எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்எமி பவுச்சர் பை

தேவன் கிரியை செய்கின்றார்

‘‘சமீபத்தில் தேவன் உன்னில் கிரியை செய்ததை எப்படி கண்டு கொண்டாய்?” என்ற கேள்வியைச் சில நண்பர்களிடம் கேட்டேன். ஒரு நண்பன் பதிலளித்தான், ஒவ்வொரு நாள் காலையும் வேதத்தை வாசிக்கும்போது தேவன் கிரியை செய்வதைக் காண்கின்றேன்; ஒவ்வொரு புதிய நாளையும் நான் எதிர் நோக்க எனக்கு உதவி செய்வதில் காண்கின்றேன்; நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் என்னோடிருக்கிறார் என்று நான் காண்கின்றேன்; நான் சவால்களைச் சந்திக்க அவர் எனக்கு உதவி செய்து மகிழ்ச்சியைத் தருகின்றார். எனக் கூறினான். அவனுடைய பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனிடத்தில் அன்புகூருகின்றவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தைகளும் நமக்குள்ளே வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவரும் நம்மோடிருந்து நம்மில் கிரியை செய்கின்றார்.

தேவனைப் பின்பற்றுகிறவர்களுக்குள்ளே தேவனுடைய கிரியை அற்புதமாயிருக்கிறது. எபிரெயரை எழுதியவர் தன்னுடைய கடிதத்தின் முடிவில் ஆசீர்வாதம் கூறும் போது ‘‘இயேசு
கிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து... (எபி. 13:21) என முடிக்கின்றார். இந்த முடிவுரையில் எழுத்தாளர் தன்னுடைய கடிதத்தின் முக்கிய கருத்தினை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றார். தேவன் நம்மைப் பின்பற்றுகின்ற தன்னுடைய ஜனங்களை பெலப்படுத்தி, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக அவர்களில், அவர்கள் மூலமாகச் செயல்படுகின்றார்.

தேவன் நம்மில் கிரியை செய்கின்ற ஈவானது நம்மை அதிசயிக்கச் செய்கின்றது. நமக்கு விரோதமாகச் செயல்பட்ட ஒருவரை மன்னிக்கவும் கடினமான சிலரிடம் பொறுமையாயிருக்கவும் நம்மில் செயல்படுகின்றார். ‘‘சமாதானத்தின் தேவன்” (வச. 20) அவருடைய அன்பையும், சமாதானத்தையும் நம்மூலம் பெருகப்பண்ணுகிறார். சமீபத்தில் தேவன் உன்னில் எப்படி கிரியை செய்தார்?

நெருக்கமாய் இருத்தல்

என்னுடைய மகளை பள்ளியில் விட்டுவிட்டு நீண்ட தூரம் நடந்து என் வீட்டிற்கு வரும் நேரத்தை, வேதாகமத்திலிருந்து சில வசனங்களை மனப்பாடம் செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தச் சில நிமிடங்களை தேவனுடைய வார்த்தைகளை என் மனதில் நினைத்துப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளும்போது அந்த வசனங்கள் என் மனதிற்குள் மீண்டும் இரவு நேரங்களில் வருவதுண்டு. அவை எனக்கு மிகுந்த ஆறுதலையும், ஞானத்தையும் தருவதாக அமைந்தன.

வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார். அவர்கள் தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் பற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றார் (உபா. 6:1-2) அவர்கள் செழித்திருக்கும்படி இந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தில் இருக்க வேண்டும். அவைகளைக் குறித்து அவர்களின் பிள்ளைகளோடும் பேசி (வச. 6-7) போதிக்க வேண்டும். அவைகளை கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாகவும் வைக்க வேண்டும். (வச. 8) அவர்கள் தேவனுடைய போதனைகளை மறக்காமல் அதன்படி வாழ்ந்து தேவனை கனம் பண்ணி அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படி கூறுகின்றார்.

