எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்டேவிட் மெக்காஸ்லாண்ட்

விழித்தெழுவதற்கான அழைப்பு

நான் அடிக்கடி வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் செய்த வருடங்களில், ஒவ்வொரு நாளும் ஹோட்டலில் தங்குவதற்கு செல்லும் பொழுது, அங்குள்ள பணியாளர்களிடம் காலை விழித்து எழும்புவதற்காக தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளுவேன். என்னுடைய கடிகாரத்தில் அலாரம் வைத்திருந்தாலும் சத்தமாக ஒலிக்கும் டெலிபோன் மணி அடித்தால்தான் நான் என் படுக்கையிலிருந்து விழித்தெழும்பி என்காலை வேலைகளை கவனிக்க இயலும்.

வெளிப்படுத்தல் புத்தகத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதின பொழுது, ஆவிக்கேற்ற எழுப்புதற்கான அழைப்பைப் பற்றி எழுதியுள்ளார். சர்தை சபைக்கு இயேசுவினிடத்திலிருந்து வந்த செய்தியை எழுதின பொழுது “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாய் இருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு சாகிறதிற்கேதுவாக இருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை” (வெளி 3:1-2) என்று எழுதினார். ஆவியிலே சோர்வடையும் பொழுது நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவில் ஒரு மந்த நிலை மெதுவாக ஏற்படுவதை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். ஆனால், கர்த்தர் “நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து அதைக் கைக் கொண்டு மனந்திரும்பு (வச. 3) என்று நினைவு கூறச் செய்கிறார்.

ஒவ்வொரு நாள் காலையும் வேதம் வாசித்து ஜெபிக்க சிறிது நேரத்தை ஒழுங்காக ஒதுக்கி வருவது ஆவிக்கேற்ற வாழ்க்கையில் நாம் விழிப்புடன் இருக்க உதவுகிறது. இயேசுவோடு நேரம் செலவழிப்பது ஒரு வேலையல்ல. ஆனால், அந்த நாளில் நமக்கு முன்னாலுள்ள காரியங்களுக்கு நம்மை தேவன் தாமே ஆயத்தப்படுத்துவதற்கான மகிழ்ச்சியான நேரம் அது.

தெய்வீகக் குறுக்கீடுகள்

ஓவ்வொரு நாளும் நம்முடைய நேரம் நம்மால் நம்ப இயலாத அளவிற்கு, பல்வேறு குறுக்கீடுகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறதென்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நமது வீட்டிலோ அல்லது பணி செய்யும் இடத்திலோ, ஒரு தொலைபேசி அழைப்பு, அல்லது எதிர்பாராத ஒருவரின் வருகை நமது முக்கியமான நோக்கத்தினின்று நமது கவனத்தை மாற்றிவிடுகிறது.

அன்றாட வாழ்வில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய முறையில் குறுக்கீடுகள் ஏற்படுவது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இயேசு குறுக்கிடுகளாகத் தோன்றிய அநேக காரியங்களை வேறுபட்ட முறைகளில் கையாண்டார். சுவிசேஷங்களில்
அநேகந்தடவை தேவையிலுள்ள ஒருவருக்கு உதவி செய்ய, அவர்செய்து கொண்டிருந்த செயலை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பதைப் பார்க்கிறோம்.

இயேசு சிலுவையில் அறையப்பட எருசலேமிற்கு செல்லும் வழியில், சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்!” (லூக். 18:35-38) என்று சத்தமிட்டு கூப்பிட்டான். கூட்டத்திலிருந்த சிலர் அவனை அமைதியாக இருக்கும்படி அதட்டினார்கள். அவனோ தொடர்ந்து இயேசுவை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். இயேசு நின்று, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்.” என்றான். “இயேசு அவனை நோக்கி நீ பார்வையடைவாயாக. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார்; (வச. 41-42).

உண்மையாகவே நமது உதவி தேவைப்படும் மக்களால், நமது செயல் திட்டங்கள் பாதிக்கப்படும் பொழுது நாம் கரிசனையுடன் எப்படி செயல்பட வேண்டுமென்று தேவனிடம் ஆலோசனை கேட்கலாம். நாம் இடையூறுகள் என்று நினைக்கும் காரியங்கள் ஒருவேளை அன்றய நாளுக்குரிய தேவனுடைய திட்டமாக இருக்கலாம்.

