எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அர்த்தர் ஜாக்சன்கட்டுரைகள்

ஆசீர்வாதமான மனந்திரும்புதல்

கிரேடி, கேட்பவர்கள் எல்லோருக்கும் தன்னை “உடைந்தது” (BROKE) என்று தன்னுடைய தெருப் பெயரை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்வான். அவனுடைய அடையாள அட்டையிலும் அதைப் பொறித்திருந்தான். அவன் சூதாட்டம், விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நடுத்தர வயது கொண்டவன். அவன் உடைக்கப்பட்டவனாகவும், தேவனை விட்டு தூரமாகவும் வாழ்ந்தான். ஆனால் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஹோட்டல் அறையில், தேவனுடைய ஆவியானவரால் ஏற்பட்ட உணர்த்துதலினால், அனைத்தும் மாறியது. “நான் இரட்சிக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூறினான். அன்று மாலை அவன் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்காக இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தான். நாற்பது வயதை தாண்டமாட்டோம் என்று எண்ணிய இவன், அடுத்த முப்பது வருடங்கள் விசுவாசியாக மாறி, தேவனுக்கு ஊழியம் செய்தான். அவரது ஓட்டுனர் உரிமத்தில், “உடைந்தது” என்ற வாசகம், “மனந்திரும்பு” (REPENT) என்று மாற்றப்பட்டது. 

“மனந்திரும்பு.” அதைத் தான் கிரேடி செய்தான். அதைத்தான் இஸ்ரவேலர்கள் செய்யவேண்டும் என்று ஓசியா 14:1-2 சொல்லுகிறது. “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு... வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்;.” சிறியதோ, பெரியதோ, நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும், அது நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மரணத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த பிரிவு மாற்றப்படுகிறது. நீங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுகிறவரோ, அல்லது கிரேடியைப் போன்ற வாழ்க்கை வாழ்பவரோ, யாராக இருப்பினும், உங்களுக்கான மன்னிப்பை ஒரு ஜெபத்தின் மூலம் சாத்தியமாக்கலாம். 

ஆழத்திலிருந்து மீட்பு

2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், சென்னையில், 24 மணிநேரத்தில் 494 மி.மி என்ற அளவில் மழை கொட்டியது. மழை மாத்திரமின்றி சில நீர்த்தேக்கங்களும் திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளக்காடாகியது. 250க்கும் மேற்பட்ட ஜனங்கள் மரிக்கவே, சென்னை "பேரிடர் மண்டலமாக" அறிவிக்கப்பட்டது. இயற்கை சென்னையை வெள்ளத்தால் மூழ்கடிக்க, மீனவர்களோ நகரத்தை தங்கள் கருணைச் செயல்களால் நிறைத்தனர்.

மீனவர்கள், சுமார் 400 பேருக்கும் அதிகமானவர்களை துணிச்சலுடன் மீட்டனர். அநேக வீடுகள் தண்ணீரில் மூழ்கி, வாகனங்கள் மிதந்து கொண்டிருந்தன. தங்களை அர்ப்பணித்த இந்த மீனவர்களின் கருணையும், திறமையும்மட்டுமில்லையெனில் மரித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாயிருக்கும். பொதுவாக வாழ்வில் இதுபோன்ற புயல்களை நாம் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனால் நம்பிக்கையிழக்கும் நாட்களை நாம் நிச்சயமாக சந்தித்திருப்போம். அப்போது பாதுகாப்பற்றவர்களாய் உணர்விலும், மனதிலும், ஆவியிலும் பாதிக்கப்பட்டிருப்போம். வெள்ளம் நம் தலைமேல் புரண்டோடும். ஆனால் நாம் விரக்தியடையத் தேவையில்லை.

