கிறிஸ்துவில் கட்டப்பட்டது
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள செங்கோட்டை, மைசூரில் உள்ள அரச அரண்மனை, மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்கள் அனைத்தும் புகழ்பெற்ற பெயர்களைக் கொண்டுள்ளன. சிலவைகள் பளிங்குக் கற்களால் ஆனவை; சிலவைகள் சிவப்புக் கல்லால் ஆனவை; சிலவைகள் பாறைகளால் வெட்டப்பட்டவை; மற்றவை தங்கத்தால் பதிக்கப்பட்டவைகள். ஆனால் அவை அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவை அனைத்தும் கட்டிடங்கள்.
கட்டடம் என்பது விசுவாசிகளைக் குறிக்க வேதம் பயன்படுத்தும் முக்கியமான உருவகங்களில் ஒன்று. “நீங்கள்... தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 3:9) என்று பவுல் அப்போஸ்தலர் எழுதுகிறார். விசுவாசிகளுக்கு வேறு பெயர்களும் உள்ளன: “மந்தை” (அப்போஸ்தலர் 20:28), “கிறிஸ்துவின் சரீரம்” (1 கொரிந்தியர் 12:27), “சகோதர சகோதரிகள்” (1 தெசலோனிக்கேயர் 2:14) மற்றும் பல.
கட்டிட உருவகம் 1 பேதுரு 2:5 இல் மீண்டும் மீண்டும் வருகிறது. பேதுரு திருச்சபையைப் பார்த்து, “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்... கட்டப்பட்டுவருகிறீர்கள்” என்று குறிப்பிடுகிறார். மேலும் 6ஆம் வசனத்தில் ஏசாயா 28:16 மேற்கோள் காண்பிக்கிறார், “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்.” இயேசுவே அவருடைய கட்டிடத்தின் அஸ்திபாரம்.
திருச்சபையைக் கட்டுவது நமது வேலை என்ற உணர்வு நமக்கு இருக்கலாம். ஆனால் “நான் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 16:18). நாம் நம்மை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அந்தத் துதிகளை நாம் அறிவிக்கும்போது, அவருடைய நற்செயல்களைச் செய்யும்போது நாம் அவருடைய கரங்களில் கருவிகளாக மாறுகிறோம்.
விண்வெளி பந்தயம்
ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் "கால்தடம்" போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.
சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், "நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்" (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, "நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்" (வ.9) என்று நிறைவு செய்தார்.
உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக.
நன்மைக்கான கருவி
ஒரு குற்றவாளி கைதுசெய்யப்பட்டான். துப்பறியும் அதிகாரி அவனிடத்தில், ஏன் இத்தனை பேர் முன்னிலையில் அவனை தாக்கினாய்? என்று கேட்டதற்கு அவனுடைய பதில் திடுக்கிடும் வகையில் இருந்தது. அவன், “அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்;, மக்கள் ஒருபோதும் ஒன்றும் செய்யமாட்டார்கள்" என்று பதிலளித்தானாம். அந்தக் கருத்து “குற்றம் புரியும் அறிவு” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு குற்றம் செய்யப்படுவது உங்களுக்குத் தெரிந்தாலும் அதை புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுப்பது.
அப்போஸ்தலனாகிய யாக்கோபு இதேபோன்ற குற்றமுள்ள அறிவைக் குறிப்பிடுகிறார், ‘ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17) என்கிறார்.
நம்மை இரட்சித்ததன் மூலம், தேவன் நம்மை உலகில் நன்மையின் முகவர்களாக வடிவமைத்துள்ளார். எபேசியர் 2:10 இல், “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நற்செயல்கள் நம் இரட்சிப்புக்குக் காரணம் அல்ல; மாறாக, தேவனுடைய பரிசுத்த ஆவி நம் இருதயத்தில் கிரியை செய்வதால் ஏற்படுகிற விளைவாகும். தேவன் நமக்குள் மீண்டும் உருவாக்கியுள்ள கிரியைகளைச் செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்த ஆவியானவர் நமக்கு ஆவிக்குரிய வரங்களைத் தருகிறார் (காண்க: 1 கொரிந்தியர் 12:1-11).
தேவனின் செயல்திறனாக, நாம் அவருடைய நோக்கங்களுக்கும் அவருடைய ஆவியின் ஆற்றலுக்கும் கீழ்ப்படிவோம். அதின் மூலம் இவ்வுலகத்தில் அவருடைய நன்மையான கிரியைகளை செயல்படுத்தும் கருவிகளாக நாம் செயல்படக்கூடும்.
சேவை மனப்பான்மை
எனது "மாமா" மோகன் காலமானபோது, பலர் பலவகையான அஞ்சலிகளைச் செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம். தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.
மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:"சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலாத்தியர் 5:13) என்றெழுதினார். ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?
பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக.
இயேசுவோடு வீட்டில்
“வீட்டைப் போன்ற இடமில்லை” என்றுக் கூறியபடியே டோரதி தனது ரூபி செருப்புகளின் குதிகால்களை உதைக்கிறாள். “தி விஸார்ட் ஆஃப் ஓஸ்” என்ற திரைப்படத்தில் டோரதி மற்றும் டோட்டோவை ஓஸிலிருந்து கன்சாஸில் உள்ள அவர்களது வீட்டிற்கு மாயமான முறையில் கொண்டுசெல்வதற்கு இவை தேவைப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, நம் அனைவருக்கும் போதுமான ரூபி செருப்புகள் இல்லை. டோரதியின் வீட்டிற்கான ஏக்கத்தை பலர் பகிர்ந்துகொண்டாலும், டோரதியைப்போல் நம்முடைய வீட்டை அடைவதற்கு நாம் அதிக சிரமப்படவேண்டியிருக்காது.