காலங்களுக்கேற்ற ஆடைகள்

நான் வாங்கிய குளிர்கால ஆடையின் விலைச்சீட்டை அகற்றிய போது அதன் பின் பக்கத்தில் “எச்சரிக்கை! இந்த ஆடை உங்களை வெளியேபோய் அங்கேயே இருக்க விரும்பச் செய்யும்.” சரியான ஆடை அணிந்திருந்தால், மாறுகிற எந்தக் கடினமான கால நிலையையும் தாங்கவும் அதில் சுகமாயிருக்கவும் முடியும்.

இதே வழி முறை நமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் பொருந்தும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, எந்த கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளை தேவன் வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி. ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:12-13).

தேவன் தரும் இரக்கம், தாழ்மை, சாந்தம் ஆகிய ஆடைகள் நம்மைப் பகை, குற்றம்சாட்டப்படல் ஆகியவற்றை, பொறுமை, மன்னிப்பு, அன்புடன் எதிர்கொள்ளச் செய்கின்றன. அவைகள் நமது வாழ்க்கைப்புயல்களில் நிலைத்து நிற்க பெலன்தருகின்றன.

நம்மை எதிர்க்கும் சூழ்நிலைகள் வீட்டிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ வரும்பொழுத, தேவனுடைய ஆடைகளை அணிந்துகொண்டால், அவை நம்மைப் பாதுகாத்து ஒரு நம்பிக்கையுள்ள மனப்பான்மையைத் தருகின்றன. “இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 14).

தேவனுடைய ஆடைகளைத்தரிப்பது, காலநிலையை மாற்றாது. ஆனால், தரித்திருப்பவனை பெலப்படுத்துகிறது.

நடத்துபவரைக் கவனி

உலக புகழ்பெற்ற வயலின் மேதை ஜோசுவா பெல், செயின்ட் மார்டின் உயர்கல்வி கூடத்தின் 44 உறுப்பினர்களைக் கொண்ட இசைக் குழுவினை நடத்தும் போது, அவர் எல்லா நடத்துனர்களும் பயன்படுத்தும் ஒரு சிறிய கோலை பயன்படுத்தாமல், அவர் தன்னுடைய உயர்தர வயலினை மற்றவர்களோடு சேர்ந்து இசைப்பதன் மூலம் நடத்தினார். பெல் ஒரு முறை கொலொரடா ஷேயோவிற்கு பேட்டியளித்தபோது “நான் என் இசைக்கருவியை வாசிக்கும் போது என்னால், நான் நினைக்கின்ற எல்லாவித வழிநடத்தலையும், குறியீடுகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்க முடிகிறது. என்னுடைய வயலினில் உள்ள ஒரு சிறிய இறக்கம் அல்லது என் கண்புருவத்தின் ஏற்றம் அல்லது நான் என் இசைமீட்டியை (bow) இழுக்கின்ற விதத்திலிருந்து அந்த முழு இசைக் குழுவினரும் நான் எத்தகைய ஒலியை எதிர்பார்க்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூறினார்.

இந்த இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஜோசுவா பெல்லை உற்று கவனிப்பது போல வேதாகமும் நம்முடைய கண்களை இயேசு கிறிஸ்துவின் மீது வைக்குமாறு நமக்கு அறிவுறுத்துகிறது. எபிரெயர் 11ல் விசுவாச வீரர்களைப் பட்டியலிட்டப்பின் அதன் ஆக்கியோன் சொல்லுகிறார். “ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).

“இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என இயேசு வாக்களித்துள்ளார். அவர் என்றென்றும் நம்முடனே இருக்கிறபடியால், நம் வாழ்க்கையென்னும் இசையை அவர் மீட்டும் போது நம்முடைய கண்களை அவர் மீது நிறுத்தக் கூடிய மிக வியப்பூட்டும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம்.