நீ இன்று தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு வைத்திருக்கின்றாய்? ஒரு யோசனை என்னவெனில், வேதத்திலிருந்து ஒரு வசனத்தை எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும்போதும் அல்லது உணவருந்தும் போதும் அந்த வசனத்தை வாசித்து அதை உன் மனதிற்குள் பதித்து வை. அல்லது படுக்கைக்குச் செல்லுமுன் வேதாகமத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை படிப்பதை அந்த நாளின் கடைசி செயலாக வைத்துக் கொள். இவ்வாறு வேத வசனங்களை நம் இருதயத்தில் வைத்துக்கொள்ள அநேக வழிகளுள்ளன.

சங்கலிகளை முறித்தல்

ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

அவசரம் வேண்டாம்

“அவசரகுணத்தை எப்படியாகிலும் விட்டுவிடு” எனும் சிந்தனையாளர் டாலஸ் விலாரட் அவர்களின் கூற்றை என்னுடைய இரண்டு நண்பர்கள் எனக்கு ஞாபகப்படுத்தினபோது, அதனைக் கவனிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். நான் எங்கே சுற்றுகிறேன், எங்கே என் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கிறேன்? எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய ஆலோசனை மற்றும் உதவியை நாடாமல், எங்கே நான் அவசர அவசரமாக ஓடுகிறேன்? தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், அந்த வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்து தேவன் மற்றும் தேவனுடைய ஞானத்தின் பக்கமாய் என் மனதை திசைத்திருப்பினேன். என்னுடைய வழிகளை நான் சார்ந்திராமல், அவரை நம்புவதற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

சொல்லப்போனால், அவசர அவசரமாக ஓடுவது தீர்க்கதரிசி ஏசாயாவின் “பூரண சமாதானத்துக்கு” எதிரான ஒன்றாகவே தோன்றுகிறது. “உறுதியான மனதையுடைய அவர்கள் தேவனையே நம்பியிருப்பதால், தேவன் அவர்களுக்கு இந்த பரிசைக் கொடுக்கிறார். (வச. 3). நேற்றோ, இன்றோ, நாளையோ அல்லது நித்தியகாலமோ ஆனாலும் சரி அவரே நம்பிக்கைக்கு உரியவர். ஏனெனில் வேதம் சொல்லுகிறது, “கர்த்தரே நித்திய கன்மலையாக இருக்கிறார் (வச. 4). நம்முடைய முழுமனதுடனும், அவரை நம்புவதே, அவசர வாழ்க்கைக்கான மாற்று மருந்து.

நாம் எப்படி அவசரப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகிறோம் என்பதை உணருகிறோமா? பார்க்கப்போனால், அதற்குமாறாக, நாம் ஒருவித சமாதானத்தை அனுபவிக்கலாம் அல்லாவிட்டால், நாம் இந்த இரண்டிற்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ளோம்.

நாம் எங்கே இருந்தாலும் சரி, நம்மை ஒருபோதும் கைவிடாதவரும் நமக்கு சமாதானத்தை தருகிறவருமாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையாய் உள்ள நாம் எல்லாவித அவசரத்தையும் களைந்துபோட்டிட வேண்டுகிறேன்.