சங்கீதம் 18 ல், தாவீதின் எதிரிகள் அநேகராயும், பலவான்களாயும் இருந்ததை வாசிக்கிறோம். ஆனால், தேவன் அவர்கள் அனைவரிலும் பெரியவராய் இருந்தார். எவ்வளவு பெரியவர்? மிகப்பெரியவரும், மிக வல்லவருமாய் இருந்தார் (வ.1). எனவே அவரை வர்ணிக்க தாவீது பல உருவகங்களைப் பயன்படுத்துகிறார் (வ.2). ஆழமான ஜலப்பிரவாகத்தினின்றும், பலமான சத்துருக்களிடமிருந்தும் இரட்சிக்கத் தேவன் வல்லவராய் இருக்கிறார் (வ.16–17). அவர் எவ்வளவு பெரியவர்? நம் வாழ்வை மூழ்கடிக்கும் ஜலப்பிரவாகம் பெரிதாயும் ஆழமானதாயுமிருந்தாலும், இயேசுவென்ற அவர் நாமத்தை நாம் கூப்பிடுகையில், நமக்குப் போதுமானவராய் இருக்கிற பெரியவர் அவர் (வ.3).

இணைந்திருக்கும் வீடு

ஜூன் 16, 1858 அன்று, அமெரிக்காவின் மேல் சட்டசபைக்கு, குடியரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான, ஆபிரகாம் லிங்கன், "பிரிக்கப்பட்ட வீடு" என்ற தலைப்பில் பிரசித்திபெற்ற ஒரு உரையை நிகழ்த்தினார். அதில், அமெரிக்காவிலுள்ள, அடிமைத்தனத்தின் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுது லிங்கனின் நண்பர்கள், எதிரிகள் என எல்லாரிடமிருந்தும் இப்பேச்சு ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. மத்தேயு 12:25 ல் சொல்லப்பட்டுள்ள "பிரிக்கப்பட்ட வீடு" என்ற தலைப்பில் அவர் பேசியதற்கான காரணம், இவ்வுவமை எல்லாருக்கும் அறிமுகமானதொன்றாக இருந்தாலும், அதிகமாக வலியுறுத்தப்படவில்லை என்பதேயாகும்.

 

பிரிக்கப்பட்ட வீடு நிலைநிற்காது, இணைந்திருக்கும் வீடு நிலை நிற்கும். அடிப்படையில் தேவனின் வீடும் அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது (எபேசியர் 2:19). பலவகையான பின்னணிகளையுடைய மக்களாய் நாம் இருந்தாலும், இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் தேவனோடும் மற்றவர்களோடும் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம் (வ.14–16). இந்த சத்தியத்தைக் கருத்தில்கொண்டு (எபேசியர் 3 ஐ பார்க்கவும்) விசுவாசிகளுக்கு, "சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். (4:3) என பவுல் அறிவுறுத்துகிறார்.

இன்றைக்கும் விசுவாசக் குடும்பத்தினரை, இறுக்குமான காரியங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஆவியானவரின் துணையோடு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள, தேவன் நமக்குத் தேவையான பெலத்தையும் ஞானத்தையும் அருள்வாராக. இப்படிச் செய்வதால், பிரிந்து இருண்டுபோன இவ்வுலகிற்கு நாம் வெளிச்சமாவோம்.

கேட்டுப்பாருங்கள்!

என் வீட்டின் அடித்தளத்திலிருந்து என்னுடைய மனைவி ஷர்லியின் ஆனந்த கூச்சல் சத்தம் கேட்டது. ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுத அவள் மணிக்கணக்காய் போராடி, எழுதி முடிந்திருந்தாள். அதை எப்படி தொடர்ந்து எழுதுவது என்று குழம்பியிருந்த அவள் தேவனுடைய உதவியை நாடினாள். அவளுடைய முகநூல் நண்பர்களின் உதவியையும் நாடி அந்த கட்டுரையை குழு முயற்சியாய் நிறைவுசெய்தாள்.  

பத்திரிக்கைக் கட்டுரை என்பது வாழ்க்கையில் சின்ன விஷயம். ஆனால் சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கையில் கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். ஒருவேளை, நீங்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் புதிய பெற்றோராய் இருக்கலாம், ஒரு மாணவனாய் கற்பதற்கு போராடிக்கொண்டிருக்கலாம், நேசித்தவர்களை இழக்கக் கொடுத்தவராய் இருக்கலாம். அல்லது வீடு, அலுவலகம், ஊழியத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். சிலவேளைகளில் நாம் அவற்றோடு தனியாய் போராடிக்கொண்டிருக்கிறோம், ஏனெனில் நாம் தேவனிடத்தில் உதவி கேட்பதில்லை (யாக்கோபு4:2).