ஒரு கணம் தரித்திரு

‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்ற திரைப்படத்தின் மூன்று பகுதிகளையும் குறித்த ஒரு விவாதத்தின் போது ஒரு இளைஞன், தான் இந்த கதைகளை திரையில் பார்ப்பதைவிட புத்தகத்தில் வாசிப்பதையே விரும்புவதாகக் கூறினான். ஏனென்று கேட்டபோது, “ஒரு புத்தகத்தோடு நான் எவ்வளவு நேரமானாலும் தரித்திருக்க முடியும்” என்றான். ஒரு புத்தகத்தோடு விசேஷமாக வேதபுத்தகத்தோடு அதிக நேரம் செலவிடுவதில் வல்லமை இருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள கதைகளோடு நாம் ஒன்றுவது போன்ற உணரச் செய்யும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.

வேதாகமத்தில் ‘விசுவாச அதிகாரம்’ என்றழைக்கப்படும் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் 19 மக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓவ்வொருவரும் கடினப்பாதை வழியே பயணித்தாலும், சந்தேகங்களிருந்தாலும் அவர்கள் கர்த்தருக்குக் கீழ்படிதலை தேர்ந்துகொண்டனர். “இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக் கொண்டு பூமியின் மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள் (வச. 13).

வேதத்திலுள்ள மக்கள், நிகழ்வுகளோடு ஒன்றித்து யோசிக்காமல், அதன் பக்கங்களை வேகமாக வாசித்துச் செல்வது எளிது. நம்மேல் நாம் சுமத்திக் கொள்ளும் நேரத் திட்டங்கள் தேவனுடைய உண்மையையும், அவர் நம் வாழ்விற்கு வைத்திருக்கும் திட்டங்களையும் ஆழ்ந்து அறிய முடியாதபடி தடை செய்கின்றன. ஆயினும் தேவ வார்த்தைகளோடு தரித்திருக்கும் போது, நம்மைப் போன்ற சாதாரண வாழ்வில் இருந்த மக்கள் எப்படித் தங்கள் வாழ்வை தேவனின் உண்மையின் மீது பதித்தனர் என்பதைக் கண்டு கொள்ள முடியும்.

நாம் தேவ வார்த்தைகளைத் திறக்கும் போது எவ்வளவு நேரமானாலும் அதனோடு ஒன்றியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம்.

துக்கம் கொண்டாடும் ஊழியம்

2002 ஆம் ஆண்டு, என்னுடைய சகோதரி மார்த்தாவும் அவளுடைய கணவன் ஜிம்மும் ஒரு விபத்தில் மரித்து சில மாதங்கள் கடந்தபோது, எங்கள் ஆலயத்தில் நடைபெறும் ‘துக்கத்தின் வழியே வளருதல்’ என்ற கருத்துப் பட்டறைக்கு வருமாறு என்னை என் நண்பன் அழைத்தான். நான் தயக்கத்தோடு, தொடர்ந்து பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணமற்றவனாய், ஒருமுறை மட்டும் கலந்து கொள்கிறேன் என்றேன். என்ன ஆச்சரியம் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பை சமாளிக்க முயலும், தேவனுடைய உதவியையும் பிறரின் உதவியையும் தேடுகின்ற ஒரு கரிசனையுள்ள ஒரு மக்கள் குழுவை நான் அங்கு கண்டேன். என் துக்கங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளல் மூலம் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டபோது, அது மீண்டும் வாரா வாரம் மனமுவந்து செல்ல என்னை இழுத்துக் கொண்டது.

நாம் மிகவும் நேசித்த நண்பரின் திடீர் இழப்பினைப் போல, இயேசுவுக்கு ஒரு தீவிரமான சாட்சியாகிய ஸ்தேவானுடைய மரணமும், ஒரு அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஆரம்ப சபையின் மக்களிடையே கொண்டு வந்தது (அப். 7:57-60). துன்புறுத்தலின் மத்தியிலும் “தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம் பண்ண அவனுக்காக மிகவும் துக்கங் கொண்டாடினார்கள்” (8:2). இந்த உண்மையுள்ள மனிதர் இரு காரியங்களை இணைந்து செய்தனர். அவர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணினார்கள். அதாவது ஒரு இழப்பின் முடிவு காரியங்களைச் செய்தார்கள். மேலும் அவர்கள் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள். இது தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு செயல்.

இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களாகிய நாம் நம் இழப்புகளைக் குறித்து தனியே துக்கிக்கத் தேவையில்லை. நம்மைக் காயப்படுத்தியவர்களையும் உண்மையோடும் அன்போடும் அணுக வேண்டும். நம் மீதுள்ள கரிசனையோடு நம்மோடு நிற்பவர்களையும் அவர்களது ஆறுதலையும் மனத்தாழ்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம்  இணைந்து துக்கிக்கும் போது நம் உள்ளங்களின் ஆழத்திலுள்ள துயரங்களையும் தெரிந்து வைத்திருக்கிற இயேசு கிறிஸ்து தருகின்ற சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்வதோடு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலிலும் வளருவோம்.

அமைதியாயிருங்கள்!

“இதற்கு முன் மனித வரலாற்றில் செய்யப்பட்டதைக் காட்டிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக தகவல்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அது நமக்கு முன் எப்போதும் வந்து கொண்டிருக்கிறது” (Organized Mind: தகவல்கள் மிகுந்த சகாப்தத்தில் சரியாக யோசித்தல்’ புத்தக ஆசிரியர் டேனியல் லெவிடின்) லெவிடின் கூறுகிறார், “ மிக அதிகமான புறத்தூண்டுதலுக்கு அடிமைப்பட்டவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம்” தொடர்சியாக வந்து விழும் செய்திகளும், தகவல் அறிவும் நமது மணங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஊடகங்களின் தாக்குதல் நிறைந்த இக் காலச் சூழலில், அமைதியாயிருப்பதும் சிந்திப்பதும் ஜெபிப்பதும் மிகவும் சிரமமாக வருகிறது.

சங்கீதம் 46:10 கூறுகிறது, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” ஆண்டவர் மீது கண்ணோட்டத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வசனம் நமக்கு நினைவுபடுத்துகிறது. “அமைதிவேளை” என்பது வேதத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும், தேவனுடைய மகத்துவத்தை எண்ணிப் பார்க்கவும் மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் உணர ஆரம்பித்துள்ளனர்.

சங்கீதக்காரனைப் போல நாமும், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்பதை அனுபவிக்கும் போது அது நமது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது (வச. 2), உலகின் குழப்பத்தை விட்டு தேவ சமாதானத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. தேவனுடைய முழு கட்டுப்பாட்டைக் குறித்த ஒரு அமைதியான நம்பிக்கையை நம்மில் உருவாக்குகிறது (வச. 10).

நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு குழப்பம் நிறைந்ததாய் மாறிய போதிலும், நமது பரலோக பிதாவானவரின் அன்பிலும் வல்லமையிலும் நாம் அமைதியையும் பெலத்தையும் கண்டு கொள்ளக் கூடும்.

எவரும் அணுகலாம்

இன்றைய நட்சத்திர மோக கலாச்சாரத்தில், தொழில் முனைவோர் பிரபல நட்சத்திரங்களை தயாரிப்புகளாகச் சந்தைப்படுத்துவது வியப்பளிக்கவில்லை. நட்சத்திரங்கள் தங்களது தனிப்பட்ட நேரத்தையும் தம் மீதான மக்களது ஆர்வத்தையும் விற்கத் துவங்கிவிட்டனர். 15,000 அமெரிக்க டாலர் கொடுத்தால் நீங்கள் தனியாக பாடகர் ஷகிராவைச் சந்தித்து உரையாடலாமென “வாஹினி வரா” நீயூயார்க் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்; 12,000 டாலர்கள் கொடுத்தால் 11 பேர் சமையல்களை நிபுணர் மைக்கல் சியாலெர்லோவுடன் அவரது பண்ணை வீட்டில் மதிய உணவு சாப்பிட முடியும்.

