எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மின்னி ஆபிரகாம்கட்டுரைகள்

உண்மையான அகிம்சை

மோகன்தாஸ் கே. காந்தி, மற்றவர்களுடன் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலான ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கியெறிய முக்கிய பங்காற்றினார். அவரது சுயசரிதையான ‘சத்திய சோதனை’ என்ற புத்தகத்தில், காந்தி “மலைப் பிரசங்கம் என் மனதுக்குள் ஆழமாக . . . ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு’ என்ற இந்த வசனங்கள் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கியது" என்று எழுதுகிறார். அகிம்சை அல்லது அறப் போராட்டம் மூலம் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான காந்தியின் எதிர்வினையாற்றா எதிர்ப்பை இயேசுவின் வார்த்தைகள் ஊக்குவித்தன.

இயேசு அகிம்சையை மட்டும் போதிக்கவில்லை. அவர் அன்பைப் போதித்தார், இது எதிர்வினையாற்றா எதிர்ப்பை காட்டிலும் ஆக்கப்பூர்வமான செயலாகும். அவரது வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வன்முறை ஒரு தீர்வல்ல என்பதை அவர் காட்டினார். இயேசு குற்றமற்றவராக இருந்தபோதும், அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டது. ஆனாலும், அவர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, அவர் அமைதியாக இருந்து, அவமானகரமான மரணதண்டனைக்குத் தன்னை விட்டுக்கொடுத்தார் (வ.7-8). கடுமையான வெறுப்புக்கும் கோபத்திற்கும் அப்பாலுள்ளதை இயேசு கண்டார், அதனால் அவர் துன்பங்களைச் சகித்தார், ஏனென்றால் பாவத்திலிருந்து மனிதக்குலத்தைக் காப்பாற்ற அதுவே ஒரே வழி என்று அவர் அறிந்திருந்தார். இயேசுவின் அன்பின் பலி நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்தது. சமாதானத்தை நாடுவது குறிப்பாக அன்பாயிருப்பது சில சமயங்களில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், குறிப்பாகக் கோபம், வெறுப்பு அல்லது வன்முறை நிறைந்த வார்த்தைகள் அல்லது செயல்களால் பிறர் நம்மை எதிர்க்கும்போது. ஆனால், நாம் ஒடுக்கப்படும்போது, அமைதியின் வழியில் நடந்து, அன்பை வெளிப்படுத்திய, அடக்குமுறைகளைப் பொறுமையாகச் சகித்துக் கொண்ட நம் ஆண்டவரைப் பின்பற்ற வேண்டும். நமது செயல்கள், வார்த்தைகள் மற்றும் நமது நோக்கங்கள் கூட அவரைப் பிரதிபலிக்க வேண்டும், அதனால் அவர் நம் மூலம் மாற்றத்தையும் குணப்படுத்துதலையும் கொண்டு வர முடியும். 

வன்கண்ணை முறியடித்தல்

மாலதி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், குறிப்பாக விசேஷங்களுக்கு அலங்கரித்துக் கொள்ளும்போது, அம்மா கவலையுடன், கட்டாயமாக முகத்தில் எங்காவது ஒரு கரும்புள்ளி வைப்பாள். அவளுடைய அம்மா தொடர்ந்து அவளைக் கவனித்து, "வன்கண்ணை" தடுக்க சடங்குகளைச் செய்தார். தமிழில் த்ரிஷ்டி அல்லது ஹிந்தியில் நாசர் என்று அழைக்கப்படும் "வன்கண்" இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் அஞ்சப்படுகிறது. மாலதியின் அம்மாவைப் போலவே, யாராவது தங்களைப் பொறாமையுடன் பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரிடும் என்று பலர் பயப்படுகிறார்கள்.

அறியாத பயம் நம்மை முடக்கும் போது, மூடநம்பிக்கையின் அடிப்படையிலான விரைவான தீர்வுகளைத் தேடலாம். ஆனால், தீமோத்தேயுவின் ஆசிரியர் இவை பிசாசுகளின் உபதேசம் என்கிறார் (வ.1). விசுவாசிகளுக்கும் "கட்டுக்கதைகளுக்கும்" (வ.7) சம்பந்தமில்லை என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். மூடநம்பிக்கைகள் மற்றும் கதைகள் போன்ற நமக்குப் பயத்தை ஏற்படுத்தும் இந்த விஷயங்கள் இயேசுவை விசுவாசிக்கும் நம்மில் எவ்வளவேனும் இருக்கக்கூடாது (வ.3-7). மாறாக, நாம் தேவபக்தியுடன் இருக்கவும், தேவனைச் சார்ந்திருக்கவும் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் (வ.7). ஏனெனில், கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் சாத்தானை வென்றபோது, அவர் இருளின் வல்லமைகளை என்றென்றும் தோற்கடித்தார். நாம் பயப்பட வேண்டியதில்லை, "ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" (வ11).