பிலிப்பு பட்டணத்து விசுவாசிகளுக்கும், நமக்கும் பவுல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று ஆலோசனை கொடுக்கிறார். வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கும் தருணங்களில், கீழ்க்கண்ட ஆங்கில பாடல் போன்று பாடல்களை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்:  

இயேசுவில் நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார், நாம் ஏன் சமாதானத்தை  அடிக்கடி இழக்க வேண்டும், ஓ, என்ன தேவையற்ற வலியை நான் பொறுக்க வேண்டும், எல்லாவற்றையும் நான் சுமக்கத் தேவையில்லை, ஜெபத்தில் தேவனிடத்தில் ஒப்படைக்கிறேன். 

தேவனிடத்தில் நாம் உதவிக்காய் நாடும்போது, நமக்கு உதவிசெய்யும் நபர்களை தேவன் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவார்.

அவர் என் இதயத்தை அறிவார்

ஒரு மளிகைக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பரிவர்த்தனையை முடித்த பிறகு, நான் பில்லிங் கவுண்டருக்குச் சென்று எனது பொருட்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கினேன். எதிர்பாராத விதமாக, ஒரு கோபமான நபர் என்னை எதிர்கொண்டார். வரிசையில் அவள் எனக்கு பின்பாக இருந்ததை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். என் தவறை உணர்ந்து, “மன்னிக்கவும்” என்று மனப்பூர்வமாகச் சொன்னேன். அவளோ, “இல்லை” என்று கோபமாக பதிலளித்தாள். 

நீங்கள் எப்போதாவது இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தவறுசெய்து, அதை ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முயற்சித்து, மன்னிப்பு கேட்டு, அந்த மன்னிப்பு நிராகரிக்கப்பட்டதுண்டா? தவறாகப் புரிந்துகொள்வது அல்லது தவறாக மதிப்பிடப்படுவது நல்லதல்ல. மேலும் நாம் புண்படுத்துபவர்கள் அல்லது நம்மை புண்படுத்துபவர்களுடன் நாம் எவ்வளவு நெருக்கமாயிருக்கிறோமோ, அவ்வளவு காயப்படவேண்டியிருக்கிறது. அவர்கள் நம் இதயங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்!

ஏசாயா 11:1-5இல், பரிபூரண தீர்ப்புக்கான ஞானத்துடன் தேவனால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரை பற்றிய செய்தியை ஏசாயா துரிதமாய் பதிவிடுகிறார். “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்(கிறார்)" (வச. 3-4) என்று குறிப்பிடுகிறார். இது இயேசுவின் வாழ்விலும் ஊழியத்திலும் நிறைவேறியது. நம்முடைய பாவத்திலும் பலவீனத்திலும் நாம் அதை எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அனைத்தையும் பார்க்கும், அனைத்தையும் அறிந்த பரலோகத்தின் தேவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். நம்மை சரியாக நியாயந்தீர்க்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

இருண்ட தருணங்கள், ஆழ்ந்த ஜெபங்கள்

“எனக்கு ஒரு இருண்ட தருணம் இருந்தது.” இந்த ஐந்து வார்த்தைகள் கோவிட்-19 தொற்று பரவிய நேரத்தில், ஒரு பெண் பிரபலத்தின் உள் வேதனையைப் படம்பிடிக்கின்றது. இந்த புதிய வாழ்க்கை முறையை தழுவுவது அவளுக்கு சவாலாய் அமைந்தது. அவள் தற்கொலை எண்ணங்களோடு போராடினாள் என்று அவரே சொன்னார். இந்த இக்கட்டான மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு, தன் மீது அக்கறைகொண்ட ஒரு நண்பரிடம் தன்னுடைய நிலையை மனம்விட்டு பகிர்ந்துகொண்டதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாம் அனைவரும் இதுபோன்ற பரபரப்பான தருணங்கள், நாட்கள் மற்றும் பருவங்களை சந்திக்க நேரிடுகிறது. பள்ளத்தாக்குகள் மற்றும் கடினமான இடங்கள் நமக்கு புதிதல்ல, ஆனால் அதை மேற்கொண்டு வெளிவருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சில வேளைகளில் மனநல நிபுணர்களின் உதவியை நாடுவதும் அவசியப்படுகிறது.

