“இந்த கூடாரம் சோர்ந்துபோயிருக்கிறது.” இந்த வார்த்தைகளை கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் போதகராய் ஊழியம் செய்துகொண்டிருக்கிற பால் என்ற என்னுடைய சிநேகிதர் சொன்னார். 2015ஆம் ஆண்டிலிருந்து அவருடைய திருச்சபை விசுவாசிகள் ஒரு கூடாரம் போன்ற அமைப்பிலிருந்தே ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போது பால், “எங்களுடைய கூடாரம் கிழிந்துவிட்டது, மழைபெய்யும்போது அது ஒழுகுகிறது” என்று சொன்னார்.  

பெலவீனமான அந்த கூடாரத்தைக் குறித்து என்னுடைய சிநேகிதர் சொன்ன அந்த வார்த்தைகள் மனுஷ வாழ்க்கையின் பெலவீனமான பக்கத்தைக் குறித்து பவுல் அப்போஸ்தலர் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்திற்று. “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும்… இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:16; 5:4). 

இவ்வுலக வாழ்வின் பெலவீனமான பக்கத்தை நம்முடைய இளம்பிராயத்திலேயே ஓரளவிற்கு நாம் புரிந்துகொள்ள நேர்ந்தாலும், நாம் முதிர்வயதை சந்திக்கும்போதே அதைக் குறித்த விழிப்புணர்வை பெறுகிறோம். காலம் நம்மை விட்டு வேகமாய் கடந்துசெல்லுகிறது. நம்முடைய இளமைப்பருவத்தில் நாம் முதுமையைக் குறித்து சிந்திக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது (பிரசங்கி 12:1-7). நம்முடைய சரீரமாகிய கூடாரம் சோர்ந்துபோய்விடுகிறது. 

கூடாரம் சோர்ந்துபோகலாம் ஆனால் நம்பிக்கை சோர்ந்துபோகக் கூடாது. நமக்கு வயதாகும்போது நம்பிக்கையும் இருதயமும் பெலவீனமடையவேண்டிய அவசியமில்லை. “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார் (2 கொரிந்தியர் 4:16). நம்முடைய சரீரத்தை உண்டாக்கிய ஆண்டவர், அவருடைய ஆவியின் மூலம் அதற்குள் வாசமாயிருக்கிறார். இந்த சரீரம் நம்மோடு வெகுகாலம் ஒத்துழைக்காது. “தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று” அறிந்து செயல்படுவோம் (5:1).