இயேசுவானவரைப் பின்தொடர்ந்து, அவரது போதனைகளைக் கேட்டு, அவரது அற்புதங்களைக் கண்டு அவரது குணமாக்கும் தொடுதலை நாடிய அநேக மக்கள் அவரை ஒரு முக்கிய நட்சத்திர நபராக நடத்தினார். ஆயினும், இயேசுவானவர் ஒருபோதும் தன்னை முக்கியப்படுத்தவில்லை அல்லது தனிமைப்படுத்திக்கொள்ளவுமில்லை. அவர் எல்லோராலும் அணுகக்கூடியவராய் இருந்தார். அவரது சீஷர்களான யாக்கோபும் யோவானும் அவரது வரப்போகும் இராஜ்யத்தில் உயரிய இடத்தை, அவரிடத்தில் தனிமையில் கேட்டபோது, “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக் காரணாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரணாயிருக்கக்கடவன்” (மாற். 10:43-44) என்று பதிலளித்தார்.

இவ்வார்த்தைகளைக் கூறியவுடன் ஓரிடத்தில் அவர் நின்றார், அவரைப் பின்தொடர்ந்தவர்களும் நின்றனர். அங்கிருந்த குருடனொருவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என இயேசு வினவினார். ஆண்டவரே “நான் பார்வை அடைய வேண்டும்” என்றான். உடனடியாகப் பார்வையடைந்து, இயேசுவுக்குப் பின் சென்றான் (வச. 51, 52).

நமது ஆண்டவர் “ஊழியங் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (வச. 4-5). அவரைப் போல நாமும் இரக்க சிந்தை உள்ளவர்களாகவும் பிறரால் எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் வாழ இன்றே முடிவு செய்வோம்.

கிருபையைக் காண்பித்தல்!

ஆமெரிக்க மாஸ்டர்ஸ் கோல்ஃப் விளையாட்டுப் போட்டி கி.பி. 1934ல் ஆரம்பமானது முதல் மூன்று வீரர்கள் மட்டுமே இரு ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கி.பி. 2016 ஏப்ரல் 10 அன்று 22 வயதான ஜார்டன் ஸ்பயத் நான்காவதாக இவ்வாறு பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இறுதியான ஒன்பது குழிகளில் தவறு செய்து, இரண்டாவதாக வந்தார். ஏமாற்றமளிக்கும் தோல்வியிலும், சாம்பியன் பட்டம் வென்ற டேனி விலட்டிடம் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட ஸ்பயத், வில்லட்டைப் பாராட்டினார். அவருக்கு முதல் குழந்தை பிறந்தது கோல்ஃப் விளையாட்டைவிட முக்கியமானதெனக் கூறினார்.

இச்சம்பவத்தைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் சஞ்சிகையில் கெரின் கிரவுஸ் எழுதுகையில், “பரிசளிக்கும் விழாவில் பொறுமையாக அமர்ந்து, வேறொருவர் பரிசு பெற்று, புகைப்படங்கள் எடுக்கப்படுவதை கண்டு ரசிப்பதற்கு கிருபை தேவை. ஸ்பயத் ஒரு வாரம் பந்தை சரியாக அடிக்கவில்லை, ஆனாலும் பாதிக்கப்படாத அவரது நற்குணம் மேலோங்கி நின்றது” எனக் குறிப்பிட்டார்.

கொலோசெயிலுள்ள இயேசுவின் சீஷருக்கு பவுல் எழுதும்போது, “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்ககொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:5) என வலியுறுத்துகிறார்.

தேவனுடைய கிருபையை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம், வெற்றியோ தோல்வியோ கிருபையை வெளிப்டுத்திக் காண்பிப்பதை நமது சிலாக்கியமாகவும் அழைப்பாகவும் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கண்களுக்கு புலப்படாத தாக்கம்

வாஷிங்டன் DCயில் உள்ள தேசீய கலைப் பொருட்களின் காட்சிக் கூடத்திற்கு நான் சென்றிருந்த பொழுது, “காற்று” என்ற தலைப்பின் கீழ் இருந்த உன்னதமான படைப்பு ஒன்றைப் பார்த்தேன். ஒரு காட்டுப் பகுதிக்குள் வீசும் புயலை அந்த ஒவியம் சித்தரித்தது. மெலிந்து வளர்ந்திருந்த மரங்கள் இடது பக்கமாக சாய்ந்திருந்தன. புதர்களும் அதே திசையில் மிக வேகமாக அசைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