நிலையில்லாத இந்த உலகத்தில் நாம் நமக்கு சொந்த இடத்தை அடைவோமா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே வாழ்கிறோம். இந்த உணர்வு சி. எஸ். லூயிஸால் வெளிப்படுத்தப்பட்ட ஓர் ஆழமான யதார்த்தத்தையும் பிரதிபலிக்கக்கூடும்: “இந்த உலகத்தின் எந்த அனுபவமும் எனது ஏக்கத்தை நிறைவுசெய்யவில்லை என்றால், நான் வேறு உலகத்திற்காக படைக்கப்பட்டவன்” என்று அவர் சொல்லுகிறார்.
சிலுவை பாடுகளுக்கு முந்தின இரவில், இயேசு அந்த வீட்டைப் பற்றி தம் சீஷர்களுக்கு உறுதியளித்தார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2). அது நம்மை வரவேற்று அன்பை பகிர்கின்ற நித்திய வீடு.
நாம் இப்போதே அந்த வீட்டில் வாழக்கூடும். நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். கிறிஸ்துவில் உள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் மத்தியில் வாழ்கிறோம். நம் இதயங்கள் ஏங்கும் வீட்டிற்கு இயேசு நம்மை அழைத்துச்செல்லும் நாள்வரை, நாம் அவருடைய சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் ஜீவிக்கலாம். நாம் எப்போதும் அவருடனேயே வீட்டில் தங்கியிருக்கிறோம்.
உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்
1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் "வந்து எங்களுக்கு உதவுங்கள்!" இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.
"வந்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள "மக்கெதோனியா அழைப்பிலிருந்து" வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10) அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.
எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.
தேவனின் ஞானமான நோக்கங்கள்
இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், "இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை" என்று எழுதப்பட்டுள்ளது.
அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: "கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?" (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக "ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?" எனலாம்.
எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், "நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்"(வ. 5). பிரசங்கி 3:11, "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" என்று நமக்கு நினைவூட்டுகிறது. 'நேர்த்தியாக" என்ற சொல்லுக்கு "பொருத்தமானது" அல்லது "மகிழ்ச்சியின் காரணம்" என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.
தேவனை பின்பற்ற கற்றுக்கொள்ளுதல்
“ஒரு சராசரி நபர் வாழ்நாளில் 7,73,618 முடிவுகளை எடுப்பார் என்றும் அதில் 143,262 முடிவுகளுக்காக அவர் வருத்தப்படுகிறார்” என்று ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது. இந்த எண் இலக்க கணக்கு எந்த அளவிற்கு சரி என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற முடிவுகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது உண்மையே. அவை எத்தனை என்று அறியும்போது நாம் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். அதிலும் குறிப்பாய், நமது தேர்வுகள் அனைத்தும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதும்போது, சில மற்றவர்களை விட மிக முக்கியமானவைகளாய் தெரியும்போது ஆச்சரியமடையலாம்.
நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் புதிய தேசத்தின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்கள் தேசத்திற்குள் பிரவேசித்த பின்னர், அவர்களின் தலைவனான யோசுவா அவர்களுக்கு ஒரு சவாலான தேர்வை அறிவிக்கிறார்: “கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்” சேவியுங்கள் என்கிறார். “உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை” (யோசுவா 24:14) அகற்றிவிடவும் எச்சரிக்கிறார். மேலும் யோசுவா, “கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்... நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று கூறுகிறார்.
ஒவ்வொரு புதிய நாளையும் நாம் தொடங்கும் போது, பல தீர்மானங்களை நாம் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தேவனை முன்நிறுத்தி நாம் எடுக்கும் தீர்மானங்களில் தேவன் மகிமைப்படுவார். அவருடைய ஆவியானவரின் வல்லமையினாலே, அவரை அனுதினமும் பின்பற்றும் தீர்மானத்தை நாம் எடுக்க பிரயாசப்படுவோம்.
கிறிஸ்து பிறப்பின் வாக்குத்தத்தம்
நவம்பர் 1962இல், இயற்பியலாளர் ஜான் மௌச்லி, “சராசரியான பையன் அல்லது பெண் கணினியில் தேர்ச்சிபெற முடியாது என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறுகிறார். மௌச்லியின் கணிப்பு அந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றியது. ஆனால் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் துல்லியமானது. இன்று, கணினி அல்லது கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துவது ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் ஆரம்ப திறன்களில் ஒன்றாகும்.
மௌச்லியின் கணிப்பு உண்மையாகிவிட்டாலும், கிறிஸ்துவின் வருகையைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான கணிப்புகள் உள்ளன. உதாரணமாக, மீகா 5:2இல், “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று அறிவிக்கிறது. தாவீதின் வம்சாவளியில் வரும்படிக்கு இயேசுவை பெத்லகேமுக்கு தேவன் அனுப்பினார் (லூக்கா 2:4-7 பார்க்கவும்).
இயேசுவின் முதல் வருகையை துல்லியமாக முன்னறிவித்த அதே வேதாகமம், அவருடைய இரண்டாம் வருகையையும் உறுதியளிக்கிறது (அப் 1:11). இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்களுக்காக தான் திரும்பி வருவதாக வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:1-4).
இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள அனைத்து காரியங்களையும் ஆராயும் இந்த கிறிஸ்மஸ் நன்னாளிலே, அவரை நாம் முகமுகமாய் தரிசிக்கப்போகும் அவருடைய வருகை தியானித்து, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம்.