடுகளில் ஏற்பட்ட சிறிய பிளவில் மிக அழகிய மலர் வளர்ந்திருப்பதைப் பார்த்து ஓடுகளில் அதிசயித்தேன். அது வளருவதற்கு ஏற்ற சூழல் இல்லாதிருந்த போதிலும் அந்தச் செடி தனக்கு ஒரு சிறிய பிடிமானம் கிடைத்ததைக் கொண்டு அந்த வறண்ட குறுகிய திறப்பில் செழித்து வளர்ந்துள்ளது. அந்த செடிக்கு மேல் பகுதியிலுள்ள குளிரூட்டியிலிருந்து (AC) நாள் முழுவதும் தண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை பின்னர் நான் கவனித்தேன். அந்தச் சுற்றுப்புறத்தில் வளருவதற்கு ஏற்ற சூழலில்லாத போதும், அந்த செடியானது தனக்குத் தேவையான உணவை மேலிருந்து வழிந்த நீரிலிருந்து பெற்றுக்கொண்டது.

கிறிஸ்தவ வாழ்வில் வளர்வது சில வேளைகளில் கடினமாகத் தோன்றலாம். ஆனால் நாம் தேவனோடு நம்மைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டோமேயாகில் தடைகளையெல்லாம் மேற்கொள்ள முடியும். நம்முடைய சூழ்நிலை, ஒருவேளை நமக்கு சாதகமற்ற சோர்வடையச்செய்யும் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நாம் நம் தேவனோடுள்ள உறவில் தொடரும் போது அந்த தனிமையானச் செடியைப் போன்று செழித்திருக்கலாம். இதுவே அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும்கூட, மோசமான கஷ்டங்களையும் சவால்களையும் அவர் சந்திக்க நேரிட்டபோதும் (2 கொரி. 11:23-27) அவர் தளர்ந்து போகவேயில்லை. கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். “மேலும்” பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி. 3:12)

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு என்று சொல்லுகிறார் (4:13). எனவே நாமும் நமக்கு பெலன் தருகின்ற கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தொடருவோம்.

தேவனை அணுகுதல்

ஜெபிக்க விரும்பிய ஒரு பெண் காலியாக இருந்த ஒரு நாற்காலியைப், பிடித்து இழுத்து அதன் முன் முழங்கால்படியிட்டாள். பின் கண்ணீரோடுகூட அவள் “எனது அன்பின் பரம தகப்பனே, இந்த நாற்காலியில் உட்காரும், நீங்களும், நானும் பேச வேண்டியது உள்ளது” என்று கூறினாள். பின்பு அந்தக் காலியான நாற்காலியைப் பார்த்து ஜெபித்தாள். அந்தக் காலியான நாற்காலியில் தேவன் அமர்ந்து அவளது ஜெபத்தைக் கேட்பதாக அவள் கற்பனை பண்ணியதின்மூலம், தேவனண்டை நெருங்கி வருவதாக அவன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள்.

சர்வ வல்லமையுள்ள தேவனோடு ஈடுபாடு கொண்டு அவரோடு செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. நாம் அவரை நெருங்கும்பொழுது அவர் நம்மண்டை நெருங்கி வருவார் (யாக். 4:8). “சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று (மத். 28:20)  அவர் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார். நம்முடைய பரமபிதா நாம் அவரண்டை நெருங்கி வரவேண்டுமென்று எப்பொழுதும் காத்திருப்பதோடு, நமது விண்ணப்பங்களுக்கு செவி சாய்க்கவும் ஆயத்தமாக இருக்கிறார்.

நாம் களைப்பாக உணரும் பொழுதோ, துக்க உணர்வால் மேற்கொள்ளப்படும் பொழுதோ, சுகவீனமாக பெலவீனமாக இருக்கும் பொழுதோ, ஜெபம் பண்ணுவதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நாம் பெலனற்று இருக்கும் பொழுது, அல்லது சோதனைகளை சந்திக்கும் பொழுது, இயேசு நமக்காக இரங்குகிறார். “ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16).