“வீட்டைப் போன்ற இடமில்லை” என்றுக் கூறியபடியே டோரதி தனது ரூபி செருப்புகளின் குதிகால்களை உதைக்கிறாள். “தி விஸார்ட் ஆஃப் ஓஸ்” என்ற திரைப்படத்தில் டோரதி மற்றும் டோட்டோவை ஓஸிலிருந்து கன்சாஸில் உள்ள அவர்களது வீட்டிற்கு மாயமான முறையில் கொண்டுசெல்வதற்கு இவை தேவைப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, நம் அனைவருக்கும் போதுமான ரூபி செருப்புகள் இல்லை. டோரதியின் வீட்டிற்கான ஏக்கத்தை பலர் பகிர்ந்துகொண்டாலும், டோரதியைப்போல் நம்முடைய வீட்டை அடைவதற்கு நாம் அதிக சிரமப்படவேண்டியிருக்காது. 

நிலையில்லாத இந்த உலகத்தில் நாம் நமக்கு சொந்த இடத்தை அடைவோமா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே வாழ்கிறோம். இந்த உணர்வு சி. எஸ். லூயிஸால் வெளிப்படுத்தப்பட்ட ஓர் ஆழமான யதார்த்தத்தையும் பிரதிபலிக்கக்கூடும்: “இந்த உலகத்தின் எந்த அனுபவமும் எனது ஏக்கத்தை நிறைவுசெய்யவில்லை என்றால், நான் வேறு உலகத்திற்காக படைக்கப்பட்டவன்” என்று அவர் சொல்லுகிறார். 

சிலுவை பாடுகளுக்கு முந்தின இரவில், இயேசு அந்த வீட்டைப் பற்றி தம் சீஷர்களுக்கு உறுதியளித்தார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2). அது நம்மை வரவேற்று அன்பை பகிர்கின்ற நித்திய வீடு. 

நாம் இப்போதே அந்த வீட்டில் வாழக்கூடும். நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். கிறிஸ்துவில் உள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் மத்தியில் வாழ்கிறோம். நம் இதயங்கள் ஏங்கும் வீட்டிற்கு இயேசு நம்மை அழைத்துச்செல்லும் நாள்வரை, நாம் அவருடைய சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் ஜீவிக்கலாம். நாம் எப்போதும் அவருடனேயே வீட்டில் தங்கியிருக்கிறோம்.