என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். 

மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான். 

தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது.