இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.

இந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”

அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.

யார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.

உன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.