எனவே, எபேசியரில் பவுல் சொல்வது போல், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் நம்மைப் பாதுகாக்கும் விசுவாசத்தின் கேடகம் உட்பட, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (எபேசியர் 6:14-17) அணிவோம். சத்துரு நம்மை வெல்ல முடியாது, நிச்சயமற்ற எதிர்காலத்தைக் குறித்தும் நாம் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் சத்துருவை வென்ற இயேசுவே வெற்றியாளர் (1 யோவான் 5:18). 

 

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. 

சட்டப்பூர்வமான விடுதலை

இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் அல்லது பந்துவா மஸ்தூரி 1976 இல் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது. மக்கள் தங்களுடைய உழைப்பை அடகு வைத்து, திருப்பிச் செலுத்த முடியாத கடனைப் பெறும்போது கொத்தடிமை சுழற்சி தொடங்குகிறது. அவர்களுக்குக் கடன் வழங்குபவர்கள் தங்களுக்கு வேலை செய்து கடனைச் செலுத்தக் கோருகிறார்கள், ஆனால் அவர்களுக்குச் சொற்ப ஊதியமே தருகின்றனர். இதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனளிப்பவரின் சொத்தாகவே வாழ்ந்து, சில சமயங்களில் தலைமுறைகளுக்கு நீட்டிக்கப்படும் கடன்களை அடைக்க முயல்கின்றனர். சட்டப்படி, அவர்கள் சுதந்திரமாக இருக்கவும், மறுவாழ்வு பெறத் தகுதியுடையவர்களாகவும் இருந்தாலும், பல தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கானோர் அடிமைத்தனத்தில் தவிக்கின்றனர்.

கிணற்றருகே இருந்த சமாரிய ஸ்தீரியும் சமூக நெறிகளுக்கு அடிமையாக இருந்தாள். அவளுடைய வாழ்க்கை முறையின் காரணமாக அவள் ஜனங்களால் ஒதுக்கப்பட்டதால் அவள் தனியாக வந்தாள். இதைச் சிக்கலாக்கும் வகையில், யூதக் கண்ணோட்டத்தில், அவள் ஒரு சமாரிய பெண்; புறக்கணிக்கப்பட்டவள் (வ.20). ஆனால் இயேசுவுடனான உரையாடல் அவளை அங்கீகரிக்கப்பட்டவளாகவும், திடப்பட்டவளாகவும் உணரச் செய்தது. இயேசு அவளை இரட்சிக்க வந்திருந்தபோதும், அதை அவள் அறியவில்லை. குடிக்க அவளிடம் தண்ணீர் கேட்டபோது, அவரது அசாதாரணமான பார்வை மற்றும் செயலால் அவள் திகைத்தாள். ஆனால் அவர்தான் எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதை அவள் உணர்ந்தபோது, அவள் மகிழ்ச்சியுடன் தன் கிராம மக்களை இயேசுவிடம் கொண்டு வந்தாள்.

இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 3:16). இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்தபோது நம்முடைய பாவங்களின் கடன் அடைக்கப்பட்டது. அவர் நமது சுயாதீனத்தை விலைக்கு வாங்கி, நம்மை என்றென்றும் விடுதலையாக்கினார். மூடநம்பிக்கை, பாரம்பரியம் அல்லது சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் போன்ற பாரங்களை நாம் சுமக்க வேண்டாம் . அவர் வழங்குவதை ஏற்றுக்கொள்ளும்போது நாம் விடுதலை பெறுகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்

நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் “அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை” என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் “மகிழ்ச்சி” என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). “கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு” “அப்படிச் சொல்லக்கடவர்கள்” (வ. 2 ,3), “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக” (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே “தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று” (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.

கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார். 

 

கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு

சந்தோஷ், கரோலினாவின் கோடை வெயில் உஷ்ணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் வசித்த ஒருவர் அவர் வேலை செய்து கொண்டிருந்த முற்றத்திற்குச் சென்றார். தெளிவாகக் கோபமாக, அண்டை வீட்டுக்காரர் கட்டிடத் திட்டத்தைக் குறித்தும், அது செய்யப்படுகிற விதம் குறித்தும் அனைத்தையும் குறைவாக பேசி, சபிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினார். கோபமான பக்கத்து வீட்டுக்காரர் கத்துவதை நிறுத்தும் வரை சந்தோஷ் பதில் சொல்லாமல் வாய்மொழியின் அடிகளைப் பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் மெதுவாக, “உங்களுக்கு இன்று மிகவும் மோசமான நாள், இல்லையா?” என்று பதிலளித்தார். திடீரென்று, கோபமடைந்த அண்டை வீட்டாரின் முகம் மென்மையாகி, அவரது தலை குனிந்து, “நான் உங்களிடம் பேசிய விதத்திற்காக வருந்துகிறேன்” என்றார். சந்தோஷின் அன்புச்செயல் அண்டை வீட்டாரின் கோபத்தைத் தணித்தது.