அந்தப் புயலைவிட மிக வல்லமையுடன் பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகளை தேவனுடைய சத்தியத்திற்கும், அவருடைய உண்மைத் தன்மைக்கும் நேராக அசையச் செய்கிறார். ஆவியானவர் நடத்தும் வழியிலே நாம் சென்றால், நாம் தைரியமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் மாறுவோம் என்று எதிர்பார்க்கலாம். நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிந்த புத்தியை நாம் பெற்றுக் கொள்ளுவோம் (2 தீமோ. 1:7).

சில சூழ்நிலைகளில் நமது ஆவிக்கேற்ற வளர்ச்சியடையவும் மாற்றமடையவும் ஆவியானவர் நம்மை நெருக்கி ஏவும் பொழுது, நாம் செயல்பட மறுத்து விடுகிறோம். தொடர்ந்து நமது மனதில் ஏற்படும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததை வேதாகமம் ஆவியை அவித்துப் போடல் (1தெச. 5:19) என்று கூறுகிறது. காலப்போக்கில் நாம், தவறு என்று எண்ணிய காரியங்கள், அவ்வளவு தவறாகத் தோண்றாது.

தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு, தூரமாகச் சென்று விடுவோம். ஆவியானவர் தொடர்ந்து, நம்மை நெருக்கி ஏவுகையில் அவருடைய செயலிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் இருக்கும் பொழுது இந்த நிலை ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தை நம்மால் கண்டுகொள்ள இயலாது. நமது பாவத்தை நமக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிக்கலாம். தேவன் நம்மை மன்னித்து, அவரது ஆவியின் வல்லமையையும், அவரது ஆவியினால் ஏற்படும் தாக்கத்தையும் நமக்குள்ளாக புதிப்பிப்பார்.

5020வது எண்ணுடைய அறை

ஜே பப்டன் மருத்துவமனையிலிருந்த அவனது அறையை ஒரு கலங்கரை விளக்காக மாற்றிவிட்டான்.

கணவனாக, தகப்பனாக, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக இருந்த 52 வயதுடைய ஜே பப்டன் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தான். ஆனால், 5020 என்ற எண்ணுடைய அவனது அறை, அவனது சினேகிதர்களுக்கு, குடும்ப அங்கத்தினர்களுக்கு, மருத்துவமனையில் பணி செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்காக இருந்தது. ஜேவினுடைய ஆழமான விசுவாசம் அனைவரோடும் சந்தோஷமாக பழகும் தன்மை இவற்றினால் அவனது அறையில் பணிபுரிவதற்கு தாதிமார்கள் அதிகம் விரும்பினார்கள். சில தாதிமார் பணியிலில்லாத ஓய்வு நேரத்தில் கூட அவனைப் பார்க்க வந்தார்கள்.

ஒரு காலத்தில் விளையாட்டு வீரருக்கான அவனது திடகாத்திரமான உடல் வியாதியினால் மெலிந்து கொண்டிருந்த பொழுதும் அவனை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் ஊக்கத்தோடு கூடிய புன் சிரிப்போடு அவர்களை வாழ்த்துவான். “ஒவ்வொரு முறையும் நான் ஜேயை பார்க்கச் சென்ற பொழுது, அவன் மகிழ்ச்சியுடனும், நேர்மறை எண்ணங்களுடனும், நம்பிக்கையுடனும் இருந்தான். புற்று நோயால் ஏற்படுகிற மரணத்தை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தான்” என்று அவனுடைய சினேகிதர்களில் ஒருவன் கூறினான்.

