எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

மகிழ்ச்சியும் ஞானமும்

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

கிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல்

எங்கள் அயலகத்தரான மணியை நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து நன்கு தேய்ந்த வேதாகமத்தை வெளியே எடுத்தார். கண்கள் பிரகாசிக்க, அவர் வேதத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நாங்களும் தலையசைக்க, அவர் குறிப்பெடுத்த சில பத்திகளை புரட்டினார். அவர் தனது குறிப்புகள் நிறைந்த ஒரு பதிவேட்டை எங்களிடம் காட்டினார், மேலும் கணினியை பயன்படுத்தி விளக்க இது தொடர்பான பிற தகவல்களை தான் தயாரித்திருப்பதாக கூறினார்.

அவர் ஒரு கடினமான குடும்ப சூழ்நிலையிலிருந்து எவ்வாறு வந்தார் என்பதை எங்களிடம் கூறினார். மேலும், தனியாக மோசமான நிலையில், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தனது நம்பிக்கையின் அடித்தளமாக ஏற்றுக்கொண்டார் (அப்போஸ்தலர் 4:12). வேதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற ஆவியானவர் உதவியதால் அவருடைய வாழ்க்கை மாறிவிட்டது. மணி தனது வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே தேவனிடம் அர்ப்பணித்திருந்தாலும், அவரது உற்சாகம் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருந்தது.

இவரது வைராக்கியம்; இயேசுவுடன் பல வருடங்கள் நடந்துகொண்டிருந்த ஒருவராக எனது ஆவிக்குரிய ஈடுபாட்டை கருத்தில் கொள்ள என்னை தூண்டியது. "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்" (ரோமர் 12:11) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசு எனக்காகச் செய்த அனைத்திற்கும் தொடர்ந்து நன்றி செலுத்துவதைப் பிரதிபலிக்கும் மனப்பான்மையை என்னில் வளர்க்க வேதத்தை நான் அனுமதிக்காத வரை, அது ஒரு கடினமான கட்டளையாக தோன்றுகிறது.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் உணர்வுபூர்வமான ஏற்றத் தாழ்வுகளைப் போலல்லாமல், கிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவருடன் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கும் உறவிலிருந்தே வருகிறது. அவரைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு விலைமதிப்பற்றவராக அவர் மாறுகிறார், மேலும் அவருடைய நற்குணம் நம் ஆத்துமாவை நிரப்பி இவ்வுலகில் வழிந்தோடுகிறது.

நட்சத்திர வீரரின் தாழ்மை

ஒரு போட்டிக்குப் பின், ஒரு கல்லூரி கூடைப்பந்து நட்சத்திர வீரர், காகிதம் மற்றும் உணவுக் குப்பைகளை அகற்றிய துப்புரவாளர்களுக்கு உதவினார். இதை ரசிகர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதை, எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர். ஒருவர் கூறுகையில், [அந்த வீரன்] "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மிகுந்த தாழ்மையான மனிதர்களில் ஒருவர்" என்றார். எந்த ஒரு கூடைப்பந்து வீரரும் தன் அணியின் வெற்றியை சகவீரர்களுடன் இணைந்து கொண்டாடுவது சகஜம். அதற்கு மாறாக, அவர் இப்படிப்பட்ட கைமாறு கிடைக்காத சேவைக்கு முன்வந்தார்.

தாழ்மையின் விசேஷித்த குணம் இயேசுவில் காணப்பட்டது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:7). இயேசு அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் மனமுவந்து இதைச் செய்தார். பூமியில் அவருடைய ஊழியத்தில் போதிப்பது, குணப்படுத்துவது, அனைவரையும் நேசித்து அவர்களை இரட்சிக்க மரித்து உயிரோடு எழுவது ஆகியவை அடங்கும்.

நம்மை மிகவும் அற்பமான வேலையை செய்யும்படி உந்தலாம், இருப்பினும் இந்த தாழ்மை பிறருக்கான நமது அணுகுமுறையில் கலந்து வெளிப்படுமானால், அது இன்னும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும். மெய்யான தாழ்மை என்பது நம் உள்ளார்ந்த சுபாவமாகும். இது நமது செயல்களை மட்டுமல்லாமல், நமது முக்கியத்துவங்களையும் மாற்றும் "ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” (வ.3) தூண்டுகிறது.

எழுத்தாளரும், பிரசங்கியாருமான ஆண்ட்ரூ முரே, "தாழ்மை என்பது பரிசுத்தத்தின் மலர்ச்சியும் அழகும்" என்று கூறினார் அவருடைய ஆவியின் வல்லமையால், கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலித்திட, நம் வாழ்வும் இவ்வழகைப் பிரதிபலிக்கட்டும். (வ.2:5).