நாம் திருப்பித் தாக்க விரும்பும் நேரங்கள் உண்டு. வையப்படுகையில் வையவும், அவமானத்திற்கு அவமானப்படுத்தவும் விரும்புகின்றோம். அதற்கு மாறாக நம்முடைய பாவங்களின் விளைவுகளை இயேசு தாங்கியதைப் போல மிகச் சரியாகக் காணப்பட்ட கருணையையே சந்தோஷ் முன்மாதிரியாகக் காட்டினார், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23).

நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அல்லது தவறாகத் தாக்கப்படும் தருணங்களைச் சந்திப்போம். நாம் அன்பாகப் பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இயேசு நம்மை அன்பாக இருக்கவும், சமாதானத்தைத் தொடரவும், புரிதலைக் காட்டவும் அழைக்கிறாா். இன்று அவர் நமக்கு உதவுவதால், மோசமான நாளைத் கடக்கும் ஒருவரை ஆசீர்வதிக்கத் தேவன் நம்மைப் பயன்படுத்தக்கூடும். 

 

விசுவாசத்தால் ஆம் என்பது

வேலையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கக்கூடுமா என்று கேட்டபோது, நான் மாட்டேன் என்று சொல்ல விரும்பினேன். நான் தடைகளைப் பற்றி யோசித்து, அவற்றைக் கையாள நான் தகுதியானவனல்ல என்று உணர்ந்தேன். ஆனால் நான் ஜெபித்து, வேதாகமம் மற்றும் பிற விசுவாசிகளிடமிருந்தும் வழிகாட்டுதலை நாடியபோது, ஆம் என்று சொல்லத் தேவன் என்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். வேதாகமத்தின் மூலம், அவருடைய உதவி எனக்கும் உறுதியளிக்கப்பட்டது. எனவே, நான் பணியை ஏற்றுக்கொண்டேன், ஆனால் இன்னும் கொஞ்சம் பயமிருந்தது.

இஸ்ரவேலர்களிலும், கானானைச் சுதந்தரிப்பதிலிருந்து பின்வாங்கிய பத்து வேவுக்காரர்களிலும் நான் என்னைக் காண்கிறேன் (எண் 13:27-29, 31-33; 14:1-4). அவர்களும் கஷ்டங்களைக் கண்டு, எவ்வாறு தேசத்தில் உள்ள பலசாலிகளைத் தோற்கடித்து, அவர்களுடைய அரணான பட்டணங்களைக் கைப்பற்றுவது என்று யோசித்தார்கள். “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்” (13:33) என்று வேவுக்காரர் கூறினர், மேலும் இஸ்ரவேலர்கள், “நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும்.. கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன?” (14:3) என்று முறுமுறுத்தார்கள்.

கானானைத் தம்முடைய மக்களுக்குக் கொடுப்பதாக தேவன் ஏற்கனவே வாக்களித்திருந்ததை காலேபும் யோசுவாவும் மட்டுமே நினைவு கூர்ந்தனர் (ஆதியாகமம் 17:8; எண்ணாகமம் 13:2). அவருடைய வாக்குத்தத்தத்திலிருந்து அவர்கள் நம்பிக்கை பெற்றனர், எனவே தேவனின் பிரசன்னம் மற்றும் உதவியின் வெளிச்சத்தில் வரவிருக்கும் சிரமங்களை முன்னோக்கினர். அவருடைய வல்லமை, பாதுகாப்பு மற்றும் போஷிப்பில் அவர்கள் எதிரியின் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள், அவர்களுடைய சுயத்தில் அல்ல (எண்ணாகமம் 14:6-9).

தேவன் எனக்குக் கொடுத்த பணியும் எளிதானது அல்ல; ஆனால் அதினுடே அவர் எனக்கு உதவினார். அவருடைய நிர்ணயங்களில் நாம் எப்போதும் சிரமங்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், காலேப் மற்றும் யோசுவாவைப் போல, “கர்த்தர் நம்மோடே இருக்கிறார்” (வ.9) என்பதை அறிந்து நாம் அவற்றை எதிர்கொள்ள முடியும்.