சங்கீதம் 143 இல், தாவீது தன்னுடைய வாழ்வின் ஒரு இருண்ட தருணத்தின் ஜெபத்தைக் கேட்டு அதின் மூலம் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். சரியான சூழ்நிலை எதுவென தெரியவில்லை. ஆனால் தேவனிடம் அவர் ஏறெடுத்த ஜெபங்கள் அனைத்தும் நேர்மையானவை, நம்பிக்கையானவைகள். “சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது” (வச. 3-4). விசுவாசிகளுக்கு, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நமக்குள்ளேயோ, அல்லது நண்பர்களிடமோ அல்லது மருத்துவ நிபுணர்களிடமோ பகிர்ந்துகொள்வது மட்டும் போதாது. சங்கீதம் 143:7-10-ல் காணப்படும் விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஜெபங்களுடனும் முழு சிந்தையுடனும் நாம் தேவனிடம் வர வேண்டும். நமது இருண்ட தருணங்கள், தேவனால் மட்டுமே கொடுக்கக்கூடிய ஒளியை எதிர்நோக்கும் ஆழமான ஜெப நேரங்களாகவும் இருக்கலாம்.

சைமன் வீட்டில் புத்துணர்வு

சைமன் வீட்டிற்கு போனதை என்னால் மறக்கமுடியாது. கென்யாவிலுள்ள நியாஹூருருவின் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் நீலவானின் கீழிருந்த அவனுடைய எளிமையான வீட்டிற்குச் சென்றோம். அழுக்கான தரையும், விளக்கு வெளிச்சமும் அவன் ஏழ்மையை பிரதிபலித்தன. என்ன சாப்பாடு என்பதையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், எங்களை விருந்தாளிகளாய் வரவேற்ற சைமனின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியாது. அவனுடைய சுயநலமில்லா, மனதைத் தொட்டு, புத்துணர்வாக்கும் அந்த விருந்தோம்பல், இயேசுவையே எங்களுக்கு ஞாபகப்படுத்தியது. 

1 கொரிந்தியர் 16:15-18ல், பவுல் அப்போஸ்தலன் பரிசுத்தவான்களைப் பராமரிக்கும் ஸ்தேவானுடைய குடும்பத்தைக் குறித்துக் கூறுகிறார் (வச.15). அவர்கள் “பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்று” (வச.15) குறிப்பிடுகிறார். அவர்கள் பொருள் உதவிகளை அவருக்கு செய்திருந்தாலும் (வச.17), “அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்” (வச.18) என்றதின் தாக்கத்தை பவுல் விவரிக்கிறார்.. 

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுகிற வாய்ப்புகள் கிட்டும்போது ஆகாரம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு சூழலுக்கேற்ப முக்கியத்துவம் தருகிறோம். நல்லது. என்றாலும், அவை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது. மறக்கமுடியாத விருந்தோம்பல் மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், ஒருவரை முழுவதுமாய் போஷிக்க மற்றும் உற்சாகப்படுத்த உணவோ, பொருட்களோ போதுமானதல்ல. மெய்யான உற்சாகம் என்பது இருதயத்திலிருந்து வழிந்தோடும் தெய்வீகத்திற்குரியது. அது மற்றவர்களுடைய இருதயத்தை சென்றடைகிறது. சாப்பிட்டு பல காலங்கள் கடந்த பின்பும் அது ஆத்துமாவை போஷித்துக்கொண்டேயிருக்கிறது. 

மண்ணென்று உணர்தல்

எங்கள் வாராந்திர ஊழிய கூடுகையின்போது, ரவி தான் “மண்ணென்று உணர்வதாக” குறிப்பிடுகையில், அவர் தன் முதுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடினிமித்தம் உண்டாகும் சரீர பெலவீனங்களைக் குறிப்பிடுவதை புரிந்துகொண்டேன். ஏனெனில் ரவியும், அவர் மனைவியும், அறுபது வயதை கடந்திருந்தனர். அவர்களின் 2020ஆம் வருடம், மருத்துவர்கள் ஆலோசனை, அறுவைசிகிச்சை முறைகள், வீட்டிலிருந்தே மருத்துவம் பார்க்க வீட்டை மாற்றி அமைத்தல் போன்றவைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவிலிருந்தார்கள். அதை நன்கு உணரவும் செய்தார்கள்.