ஜேயின் அடக்க ஆராதனையில் பேசிய ஒருவர், ஜே இருந்த அறை எண் 5020ற்கு ஒரு சிறப்பான அர்த்தம் உண்டு என்று குறிப்பிட்டார். அவர் பேசின பொழுது ஆதியாகமம் 50:20ல் யோசேப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்ற பொழுது, தேவன் அதை மாற்றி அமைத்து “வெகு ஜனங்களை உயிரோடு காக்கும்படி” தீமையை நன்மையாக மாற்றிவிட்டார். ஜேவின் வாழ்க்கையில் புற்றுநோய் பாதித்தது ஆனால், தேவனுடைய கரம் அவனது வாழ்க்கையில் செயல்படுவதை உணர்ந்த ஜே தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே நடத்துவார் என்று கூறுமளவிற்கு விசுவாச வாழ்க்கையை நடத்தினான். ஆதனால்தான் புற்று நோயினால் ஏற்பட்ட வியாதியின் கோரத்தை இயேசுவைப்பற்றி பிறருக்கு அறிவிக்கும் திறந்த வாசலாகமாற்றினான்.

மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த பொழுதும் கூட நமது இரட்சகர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவராக இருந்தான். நமது நம்பிக்கைக்கு பாத்திரமான தேவன் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை, அவன் விட்டுச் சென்ற நம்பிக்கைக்கு தலை சிறந்த உதாரணமாகும்.

சிருஷ்டிப்பில் கவனம்

ஓவிகி ஆற்றில் பெரிய பழுப்புநிற பெரிய ட்ரவுட் மீன்கள் முட்டைகளிடும் வழக்கத்தை செய்து கொண்டிருந்தன. வேறு சில ட்ரவுட் மீன்கள் கூடு கட்டும் செயலை செய்து கொண்டிருந்தன. அவைகள் கூழாங்கற்கள் நிறைந்த ஆழமற்ற பகுதிகளில் தோண்டி கூடுகளை அமைத்துக் கொண்டிந்தன.

மீன்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மீனவர்கள், மீன்கள் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கும் சமயம் எது என்பதை நன்கு அறிந்திருந்ததினால், மீன்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள். முட்டைகளை நசுக்கிவிடாமல் இருப்பதற்காக கற்களாலான திட்டுக்களில் நடப்பதையும், மீன்களின் கூடுகளை குப்பை கூளங்கள் மூடி விடாமல் இருப்பதற்காக கடல் நீரில் நடப்பதையும் தவிர்த்து விடுவார்கள். ட்ரவுட் மீன்கள் அவைகளின் கூடுகளின் அருகில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அவற்றைப் பிடிக்க மாட்டார்கள்.

இந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மீன் பிடித்தலுக்கான ஒழுக்க நெறிகளை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், இதைவிட ஆழமான மிகவும் அர்த்தமுள்ள ஒரு காரணம் உண்டு.

இந்த பூமியை ஆண்டுகொள்ளுமாறு மனிதனுக்கு தேவன் அதை அளித்துள்ளார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (ஆதி. 1:28-30). இந்தப் பூமியை பயன்படுத்த தேவன் இதை நமக்கு சொந்தமாக கொடுத்துள்ளார். ஆனால், நாம் அதை அதிகமாக நேசிப்பவர்களாக அதை பயன்படுத்த வேண்டும்.

தேவனுடைய கரத்தின் கிரியைகளைப் பற்றி என் மனதில் ஆழ்ந்து சிந்திக்கிறேன். பள்ளத்தாக்கின் மறுபக்கத்திலிருந்து ஒரு கவுதாரி கூப்பிடுகிறது. ஒரு ஆண் கலை மான் சண்டைக்கு ஆயத்தமாகி சத்தமிடுகிறது. தூரத்தில் ஒரு கூட்ட நிண்ட கால்களையுடைய மான்கள் காணப்படுகின்றன. நீரோடையில் பல நிற வண்ணப் புள்ளிகளுடைய ட்ரவுட் மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு நீர் நாய் அதன் குட்டிகளோடு நிரோடையில் விளையாடிக் கொண்டிருக்கிறது இவை பரலோகப்பிதா தம்முடைய அளவற்ற அன்பினால் எனக்கு அளிக்கும் கொடைகளாகும். ஆகவே அவற்றை எல்லாம் நான் நேசிக்கிறேன்.

நான் எவற்றை நேசிக்கின்றேனோ அவற்றை பாதுகாக்கின்றேன்.