நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டினிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, என்னுடைய அறையிலிருந்த மேசையின் மீது ஓர் அட்டையைக் கண்டேன். அதில்,

உங்களை வரவேற்கிறோம், உங்களுக்காக நாங்கள் செய்யும் ஜெபம்.

“இங்கு நீங்கள் தங்கியிருக்கும் போது நல்ல ஓய்வுகிடைக்கட்டும், உங்களுடைய பயணங்கள் பயனுள்ளவையாயிருக்கட்டும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களைப் பாதுகாத்து, தன்னுடைய முகப்பிரகாசத்தை உங்கள் மீத வீசச் செய்வாராக” என்றிருந்தது.

இந்த விடுதியை நடத்தும் நிறுவனம் இந்த அட்டையை வைத்திருந்தது. எனவே நான் அவர்களைக் குறித்து மேலும் அறிய ஆவல்கொண்டு, அவர்களுடைய வலைதளத்திற்குச் சென்று அவர்களுடைய கலாச்சாரம், வலிமை, மற்றும் அவர்களின் பண்புகளைக் குறித்துக் தெரிந்து கொண்டேன். மக்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் நேர்த்தியை எட்டிவிட முயற்சித்திருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையை தங்களின் வேலைத்தளங்களிலும் வெளிக்காட்டியுள்ளனர்.

இவர்களுடைய இந்த அணுகுமுறை, ஆசியா முழுமையிலும் சிதறடிக்கப்பட்ட இயேசுவின் சீடர்களுக்கு பேதுரு எழுதிய வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர்களைப் பேதுரு ஊக்கப்படுத்துகின்றார். கர்த்தராகிய தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்கள் வாழுகின்ற சமுதாயத்தினரிடையே விளக்கிக் காட்டும்படி கூறுகின்றார். அவர்கள் அச்சுறுத்தலையும், பாடுகளையும் அனுபவிக்க நேர்ந்தாலும் பயப்படாமல், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேது. 3:15) என்று கூறுகின்றார்.

என்னுடைய நண்பர் ஒருவர் இதனையே “உங்கள் வாழ்க்கை முறைக்கான விளக்கத்தைத் தாருங்கள் என்று கேட்குமளவிற்கு வாழ்ந்துகாட்டுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நாம் எங்கு வேலை செய்தாலும், வாழ்ந்தாலும் அங்கு தேவ பெலத்தோடு தேவன் மீதுள்ள நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவோம். நம்முடைய நம்பிக்கையைக் குறித்து நம்மிடம் கேட்பவர்களுக்கு மரியாதையோடும், நிதானத்தோடும் பதிலளிக்க எப்பொழுதும் தயாராக இருப்போமாக.