ராஜாவின் கிரீடம்

நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பல் குத்தும் குச்சை எங்கள் முன்னேயிருந்த பஞ்சு தகட்டில் குத்தினோம். ஈஸ்டருக்கு முந்திய வாரங்களில், ஒவ்வொரு இரவு உணவின் போதும் நாங்கள் முள்ளினால் ஆன ஒரு கிரீடத்தை உருவாக்கினோம். அதிலுள்ள ஒவ்வொரு பல் குத்தும் முள்ளும், நாங்கள் அந்நாளில் செய்த தவறுகளையும், அதற்காக நாங்கள் மனம் வருந்தினதையும், கிறிஸ்து எங்கள் பாவங்களுக்கான அபராதத்தைச் செலுத்தி விட்டார் என்பதையும் நினைவுபடுத்துகிறது. இந்தப் பயிற்சியை நாங்கள் எங்கள் வீட்டிலும், ஒவ்வொரு இரவும் செய்தோம். எங்களுடைய தவறுகளினால் நாம் குற்றவாளிகளாகிறோம். நமக்கு ஒரு மீட்பர் தேவை என்பதைக் குறித்து நினைவுகூர இது உதவியது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை விடுவித்தார் என்பதையும் நினைவுகூர்ந்தோம்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையிலறையும் முன்பு, முள்ளினாலான ஒரு கிரீடத்தைச் செய்து அதை இயேசுவுக்கு அணிவித்தது, ரோம போர் வீரர்களின் மிகக் கொடூரமானச் செயல். அவர்கள் இயேசுவிற்கு ராஜரீக உடையான சிவப்பு அங்கியை அணிவித்து, இயேசுவை அடிக்க பயன்படுத்திய கோலை, அவர் கையில் அரச செங்கோல் போல கொடுத்தனர். அவர்கள் இயேசுவை கேலி செய்து அவரை, ‘‘யூதருக்கு ராஜா” (மத். 27:29) என அழைத்தனர். அவர்கள், தங்களுடைய இச்செயல் பிற்காலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்பதை உணராதிருந்தார்கள். இவர் ஒரு சாதாரண அரசன் அல்ல. இவர் ராஜாதி ராஜா. அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய வாழ்வையளிக்கின்றது.

ஈஸ்டர் காலையில், நாங்கள் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவாகிய மன்னிப்பையும், புது வாழ்வையும் கொண்டாடும் வகையில் அங்குள்ள பல் குத்தும் குச்சிகளை எடுத்து விட்டு மலர்களைச் சொருகுவோம். தேவன் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி விட்டு நமக்கு விடுதலையையும், அவருக்குள் நித்திய வாழ்வையும் தருகிறார் என்ற செய்தி எத்தனை மகிழ்ச்சிகரமானது.

அன்பின் பாத்திரம்

அநேக ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், யாரும் பின்னால் திரும்ப வேண்டாம், இந்த வகுப்பறையின் பின் பக்கச் சுவரின் வண்ணம் என்ன? என்று சொல்லுமாறு கேட்டார். ஒருவராலும் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில், நாங்கள் யாருமே அதைக் கவனிக்கவில்லை.

சில வேளைகளில் நாமும் வாழ்வின் சில அம்சங்களைப் பார்க்கத் தவறி விடுகிறோம். ஏனெனில் நம்மால் அவையனைத்தையும் சிந்தனைக்குள் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சில வேளைகளில் நீண்ட நாட்களாக இருக்கின்ற சிலவற்றைக்கூட பார்க்கத் தவறி விடுகிறோம்.

இதைப் போன்றே, நானும் சமீபத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்ச்சியை மீண்டும் வாசித்தேன். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஏனெனில் இப்பகுதியை பரிசுத்த வாரத்தில் தவறாது வாசிப்பர். நம்முடைய இரட்சகரும் ராஜாவுமானவர் குனிந்து சீடர்களின் கால்களைக் கழுவுகின்றார். இது நம்மை வியப்படையச் செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத வேலையாட்கள் கூட இச்செயலைச் செய்வதில்லை, ஏனெனில் அதனை அவர்களின் தகுதிக்குத் தாழ்ந்ததாகக் கருதினார். ஆனால் நான் இப்பகுதியில் கவனிக்கத் தவறியது எதுவெனின், மனிதனாகவும், தேவனாகவும் திகழ்ந்த இயேசு, யூதாசுடைய கால்களையும் கழுவினார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தும் (யோவா. 13:11) இயேசு தன்னைத் தாழ்த்தி யூதாசின் கால்களையும் கழுவினார்.

அன்பு, ஒரு பாத்திர நீரில் ஊற்றப்பட்டது. தன்னைக் காட்டிக் கொடுப்பவன் மீதும் அவருடைய அன்பு பகிரப்பட்டது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முந்திய வார நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது, நாமும் தேவனுடைய ஈவாகிய தாழ்மையைப் பெற்றுக் கொண்டு, இயேசுவின் அன்பை நம்முடைய நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் கொடுப்போம்.

