ஜெனிவீவ் தனது மூன்று குழந்தைகளுக்கு “கண்களாக” இருக்கவேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவர்கள் மூவரும் பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் குடியரசில் உள்ள தங்களின் கிராமத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும்போதெல்லாம், அவள் குழந்தையைத் தனது முதுகில் கட்டிக்கொண்டு,  மூத்த பிள்ளைகள் இருவரின் கைகளையும் பிடித்தபடியே, எப்போதும் வாழ்க்கையின் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தாள். மாந்திரீகத்தால் குருட்டுத்தன்மை ஏற்படுவதாகக் கருதப்பட்ட ஓர் கலாச்சாரத்தில் வாழ்ந்த இந்த ஜெனிவீவ், விரக்தியடைந்து தேவனிடத்தில் உதவிக்காய் மன்றாடினாள். 

அப்போது அவளது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் “மெர்சி ஷிப்ஸ்” பற்றி அவளிடம் சொன்னார். அவை ஏழைகளுக்கு நம்பிக்கையையும், சுகமளிக்கும் இயேசுவின் மாதிரியை அடையாளப்படுத்தும் விதத்தில் முக்கிய அறுவைசிகிச்சைகளையும் சேவையாக செய்துவந்த ஓர் ஊழிய ஸ்தாபனம். அவர்களிடத்தில் உதவி கிடைக்குமா என்ற நிச்சயமில்லாமல் அவர்களை அணுகினாள். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவளின் மூன்று பிள்ளைகளுக்கும் பார்வை கிடைத்தது. 

தேவனுடைய நடத்துதல் எப்போதுமே இருளில் மூழ்கியவர்களுடன் சேர்ந்துவந்து, அவர்களுக்கு அவருடைய ஒளியைக் கொண்டுவருவதாகும். ஏசாயா தீர்க்கதரிசி, தேவன் புறஜாதிகளுக்கு ஒளியாய் இருக்கிறார் (ஏசாயா 42:6) என்று அறிவிக்கிறார். அவர் குருடருடைய கண்களைத் திறப்பார் (வச. 7). சரீரப்பிரகாரமான குருடுகளை மட்டுமின்றி, ஆவிக்குரிய ரீதியான பார்வையற்ற நிலைமையையும் அவர் மாற்றுவார். அவர் தனது ஜனத்தின் கரத்தைப் பிடித்திருப்பதாக வாக்களிக்கிறார் (வச. 6). பார்வையற்றவர்களுக்குப் பார்வையை மீட்டுத் தந்தார். இருளில் வாழ்ந்தவர்களுக்கு ஒளியைக் கொண்டு வந்தார்.