சரீரப்பிரகாரமான, மனோரீதியான, உணர்வுரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பெலவீனங்கள், இயலாமைகள், குறைபாடுகள் ஆகியற்றை உணர ஒருவர் வயது சென்றவராய் இருக்க வேண்டுமென்றில்லை. தேவன், தம் குமாரன் இயேசுவின் மனுஉருவில், வீழிச்சியடைந்த இவ்வுலகத்திற்கு வந்து, மனித பிறவியின் சுமைகளை அனுபவிப்பவர்கள் மேல் கரிசனைகொள்கிறார் (சங்கீதம் 103:13). மேலும் தாவீது, “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14) என்றெழுதினார். “மண்” என்ற பதம் நம்மை ஆதியாகமத்திற்கு பின்னோக்கி கொண்டுசெல்கிறது. “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்” (2:7).

நீங்கள் மண்ணென்று இந்நாட்களில் உணர்கிறீர்களா? பூமிக்குரிய வாழ்க்கையின் எதார்த்தங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். நாம் பெலவீனமானவர்கள் என்று உணரும்போது நாம் தனித்திருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதுருக்கம் நிறைந்த நம் தேவன் அறிந்திருக்கிறார், நினைவுகூருகிறார். பூமிக்குரிய மனிதர்களான நம்மைப் போன்றவர்களுக்கு மன்னிப்பை அருள தன் குமாரனையே நமக்காக அனுப்பி தம் அன்பை நிரூபித்துள்ளார். வாழ்க்கை நமக்கு எதையளித்தாலும், நாம் அவரை நம்புவோமாக.

பாதுகாப்பான கரங்கள்

ஒரு கயிறு அறுபடுவது போல, டக் மெர்க்கியின் வாழ்க்கைக் கயிறு ஒன்றன்பின் ஒன்றாக அறுபட்டுக் கொண்டிருந்தது. “புற்றுநோயுடன் போராடி என் தாயார் தோற்றுப் போனார்; வெகுநாளாய் இருந்த என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; என் வருமானம் தடைபட்டது; என் வேலை மந்தமாக சென்றது... என்னைச் சுற்றியிருந்த இந்த பிரச்சனைகளினால் என்னுடைய ஆவிக்குரிய இருள் மிகவும் ஆழமாயிருந்தது” என்று போதகரும், சிற்பியுமான டக் மெர்க்கி எழுதுகிறார். இந்த கூட்டுநிகழ்வுகளும் அவருடைய இறுக்கமான வாழ்க்கையும் இணைந்து, “மறைவிடம்” என்ற ஒரு சிற்பத்தை அவர் செதுக்க நேர்ந்தது. கிறிஸ்துவின் ஆணியடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் அதற்குள் ஏதோ ஒன்றை பாதுகாப்பதுபோல மூடியிருக்கும்படி அந்த சிற்பத்தை வடித்திருந்தார். 

அந்த சிற்பம் “தனக்குள் வந்து ஒளிந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்து கொடுக்கும் அறைக்கூவல்” என்று டக் தன்னுடைய சிற்பத்திற்கு விளக்கமளிக்கிறார். சங்கீதம் 32ல், தாவீது தேவனையே தன்னுடைய சிறந்த புகலிடமாய் கண்டுபிடித்ததாக பாடுகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு அருளுகிறார் (வச. 1-5). குழப்பங்களின் மத்தியில் ஜெபிக்கும்படிக்கு நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 6). 7ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் தேவன் மீதான தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்: “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.”

பிரச்சனைகள் வரும்போது நீங்கள் யாரிடமாய் திரும்புகிறீர்கள்? நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை உடைந்து கேள்விக்குள்ளாகும் போது, இயேசுவின் மன்னிப்பின் மூலம் நித்தியப் பாதுகாப்பை அருளும் தேவனிடத்தில் நாம் மறைந்துகொள்ளலாம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தொலைநோக்குக் கனவுகள்

கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.

பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).

நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

தினந்தோறும் சாருதல்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11

ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது. 

மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.

தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

ஒரு அன்பான உழைப்பு

டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.