பயம் நீங்குதல்

நம்முடைய உடல் நம்முடைய உணர்வுகளான அச்சம் பயம் போன்றவற்றிற்கு எதிர் வினையைத் தரும். வயிறு கனத்தலும் இருதய படபடப்பும், மூச்சுத்திணறலும் நம்முடைய பதட்டத்தின் அடையாளங்கள். நம்முடைய உடலமைப்பு மூலம் இத்தகைய அமைதியற்ற உணர்வுகளைப் புறக்கணித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஒரு நாள் இரவில் இயேசு ஐயாயிரம் பேருக்கும் மேலானோருக்கு உணவளித்த போது நடந்த அற்புதத்தைக் கண்ட சீடர்களை பயத்தின் அலைகள் சூழ்ந்து கொண்டன. தேவன் அவர்களை பெத்சாயிதா பட்டணத்திற்கு அனுப்பி விட்டு தேவனோடு தனித்து ஜெபம் பண்ணினார். அந்த இரவிலே அவர்கள் காற்றை எதிர்த்து தண்டு வலித்து தங்கள் படகை ஓட்டிக் கொண்டிருக்கையில் இயேசு தண்ணீர் மேல் நடந்து வருவதைக் கண்டனர். அவர்கள் இயேசுவை ஓர் ஆவேசம் என எண்ணி பயந்தனர் (மாற். 6:49-50).

ஆனால் இயேசு அவர்களிடம் பயப்படாதிருங்கள். திடன் கொள்ளுங்கள் என்று மேலும் உறுதியளிக்கின்றார். இயேசு அவர்களுடைய படகில் ஏறியதும் காற்று அமர்ந்தது. அவர்களும் கரையை அடைந்தனர். அவர் தந்த சமாதானத்தைப்பெற்றபோது, அவர்களுடைய அச்ச உணர்வு அமைதியடைந்தது.

பதட்டத்தினால் நாம் மூச்சற்று உணரும் போது, நாம் இயேசுவின் உறுதியான வல்லமைக்குள் இளைப்பாறுவோம். அவர் நம்மைச் சுற்றியுள்ள அலைகளை அமைதிப்படுத்துவார் அல்லது நம்மை பெலப்படுத்தி அவற்றை எதிர் நோக்கச் செய்வார்.  அவர் நமக்கு அவருடைய சமாதானத்தை எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை (பிலி. 4:7) கொடுக்கிறார். நம்முடைய பயங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆவியையும், உடலையும் அமைதிப்படுத்துகின்றார்.

கடைசி வார்த்தை

ஒரு நாள் பல்கலைகழகத்தில் தத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, அந்த பேராசிரியரின் கருத்துக்கு மாறாக, ஒரு மாணவன் கோபமூட்டக் கூடிய ஒரு கருத்தினை தெரிவித்தான். மற்ற மாணவர்கள் ஆச்சரியப்படும்படியாக அந்த ஆசிரியர் அம்மாணவனுக்கு நன்றி கூறியதோடு, மற்றொரு கருத்தினை விளக்க முற்பட்டார். பின்னர் அவரிடம் அம்மாணவனின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேட்டபோது, “நான் கடைசி வார்த்தையைக் சொல்பவனாக இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.

இந்த ஆசிரியர் தேவனை நேசிப்பவராகவும், கனம் பண்ணுபவராகவும் இருப்பதோடு, தாழ்மையின் ஆவியை அணிந்து கொண்டவராய் தேவ அன்பை வெளிப்படுத்தினார். இவருடைய வார்த்தைகள் எனக்கு வேறொரு ஆசிரியரை நினைவுபடுத்துகிறது. இந்த ஆசிரியர் வெகு காலங்களுக்கு முன்பு பிரசங்கி புத்தகத்தை எழுதினார். ஒரு கோபமுள்ள மனிதனை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லாவிட்டாலும், அவர் கூறியது நாம் தேவனண்டை செல்லும் போது நம்முடைய நடையைக் காத்துக்கொள்ள வேண்டும், துணிகரமாய் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் “செவி கொடுக்கச் சேர்” என்கிறார். இவ்வாறு செய்யும் போது, நாம் அவர் தேவாதி தேவன் எனவும், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் (பிர. 5:1-2).

