பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.கே. செஸ்டர்டனின் எழுத்துக்களை அநேக ஆண்டுகளாக நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. அவருடைய நகைச்சுவையும், நுண்ணறிவும் என்னைச் சிரிப்புக்குள்ளாக்குவதோடு சிந்திக்கவும் வைத்தது. எடுத்துக்காட்டாக, “சாப்பாட்டிற்கு முன் கிருபை என்று சொல்லுகிறீர்கள். நல்லது. நான் சொல்லுகிறேன், விளையாட்டிற்கும், கேளிக்கைகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகங்களுக்கும், புத்தகத்தைத் திறப்பதற்கும், எழுதுவதற்கும், படம் வரைவதற்கும், நீந்துவதற்கும், வாள் சண்டைக்கும், குத்துச் சண்டைக்கும், நடப்பதற்கும், நடனத்திற்கும், பேனாவை மையில் நனைப்பதற்கு முன்பும் கிருபை வேண்டும்.”

ஒவ்வொரு வேளை உணவிற்கு முன்பும் நாம் தேவனுக்கு நன்றி சொல்வது நல்லது. ஆனால், அது அத்தோடு நின்றுவிடக் கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு முயற்சியையும் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டியவையாகப் பார்க்கின்றார். அவற்றை தேவ நாம மகிமைக்காக செய்ய வேண்டுமெனவும் சொல்கின்றார். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ. 3:17) என்று கூறுகின்றார். பொழுதுபோக்கு, தொழில் மற்றும் கல்வி ஆகியவை நாம் தேவனைக் கனப்படுத்தவும், நம்முடைய நன்றியை தேவனுக்குச் செலுத்தும் படியாகவும் நமக்கு கொடுக்கப்பட்ட வழிகளேயாம்.

கொலோசெ சபையின் விசுவாசிகளுக்கு பவுல் “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, அதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (வச. 15) என்று கூறுகின்றார்.

நாம் தேவனுக்கு நன்றிசொல்ல நினைக்கும் எவ்விடமும், அவரை கனப்படுத்த நினைக்கும் எந்நேரமும் நாம் “கிருபை” என்று சொல்லக் கூடிய மிகச் சிறந்த இடமாகும்.