ஒரு மெல்லிய சத்தம்

நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ள கிசுகிசுக்கும் சுவர், அப்பகுதியின் ஆரவாரத்திலிருந்து ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான இடம் முப்பது அடி தூரத்தில் இருந்து மக்கள் அமைதியான செய்திகளை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. கிரானைட் வளைவின் அடிவாரத்தில் ஒருவர் நின்று சுவரில் மென்மையாகப் பேசும்போது, ஒலி அலைகள் வளைந்த கல்லின் மேல் ஏறி, மறுபுறம் கேட்பவருக்குப் பயணிக்கின்றன.

யோபு கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்த சோகத்தால் நிரம்பியபோது, தன்னை சுற்றியிருக்கும் ஆரவாரத்தின் மத்தியில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்க நேரிட்டது (யோபு 1:13-19; 2:7). அவரது நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசினர். அவரது சொந்த எண்ணங்கள் முடிவில்லாமல் பொங்கின. மேலும் அவரது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சனை ஆக்கிரமித்தது. ஆனாலும், இயற்கையின் மகத்துவம் தேவனுடைய தெய்வீக சக்தியைப் பற்றி அவரிடம் மென்மையாகப் பேசியது.

வானத்தின் மகிமை, விண்வெளியில் நிறுத்தப்பட்ட பூமியின் மர்மம் மற்றும் அடிவானத்தின் உறுதிப்பாடு ஆகியவை, உலகம் தேவனுடைய உள்ளங்கையில் இருப்பதை யோபுக்கு நினைவூட்டியது (26:7-11). கொந்தளிக்கும் கடலும், சலசலக்கும் சூழ்நிலையும் கூட, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்” (வச. 14) என்று சொல்லத் தூண்டியது. 

உலகின் அதிசயங்கள் தேவனுடைய மகத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றால், அவருடைய சக்தி அதைப் புரிந்துகொள்ளும் திறனை மீறுகிறது என்பது தெளிவாகிறது. உடைந்த காலங்களில், இது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. துன்பத்தின் நேரத்தில் யோபுவுக்கு தேவன் செய்த நன்மைகள் உட்பட அவரால் எதையும் செய்ய முடியும். 

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.

வழிநடத்துதலை ஏற்றல்

அந்த கன்வென்ஷன் ஹால் முழுவதும் இருளாக்கப்பட்டது. அதில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அர்ப்பணிப்பு ஜெபத்திற்காய் தங்கள் தலைகளை தாழ்த்தினர். வெளிநாட்டில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களை அவர் வரவேற்றபோது, என் தோழி லினெட் தனது இருக்கையை விட்டு எழுந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பிலிப்பைன்ஸில் வாழ்ந்து ஊழியம் செய்வதாக உறுதியளித்தார். ஆனாலும் எனக்கு நிற்க ஆசை வரவில்லை. எனது சொந்த நாட்டில் உள்ள தேவைகளைப் பார்த்து, என் நாட்டு மக்களுக்கே தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நான் வேறொரு நாட்டில் என் வீட்டை உருவாக்கி, தேவன் எனக்குக் காண்பிக்கும் மக்களுக்கு அவருடைய அன்பைக் குறித்து சொல்லுவேன். நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஊழியத்திற்கு தேவன் என்னை அழைத்தார் என்பதை உணர்ந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழப்போகிறேன் என்னும் என்னுடைய எண்ணம் மாறியது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய சீஷர்கள் உட்பட இயேசு தாம் சந்தித்த யாவரையும் ஆச்சரியப்படுத்தினார். மீன்களைப் பிடிக்கும் ஒரு புதிய யுக்தியை இயேசு கற்றுக்கொடுத்தபோது, பேதுருவும் அந்திரேயாவும் தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் (மத்தேயு 4:20). யாக்கோபும் யோவானும் தங்களுடைய படகை விட்டுவிட்டு அவருக்கு பின்சென்றனர் (வச. 22). இயேசு அவர்களுக்கு கொடுத்த ஆச்சரியத்தை பின்பற்றி, எங்கு போகிறோம் என்பதை அறியாமல் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள். 

தேவன் பெரும்பாலானவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஊழியம் செய்யும்படிக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் தரித்திருந்து ஊழியம் செய்கிறோமோ அல்லது வேறிடத்திற்கு புறப்பட்டுபோய் ஊழியம்செய்கிறோமோ, நாம் சற்றும் கற்பனை செய்யாத வழியில் அவர் நம்மை ஆச்சரியத்தினால் நிரப்பி வழிநடத்துவார்.

ஜெபத்தினால் கிரியைசெய்தல்

என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். 

மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான். 

தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது. 

பெலவீனத்தில் பெலன்

என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன். 

கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது. 

நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.