நீ தேவனண்டை எவ்வாறு செல்கிறாய்? உன் உணர்வுகள், உன் அணுகுமுறையை சற்று சரிசெய்துகொள் என்று உணர்த்தும் போது, மேன்மை பொருந்திய மகா தேவனைக் கனப்படுத்த, ஏன் அதற்கு சில மணித்துளிகள் செலவிடக் கூடாது? அவருடைய எல்லையில்லா ஞானத்தையும் வல்லமையையும், பிரசன்னத்தையும் நினைக்கும் போது, நாம் அவருடைய நிரம்பி வழியும் அன்பை நினைத்து வியந்து நிற்போம். இந்த தாழ்மையின் கோலத்தோடு இருக்கும் போது, நாமும் கடைசி வார்த்தையை சொல்பவர்களாக இருக்க மாட்டோம்.

ஜெபத்தின் வல்லமை

ஒரு நாள், எனக்கு நெருங்கிய நபர் ஒருவரின் நலனைக்குறித்து ஆழ்ந்த கரிசனையோடிருந்த போது, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, இஸ்ரவேலரின் ஞானமுள்ள தலைவன் சாமுவேலின் சரித்திரம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. தேவனுடைய ஜனங்கள் துன்பங்களைச் சந்தித்தபோது, சாமுவேல் அவர்களுக்காக எவ்விதம் தேவனிடம் பரிந்து பேசுகிறார் என்பதை வாசிக்கும் போது நானும், நான் நேசிக்கின்ற ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற மனநிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இஸ்ரவேலர் பெலிஸ்தரின் அச்சுறுத்தலை எதிர் நோக்கினர். இதற்கு முன்னர் பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர், ஏனெனில் இஸ்ரவேலர் தேவனை நம்பவில்லை (1 சாமு. 4). அவர்கள் தங்கள் பாவத்திற்காக மனம்வருந்திய போது, பெலிஸ்தியர் தங்களைத் தாக்க வருகிறார்கள் என கேள்விப்படுகின்றனர். இம்முறை அவர்கள் சாமுவேலிடம் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்கின்றனர் (7:8) தேவன் தெளிவாக பதிலளித்து, எதிரிகளிடையே குழப்பத்தை உருவாக்கினார் (வச. 10). பெலிஸ்தியர் இஸ்ரவேலரைக் காட்டிலும் வல்லவர்களாயிருந்தும், தேவன் அவர்களெல்லாரையும் விட பெலனுள்ளவராக இருந்தார்.

நாம் நேசிக்கின்றவர்கள் நிமித்தம் சவால்களைச் சந்தித்து வேதனையில் இருக்கும் போது, அந்த சூழ்நிலை மாறப்போவதில்லை என்ற பயம் நம்மை ஆட்கொண்டு தேவன் செயல்படமாட்டார் என்று அவநம்பிக்கைக் கொள்ள நாம் தள்ளப்படலாம். ஆனால், ஜெபத்தின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்மீது அன்புள்ள தேவன் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார். நம்முடைய மன்றாட்டுகளைக் கேட்கிற அவர் எவ்விதம் செயல்படுவார் என்பதை நாம் அறிவோம். ஆனால், நமக்குத் தெரியும், நம்முடைய பரமதந்தை, நாம் அவருடைய அன்பை ஏற்றுத் தழுவி, அவர் உண்மையுள்ளவர் என்பதில் நாம் நம்பிக்கையாயிருக்கும்படி அவர் ஏங்குகின்றார்.

இன்றைக்கு நீ ஜெபிக்க வேண்டியவர்கள் யாராவது உண்டா?